கவிதை - வெளிநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - வெளிநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூலை 2017

வெளிநாட்டு மாப்பிள்ளை



ஆண்டுக்கணக்கில் சம்மந்தம் பேசி
மாதக்கணக்கில் திருமண ஏற்பாடுகள் செய்து
நாட்கணக்கில் தாம்பத்யம் நடத்தி
மணிக்கணக்கில் மனைவியை அழவைத்துச்செல்கிறான்
வெளிநாட்டு மாப்பிள்ளை.
*
வினாடிகள் தோறும் தோன்றி மறைகிறது
ஏக்கத்தின் மின்னல் கோடுகள்.
*
அலைபேசி எடுத்தால் - அவள்
சோக கீதம் இசைக்கிறாள்
கண்ணீர் வழிய – இவன்
ஆழுகையில் ஆலாபனை பாடுகிறான்
*
எல்லோரும் கூடித்தானே
எங்களை இணை என்றீர்கள்
எங்கனம் இணைவதாம்
இடையில் மூவாயிரம் மைல்கற்கள்
*
இப்போது எனை அவள் நினைக்கவும்
அவளை நான் நினைக்குமாக கழிகிறதே
ஒருவரின் கண்ணீர் ஒருவர் ருசித்து
நனவில் நாங்கள் நனைவது எப்போழ்தாம்?
*
திருமணம் என்பது
இருமனங்கள் கூடவா இல்லை
இருமனமும் அழுது புலம்பி 
அனுதினமும் ஒருவரையொருவர் தேடவா?
*
ஒருமனம் அங்கேயும்
மறுமனம் எங்கேயுமாய்
வேள்வித் தீ எரிய
ஏன் இந்த திருமணம் என்ற
ஆயிரம் கேள்விகள் முளைக்கின்றன..
ஆயினும் சமூகம் பதில் என்ன சொல்லும்
*
பணமெனும் தாள்கள் நிரப்பி
அதையணைத்து நான் படுத்துறங்க - என்
பருவத்து ஆசைகள் நீங்குமா எங்கள்
துருவத்து வேட்கைகள் தான் அடங்குமா
இங்கே இருக்கும் எதுவும் என்னவள்
புருவத்தின் ஜாடைக்கும் கூட ஈடாகுமா?
*
ஆமாம், புலம்புகிறேன்
நான் வெளிநாட்டு மாப்பிள்ளை.
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
நம் பெரும்பாலான இளைஞர்களின் / வீட்டு பெண்பிள்ளைகளின் வாழ்வியலை நேற்று நினைத்துக்கொண்டிருந்தேன், மனதில் தோன்றியதை இப்போது வடித்தேன்.
x

17 ஏப்ரல் 2012

அந்த நாள் மான்குட்டி



இந்த கவிதை தோழர் . எச்.தவ்ஃபீக் கஸ்ஸாலி  அமீரகத்திலிருந்து கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றைய தினத்தில் அவருக்கு எழுதி அனுப்பினேன். படித்துவிட்டு ஊரை பிரிந்து அமீரகம் சென்ற புதிதான அந்த நேரத்தில் இருந்த உணர்வுகளால் சூழப்பட்டு எனக்கு அதே அதிர்வுடன் பதில்மொழி கடிதம் பகர்ந்தார்.. வெகுவாக சிலாகித்தார். எழுதியது பிப்ரவரி மாதம் 1996 ஆண்டு அதாவது நான் வெளிநாடு செல்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்.

அந்த நாள் மான்குட்டி நான்
இந்த நாள் தேள் கொட்டியதோ..!

காலையும் முறித்துவிட்டு
கலசமாட சொல்கிறார்கள்
எப்படி ஆடுவேன் அய்யா..!

என் உயிரெல்லாம் ஊரில் உள்ளதே
என் ஒவ்வொரு இரத்த அணுவும்
ஏனடா இந்த சோதனை - இதற்கு
மேலடா நரக வேதனை
என்கிறதே அய்யா!

என் அன்புத்தாயே
ஆருயிர் தந்தையே - என்
மேலுயிர் வைத்த அம்மையே
எப்போது ஆசை மொழி பேசி
ஒத்தாசை சில செய்து
பாசத்தில் உறைவேனோ!

அன்புக்கடன் பட்டுள்ள - என்
உடன் பிறப்பிடம்
கனிமொழி பேச
மனமொழி கூறுதே
கனியுமா..?

உறவே...
உன் அருமை அறியாமல்
உண்மை புரியாமல்
தண்ணீர் பொல் வாழ்ந்தேனே
கண்ணீர் தான் இனி என் காணிக்கை!

மலருக்கு வாசம்
மனிதனுக்கு பாசம்
பிரிவென்பது மிக மோசம்
அன்பிலே தான் சந்தனம் வீசும்
இதையெல்லம் இன்றென் கண்ணீர் பேசும்!

உடல் இங்கே
உயிர் அங்கே
இதயம் இங்கே
துடிப்பு அங்கே
ஒரு நிமிடம்
நூறு வருடம்

ரத்தமென்ற பசையால்
வித்தகமாக அன்பொட்டிய
சுத்தமான உணர்ச்சியெல்லாம்
சத்தமாக மனதுக்குள் அழுது
மொத்தமாக வேகுதய்யா மனசு.. - ஒரு
முத்தம் கூட கிடைக்கலையே பொழுது.

கடனுக்கு கண்ணீர் தாரீகளா..!
உடனோடு இல்லை - இதில்
உப்பும் இருக்காது - அது
ஊரின் உறவில் படிந்துவிட்டது.

எங்கள் சமுதாயம் இப்படியா அழவேண்டும்
இதென்ன இறையே விளையாட்டு
இது தான் விதியா - அல்ல
வாழ்க்கையின் வீதியா..?

பணம் என்ற மாயைக்காக
குணம் கொண்ட இவர்களை - ஒரு
கணம் கூட மறக்க இயலாதே!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

03 மார்ச் 2012

துபை என்பது சொர்க்கபுரி அல்ல!




இவன் தன் வீரிய எதிர்காலத்தை
வீருகொண்டு அமைக்க முற்படுகையில்
முளைக்கவே விடாமல் முழுவதுமாய்
எண்ண விதைகளை
அரபு நாட்டு ஆசையில்
அணைத்து விடுகிறார்கள்!

பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே
பாஸ்போர்ட் எடுக்கத் தூண்டி
துள்ளித் திரியும் வயதிலேயே அரபுநாட்டை
சொல்லிச் சொல்லி தூபமிட்டு
அடிமைத்தன எண்ணத்தை
கொடுமையாக புகுத்துகின்றனர்!

ஏனோ என் சமுதாயம்
வெளிநாட்டு மோகத்தில்
வீணே வீழ்ந்து…!

உறவே!
உண்மை தெரியுமா
நீங்கள் அனுப்பியவன் படும்பாடு..?

அங்கே அவன்..
உனக்காக உழைக்கிறான்
உடலெல்லாம் வியர்க்கிறான்
பாசத்தை நினைக்கிறான்
பகலெல்லாம் உழல்கிறான்
பசியாலும் துடிக்கிறான்!

எங்கே கிடைக்கிறது
ஒழுங்கான சாப்பாடு
"மறத்துப்போன மலையாளி கடை"யில்
காலையிலேயே கட்டிக்கொண்டு
செல்வதைத் தவிர!

ஆடுமாடு போல்
மனிதன் இவன் மாய்கிறான்
யாருக்காக..?
எல்லாம் உனக்காக!

கடன் சுமையும் – மகள்
வரண் சுமையும்
மகனுக்கு படிப்பு
பண்டிகைக்கு நல்ல உடுப்பு...
என்றே நீளும் சுமைப்பட்டியலை
நினைத்து நினைத்து  உழைக்கிறான்
நித்தம் செத்து பிழைக்கிறான்
ரத்தம் சுண்டும் வெயிலிலே
மனதால் புழுங்கி அவிகிறான்!

அவன் கண்களில் எல்லாம்
நீ தான்!
அவன் கனவுகளில் எல்லாம்
நீ தான்!

சர்கஸ் சாகசவீரனும் தோற்கும்
கட்டிடங்களின் மிக உயரஙக்ளில்
விதி இவனை நிறுத்தி
வேலை வாங்கிடும் வேளையில்..
சற்று அயர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடந்தால்
பாபம் இவனைத் தவிர
அகப்படுபவனும்,
உயிரைத்துறப்பவனும்
யாரும் இல்லை!

இங்கே குடும்பச் சுமை
குடும்பக்கடன்
குடும்பம்.. குடும்பம்.. என்றே
பைத்தியம் ஆனவர்கள் ஏராளம்!

ஓ!  உறவே உனக்காகவே
இவன் இங்கே உயிரையே விடுகிறான்
அனுபவித்து பார்க்க நினைத்திருந்தாலோ
அல்லல் படுமே குடும்பம். - என்றே தான்
தனக்கென்று ஏதும் செய்துக்கொள்ளவே தெரியாது
குடும்பத்திற்காகவே தியாகமாகிறான். 

அறிக!
துபை என்பது சொர்க்கபுரி அல்ல!



ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறிப்பு:    இரண்டாண்டுகள் முன்பு எழுதியது





12 பிப்ரவரி 2012

விலை மதிக்க முடியாத திர்ஹம்!




ஒவ்வொரு கனமும் நினைவுபடுத்திக்கொள்- இது 
மேன்மையான உயர்வணக்கமென்று!

அழகான பயன் தரும் பொழுது போக்கு 
சுமையாக அல்ல சுகம் என்று நினை!

சம்பாதிக்கும் ஒவ்வொரு திர்ஹமும்
விலை மதிக்க முடியாதவை!

அவற்றில் உறைந்திருக்கும்
ஏக்கம் பிரிவு தவிப்பு தியாகம்
இன்னும் எத்தனையோ..!

இப்படி ஈட்டிடும் திர்ஹத்திற்கு ஏது விலை..!

ஜே.எம்.பாட்ஷா

@ 2007

11 டிசம்பர் 2011

அராபிய மண் அங்கலாய்க்கிறது...!




அல்லாஹ்வின் தூதர்
அருட்பத மலர் சுமந்த
அராபிய மண் இன்று
அங்கலாய்க்கிறது...!

வெதும்பிக் குமுறி
வெறுத்துக் கதறி
சதா சபித்து
அவர்களிடமே முறையிடுகிறது..!

நீதநபியே என்னைக் கொஞ்சம் பாருங்கள்!
நீங்கள் வெருட்டிய சாத்தான்கள்
ஒன்று சேர்ந்து விட்டதோ..!

நீங்கள் சுத்தம் செய்த இடங்களில்
சாக்கடை சங்கமிக்கிறதே..!

சன்மார்க்கம் வளர்த்த மண்
தன்மானம் விற்றுக்கிடக்கிறதே..!

கத்தூரி வலம் வந்த நகர்களில்
செத்தவாடை அடிக்கிறதே..!

ஆனந்தமாய் ரசிக்க வேண்டிய கண்களில்
அழுக்குத்திரை சூழ்கிறதே..!

தேனான வேத ரீங்காரம் கேட்க வேண்டிய காதுகளில்
தேவை இல்லாதது கேட்கிறதே..!

பண்பாடு வளர்த்த அரபத்திலே
ஆடை துறவரம் நடந்து
அசிங்கம் தின்ம் அரங்கேருதே..!

நல்வாழ்வு அளித்து
நறுமணம் கொடுத்த
நபிவழி இங்கே
நசுங்கி கிடக்குதே!


-ஜே.எம்.பாட்ஷா


8 வருடங்களுக்கு முன் எழுதியிருப்பேன்..!

27 செப்டம்பர் 2010

வாலிபத்தை உறிஞ்சி..





எத்தனைப் பேர் இந்த

அரபு நாட்டு அழகியை

கைப்பிடிக்கக் கனவு காண்கிறார்கள்.


யார் கேட்கிறார்கள்..?

இவள் மூர்க்கத்தனமானவள்

அடைய ஆசைப்படாதீர்கள்,

உங்களுக்கு முன்னே

உறவு கொண்டவன்

நான் என்றால்…

யார் கேட்கிறார்கள்..?


அவளின்…

ஒய்யாரத்திலும்..,

அலங்காரத்திலும்..,

எல்லொரும் எச்சில் வடிய

பிச்சைக் கேட்டு பின் செல்கிறார்கள்!


ஆ..மீசை மிக்க ஆண்களே..!

ஆசையை அடக்கிக் கொள்ளுங்கள்,

ஓசையின்றி வேறு திசை ஓடிவிடுங்கள்,

மாசில்லா உள்ளூர் அழகியோடு

வாழ்க்கை தொடங்குங்கள்,

இல்லையெனில்…

பாஷை தெரியாமல்

விழிக்க வேண்டிவரும் இவளோடு, – பின்

கொஞ்சி..கொஞ்சி.. குலாவலாமென

நினைத்த நீங்கள்,

கெஞ்சி..கெஞ்சி..கேட்டாலும் தரமாட்டாள்,

விவாகரத்து..!


உங்கள் வாலிபத்தை உறிஞ்சி..

தோல் சுருங்கும் வரை அனுபவித்து..

மேல் ஏதும் ஆகாதெனத் தெரிந்தால்

கால் கொண்டு உதைத்தெறிவாள்!


புரிந்து கொள்ளுங்கள்

அனுபவம் சொன்னேன்..

அமுதம் விட்டு

விசம் வேண்டி வரவேண்டாம்.


நீ…

பருவம் அடைந்தது

தெரிந்து விட்டால்..

பாதம் கழுவவாவது அவளைப்

பற்றிக்கொள் பாக்கியமடா அது,

என்கிறார்கள் பெற்றோர்கள்.


நீ...வேண்டுமானால்

அவளின் வாடகை கணவன் என்று

பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

ஊரில் உனக்காக..

காதல் கண்ணிகைகள் காத்திருக்க,

பெண்ணியம் போல் காட்டிக்கொள்ளும்

பேய் இவளையா ஆசைப்படுகிறாய்..?


கேள்! – இவள்

உன் அத்தனைத் திறமைகளையும்

திருடிக்கொள்வாள், - நீ

கடைசிவரை முயன்றாலும்

திருப்திப் படுத்தமுடியாது இவளை!


ஆனாலும்..

நீ போனால்,

ஆயிரம் பேர் இவளுக்கு!


2008 ஆம் ஆண்டு அறை நண்பர்களின் வெளிநாடு பற்றிய விவாதம் சில என்னை இப்படி எழுத வைத்தது. ஜே.எம்.பாட்ஷா

21 ஆகஸ்ட் 2010

விசிட் விசா




பெருமூச்சே – எங்களின்

சாதாரண சுவாச

சப்தங்களானது,


வாக்குறுதி கொடுத்து

நம்பிக்கையூட்டும்

ஒவ்வொருவரையும் நம்பியே

நம்பிக்கை இழக்கிறோம் நாங்கள்!


ஊரில்…

வெளியே சென்றுவிட்டு வந்தாலோ

"இப்படியே பொலப்பில்லாம

ஊர் சுத்துறியே" என்ற குரல்கள் தடித்தது,


துபையில்…

வேலைத்தேடி அலைந்து விட்டு

வெறுத்துப் படுத்தாலும்

"யார் வேலைத் தருவா போய்

பார்க்கும் கட்டிடங்களி லெல்லாம்

ஏறி இறங்கு" என்ற உரல்கள் இடிக்கிறது.


நண்பர்களைப் பார்த்தால்

புலம்பி தீர்ப்பதைத் தவிர

வேறு என்ன வடிகால்..

அதிகமாக உஷ்ணப்படும் போதெல்லாம்..

ஊதித்தள்ளுவது கொண்டு தான்

சற்று தப்பிக்கிறோம் சூழலை விட்டு.


எத்தனையோ கனவுகளைச் சுமந்து

பறந்து வந்த நாங்கள்,

இரவுகளின் தனிமையில்

கண்ணீர் காதலியைத் தான்

கட்டித் தழுவுகிறோம்.


வரும் வரண்களில் – எந்த

முதலாளி மாப்பிள்ளையாவது

எங்களை மணந்து கொண்டு

வேலை கொடுத்தால் – இந்த

கண்ணிகள் மகிழ்வாய்

சொந்தம் சேர்ந்து கரை சேருவோம்.


கண்ணாடி சிரிக்க

தினம்..தினம்.. டிரஸ் செய்து,

காலையில் மணப்பெண்ணாய் புறப்பட்டு,

மாலையில் சீரழிந்தவளாய் கசங்கி வருகிறோம்.


பயோடேட்டாவை மட்டும்

சிரித்துக் கொண்டே வாங்கும் சிலர்

வேலைக் கேட்டாலோ

சிந்தித்து நிதானமாய்

பதிலைத் தேடுகிறார்கள்

அவர்களின் ஈரமொழிகளை நம்பி

தொலைபேசி தொடர்பு கொள்கையில்

செவிடு அவர்களின் செவிகளை

தொற்றிக் கொள்கிறது,

அடித்துக் கொண்டேயிருந்து

இறுதியில் நிற்கும் செல்போன் மணி.


முகம் தெரியாதவர்கள் எல்லாம்

துக்கம் விசாரிப்பது போல்

விசாரிக்க தவறுவதில்லை,

முகம் தெரிந்தவர்கள்

முன்னால் வந்தாலோ

முகம் ஏன் இவர்களுக்கெல்லாம்

என்றே எண்ணத் தோன்றுகிறது.


இந்த

கொடும் வெயில் தேசத்தில்

நெடுந்தூரம் அலைகையில்,

நடுவான் சூரியன் சுடுகையில்

வழித்து விடும்போது

பூமி தொடுவது

வியர்வை மட்டுமல்ல

கண்ணீரும் கலந்து தான்.


இங்கே

சூரியன் மட்டும் எரிக்கவில்லை

சிலரின் சிரிப்பும்

குடும்பச் சூழல் நெருப்பும்

சேர்ந்து எரிக்கிறது எங்களை,


வீட்டில் செல்லப்பிள்ளையாக

வளர்ந்தவர்கள் தான்

வீட்டை நினைத்துத்தான்

சொல்கிறோம் "நல்லா பாப்பேங்க

எந்த வேலையானாலும்" என்று

வாசல்த்தேடி நிற்கிறோம் என்பதற்காக

வயிற்றில் அடிக்கிறார்கள் – எங்களை

குறைந்த சம்பளக் கற்களால்…


தண்ணீர் தாகம்,

பசி மயக்கம் – இதற்கிடையில்

என் இனிய தாய் தந்தை

மனைவி மக்களின் முகங்கள்

நெஞ்சில் தோன்றினாலோ

மேலும் பல்கீனம்

நெஞ்சு பதைக்கிறது

பஞ்சு பற்றி எரிகிறது


இந்த

ஐஸ்கீரீம் விசாவோடு

எங்கள் வயிற்றில்

எப்போதும் நெருப்புத்தான்

கரைந்து விட்டால்

யார் தருவார்

‘ஐந்நூற்று ஐம்பது’

ரினிவல் செய்ய.


எங்களின் கனவெல்லாம்

ஒரு "எம்ப்ளாய்மென்ட் விசா"

எங்களின் மீது இரக்கமுள்ளவர்களே

ஏதாவது வேலையிருந்தால்

கொஞ்சம் சொல்லுங்களேன்..!


யார் யாருக்கோ

வேலை கொடுக்கும் துபாயே!

வேலைகிடைக்காமல் ஊர் சென்றால்

என் மக்களே - ஒரு

மண்புழுவிற்கு கொடுக்கும்

மரியாதையைக் கூட

கொடுக்காமல் போவார்களே

அதற்காகவாவது - ஓர்

வேலைக் கொடு..!

(ஷார்ஜா சீமான் அமைப்பின் 10வது ஆண்டு மலரில் பக்கம் 212-ல் வெளியிடப்பட்டக்கவிதை, 2008) - ஜே.எம்.பாட்ஷா