31 ஜனவரி 2017

மலர்வனமும் -மலர் மனமும்

"மலர்வனத்திற்கு வா"
அழைத்ததன் பேரில்
சென்றிருந்தேன்.
பூத்திருந்த மலர்வனத்தில்
சரம் தொடுக்க வேண்டினேன்
சில மலர்கள்.
என்னென்ன மலர்கள்
பிடிக்கும் உனக்கென கேட்டான்
மலர்வனத்தான்
பிடித்த மலர்கள் இவைகளென
சுட்டிக்கொண்டிருந்தேன்
அவைகளையெல்லாம் பறித்துவர
பணியாளுக்கு ஏவளிட்டான்
மலர்வனத்தான்.
கூடை நிறைந்த பூக்களை
என் மேடை முன்னால் கொட்டினான்
எனக்கும் பூக்களுக்கும்
ஜென்மங்களின் உறவு இருப்பதால்
பூக்களின் மென்மையில்; மென்மையிலானேன்
அதன் வாசத்தில் வாசம் செய்து லயித்திருந்தேன்
ஏனோ தெரியவில்லை
மலர்வனத்தான்
திடீரென திராவகம் கேட்டான்;
என் முன்னே அனைத்தையும் எரித்தான்
புகைந்து கருகின பூக்கள்,
பூக்களோடு எறிந்து
வெளியெங்கும்
கலந்து கொண்டிருந்தேன் நான்.
இப்படித்தான் பலநேரங்களில்
மலர் வனமும்
மலர் மனமும்
எறியூட்டப்படுகிறது
எறியூட்டிகள் அறிவதில்லை
எப்போதும் இவையிரெண்டும்
பூத்திருக்கும் என்று.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
31-1-2017


கருத்துகள் இல்லை: