13 அக்டோபர் 2026

தேவா மறைந்தார்



நம்ப முடியாத செய்தி, இது பொய்யாய் இருக்க வேண்டும், ஆனாலும் பொய்யில்லையே..
ஆண்டவா!!!
ஐயகோ! நண்பா!!!
துபாய் வந்ததிலிருந்து உன்னுடனான உறவு, மணிக்கணக்கான ஆன்மீகப் பகிர்வு, மாதங்கள் பல சந்திக்காதிருந்தாலும் ஆழ்ந்த புரிதல் உணர்வு இவையெல்லாம் வெகு சிலருடன் தான் வாய்க்கும் நண்பா.
அகவை 50, நேற்று முன் தினம் தான் கொண்டாடி இருக்கிறாய்.
அதற்குள், இப்படி ஒரு செய்தியை இன்று நான் ஏன் பார்த்தேன்?
அனைத்தும் முடிவுக்கு வந்ததா? நண்பனே, உன்னைப் போல் ஒருவனை இனி ஒருக்காலும் காணவே மாட்டேன். அத்தகைய அறிஞன் நீ, ஆளுமை நீ, இனியவன் நீ. இதமான வார்த்தை தருபவன் நீ.
நிலை தடுமாறுகிறேன்,
நெஞ்சம் நொறுங்கி நிற்கிறேன்.
கண்கள் இருள கதிகலங்க வைத்துச் சென்றவனே..???
இன்று இப்படி எல்லோரையும் விட்டுவிட்டு ஆழ்ந்த அமைதியில் ஏகினாயே?
என் தேவா!? Dheva Subbiah
இறைவா! அவர்தம் குடும்பத்திற்கு இதைத் தாங்கும் நெஞ்சத்தையும், பொறுமையையும் ஆறுதலையும் நீ அருள்வாய்.

- ஜா.மு
10-10-2026

26 ஆகஸ்ட் 2026

வல்லோன் அல்லா தந்த நூருல்லா

மீலாது நபி நாள் பாடல் -2026

எடுப்பு:

வல்லோன் அல்லா தந்த நூருல்லா - அவரின் 
நூரில்லாமல்  ஏது வானம் பூமியில்
வல்லோன் அல்லா தந்த நூருல்லா

முடிப்பு:

1
ஆதியின் ஜோதியாய் நின்றவராம் - அவன் 
அர்ஷிலும் ஜோதியாய் நிலைத்தவராம்
தூதர்கள் ஓதிய பூபாளம் அவர் 
பூவிது சூடிடும் பூவாரம்
பூரிக்கும் தேனாரம்

2
அப்துல்லா நெற்றித் திலகமவர் 
அன்னை ஆமினார் வயிற்றின் பவளமவர்
குரைஷிகள் குலத்தின் கீரீடமவர்
குவலயமதற்கே விளக்குமவர்
ஹுப்பின் இலக்குமவர்

3
கோமானின் திருமுன் கசிந்துருகி ஆங்கே 
ஹஸ்ஸானும் கஃபும் கவி செய்தார்
பூசரி புர்தா தனை யாத்தார் 
புர்யீ   உருகி தனை இழந்தார் 
உயிரே முஹம்மதரே.
அருள்வீர் முஹம்மதரே

- ஜா.மு
13-08-2026

23 பிப்ரவரி 2026

மழை

மனிதனின்பால் 
பொழியும்
இறைவனின் அருட்பால்.
*
சூல் கொண்ட காற்றுக்கு பிறந்த
கால் கொண்ட மேகக்குழந்தைகள்.
*
பூலோக வனத்தின் 
அன்னைக்கரங்கள் 
"கண்ணே வா" என்றழைக்க 
தாவி வரும் தண்ணீர் குழந்தைகள்.
*
வெளியே தெரியாத 
வேர்களின் வேண்டுதல்களை ஏற்ற 
வானத் தாயின் அமுதம்.
*
தண்ணீர் வடிவில் 
தனிப் பெருங் கருணை.
*
பூமி உயிர்க்க வரும் சாமி.
*
ஜா.மு.
21-02-2026



06 பிப்ரவரி 2026

வீண்



காலையில் கண் பட்டதெல்லாம் மலர்மாலை தந்தது
சாலையோர புல் கூட சலாம் சொன்னது
அடி வைத்த மண் அருமை மகனே என்றணைத்தது
காற்றின் இறகுகள் மனதை வருடி இதமான ஊற்றைத் திறந்தது
வேற்று கிரகமாயிருதும் விடியல் நிலா வாழ்த்திசைத்தது.
அகமது குளிர முகமது பூத்தது.

இப்படியாக இனிதே செல்கையில்..

நாளின்  இனிமை எல்லாம் கொன்ற
வெற்று மனிதன்  இவனை மட்டும்
ஏன் பார்த்தோமென்றானது.
*
உள்ளூர புன்னகைத்தாலும்
எள்ளு வெடிக்கும் முகம் காட்டுகிறான்,
வீணானது அவன் மானுடப்பிறப்பு.

-ஜா.மு
06-02-2026