04 நவம்பர் 2017

ஜம் ஜம் ஹாஜியார் பத்ருத்தீன் மறைவு


ஜம் ஜம் ரியல் எஸ்டேட் நிறுவனரும் மிகச்சிறந்த சமுதாய புரவலரும், தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவருமான அய்யம்பேட்டை அல்ஹாஜ் பத்ருத்தீன் ஹாஜியார் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசஸல்லம் அவர்களின் அருள் சூழவும் இறைவனை வேண்டுகிறேன்.

03-11-2017
***
ஜம்ஜம் ஹாஜியார் அவர்களின் ஜனாஸா அய்யம்பேட்டை கீழப்பள்ளிவாசல் மையவாடியில் இன்று நண்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


அடைமழை காலமாக இருந்தாலும் அன்னாரின் அன்பால் பிணைக்கப்பட்டவர்கள், அவர்பால் மிகுந்த கண்ணியம் வைத்திருப்பவர்கள் என நிறைய அன்பர்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொள்ள அவர்களது நல்லடக்கம் நல்லவிதமாக நடந்தேறியது.

நிகழ்விற்கு வந்திருந்த முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் மறைந்த பத்ருத்தீன் ஹாஜியார் அவர்களின் சமுதாய சேவை, முஸ்லிம் லீக்கிற்கு அவர் தந்த ஆதரவு ஆகியவற்றை நினைவு கூர்ந்து பேசினார்; அப்போது அய்யம்பேட்டையிலிருந்து சாதாரண குடும்பத்துக்காராராக தொழில் செய்ய சென்னைக்கு வந்து அங்கு ஜம்ஜம் மெடிக்கல்ஸ் ஆரம்பித்ததிலிருந்து இன்று அவர் நிறுவியிருக்கும் ஜம் ஜம் ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சி அதற்காக அவர் செய்த கடும் உழைப்பு என எல்லாவற்றையும் நினைவு கூர்ந்தார்.

மறைந்த ஹாஜியார் அவர்கள் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே அஜம் முகம்மதலி ஜின்னா காலம், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் காலம், ஸிராஜுல் மில்லத் அப்துல் சமது சாஹிப் காலம் இவற்றிலிருந்து இன்றுவரை அவர் இயக்கத்திற்காக ஆற்றிய தொண்டினை சிலாகித்தார் அவர் சமுதாய இயக்கம் என்றாலே அது முஸ்லிம் லீக் தான் என்று கடைசி வரை இருந்ததையும் சுட்டிக்காட்டி புகழாரம் செய்தார்.

மேலும் நாவலர் யூசுப் ஷாஹிப் அவர்கள் அய்யம்பேட்டை என்றாலே நினைவுக்கு வரும் நான்கு முத்துக்களில் ஹாஜியாரும் ஒருவர் என்றும், அய்யம் பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம்களின் சரித்திரத்தை எழுதிய இலங்கை மானா மக்கீன் மறைந்த ஹாஜியார் அவர்களைப்பற்றி நிறைய எழுதி இருப்பதையும் சுட்டிக்காட்டினார். நிறைவாக ஹாஜியாரை பற்றி சொல்ல வேண்டுமானால் அது ஜம்..ஜம் நீரைப்போல சொல்ல சொல்ல வந்து கொண்டே இருக்கும் அவரைப்பற்றி பல நூற்கள் பதிப்பிக்கும் அளவிற்கு நிறைய வரலாற்று சம்வங்கள் இருக்கிறது என்று முடித்த பேராசிரியர் அவர் தனது இறப்பு வரை ஒரு வேளை தொழுகையை விடாமல் நிரைவேற்றிய புனிதர் என்றும், ஒவ்வொரு ரமலானின் பத்ரு சஹாபாக்கள் தினத்தை அன்றிலிருந்து இன்றுவரை விசேசமாக கொண்டாடியவர் என்றும் போற்றிப் பேசி துஆ செய்து முடித்தார்.

ஜம்ஜம் ரியல் எஸ்டேட் திருவல்லிக்கேணி அலுவலகத்திற்கு எனது இளம்பிராயத்தில் பெரிய தந்தையார் அவர்களுடன் சென்ற நினைவுகள் எனக்கு இப்போதும் பசுமையாக உண்டு. அப்போது மிக விமர்சையாக நல்ல உபசரிப்போடு ஹாஜியார் விருந்து கொடுத்த நினைவுகளும் அவரின் இல்லத்தில் சமைத்த அற்புத பிரியாணி சாப்பிட்ட நினைவுகளும் இன்றும் நெஞ்சைவிட்டு மறையாதவை.

சென்னை ஜம் ஜம் அலுவலகம் சென்றால் மூன்று வேளையும் தனது வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்று அன்புக்கட்டளை போடுவதோடு அல்லாமல் மன நிறைவாக உபசரித்து அவரது இல்லத்திலேயே தங்கிச்செல்லவும் ஹாஜியார் வற்புறுத்துவார் எனகிறார் எனது பெரிய தந்தையார் அரச்சலை குலாம் முஹையத்தீன்.

அப்போதெல்லாம் ஜம் ஜம் அலுவலகத்திற்கு சென்றாலே கணக்கின்றி தேனீர் வந்துக்கொண்டே இருக்கும் இப்போ தானே சாப்பிட்டோம் என சொல்லி மறுத்தால் "டீ குடிக்கவெல்லாம் கணக்கு பார்க்க கூடாது" என்பார் ஹாஜியார், அவர் காலத்து ஒப்பற்ற விருதோம்பல் பற்றி எல்லாம் எவ்வளவு சொன்னாலும் மிகையாகாது என்கிறார் எனது அண்ணன் அரச்சலை முஜீப் ரஹ்மான்.

இன்று நல்லடக்க நிகழ்வில் மறைந்த ஹாஜியார் பற்றி மிகச்சிறிய நினைவு நூல் ஒன்று பகிர்ந்தார்கள் அதையே இங்கே படத்தில் பார்க்கிறீர்கள். ஹாஜியாரின் பணிகள் மகத்தானது. அவரின் சேவை மேன்மையானது அவரின் சமூக மேம்பாட்டு சேவைக்காக அவரது உயரிய எண்ணத்திற்காக அல்லாஹ் மிக உயரிய சுவனபதியை அளிப்பானாக, ஆருயிர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் சிபாரிசையும், அன்பையும் அல்லாஹ் அன்னாருக்கு பரிசளிப்பானாக! அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஆறுதல் அளிப்பானாக.
துஆவுடன்
வழுத்தூர் ஜா. முஹையத்தீன் பாட்ஷா
04-11-2017

Millath Mohamed Ismail