19 செப்டம்பர் 2015

வெல்வோம் என்ற நம்பிக்கை

காலையில் எழுப்பிவிட்ட
அழைப்பு மணி 
அவ்வளவாக நல்லச்செய்தியை சொல்லவில்லை.
ஆயினும் பரவாயில்லை
இரவு விடிந்ததையும்
எழும்பவேண்டிய நேரம் தாண்டிவிட்டதையும்
உணர்த்தியதற்கு நன்றி சொல்லி

வெல்வோம் என்ற
வேட்கையிலும் நம்பிக்கையிலும்.

மீண்டும் போராட்டக்களத்தை நோக்கிய
வாழ்க்கைப்பாதையில்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

உதவி அண்மையில்

எதிர்பாராத நெருக்கடிகளிலும் நமக்கான உதவி அண்மித்தே இருக்க்றது. அவ்வாறான நேரங்களில் நெஞ்சம் துவளாமல் கொஞ்சம் துடிப்புடன் இருந்தாலே அதை நாம் கண்டு கொள்ளலாம். நலங்களின் பாலத்தை நாமே கட்டமைக்க முதற்கல் எடுத்து வைக்க வேண்டும்.. உலகம் உதவிகளால் சூழப்பட்டது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

10 செப்டம்பர் 2015

பழங்களைப் பெற்றுச்சொல்லுங்கள்.

பக்கத்திலிருந்து பார்க்கிறார்கள்
அதனால் அவர்கள்
நன்றாகவே அறிவார்கள்
எங்கள் தோட்டத்தில்
விதைத்ததும்.. 
முளைத்ததும்..
வளர்வதும்...
கனிமரங்கள் தானென!
ஆனாலும் வெளியே சென்று
வினோதக் கூச்சலிடுகிறார்கள்
அவன் விசச்செடியை
விவசாயம் செய்கிறான் என்று.
பிரச்சனை இல்லை
வாருங்கள் அறுவடைக்காலத்தில்
கூடை நிறைய
பழங்களை தருகிறோம்
பெற்றுச்சொல்லுங்கள்.
-முஹையத்தீன் பாட்ஷா
காலை 10.38
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 செப்டம்பர் 2015

அவசரம் ஏன்..?

ஏன் அந்தக் கவிதையை 
அத்தனை அவசர அவசரமாய் படிக்கிறாய்?
*
பரபரப்புடன் அந்தக்கவிதையை
அப்படிப் படிக்க என்ன தான் அவசியம்?
*
ரசிக்க மறந்து அவசர அவசரமாய்
பசிக்கு திணிக்கும் உணவைப்போல
அந்தக் கவிதையை படிப்பதில்
உன் உணர்வில் உன் சுயத்தில்
என்ன தான் நிகழ்ந்துவிடப்போகிறது?
*
இங்கனம் அந்தக் கவிதை புத்தகத்தை
இனியும் கேவலப்படுத்தாதே
*
மரியாதையாய் வைத்துவிடு
இல்லையேல் உடன் அதை தீயிலிடு.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மாபெரும் எடுத்துக்காட்டு

பரிபூரண பேரிறிறையின் ஞானச் சுடர்கொண்டு இருபத்து மூன்று ஆண்டுகளில் தனியொருவராய் நின்று இந்த தாரணியையே மாற்றமுடியும் என்றும், தனிப்பட்ட ஒருவரின் குணநல மேம்பாடு எப்படி ஒரு சமூகத்திற்கே எடுத்துக்காட்டாய் அமைந்து அதை அறவழியில் கட்டமைக்க அதுவே வழிவகுக்கும் என்பதை மெய்பித்த மாபெரும் வரலாற்று எடுத்துக்காட்டு தான் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 செப்டம்பர் 2015

சில பேருக்கு சில...!சில பேருக்குச் சில..!
*****************************

சில பிஞ்சு மாணவர்களுக்கு..
பள்ளி செல்வதை நினைத்தாலே... -அந்த
ஆசிரியரின் கோபமும் கொடுமையும் 
மனசெல்லாம் ஒருவித அச்சமாய் பரவி உருக்கும்;
படியேறும் போதே பதற்றம் சூழும்
பாடத்தைத் விட பயமே பற்றிக் குலைக்கும்!

*
சில அலுவலர்களுக்கோ...
தங்கள் அலுவலகம் பற்றி நினைத்தாலே
வேலைச்சுமையும் மேலாளரும் தான் கண்முன்,
இரவெல்லாம் தூக்கம் வராது
நெஞ்செல்லாம் நெய்யூற்றியது போல் எரியும்
என்ன சொல்வாரோ.. ஏது நடக்குமோவென்றே 
மீண்டும் வேலையில் மட்டும் மனம் லயிக்காது!

*

அதுபோலவே..

சில கணவன்மார்களுக்கும்
எல்லா வேலைக்குப்பின் இன்றும்
வீடுக்கு திரும்பிப்போய்த்தான் ஆகவேண்டும்
வீட்டிலிருக்கும் பேயோடு போராடியேத் தீரவேண்டும்
என்பதை எண்ணினாலே ஜன்னிகண்டுவிடுகிறது
விரக்தியின் வீதிகளில் சோர்ந்து சரிந்து
ஆற்றாமைக்கு ஏதுமிலாது விதிசெய்த சதியை நொந்து
நிர்பந்தத்தின் அழுத்தத்தால் 
தன் வீட்டிலேயே தான் நுழைவான் மனமில்லாது! 

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


02 செப்டம்பர் 2015

காலக்குதிரையின் முதுகில் !ஒன்று போக
பிரிதொன்று..
இதை முடித்தால்
மற்றொன்று
அது கழிந்தால்
வேறொன்று! 

அங்கே போ..
அடைந்துவிட்டால் பின்
இங்கே செல்!
ஆதுவும் எய்தினால் மீண்டும் ஓடு
வேரெங்கவது
ஓடு… ஓடு.. ஓடு…!

அயர்ச்சியின் மிகுதியில்சோர்வா..
இருந்தாலும் ஓய்வெல்லாம் கூடாது
ஓடு.. ஓடிக்கொண்டேயிரு..!

பிறகு..
எங்கோ சில புள்ளிகளில்
கொஞ்சம் பெருமூச்சு வாங்கும்;
அங்கும் சிறு ஆசுவாசம்
மட்டும் தான் அனுமதி..!

பின்பும் தொடரும்
ஓடு… ஓடு… ஓடென்ற குரல்
முன்பு போலவே..!

ஒன்று போக
பிரிதொன்று
இதை முடித்தால் மற்றொன்று
அது கழிந்தால்
வேறொன்றென...?

எதையுமே சட்டைசெய்யாது
அதிவேகமாய்
நீண்டு நகர்ந்திடும்
காலக்குதிரையின்
முதுகில் நாம்!

குதிரையே ஓரு நாள்
நம்மை இடறி சாய்த்துவிட்டு
ஓட்டம் தொடரும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா