26 மார்ச் 2024




24 அக்டோபர் 2023

ஏது பதில்?.

போரில் பரிதாபமாக
உயிர் துறப்பவர்களின் துன்பம்
ஒரு விதத்தில் அத்தோடு
விடை பெற்று விடக்கூடும்.
ஆனால்,
போர்ச் சூழலின்
பேரபாயகரத்தில் சிக்கி
வாதைக்குள்ளாகி
வகையறியாது நிற்போரின்
மனப்பிறழ்வு மனநிலை
அநாதியான வெறுமை
பசிப்பிணி
உறக்கமற்ற
உறங்கவும் இடமற்ற
ஈவிரக்கமற்ற பொழுதுகளின்
சாகவும் முடியாத
வாழவும் முடியாத
மிக வறண்ட கணங்களுக்கு
ஆதரவு தந்து அணைப்பது யார்?
செத்த உடலத்தின்
நிலை குத்திய கண் போல இருக்கும்
அவர்களின் இருண்ட வாழ்விற்கு
ஏது பதில்?.
- ஜா.மு

விடை காணாத கதறல்கள்
வாழ்வா சாவா போராட்டம்
ஒவ்வொரு வினாடியும் திகில்
வரலாற்றின் இரத்தம் சொட்டும்
பக்களை எழுதிக்கொண்டிருக்கிறது
விடியலை எதிர் நோக்கும்
வலி மிகுந்த பொழுதுகள்.

- ஜா.மு
09-10-2023

பாவப்பட்ட உண்மை


ஆயிரம் நர்த்தனம் ஆடி
அவரவருக்கு வேண்டியதை
ஆதலால் இதுவே உண்மையென
ஓயாது நிலை நாட்டிடும்
போட்டிகள் எங்கும் அரங்கேற
கேட்டு சோர்ந்தன ஒலி வாங்கிகள்.
அயராத பேச்சின் கம்பளம்
விரிந்து கொண்டே செல்கிறது
மனிதத்தை மாண்பை
பேரன்பை புன்னகையை
மறைத்து மூடிச் செல்கிறது.
தனக்கு நேர்ந்த சேதாரத்தை
காததூரம் தள்ளி நின்று
வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறது
பாவப்பட்ட உண்மை.
-ஜா.மு.

காஸாவின் பூனை

கருணை உடையோர்க்கு
காஸாவின் பூனையும்
கதறும் மழலையும் ஒன்று தான்.
உள்ளம் இல்லாதவர்கள் தான்
சிசுக்களின் ரத்தம் குடிக்கிறார்கள்.

- ஜா.மு
19-10-2023