கவிதை - தன்முனைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - தன்முனைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 டிசம்பர் 2011

இறையே.. நிறைவே..சரணம்


நான் எதைப் பற்றிய கவலையும்அற்றவன்

நான் எதற்கும் பயப்படாதவன்

நான் எந்நிலையிலும் தைரியமுள்ளவன்

நான் சதா உயர்வான சிந்தனையில் உள்ளவன்

நான் ஆளுமைக்காகவே அனுப்பட்டவன்

துணிவும் நிதானமும்

அறிவுக் கூர்மையும்

என் புதிய கூட்டணிகள்

சகல திடுக்கங்களிருந்தும் ஆபத்துக்களிருந்தும் சோதனைகளிருந்தும்

என் அறியாமைகளிருந்தும்,பலகீனத்திலிருந்தும் அதனால் ஏற்படும்

பின்விளைவுகளிருந்தும்,

அல்லாஹுவும், அருமை ரசூல் (ஸல்) அவர்களும் அவர்களின்

திருக்குடும்பத்தினர்களும் மற்றும் புனித ஆத்மாக்களும் எம்மை

பரிபூரணமாக சூழ்ந்து காத்து வருகிறார்கள்.

அந்த பேருண்மையின் பேரன்பின் அரவணைப்பால்

உயர்கிறேன்...

உயர்கிறேன்...

மேலும் உயர்வேன்... உயர்வேன்...

நான் மிகச்சிறப்பாக..

மிக மகிழ்வாக...

மிக உற்சாகமாக..

மிக மேன்மையாக..

மிக நிறைவாக..

இருக்கிறேன்.. என்றும் இருப்பேன்.



-ஜே.எம்.பாட்ஷா

இந்த இறைஞ்சுதல்களை 2002-லிருந்தே தினமும் காலையில் அலுவலகம் சென்ற உடன் பணிகளை ஆரம்பிப்பத்ற்கு முன் நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் சில முக்கிய குர்ஆன் சூராக்கள் ஸலவாத்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளோடு மன்ம் ஒன்றி தியானமாக சொல்லி வரும் இயல்பு கொண்டிருந்தேன். இது போன்ற சுய உசுப்பு சொற்றொடர்களால் நம்மை நாளும் புதுப்பித்தல் மிக அவசியம்!


20 ஆகஸ்ட் 2010

சரித்திரம் சமைப்போம்.


எழுந்து வா

என் அருமை நண்பா

எழுந்து வா

- எழுந்து வா...!


நீ..!

விழுந்த போது

ஒட்டிய தூசு தட்டி

வருந்திய காயத்துக்கு

மருந்து போட்டு,

விருந்து படைக்க பலர்

அருந்தி சுவைக்க

- எழுந்து வா...!


அழுத கண்களைத்துடை

வடிந்த கண்ணீரால்

உப்பங்குளம் செய்,

உப்பை விற்று

நட்பை வாங்கு,

ஆதரவு திரட்டு

அகிலமெங்கும் உன்

ஆட்சிக்கொடி பறக்க

- எழுந்து வா...!


பூமாதேவியின் மேனியை

புண்ணாக்க வேண்டாமென,

மண்ணை உழாமல்

நெல்லைத் தெளித்தால்

நல்ல விளைச்சல்

நல்கிடுமோ நிலம்..?

அது போலவே

உன் மனம் – எனவே

- எழுந்து வா...!


நீ..!

சாகும் மனிதன் தான் – அதில்

சந்தேகமில்லை

சதை எழும்பாலானது தான் - உன்

சடலம் – இதில்

சரித்திரம் எங்கே

படைப்போமென் றெண்ணாதே

இனிப்பை நினைத்தாலே

ஜனிக்கிற தல்லவா

வாயினில் உமிழ்நீர்..!

- எழுந்து வா...!


மண்ணும் மலையும்

சரித்திரம் படைக்குமா..?

மனிதா..! உன்னைத் தானே

தேர்ந்தெடுத்திருக்கிறது

இந்த இயற்கை – எனவே

- எழுந்து வா...!


மெருகேற்றினால் தான்

தங்கமும் ஒளிரும்

அணிந்த உன் அங்கம்

பிறர் கவரும்.

நீ...!

சாதனைப் படைக்க

வாளேந்தத் தேவையில்லை

வைராக்கியம் மட்டுமே தேவை- எனவே

- எழுந்து வா...!


எத்தனைக் காலம் தான்

முன்னால் உள்ளவனின்

முதுகில் ஒளிந்து கொள்வாய் ?

உன்னையும் உலகறிய வேண்டாமா

உலகமெனும் சந்தையிலே

மந்தை ஆட்டைப் போல்

மந்த புத்தியுடன் இல்லாமல்,

சொந்த சிந்தையுடன்

விந்தை பல புரிய

- எழுந்து வா...!


குளிர்கால உறக்கம் போதும்

இருட்டறைக் குள்ளே

எவ்வளவு நேரம் தூங்குவாய் ?

கண்ணை கசக்கி விழித்துப்பார்

வெளியில் என்ன நடக்கிறதென்று,

சூரியன் உச்சிக்கு வந்து விட்டான்.

-எழுந்து வா...!


உணவும் உறக்கமும்

உலகமல்ல புரி,

உடல் நலத்திற்கே.

விழிக்க மறுக்கும்

கண்களுக் கோர்

எச்சரிக்கை விடு..!

விழிக்க மறுத்தால்

வீண்விழி வேண்டாமென

விழினோக நீக்குவேனென்று

-எழுந்து வா...!


எழுந்து வா

என் அருமை நண்பா

எழுந்து வா

(1995 ஆம் ஆண்டு எழுதிய இக்கவிதை நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் அனைவரின் முன்னால் அரங்கேற்றப் பெற்று பாராட்டப்பட்டது, பிறகு 1997ல் இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீது அவர்களின் அழகு குரலில் ஒரு மாலை நேரத்தில் காற்றில் தவழ்ந்து வந்தது, பிறகு துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் 2006ஆம் ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது) - ஜே. எம்.பாட்ஷா