28 செப்டம்பர் 2011

ஸலவாத்தை ஓதிடுவோம்



நபிகள் நாயகம் துயில் கொள்ளும் சுவர்க்கத்தளம் (மதினா, அரேபியா)


பல்லவி:

ஸலவாத்தை அனுதினமும் ஓதியே புகழ்ந்திடுவோம்

அல்லாவின் அருளுண்டு அண்ணலாரின் ஆசியுண்டு


இணைப்பு:

சங்கைநபி பேரினிலே...

பொங்கும் இன்ப உளமுடனே...


அனுபல்லவி:

வல்லோனும் அவன் மலக்கும் சொல்லும் உயர் ஸலவாத்தை

எல்லோரும் ஓதிடுவோம் ஏற்றமெல்லாம் பெற்றிடுவோம்


சரணம்:

காதலராம் ஆதம்நபி கன்னிஹவ்வாவை கைப்பிடிக்க-முதல்

மகராகத்தந்த சிகரமதைச் சிறப்புடனே பகர்ந்திடுவோம்

போதகராய் வந்த எல்லாத் தூதரெல்லாம் துதித்துவந்த

தூயப்பொருளை இதயஅருளை நேயத்துடனே சுகித்திடுவோம்

சரித்திரங்கள் படைத்துவிட்ட

சஹாபாக்கள் யாவருமே

சதாநேரமும் சொல்லியவாரே சாந்த உருவினரை உவந்திடுவோம்!


போராட்ட வாழ்க்கையது அழகு தேரோட்டமாகிடவே-இறைன்

பாரட்டும் நபிமீது சீராட்டைச் சாற்றிடுவோம்

வறுமையெனும் சூறாவளியில் சுழற்றியெறிந்து சுருளும்போது

மிடுமை நீங்கி மீண்டுவரவே அருமைநபியை பாடிடுவோம்

கண்ணீர் மழையில் கண்ணம் நனைந்தால்..

உள்ளக்குமுரலில் உயிரே சிதைந்தால்..

நல்லநேரம் பிறக்க வேண்டி நாயகரைப் போற்றிடுவோம்!


பாவமூட்டைச் சுமந்துக்கொண்டு தேவசமூகம் நிற்கும்போது-எதும்

தேவையற்ற ரஹ்மானின் தீர்க்கதரிசிக் காப்பற்ற,

கோபப்பார்வை வீழ்ந்திடாமல் கோபுரநயகர் நம்மீது

தாபப்பட்டு தலையுயர்த்தி தகையோன் சந்நிதி மன்றாட

மீஜான் தட்டில் நன்மை கணக்க

கொடிய பாலம் நொடியில் கடக்க

புகழின்கொடியில் நன்றே ஒதுங்க புகழானோரை புகழ்ந்திடுவோம்!


ஸலவாத்து: நபிகள் நாயகம் (ஸல்) மீது சொல்லப்படும் சோபனம்


-ஜே.எம்.பாட்ஷா

எழுதியது 2001


24 செப்டம்பர் 2011

மச்சானே வா!



நினைவெல்லாம் இருப்பவனே -என்

நித்திரையைக் கெடுப்பவனே

கலங்கரை விளக்கமே நீதான்,

கரைசேர்வது எப்படி.. நீ இல்லாமல்!


தென்றல் என்னில்

தேயும் போது - உன்

தேனிதழ் வடித்த

வார்த்தைகளே யாபகம்!


நேற்றைய கனவினில்

முத்தம் உமிழ்ந்த போது

உரசிய தாடியிடமே

மூர்ச்சையாக்கிவிட்டேன்

என் இதயத்தை!


பூக்கள் சிரிக்கும் போதெல்லாம் - என்

புன்னகை மன்னன்

தேனுண்ண வரும் நாள்

எப்பொதென்ற கேள்வியே!


நிலா தேய்கிறது

நீ இல்லாமல் - என்

நெஞ்சமும் கரைகிறது

மஞ்சம் உனக்கு வேண்டாமா?

மச்சானே வா!


நெஞ்சத்தைப் பறித்துக் கொண்டாய்

நெடுநாளாய் வாடுகிறது.

தஞ்சம் கொடுக்க மனம் இல்லையோ

பஞ்சமேன் உன் அன்பதனில்!


துரத்தித்துரத்தி அடித்தாய் - நான்

துள்ளிக்குதித்த நாட்களில்,

தூங்குவதெப்படி இனி..

இரு விழிகளில்லாமல்!


வானுயர மரம் வளர்த்தாலும்

உன் தென்றல் வராததால்

வாதத்திற்கும் ஆடாத.. அசையாத..

மரமாய் நான்!


பட்டுமேனிக்கு சொந்தக்காரன்

பாட்டுடைத் தலைவன் - என்

வீட்டிற்கு வரும் நாள் எப்போது?


பருவப்பால் திரிந்து விடும்

பருக விரைந்து வா..

பந்தல் போடும் மச்சானே!


ஜே.எம்.பாட்ஷா

காலம்; 1997
-இன்னும் புரியும்

21 செப்டம்பர் 2011

அந்தியில் 'கல்பா' (KALBA)


அலுவலகம் எல்லாம் முடிந்த மாலை அது, கொஞ்சம் பசியும்.. சோர்வும் சேர்ந்து இருந்தது, நண்பர் பிரபீஷ் வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தார்.. வரவேண்டுமானால் வாருங்கள் என அழைக்க நான் எப்போது திரும்புவீர்கள் என கேள்வி தொடுத்தேன், ஏனெனில் அலுவலகம் முடித்தவுடன் அடுத்த அலுவல் சில மணித்தியாலங்கள் மனையோருடன் தொலைபேசியிலும்.. காணொளியிலுமாக என்பது தான் நான் சுற்றிக்கொண்டிருக்கும் வட்டப்பாதை. ஒரிரண்டு மணியில் இல்லம் ஏகிவிடுவது சாத்தியமே என பதிலுரைக்க கல்பா புறப்பட்டோம்..


அந்தி சாயும் நேரம்.. அழகான ஒரு தீவு.. கடலுக்கு பக்கத்தில் மிகப்பெரும் சதுப்பு நில அமைப்பு.. தீவிலிருந்து பார்க்க நீர்நிலை நெடுகிலும் மத்தியில் எலுமிச்சை மரம் போன்ற வகை மரங்கள்.. இடையே குருவி.. பறவைகள்.. தவிர எங்கும் நிலவும் இயற்கை அமைதி.. நல்ல அருமையான சூழல், எந்த வகை மன இறுக்கமும் இங்கே தலைகாட்டாது ஓட்டம் பிடித்து விடும்.. அவ்வளவு நிம்மதியான சூழல்! இங்கிருந்து பார்க்கையில் தூரத்து தொடர் மலைகளுக்கு இடையே மறையும் சூரியன் பார்ப்பதற்கு மிக அழகு ஓவியமாக ரசிக்க வைத்தது.

( சார்ஜாவின் எல்லைப்புறங்களில் ஆரம்பிக்கும் தொடர்மலைகள் கிழக்கு அமீரகம் முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கும்)




ஆஹா! அது என்ன முதலை.. என சற்றே வியக்க கண்ணில் பட்ட அதை நோக்கிய பின் தான் வியப்பின் முடிச்சு அவிழ்ந்தது, ஏரி போன்ற கடல் வழி நீர் நிலையாதலில் இரவு நேரங்களில் நீர் மட்டம் உயரும் போல.. எங்கும் சதுப்பாகவே ஓரங்களெல்லாம், மேலும் கரையோரங்களில் சுண்ணாம்புப்போன்ற சதுப்பு நில பாறைகள் உண்டு அவைகளை நீர் அரித்து.. அரித்து பார்பதற்கு சற்றே திகிலூட்டும் முதலை வடிவத்தில் அரிக்கப்பட்ட சுண்ணாம்புக்கள் சதுப்புப்பாறை!




கிட்டேயே போய் உறுதி செய்கிறேன் இது முதலை அல்லவே என..!


நண்பர் பிரபீஷும், எங்கள் வாகனமும்


நான் மட்டும் வந்தது சரியா என யோசிக்கிறேன், இடம் அவ்வளவு அழகு!




மேலும் கீழுமாய் மடங்கி ஒடுங்கி கிளைத்த கரையோர மரம், ஒழுங்கா போட்டோ எடுங்க என்ற படி..




கரையோர சுண்ணாம்பு சதுப்பு மண்.. இவைகளில் ஏதோ பலவகைப்பூச்சிகள் துளையிட்டு துளையிட்டு குடும்பம் நடத்துகின்றது. ஈசல் போன்று இருக்கிறது உற்று பார்த்தால் தான் அதன் பெரும் படை தெரிகிறது.



இங்கும் இரவில் நீர் நிறையும்..



இருட்டிக்கொண்டு போகிறதே இப்போது போய் விட்டு மீண்டும் வரலாமா.. இல்லை நாம் கொஞ்ச தூரம் சென்று விட்டு வருவோம்..


அதோ பாருங்கள் கொஞ்சமும் பயமில்லாமல் யாருமற்ற ஏரியில் ஒரு அரபி இளைஞர் மட்டும் படகில் மிதக்கிறார்.. உண்மையில் முதலை இருக்குமா உள்ளே?


மறையும் சூரியனால் ஏரிக்கரை சிவந்தது!



இருட்டிய மாலை எங்கே போகிறாய்.. படகு சவாரி போதும் திரும்பி வா..!


இங்கே இருந்து கிளம்பிடலாம்!



அப்படியே எதிர் முனையிலிருக்கும் கடற்கரைக்கு காரை விடு எனச் சொல்லி அங்கே சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை நீலக்கடல் மட்டுமே.. அலை இருந்தது.. அரபிக்கடலில் அலை அவ்வளவு இருக்காது ஆயினும் இங்கே ஓரளவு இருந்தது. கொஞ்சம் பயம் தான் இதுவெல்லாம் நமக்கு தேவையா என மனதிலிருந்து ஒரு குரல், கொஞ்சம் சும்மா இருவேன்.. நான்!

அங்கே இறங்கி கடற்கரையிலிருந்து கடல் நோக்கி நடக்கையில் ஏதுமற்ற நீல வெளி மட்டுமே, நாங்கள் முன்னேற.. முன்னேற ஏதோ நெற்றியில் வானம் இடிப்பது போன்ற ஓர் உணர்வு.. திரைப்பட பாடல் காட்சியில் வரும் புகைப்போல ஓர் சூழல்.. மேகத்துக்குள் பயணம்.. வானத்தில் நாம் ஏறிவிட்டோமா.. ! போதும், ஓகே நாம் காருக்குள் ஏறுவோம்.. என வர .. வரும் வழியில் மீன் பிடித்து கொண்டு கரைக்கு வரும் சிலக்காட்சிகள்!

கடலே சென்று வருகிறோம்! என நாங்கள் திரும்ப.. தனியே.. தன்னந்தனியே ஒரு ஆள் மட்டும் உடற்பயிற்சி செய்தும் நீந்தியும்.. ஓகே.. ஓகே.. கீப் இட் அப் என்று சொல்லி நாங்கள் நாடு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் சதுப்பு நிலக்கரையோரம் நரிகளின் நடமாட்டம் அங்கும் இங்குமாக கண்ணில் பட்டது.


(இது புஜைராவிலிருந்து மிக அருகில் உள்ளது. சார்ஜா ஆளுகைக்கு உட்பட்டது. எங்கள் வாகனம் சார்ஜா பல்கலைகலகத்தின் கல்பா கிளையருகில்)

எல்லா படங்களும் மொபைலில் அங்கே எடுத்தவை தான்.

20 செப்டம்பர் 2011

நீர்க்குமிழி



உடல் நலம் சீராக இருந்தால் தான்,
சீராக எல்லாம் மனித வாழ்வில்!

மனிதன் வாழும் இச்சிறு வாழ்வினில்,
நல்லது.. கெட்டது..
ஆகுவது..ஆகாதது..
சிரிப்பு.. அழுகை,,
பாசம்.. அன்பு..
உறவு.. நட்பு..
வேலை.. ஊதியம்..
குடும்பம்.. விலைவாசி..
சொத்து.. வங்கிச் சேமிப்பு..
உடல்..வனப்பு..செழிப்பு..
அரசியல்.. கட்சி.. ஆட்சி..
மதம்.. கொள்கை.. ஞானம்.. தெய்வம்..
இவைகளெல்லாம்
இரத்த ஓட்டத்தினை அடியொற்றியே!

எதிர்பாரா சூழலில்
இரத்தம் வெளியாகி..
செல்லவேண்டியது,
செல்லாது தடைபடுகையில்..
உடல் வலிமை குன்றநேர்கையில்
இரத்த அழுத்தம் குறைய..
உடலியல் கூறுகளெல்லாம் தடுமாற..
உலகமே சுற்ற..
கண்கள் இருள..
நினைவுகள் சூன்யமாக..
எதைப்பற்றியும் நினைவுக்கு வராத அந்நிலையில்,
எங்கே நான்..?

சிறு நீர்க்குமிழியைப் போலே தான்
நம் உடலும்.. இவ்வுலகியல் பிறவியும்!
நீர்க்குமிழிக்கு நம் பார்வையில் சிறுவாழ்வு
இயற்கையின் பார்வையில் மனிதனும் நீர்க்குமிழி!

-ஜே.எம்.பாட்ஷா

என் காலில் அடிபட்டு இரத்தம் கொட்டி.. மயங்கி.. மருத்துவரிடம் சென்று சிகிச்சைக்குப்பின்
29-08-2008 இரவு 11.35

16 செப்டம்பர் 2011

பேறாக ஆக்கிக் கொண்டார்! புலவர்.ஜின்னாஹ்.


புலவர். டாக்டர் ஜின்னாஹ் ஷர்ஃபுத்தீன் (இலங்கை)


கண்ணல் நபியின் மேலே

காவியம் ஒன்று கண்டேன்!

அட்டைப் பக்கத்திலோ

ஆசிரியர்ப் பெயர் பார்த்தேன்,

எனக்கோ பரவசம்! உடன்

தெளிந்தேன்..தெரிந்தேன்!

கவியாற்றல் இருக்கும்

புவியாற்றல் போல் இவர்வசம்.


ஏனெனில்,

ஜின்னாஹ்ஷர்புத்தீன் இவர் பெயர்,

பூவுலகப்புகழ் பூமான்நபி காவியமாம்

புர்தாஷரீப் யாத்த இமாம் பூசரியின் புனிதப்பெயர்


ஈழ நாடோ புலவர் தாயகம்,

இதயம் மகிழ்ந்து ஆசிர்வதித்தார்

கவியெழுத கண்ணல் நபி நாயகம்!


புலவர் மணியார் இவர் தந்தை,

புலவர் பணியில் இவர்..!

என்ன விந்தை?


காவியம் படைக்க..!

எழவேண்டும் வீரிய கற்பனை சித்தம்

விழவேண்டும் எழுத்து வித்தக முத்தம்

எழுவதை எல்லாம் எழுதிவிடவும்,

விழுவதை எல்லாம் விரித்து விடவும்,

முடியாது.. முடியாது.. காவியத்திற்கு உதவாது!


ஈங்கோ..! அமிழ்தாய் தமிழ்த்தாய்

முண்டி.. அண்டி..வந்து அணிசேர்த்து

பணிசிறக்க வைத்திருக்கிறாள்!


இதில்,

இலங்கைத் தமிழ் உளங்களை ஆள,

முழங்குகிறது நபிகளாரை காவியம்.

புலங்காகிதம் மெய்யுணர்கிறது!


தலைவர் நபிமேல் கொண்ட அன்புச்சிந்தையால்,

விரித்து தந்துள்ளார் உயர்ச்ஞானச் சந்தை! - நபி

புகழ்பாடும் இப்பாவலனால் சிறப்புற்றார் இவர் தாய்த்தந்தை!


கலாநிதி எனப்பெயர் பெற்ற - கவி

நிலாபதி ஜின்னாஹ், - நிழல்

இலாபதி நபிகள் நாயகரைஇவ்

விழாபதி யாக்கி காவியம் தந்தார் வாழி!


ஐந்து காவியங்கள் முடித்து,

ஆறாவதாக காவியம் எழுதியதோ

யாராக இருக்கவியலும் - அதிலும்

தேராக பவணிவரும் வார்த்தைகளால்

ஈராக வந்தவரைப் புகழ்ந்து - கவி

ஆறாக அன்பொழுக எழுதி,

பேறாக ஆக்கிக்கொண்டார்.

பாவலர் ஜின்னாஹ் வாழி!


மாறாக சிந்திப்போரும் - மதிக்

கூறாக.. படிக்க வேண்டுகிறேன்

நபி மகிமை உணர்வீர்.


இருதய அறுவையே இதற்காகத்தானோ

அதற்குப்பிறகே அமைந்தது இந்நூல்!

பிறக்கவேண்டும் காவியம் என,

மீண்டும் இவரை புதிதாய் பிறக்கவைத்து

திறக்க நாடினானோ இதயத்தை!


அன்று!

வாதப்பொழுதில்,

அனைத்திற்குமான மருந்தாய் சமைத்தார்

புர்தாவை இமாம் பூசரி!

இன்றோ!

மருத்துவ ஓய்வில் - தனக்கு

மருந்தாய் காவியம் ஆக்கினார்

பொருத்தமான இவர் தமிழ்க்கேசரி!


பூக்கள் என பாக்கள் ஆக,

ஈக்கள் என இறகு வீசி நிற்கிறோம்-இது

தூக்கலான தமிழ் சமையல்

ஆக்கித் தந்தார் சூப்பரோ சூப்பர்,

நீக்கல் என ஒன்றுமில்லை

ருசி உணர! வருவாய்..

உலகே! தமிழ் உலகே!


எழுபது நாட்களில் எற்றமுடை இந்நூலை,

தருவது என்பது படுசிரமம்!

ஆனாலும் விரும்பியதே பரப்பிரமம்!


புதுமை செய்திகள் பூத்துக்குளுங்க -அருமை

பதுமையாய் வந்து குளுமையோங்

மணம் குளிரச்செய்திருக்கிறது இந்நாளில் இது.


புதிய புதிய செய்திகள்

பதிய இந்நூல் நிற்கிறது - மனதில்

பூமானின் பேரன்பு ஈமானோடு வளர்கிறது.


வற்றாத சொல்வளம் கொற்றவன் அளித்துள்ளான்

பற்றாது யாவரையும் இந்நூல் விடாது,

பற்றிவிடும்.. மனக்கூண்டில்

தொற்றிவிடும், வெற்றிபெரும் இக்கவி கோப்பு!


கவிதை இன்பம் எனச்சொல்லுவார்களே..

அன்பர்காள்! உணர்க, காவியமிதைக் கண்டு!

உணர்வீர்! நுகர்வோர்க்கு தே கற்கண்டு!!


திருநபி காவியம்!

மணம் வீசி..மணம்வீசி மதினாவை சென்றடையும் - நபி

குணம்பேசி.. குணம்பேசி.. மதி நாவில் தேன்சொறியும் - இதை

தினம் தேடிப்படிப்போர்க்கு அஞ்ஞானக் கூன் நிமிரும்!


இன்றோ!

நபிகளாரும் உவக்கின்றார் நற்றமிழிசை ருசிக்கின்றார்,

நாயனவன் ரசிக்கின்றான் அமரர்களுடன் - இதை

நயமுடனே வாசிக்கின்றான் அவன்!


காவியம் தந்தவா வாழி!

கவிஞர் உன்தாய் ஆய்ஷா அம்மாள் வாழி!

கேட்டிருந்தோர் இச்சபையில் வீற்றிருப்போர் யாவரும் வாழி!


நன்றி !


வாழ்த்துடன்,

வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா.



2006 என நினைக்கிறேன், அவ்வமயம் துபாயில் கலாநிதி டாக்டர் ஜின்னாஹ் சர்ஃபுத்தீன் அவர்கள் தங்களின் நபிகள் நாயகத்தின் மீதான காவிய நூல் ‘திருநபி காவியம்’ வெளியீட்டு விழாவிற்கு அழைப்பின் பேரில் சென்றிருந்த சமயம் அதற்காக வாழ்த்துக் கவியாய் படிக்க வேண்டுமென பேரவாவில் எழுதிச்சென்ற கவியிது, அந்த நேரத்தில் சில சூழல் காரணமாக உடன் திரும்ப வேண்டியதாயிற்று, ஆகையால் இதை சபை ஏற்றமுடியாது போனது. இது இன்று உங்கள் முன்!