31 ஆகஸ்ட் 2015

எமகாதகன்


"அடடா அவன் என்னமாய் பணிகிறான்...!
அடடா அவன் என்னமாய் குனிகிறான்...!
அடடா அவன் என்னமாய் புன்னகைக்கிறான்...!
அடடா அவன் என்னமாய் அன்பொழுக கதைக்கிறான்...!"
என்றேன்.

"ஐயோ! 
இல்லை.. இல்லை...இல்லவே இல்லை!!!

அவன் பணிகிறானுமில்லை..!
அவன் குனிகிறானுமில்லை..!
அவன் புன்னகைக்கிறானுமில்லை..!
அவன் அன்போழுக கதைக்கிறானுமில்லை..!

எல்லாம் நடிப்படா..
எமகாதகன் அவன்!
அங்கனமதை உண்மையென நினைப்பதுவோ
உன் பத்தாம் பசலித்தனமன்றி வேறில்லை!
அதையெல்லாம்குறித்து
வருத்தப்பட நேரமுமில்லை!

நெஞ்சில் வஞ்சகத் தீகுண்டம் எரிய
அழகாய் மயக்கி அமுதம் தெறிக்கச்சிரிக்க
அவனுக்கு மட்டுமே தெரியும்!

தீய சக்தியை பார்க்காதவர்கள்
அவனைப்பார்த்து பாக்கியமெய்தலாம்
அப்படி ஒரு அற்புத பிறவியவன்

பிழைக்கத்தெரிந்து பவனிவந்துகொண்டிருக்கும்
பிணியவனை குறித்து 
பிழையாய் கருத்து கொண்டிருக்கிறாய்

ஏனோ.. நீ 
இன்னும் திருந்தவே இல்லை 
வெளுத்ததையெல்லாம் பாலென்கிறாய்;
உலகை அறி..உலகோர் புரி!
மனிதர்களில் அவன் 
மனிதன் போலத்தானேயன்றி வேறில்லை"
என்று சொல்லிச் செல்கிறார்
நிழலை மட்டுமே காணமுடிந்த அவர்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா