வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஆகஸ்ட் 2016

சங்கைநபி இசைக்கோர்வைக்கு எழுத்தாளர் அபூஹாசிமா வாழ்த்து

மனசெல்லாம் நபிக்காதல் கொண்டவரும், ஓப்பற்ற கவிஞரும் சிறந்த எழுத்தாளரும், நமது முற்றம் மாத இதழ் ஆசிரியரும்,சமூக செயற்பாட்டாளருமான அருமை அண்ணன் Abu Haashimaஅவர்கள் எனது ஆக்கத்தில், பாடகர் அபுல்பரக்காத்தின் குரலில் தயாரான "சங்கை நபி" இசைக்கொர்வை குறித்து எழுதி மனம் நெகிழச்செய்திருக்கிறார்கள். அன்னாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகுக!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
********

அன்புத் தம்பி முகைதீன் பாட்சா...
தமிழ் ஆர்வலர்.
ஆன்மீக நேயர்.
ஞானத்தின் காதலர்.
அவர் ...
சில அற்புதமான இஸ்லாமிய பாடல்களை இயற்றி
பாடகர் அபுல்பரக்காத்தின் இனிய குரலில்
இசை வடிவாக கொண்டு வந்திருக்கிறார்.
பாடல்களில்
ஞானமும்
முஹம்மது நபிகளார் மீதான
காதலும் கசிந்து உருகி
கேட்கும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.
மொத்தம் ஆறு பாடல்கள்.
ஆறையும் கேட்டு விட்டேன்.
ஆற அமரத்தான் கேட்கவில்லை.
கொஞ்சம் ஓய்வில்லாத சூழ்நிலை.
தம்பியின் கருத்தாழமிக்க வரிகளை
கொஞ்சம் கவனமாக கேட்டு ரசித்து உள் வாங்க வேண்டும்.
பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.
இன்ஷா அல்லாஹ்
மீண்டும் ஓரிரு முறை கேட்டு மகிழ்ந்து
தம்பி முகைதீன் பாஷாவின் ஞான வரிகளின்
ஆளுமை குறித்து ...
இன்னும் சொல்வேன்.
வாழ்த்துக்கள்
பாஷா பாய்.


01 ஜனவரி 2015

2015 புத்தாண்டு வாழ்த்து


புத்தாண்டை வரவேற்போம்:
என்ன தான் நமக்கென இனத்தின் காலங்காட்டியாக சித்திரை,வைகாசி இருந்தாலும், சமயம் சார்ந்த ஹிஜ்ரி காலங்காட்டி இருந்தாலும் நாம் நமது வாழ்வியல் நிக்ழ்வுகள் எல்லாவற்றுக்கும் கிபி எனும் ஆங்கில காலங்காட்டியைத்தான் பயன்படுத்தி வாழ்கிறோம்.. அது சார்ந்தது தான் பிறந்த தேதி முதல் யாரின் இறப்புத்தேதி வரை,
சம்பளத் தேதி முதல்...சமயல்வாயு வந்த தேதி வரையுங்கூட இந்த காலங்காட்டித் தான்.
ஆக பிறக்க இருக்கும் புத்தாண்டை .. பலர் மிதமிஞ்சிய வியாக்யானங்கள் கொடுத்து நானொரு மேதை என்பதாக சொல்லிக்கொண்டு வாழ்த்த மாட்டேன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.இதிலும் பலர் நாளை பழையதாகிப்போகும் ஆண்டுக்கு என்ன வாழ்த்து வேண்டிக்கிடக்கு என்கின்றனர், அந்த மேதைகள் அப்படியே இருந்து கொள்ளட்டும்.
என்னைப் பொருத்தவரை எல்லாமும் பழையதாகும் தான் ஆனாலும் புதிது என்றாலே அந்தப் புதிதின் புத்துணர்வு, மகிழ்ச்சி எல்லாம் நம் மனதையும், உடலையும் மகிழ வைக்கும் ஆற்றல் பெற்றவை இல்லையா, ஒரு புதிதாய் மலர்ந்த ரோஜாவைப் பார்க்கும் போது ஏற்படும் மனக்கிளர்வைப் போல.. புதிய மணவாட்டியைப் பார்க்கும் போது மயங்கிடும் மணாளன் போல, நம்மோடு உடன்பட்டிருக்கும் ஆங்கில காலங்காட்டியின் புதியதொரு ஆண்டை வரவேற்போம்.

*******              *******          *******             *******

2015 -ஆம் புத்தாண்டுக் கவிதை : 

பிறந்திருக்கும் இந்த 2015 -ஆம் புத்தாண்டு

சிறப்புக்கள் பல கொணரட்டும்..
சீரிய ஆண்டாய் திகழட்டும்.
*
பிறக்கும் ஆண்டு சிறக்கட்டும்
தட்டிடும் கதவுகள் திறக்கட்டும்
*
தொடுபவை எல்லாம் துலங்கட்டும்
தூயோன் அருளால் இலங்கட்டும்
*
வளங்கள் எல்லாம் சேரட்டும்
பலங்கள் எல்லாம் கூடட்டும்
*
செல்வங்கள் எல்லாம் சூழட்டும்
செவ்வனே எல்லாம் நீளட்டும்
*
உடல்நலம் நன்றே ஓங்கட்டும்
உறவுகள் எல்லாம் வாழட்டும்
*
மக்கள் மகிழ்ந்தே ஆடட்டும்
துக்கம் துயரம் ஓடட்டும்
*
அறிவின் ஞாயிறு மலரட்டும்
அறியாமை மக்கள் தெளியட்டும்
*
தேசம் ஒன்றாய் இருக்கட்டும்
துவேச மாயை இருளட்டும்
*
பிறர் நலம் காக்கவும்
பிறர் மகிழ்ச்சிக் காக்கவும்
நம் உடல் நலம்
நம் மனநலம் இரண்டினையும்
நாமே காப்போம்!
நலமே வாழ்வோம்..!!
*
இனியும் பல.............
புத்தாண்டுகள் காண்போம்.
எல்லோரும் வாழ்க!
*



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 டிசம்பர் 2014

அஹமது நளீருக்கு ஆறாம் அகவை



இன்றைக்கு டிசம்பர் 20 என்பதே நினைவில் இல்லை, 


அதற்கு இன்னும் எத்தனையோ நாட்கள் இருப்பதாகவே எண்ணம். திடீரென வாட்ஸ்அப்-ல் பர்த்டே கேக் வருகிறது, ஆஹா! இன்று என்ன தேதி.. மறந்தே விட்டதே என நாக்கை கடிக்கையில் போன் வருகிறது.............அதில் என் செல்ல மகன் அஹமத் நளீர் பேசுகிறான்.

"ஹலோ.. இன்னைக்கு எனக்கு ஹாப்பி பர்த்டேன்னு தெரியுமா.. ஏ நீங்க விஸ் பண்ணல"ன்னு.. 

"செல்லக்குட்டி..ராஜா.. நீ நல்லா சிறப்பா எல்லா நலமும் வளமும் பெற்று சூப்பரா இருப்படா..கண்ணே..ஆமா, புது டிரஸ் போட்டிருக்கியா" அப்டின்னேன்..

அதுக்கு" இல்ல பாப்பு..சாய்ந்தரம் தான் எல்லாரும் வருவாங்க அப்பத்தான் உடுத்திக்கிவேன்" ன்னான் என் செல்ல மகன்.

இன்று என் டிசம்பர் பூக்கள் இரண்டில் மகனுக்கு பிறந்தநாள்.

ஆறாம் அகவை காணுகிறான். மகனை வாழ்த்துவதில் தான் எத்தனை மகிழ்ச்சி. "இறைவா உன் நேசமிகு நபிகள் நாயகத்தின் பொருட்டால். நீ எல்லா நலவளங்களும் என் பிள்ளைக்கருள்".

Wishing you many more happy returns of the day my son Ahamed Naleer

Birthday wishes for Naleer in Face Book Page 20thDec2014 Just Click.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஆகஸ்ட் 2014

காலித் பிறந்த நாள் 16-08-2014

ஆகஸ்ட் 16

என் அன்புத் தம்பி தாவூத் காலித் பிறந்த நாள்
ஆர்ப்பாட்டமில்லாதவர்.. அமைதியானவர்.. எதார்த்தமானவர்.




தம்பி தாவூத் காலித்....

நிறைகள் எல்லாம் வாழ்வில் பெற்று
நிம்மதி வாழ்வில் நிதமும் உற்று
வளங்கள்..சுகங்கள் என்றும் சூழ
பெற்றோர்.. உற்றோர் யாவரும் மகிழ
காற்றோர் சபையில் கண்ணியம் மலர
கணங்கள் தோறும் ஏற்றம் கண்டு
கருணை இறைவனின் காரணத்தாலே
அருமை நபிகள் ஆசிகள் சூழ
நீடித்த ஆயுளுடன் நிறை நலம் கொண்டு
நிலங்குளிர எங்கள் மனங்குளிர வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
நித்தியமாய் புகழெய்தி வாழ்வில் மிளிர்க! மிளிர்க!!! மிளிர்க!!!

வாழ்த்துடன்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 ஆகஸ்ட் 2014

நல்ல மனம் வாழ்க!

எம். ஜே.முஹம்மது இக்பால் அவர்களுடன் நான் (2006-ல் எடுத்த படம்) 

இன்று ஆகஸ்ட் 15, 
இந்திய விடுதலை நாள்..!

நாடெங்கும் சிறப்பான கொண்டாட்டம்… மகிழ்ச்சி.. குதூகலம்... இப்படியான ஒரு நாளில் தான் வாழும் போதே சூஃபியின் இலக்கணங்களுக்கு ஒப்ப ஒப்பற்ற வாழ்வை நடத்திவந்த மேன்மைக்குரிய எங்கள் அஜ்ஜி அத்தா.. ஜமால் முஹம்மது – தாவுத் பேகம் தம்பதியினருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் மட்டட்ற்ற மகிழ்ச்சி. பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய குடும்பங்களின் வழக்கப்படி பிறந்தவுடன் அழைக்க ஒரு பெயர் உடன் வைத்துவிடுவர். எல்லா குழந்தைகளும் முஹம்மதிய அம்சத்தில் (அதாவது இறைவனின் அருளாய் ) பிறப்பதினால் ஆண்குழந்தை என்றால் முஹம்மது என்றும், பெண்குழந்தைக்கு முஹம்மதா அல்லது மஹ்மூதா என்றும் வைத்து ஒரு பெயர் வைப்பது மரபு வழக்கம் அது போலவே இக்குழந்தைக்கும் ஆசையாசையாய் உடன் வைக்கப்பட்ட பெயர் புகழோங்கும் ராஜாதி ராஜா எனப்பொருள் படும் முஹம்மது ஷாஹின்ஷா என்பது தான்.

பின் எப்போதுமாக அழைக்க ஒரு அழகுப்பெயர் சூட்டவேண்டுமே.. அது என்ன பெயர்..? அன்புக்குழந்தை பிறந்தநாள் இந்தியாவின் விடுதலை நன்னாள் பெயரை ஆருயிர் தந்தை சூஃபி ஜமால் முஹம்மது அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள் அப்பெயரை அன்றைய காலத்தில் எங்கள் வழுத்தூரில் கண்ணியமான இமாம் பெருந்தகையாக இருந்த சின்னத்தெரு முஹம்மது லத்தீப் பாய் அவர்களிடம் சென்று சொல்லி வாழ்த்து பெற்றுக்கொண்டு வருகிறார்கள் பிறகு குடும்பத்தில் மூத்த உறுப்பினரும்… ஆழிய ஆன்மீக ஞானம் பெற்ற பெண்மணியும், எல்லோரும் மிக மதிக்கக்கூடியவருமான ஓசாடி புவ்வா என்று அழைக்கப்பட்ட அவரகளின் நண்ணியம்மா அவர்களிடமும் சிறுதாளில் எழுதிவந்த அப்பெயரை காட்டி ஆசியும், வாழ்த்தும் பெறுகிறார்கள். எல்லோருக்கும் மிகுந்த பூரிப்பு.. ஏனெனில் அந்த பெயருக்கு அத்தனைச் சிறப்பு. 


தந்தையார் சூஃபி ஜமால் முஹம்மது அவர்களுடன் மாண்பாளர் முஹம்மது இக்பால்


அப்பெயர் விடுதலை வேள்வியை வீறுகொண்டு வளர்த்த பெயர்.. தூங்கிக்கிடந்த இந்திய மக்களை தட்டி எழுப்பி சுய உணர்வூட்டிய பெயர்.. இஸ்லாமிய ஆன்மீகத்தில் இவரது கருத்துக்கள் எல்லார் உள்ளத்திலும் மிக தாக்கம் ஏற்படுத்தியது.. இவர் இனம், மதம் கடந்து பேசப்பட்டார்.. இவர் ஒரு மகாகவி.. இவரின் கவிதை இன்பத்தில் இளைஞர்களும், அறிவுஜீவிகளும் பேதங்கள் கடந்து இவரில் இலயித்து கிடந்தனர். 

இவர் இந்திய மண்ணை நேசித்து இயற்றிய தேசியகீதமே எல்லார் இதயத்திலும் உணர்வோடும் உயிரோடும் பதிந்த காலங்கள் அன்று.. அந்த “சாரே ஜஹான்ஸே அச்சா.. ஹிந்துஸ்தான் ஹமாரா” எழுதிய உலகப்புகழ் மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்..) அவர்களின் கவிமயக்கமும், கருத்து கிரக்கமும் எங்கள் ஆருயிர் அஜ்ஜி அத்தா சூஃபி ஜமால் முஹம்மது அவர்களுக்கும் இருந்தது. தான் மிகவும் விரும்பிய ஒரு மேதையின் பெயரை.. மார்க்க அறிஞரின் பெயரை.. தேசபக்தரின் பெயரை.. ஒப்பற்ற சூஃபியின் பெயரை.. ஆழ்ந்த சிந்தனையாளரின் பெயரை.. உலகப்புகழ் பெற்ற நல்லான்மாவின் பெயரை தன் பிரியப்பிள்ளைக்கு சூட்ட விரும்பினார். அதனால் பெற்ற தன் பிள்ளைக்கு “முஹம்மது இக்பால்” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

அந்த சிறப்பான குழந்தை இன்று தன் தாய் தந்தையின் ஆசிகள் போலவே பல சிறப்புக்களை அடைந்து மிளிர்கிறது. தனது வாழ்வியல் பயணத்தில் எண்ணற்ற குடும்பங்கள் சிறக்க உதவி இன்று அவர்கள் மனமாற வாழ்த்துகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இன்று பிறந்தநாள் காணும் அச்சிறப்பான மனிதர், எங்கள் அன்பிற்குரிய அறிஞர் ஜனாப். முஹம்மது இக்பால் (MD @ TOSHIBA Elevator Middle East (L.L.C.) ) அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக்கொள்கிறேன். 

எல்லா நலவளங்களும், குறைவிலாது பெற்று குடும்பம்.. குழந்தைகள் சிறந்து மனமகிழ்ச்சியுடன் நீண்ட சிறப்பான வாழ்வை வாழ எல்லாம் வல்ல பேரிறையை.. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் வாழ்த்துக்களோடு வேண்டுகிறேன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 டிசம்பர் 2013

அஹமது நளீருக்கு ஐந்தாம் பிறந்த நாள்!



எங்கள் செல்லக்குட்டி சுல்தான் அஹமது நளீருக்கு இன்று ஐந்தாம் பிறந்த நாள்!

இதே நாளில் இவன் பிறந்த போது நாஙக்ள் அடைந்த சந்தோசத்திற்கு எல்லை இல்லை. 

திருமணம் முடித்து பெறும் முதல் குழந்தை அந்த தலைக்குழந்தை தரும் மட்டற்ற மகிழ்வை ஒரு தகப்பனாக அந்தஸ்து பெற்று புலங்காகிதம் அடைந்து பெறுவது இறைவன் அருளும் பெரும் பேறுகளில் ஒன்று. அந்த ஆனந்த களிப்பை எனக்கு ஊட்டியன் இவன். 

குழந்தை உண்டானதிலிருந்தே என் தாய் தந்தையர் முதன் முதலாக பெற்ற காலத்தில் என்னென்ன ஆனந்தம், அனுபவம் அடைந்திருப்பார்கள் என என்னை ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்க வைத்தவன். என் தாய் பெற்ற பாட்டை என் மனைவி மூலம் எனக்கு எடுத்துக்காட்டியவன் இவன்.

கண்ணே உன்னை நினைத்து எழுதப்போனால் எழுதி முடிக்க முடியாதடா.. இறைவனருளால் இரண்டு வயதிலிருந்தே பென்சிலோ.. சிலேட்டு குச்சிகளோ பிடிக்காமல் பேனா பிடித்து அகரம் முதல் அனைத்து எழுத்துக்களும் எழுதிக்கற்றாய். உனக்கு பேனா ஒன்று கொடுத்தால் போதும் இரவும் பகலும் எழுத்திக்கொண்டே இருப்பாய். இது உனக்கு இறைவன் அளித்த அருள்.

கண்ணே! நீ நிறை ஞானம் பெற்று சிறப்பாய் சீரோடு வாழ்க!

மணியே! நீ எல்லா அருட் பேறுகளும் பெற்று புகழ் சூழ வாழ்க!

முத்தே! நீ எங்களை மகிழ்வித்து இறையவனும், இறைத்தூதரும் அவர் தம் திருக்குடும்பத்தினரும் உளம் நிறைந்து மகிழும் வண்ணம் வாழ்க!

மகிழம் பூவே! என்றும் நீ நல்ல பூரண உடல் நலத்தோடு பல்லாண்டு.. பல்லாண்டென.. நீண்ட நிறை வாழ்வை நிலத்தினில் பெற்று எல்லோருக்கும் பயன்தரும் சிறப்புயர் செம்மை பெருவாழ்வை பெற்று வாழ்க.

இறைவா! எங்கள் குழக்கொழுந்தை, அருமை மகவை நீ உன் பேரருள் கொண்டு சிறப்பாய் வாழ வை!

எங்கள் உயிரினும் மேலான கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது நல்லாசிகள் சூழ வையமதில் ஆள வை! ஆமீன்.

வாழ்க! வாழ்க!! வாழ்க!!!


( எனது இரண்டு பிள்ளைகளும் பிறந்தது டிசம்பரில் தான்.)


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 அக்டோபர் 2013

பிலாலியா ஆலிம்களுக்கு வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

பிலாலியா ஆலிம்கள் வெகுஜன நாளேடான தினத்தந்தியில் கட்டூரைகள் எழுதத் தொடங்கியுள்ள செய்தி அறிந்து மிக்க மகிழ்வும், பெருமிதமும் அடைந்தேன். இது போன்ற தேர்ந்த அறிஞர்கள் எல்லாம் ஊடக‌த்தை    இஸ்லாத்தை சிறப்பாக சொல்ல பயன்படுத்தவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது ஆதலால் இந்த செய்தி என்னை மிகவும் சந்தோசப்பட வைத்ததெனலாம். வாழ்த்துக்கள். வல்ல அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் அருள்வார்களாக!


மேலும் நான் எப்போதும் அன்பர் முதுவை ஹிதாயத் அவர்கள் மூலம் அமீகரத்தில் நடக்கும் வெள்ளிக்கிழமை குத்பாவின் தமிழாக்கத்தை வாராவாரம் பெற்று வருகிறேன். அதை விருப்பமுடன் படித்தும், பல விசயங்களை அறிந்தும் வருகிறேன். இம்மாதிரியான அறப்பணிகளை செய்யும் தங்களுக்கும் அதை அனுப்பித்தரும் அன்பர் ஹிதாயத் அவர்களுக்கும் எனது இதயப் பூர்வமான நன்றிகள்.

குறிப்பு: தந்தியில் எழுதிய கட்டுரையில் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குறிப்பிட நபி(ஸல்) என்றே குறிப்பிட்டிருந்தீர்கள், ஆகவே வெறுமனே நபி (ஸல்) என எழுதாமல் சிறப்பாக தமிழகத்து சகோதர சமூக‌ / மத- த்தவர்களும் "நபிகள் நாயகம் (ஸல்..) " என்றே அழைக்கும் பாங்கு இருப்பதால் அவ்விதமே "நபிகள் நாயகம் (ஸல்..) " என எழுதினால் நலமாக இருக்கும்.

அன்புடன்,

வழுத்தூர் . ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 ஆகஸ்ட் 2011

ஈகைத் திருநாள் நற்செய்தி!



ஈகைத் திருநாளை கொண்டாடும் தீன்நெறிச்செல்வர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இனிய ரமலான்:

இத்தனை நாட்களாய் பசித்திருந்து விழித்திருந்து தனித்திருந்து தொழுதிருந்து மறை விரித்திருந்து, ஜக்காத்தும், சதக்காவும் நிறைவாய் கொடுத்திருந்து, மனமும், மெய்யும் உண்மை மகிழ்வினில் அமிழ்ந்ததாய் தவக்கோலம் தரிக்கச் செய்து தனக்கே உரிய அற்புத பேரின்பத்தை அல்லாஹ்வின் அருளை சொறிந்து சென்றிருக்கிறது இனிய ரமலான்.

மெய்யாகவே ரமலானின் தனிச்சிறப்பும் உயர்வும் எந்த மாதத்திற்கும் இல்லை அது போல் எந்த மாதமும் தராத பேரின்பத்தையும், மனமகிழ்வையும், அமைதியையும், குணநலப் பேணல்களையும், நற்செயல்களையும் மற்றும் தூய சிந்தனைகளையும் தந்து கனிவும் இனிமையும் கலந்து நம்மை சுகந்தமாய் அது சூழ்ந்திருந்தது.

அந்த ரமலானில் அல்லாஹ்வும், அண்ணல் நபிபெருமானார் (ஸல்..) அவர்களும் சொன்னபடி அதனை மகிமைபடுத்தி அதனால் மகிமை அடைந்திருக்கிறோம். நம் உள்ளங்கள் மட்டட்ற்ற மகிழ்வின் திகைப்பிலும், நிறைவான திருப்தியிலும் இருக்கிறது. ஆனாலும் நம்மால் இயன்ற அளவு ரமலானின் புனிதச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தியும் இந்த காலகட்டத்தில் இருக்கும் கலாச்சார மாற்றத்தாலும், நவீன ஊடக தீயசக்திகளாலும், பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவிக்கிடக்கும் தீமைகளினாலும் இன்னும் பல சூழல்களாலும் மனிதனுக்கே உரிய பலகீனத்தாலும் நம்மில் பல தவறுகள் நேர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவைகளை எல்லாம் பொருட்படுத்தாது.. எங்கள் இறைவா! கருணையாளனே! உன் அளப்பறிய கருணையினால் எங்கள் அனைவரின் செயல்பாடுகளையும் அங்கீகரித்து எங்களுக்கு உன் அருளின் முழுமையையும், உன் அருட்தூதர் (ஸல்..) -ன் பேரன்பையும் அள்ளித்தருவாயாக! எங்களுக்கு உன்னையன்றியோ அல்லது உன் வாசலையன்றியோ பிறிதொரு தளம் கிடையாது ஆகையால் எங்களை கிருபைக்கண்கொண்டுப்பார் நாயனே! என்று அவனின் அருளுக்காய் இறைஞ்சுவோமாக!

நன்றிக்கடன்:

இந்த மகிழ்ச்சி நிறைந்த இவ்வேளையில் நமக்கு இந்த உயர்வான மார்க்கத்தை அளித்த பேரிறைக்கு நன்றி செலுத்தும் அதே வேளை அந்த பேரிறையின் பெருங்கிருபையாய் இந்த பூவுலகில் வந்துதித்து தங்களுக்கு நிகரான பேரறிவாளர் யாரும் இலராய் தரணியில் தோன்றி அழகான மார்க்கத்தை நம் போன்றவர்களுக்கு வகுத்து அதை நிலைபெறச் செய்ய மனிதகுல வரலாற்றில் எந்த தீர்க்கதரிசியும் (நபியும்) பெறாத அவ்வளவு இடுக்கண்களையும், துன்பங்களையும் நமக்காக பெற்று பிறகு அதில் வெற்றியும் கண்டு நீங்களும் நானும் பின்பற்றும் அழகு மார்க்கம் அளித்த பெருமானார் நாயகம் (ஸல்..) த்தை நாம் உளமாற நாயகமே உங்களுக்கு எங்களின் மீது எவ்வளவு கனிவு, பாசம், அன்பு.. நீங்களே மனித சமுதாயத்தில் எல்லோரைவிடவும் எங்களின் மீது மெய்யன்பு செலுத்தியவர்கள்! எங்களுக்காய், எங்கள் நல்வாழ்வுக்காய், எங்களின் ஆத்ம நலனுக்காய் எங்களின் இம்மை, மறுமைக்காய் தாங்கள் எவ்வாரெல்லாம் சிரமப்பட்டீர்கள், எவ்வாறெல்லாம் தியாக வாழ்வு வாழ்ந்தீர்கள் என்று அவர்களை நாம் நன்றிப் பெருக்கோடு நெக்குருகி மனமார போற்றிட வேண்டும்,

மேலும் நம் பெருமானார் அவர்களை பெற்றெடுத்த அன்னை ஆமினா (ரலி) தந்தை அப்துல்லாஹ் (ரலி) வளத்தெடுத்த பாட்டனார் அப்துல் முத்தலீப், பால்கொடுத்த அன்னை ஹலீமா(ரலி) மிகப்பெரும் பலமாக இருந்த சிரிய தந்தையார் ஆருயிர் அபூதாலிப் அவர்கள், நிகரில்லா முறையில் நபிகள் நாயகம்(ஸல்..) த்திற்கு மனத்தெம்பூட்டி மிகப்பெரும் பக்க துணையாய் இருந்த அருமை மனைவியார் அன்னை ஹத்தீஜா நாச்சியார் (ரலி), அருமை மகளார் அன்னை ஃபாத்திமா நாச்சியார்(ரலி), மருமகனார் அலி (ரலி), பேரர்களான தியாக சீலர்கள் இமாம் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) மற்றும் அனைத்து திருக்குடும்பத்தினர்கள், அன்னவர்களின் அருமை தோழர்களான அபூபக்கர் ஸித்தீக் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), மற்றும் அஷ்ரத்துல் முபஷ்ஷராக்கள், முதல் அன்றைய பயங்கர சூழலில் முதலில் நபிகள் நாயகம்(ஸல்..) த்திற்காக இஸ்லாமிய பரப்புரைக்கு தனது இல்லம் வழங்கிய அருமை அர்க்கம் (ரலி), இஸ்லாத்தினை ஏற்று நமது நாயகதிற்கு உறுதுணையாக நின்றதற்காகவே மிகமோசமாக துன்புறுத்தப்பட்டு உயிர் துறந்த அனைத்து ஆண், பெண் தியாக சீலர்கள், பிற்காலத்தில் போரிட்டு வீரத் தியாகம் செய்த மேன்மக்கள், வழி வழியாக இந்த இஸ்லாத்தினை நம்வரை கொண்டு சேர்த்த உத்தம பெரியார்கள் என அல்லாஹ்வின் அருள் சூழ்ந்த அத்தனை மேலான ஆன்மாக்களுக்கும் நாம் அனைவரும் மிக..மிக.. அளவின்றி சொல்ல முடியாத அளவு வார்த்தையில்லாத அளவு கடமை பட்டிருப்பதால் அவர்களையும் அன்பொழுக நன்றியோடு நாம் நினைத்து பார்ப்போமாக! இவைகளெல்லாம் குறைந்தபட்ச நன்றி உணர்வாவது இருப்பவர்கள் செய்யது ஆகும்.

இறைஞ்சுதல்:

இந்த பெருநாளில் நாம் எல்லோரும் அருள் நபிநாதர் எண்ணப்படி பரந்த மனதுடன், விரிந்த சிந்தனையுடன், நான் நினைத்தது தான் இஸ்லாம் என்ற குறுகிய வட்டத்துள் சிந்திக்காது அதன் அகமியங்களை உணர்ந்திடவும், ஆன்ற அறிவினை பெற்று மகிழ்வெய்திடவும் முயல்வோமாக! இஸ்லாத்தின் பெருமேதைகளை மதித்து அவர்களின் தத்துவ முத்துக்களை போற்றி அவைகளை நம் வாழ்வு மேம்பட பயன்படுத்தி சிறப்புறுவோமாக!

சமுதாய ஒற்றுமையுடன் சீறிய முறையில் நட்புணர்வுடன் அனைத்து மக்களோடும் அன்பும், பாசமும், நேசமும் பாராட்டி அண்ணல் நபிகள் நாதரின் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைக்கு வலு சேர்ப்ப்போமாக!

நம் வாழ்வில் மகிழ்ச்சி என்றென்றும் சூழட்டுமாக! நம் அனைவரின் வாழ்வு இன்னும்.. இன்னும் மேம்பட்டு அமைதியான பெருவாழ்வை நாம் வாழ்வோமாக! நாம் வாழ்வதோடு மட்டுமின்றி நம்மால் முடிந்தவரை பிறரையும் மகிழச்செய்யும் அனைத்து முயற்சிகளையும் நாம் செய்வோமாக! பிறர் வாழ நாம் சந்தோசப்படும் உயரிய பண்பு நம்மில் தழைத்தோங்குமாக! நமது இந்தியத் திருநாடும், இவ்வைகயகமும் அமைதியுடன், செழிப்புடன் திகழட்டுமாக! இந்நன்னாளில் வல்ல இறைவன் இவ்வனைத்திற்கும் அவனது அருள் தூதரின் பொருட்டாலும் மற்ற அவனின் நேசர்களின் பொருட்டாலும் இதை நமக்கு என்றும் குறைவின்றி அருள்வானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அன்புடன்,

ஜா.முஹையத்தீன் பாட்ஷா (ராஜா முஹம்மத்)

ஃபுஜைராவிலிருந்து (அமீரகம்)