25 ஜூன் 2020

உன்னையே நுழைத்துவிடு.


அழகிய பள்ளத்தாக்கு
பசுமையே பார்வை வெளி!
ஒருபுறம் கரை
இருபுறம் மலை
கிறங்கி.. கிறங்கி..

குளித்து களித்து
குடித்து தீர்க்கிறேன்!

என்னால் கண்ணால்
முடிந்தவரை பசி தீர்க்கிறேன்!

அத்தனையும் இயற்கை பேருணவு.

அரிய படங்கள்
ஆச்சர்ய இடங்கள்
பார்வைக்கு படும்போது
கண்ணால் பார்க்காதே
உன்னையே நுழைத்துவிடு.
- ஜா.மு.
11-12-2018.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தந்தையாரால் ஏற்பட்ட பந்தம்

பள்ளிக்கூடம் சேரும் முன்னே பால்முகம் மாறும் முன்னே மாலை மயங்கும் பொழுதுகளில் மைதான விளையாட்டுகளில் தந்தையார் அழைத்துச்செல்ல இந்த விந்தையாருடன் ஏற்பட்டதிந்த பந்தம்.
அடிக்கும் பந்துகள் கட்டம் தாண்டிச்சென்றால் பிடித்து எடுத்து தருவேன்; அப்போதே வட்டம் தாண்டி வாஞ்சை முகம் காட்டி நெஞ்சைத் திருடிவிட்டார்.
பின்னர், மேல்நிலைப் பள்ளியில் ஞாயிறு கூட்டங்களில் எதிர்பார்க்கும் ஞாயிறாகவே ஆகிப்போனார் நீதிபோதனை வகுப்பெடுக்க ஏழாம் வகுப்பில் வாரம் ஒருமுறை வரம் தர வருவார் - அதில் பாதிபோதனையே பாடத்திற்கு அப்பால் தான்; அந்த போதனையே சிந்தைக்கு விருந்தாய் எங்கள் அறிவுக்கண்ணை அகல விரித்தது.
அதுவே பின்னாளில் நீதிபோதகரையே எங்களோடு வரித்தது. பதினோராம் வகுப்பில் ஆறுமாதம் தான் வகுப்பெடுத்தார் ஆயுளெல்லாம் மாணவனாகிப்போனேன். வேறு நாட்டிற்கு சென்றாலும் நூறுமுறை நிதமும் நினைத்திருப்பேன்; வேரூன்றி நெஞ்சத்தில் அன்பு விருட்சகமாய் வளர்ந்துவிட்டார்.
ஆசிரியப் பணியை காசுக்காக பார்த்தவரில்லை மாசு மறுவற்று ஆத்மார்த்தமாய் நேசத்துடன் பார்த்தார்.
மாணவர்களை கல்வியில் மட்டுமல்ல உயர்ந்தோர் உயர் நெறியில் உயர்ந்ததோர் தமிழ் வழியில் உணர்வோடு கரை சேர்த்தார் "திருநாவுக்கரசு" அவர் பெயர் திருவாளர் நாவுக்கு மட்டும் அரசல்ல! விரிந்த பார்வைக்கும் திறந்த சிந்தனைக்கும் பரந்த அன்பிற்கும் அரசானார்.
அதனால் தான் நாங்களெல்லாம் அவரின் அரசமுற்றத்தில் ஐக்கியமாகிப்போனோம்.
ஐயா! இன்றுங்கள் பிறந்தநாள். இனிவரும் நாட்களும் நலமே நிறைந்து உளமெலாம் குளிர்ந்து எல்லா ஆண்டும் நல்லாண்டாய் பல்லாண்டு.. பல்லாண்டு.. ஐயா வாழ்க..! அரசே வாழ்க..! பரிசாய் வாழ்க..! முரசாய் வாழ்க..!
அன்பிற்கினிய.. ஜா.முஹையத்தீன் பாட்ஷா.
#ThiruArasu #HBD #jmbatcha

செட்டியார் தாஜுத்தீன் மாமு

பொதுவாழ்வில் தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொண்டு சமூகப்பணி ஆற்றியவர் செட்டியார் தாஜுத்தீன் மாமு. திமுகவில் தீவிரமாக இருந்து பிறகு தாய்ச்சபை முஸ்லிம் லீக்-கில் இணைந்து தஞ்சை மாவட்டம் வழுத்தூர் பிரைமரிக்கு பக்க பலமாய் இருந்தவர், தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் போன்ற பதவியிலும் இருந்திருக்கிறார். தான் இறந்தால் உடலில் பிறைக்கொடி போர்த்த வேண்டும் என்ற அளவிற்கு அர்பணிப்போடு இருந்து தாய்ச்சபைக்கு தொண்டூழியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்,வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலின் முத்தவல்லியாய் பணி செய்தவர், வஹ்ஹாபியத்திற்கு எதிரான சுன்னத் வல் ஜமாத் கொள்கைகாக உணர்வோடு உழைத்தவர். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பள்ளிவாசலில் நடக்கும் ஊர் கூட்டங்களில் ஏதேனும் சலசலப்பென்றால் இவரின் ஒரே கத்தல் போதும் சபை அமைதி பெறும். நிறைய வாழ்வின் அனுபவங்களை சுமந்திருந்தவர். அவரது மறைவு பெரும் வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக; அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. --வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

இப்புகைப்படம் நாலு கொடி கந்தூரிக்கு தயாராகும் நாளில் 2014 ஜனவரியில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் எடுக்கப்பட்டது .

11 ஜூன் 2020

பெற்றவள் பெறப்போவது எந்நாள்?

மகனை மீட்டிட 
யுகமாய் தொய்வில்லா போராட்டம்!

நடந்து தேய்ந்தது அவர்
கால்கள் மட்டுமல்ல..
வாழ்க்கையும்
நம்பிக்கையும் தான்.

தாய்மையின் எல்லையில்லா 
போராட்டத்தின் நீட்சி வடிவம்
அற்புதம்மாள்

என்றாயினும்  சூதெலாம்
வென்று வருவான் மகனென்றே 
பொழுதுகள் தோறும்
அழுத கண்களோடு..
சிறைக்கொட்டடியில் இட்ட
"சட்டத்தின் மீதே" நம்பிக்கை வைத்து
அரைநூற்றாண்டாய்  வழக்காடி
தளராது தளர்ந்த தாய்!

எதார்த்தத்தில்
சாமானியர்களை 
சட்டம் சட்டை செய்வதில்லை
அவர்களுக்கு வெட்டும்
பலியாடுகள் என்றுமே தேவை!

ஒன்றியத்தின் எந்த 
மன்றங்களிலும்
உணர்வுகளின் வலியோ
உண்மையின் ஒளியோ
எத்தி எதிரொலிக்க 
வாய்ப்பே இல்லாமல் போனது;
வடக்கின் இடக்கை அரசியலுக்கு
வாகாய் இரை சிக்கியது!

பொறுப்பில் இருப்போர்
அரசியல் மட்டும் நடத்துகின்றார்;
கவனமாய் அவரவர் 
பிழைப்பை மட்டும் பார்க்கின்றார்;
அதனால் அவர்கள்
வயிறு நிறைகிறது
வாழ்வு ஓடுகிறது
அது போதாதாதா?!

இவர் நெஞ்சம் 
நிறைக்கத்தான் ஆளுமில்லை!
இவர் துன்பம் 
இறைக்கத்தான் காலமில்லை!!

பேரறிவாளனை 
பெற்றவள்
பெறப்போவது எந்நாள்???

#11thJune
முகநூல் பதிவு

ஜா.முஹையத்தீன் பாட்ஷா


08 ஜூன் 2020

ஒளிமிகுந்த கிழமைகள்

எங்களின் இருபத்தேழாம் கிழமைகள் எல்லாம் ஒளிமிகுந்தவை,
ஏற்றிய மெழுகுவர்த்திகளின் தீபத் திருசுடர்கள் இன்னும் பிரகாசமாகத்தான் எரிகிறது, மனதின் திண்ணை முற்றத்திலெங்கெனும்.
நண்பர்கள் வந்து வந்து மகிழ்ந்து மயங்கி ஒளியழகு பருகுவார்கள்.
புன்னகையுடன் ஒளியேற்றிக்கொண்டு ஒளிமிகுந்து வழியெல்லாம் மகிழ்ச்சியின் கிரணங்களை பரப்பியவாறே குதூகளத்தை கொடுத்துச் செல்வார்கள் அந்தக்கால நாங்கள் மகிழ்ச்சியின் பெருஞ்செல்வர்கள்.
எங்களின் அந்த கால இருபத்தேழாம் கிழமைகள் எல்லாம் அந்தகாரமாக இருந்ததில்லை அவைகள் ஒளிமிகுந்தவை. கத்ருடைய இரவுகள் கதிர் இரவுகளாகத் தான்இருந்தன. அதன் ஞானப்பேரொளித் திரிகள் என்றும் அணையாதவை.
நாங்கள் அதன் வெளிச்சத்தின் வட்டத்தில் இன்றும் கதகதப்பாக ஒளிர்கிறோம், ஒளியோடும் அழகோடும்.
ஜா.மு. 20-05-20 9:18pm
ரமலான் 27ஆம் நாள் இரவு குறித்த கவிதை. இதை "லைலத்துல் கத்ர்" என்று அழைப்பர். கத்ர் என்றால் கண்ணியம் மிகுந்த அல்லது சிறப்பு மிகுந்தது என பொருள் படும். இப்பெரும் இரவில் இஸ்லாமிய பெருமாட்டி ஒருவர் தன் கைகளால் நெய்து அன்பளிப்பாக அளித்த ஆடை என்பதனால் நாம் உடுத்தும் கதர் ஆடைக்கு அண்ணல் காந்தி அடிகள் அப்பெயர் இட்டதும் வரலாறு.

முகநூல் இணைப்பு

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பேரன்பின் விடைமொழி

 "காயிதே மில்லத்"
என்பது தனியொருவரின்
அடையாளச்சொல் அல்ல;
அது சமூகத்தின் ஒட்டுமொத்த
தேசியக் குறியீடு.


"காயிதே மில்லத்" என
காகிதத்தில் எழுதினாலும்
கண்ணியம் கமழும்!

இனி யார்?
கண்ணியத்திற்குறிய எனும்
அடைமொழிக்கு;
மனிதநேய பேரன்பின்
விடைமொழிக்கு!

முகநூல் இணைப்பு

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தெய்வீக ஒளி

பொதுவாகத்தான் நிகழ்கிறது முழுநிலா தரிசனம்; யாரோ சிலர் தான் தன்னை இழக்கிறார்கள் தெய்வீக ஒளியில். ஜா.மு.
06-06-20
12-10 am

FB Link

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


Shared with Public