கட்டூரை- சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டூரை- சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 மே 2016

எதிரியை வீழ்த்திய குதூகலம் பிஜே - அன்சாரி சந்திப்பு


எல்லாம் அரசியல்.. எங்கும் அரசியல் என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தான், பதினோரு ஆண்டுகளுக்கு பிறகு மஜக அன்சாரி பிஜே-வை அவர் அலுவலகத்தில் சந்தித்தார், நடப்பு அரசியலைப்பற்றி பேசிக்கொண்டனர் என்று பதிவுகளாக பார்க்கிறோம் இதை பார்த்த ததஜவினர் இனி உலகமே அமைதிப்பூங்காவாகிவிடும், அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்தது ஓர் வரலாற்று அற்புதம், இந்தியாவில் மோடி அரசின் இஸ்லாமிய துவேசப்போக்கு முடிவுக்கு வந்துவிடும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு இஸ்லாமிய பிரஜைக்கும் கோலார் தங்கச்சுரங்கத்திலிருது கிலோ கணக்கில் வெட்டிக்கொடுப்பார்கள் எனும் ரேன்ஜுக்கு ஆஹா… ஓஹோவென ததஜ.த்தினரும், மஜகவினரும் பாராட்டி பதிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த சந்திப்பு… இது பொதுநலன் சார்ந்ததா இல்லை சுயநல கொண்டாட்டமா என்றால்… வெரி சிம்பிள், அன்சாரி பேர.ஜவாஹிருல்லாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவர் கட்சியை, அலுவலகத்தை மீட்க கோர்ட்டுக்கு போய் ஏமாந்தார் பிறகு தானே கட்சி ஆரம்பித்து ஜவாஹிருல்லாவை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று தீராபகை உணர்வோடு காத்திருந்தார், இதில் பிஜேவும் ஒரு காலத்தில் அவரது செயல்பாடும், வஞ்சக உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் பிடிக்காமல் ஒரே கொள்கை கொண்டிருந்தாலும் தமுமுகவால், பேரா.ஜவாஹிருல்லாவால் ஓரங்கட்டப்பட்டவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அதனால் பிஜேவும், அவரது இயக்ககுஞ்சுகளும் பேரா.ஜவாஹிருல்லாவை தமுமுகவை சதிசெய்து வீழ்த்த வஞ்சினம் கொண்டு அலைந்து கொண்டிருந்தனர். அது சாத்தியமானதால் இந்த தித்திப்பு சந்திப்பு அவ்வளவு தான்.



ஏனென்றால் நடந்துமுடிந்த தேர்தல் காட்சிகளில், சென்றமுறை சட்டமன்றத்தில் முதலில் ஜெ.வுக்கு புகழமாலை பொழிந்த பேரா.ஜவாஹிருல்லா நிலைப்பாடு மாறி எதிர்துருவமாக மாறியதால் ஜெயாவும் ஜவாஹிருல்லாவை வீழ்த்ததும் மனப்பான்மை கொண்டிருந்தார் சில கணக்குகளின் பிரகாரம் இந்நிலையிலும் பேரா.ஜவாஹிருல்லா கூட்டணிக்காக ஜெயாவை நாட அவருக்கு கார்டனின் கதவு திறக்காததால் பேரா.ஜவாஹிருல்லா திமுகவில் ஐக்கியமானார்.


அப்போது தான் கட்சி ஆரம்பித்த அன்சாரிக்கு எப்படியாவது தேர்தலில் நின்று ஜெயித்து பேரா.ஜவாஹிருல்லாவுக்கு வயிற்றெறிச்சலை உண்டாக்க வேண்டும் என்பதே லட்சியம் அதனால் எதிர் எண்ணம் கொண்டிருந்தாலும் ஜெயாவின் வீட்டு வாசலை தட்டினார் மஜகவை தூக்கிப்பிடிக்க வேண்டிய எந்த ஒரு சிறு தேவையும் இல்லாத ஜெயாவிடம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல முஸ்லிம் இயக்க ஆதரவு, பேரா.ஜாவஹிருல்லாவை வீழ்த்துதல்  என்ற அவரின் எண்ணத்திற்கும் எலி சிக்கியது. இரண்டு சீட் கொடுத்தார். ஒன்றில் ஜெயித்தார் அன்சாரி. ஜெவுக்கும் சந்தோசம்.

 எதிர்தரப்பிலோ பேரா.ஜவாஹிருல்லா உட்பட திமுக கூட்டணியில் இருந்த மமக ஒட்டுமொத்தமாக காலி,  அன்சாரி ஜெயித்த சந்தோசத்தைவிட மமக கூடாரம் காலி என்ற சந்தோசமே மஜகவின் அன்சாரியையும், மமக எதிர்ப்பாளர்களையும், குறிப்பாக பிஜே மற்றும் அவரின்ததஜ.த்தினரையும் கொண்டாடி திளைக்க வைத்தது. அதை இப்போது வரை முகநூலில் பகிர்வாக பார்க்கிறோம்.

ஆக ஒருவரை ஒருவர் வீழ்த்துவதையும், வீழ்ந்தவுடன் ஆகா அவன் வீழ்ந்துவிட்டான் என மகிழ்ச்சி ஆரவாரமிடுவதையும் தவிர பெரிய சமூதாய நோக்கங்கள் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த ஒரு முனையில் அன்சாரியும், பிஜேவும் ஒன்றிணைந்ததால் இருவருக்கும் பொது எதிரியான பேரா.ஜவாஹிருல்லா வீழ்ந்தததால் தங்கள் வெஞ்சினம் வென்றதை ஒருவருக்கொருவர் சந்தித்து சாதித்துவிட்டோம் என மகிழ்கிறார்களே தவிர வானத்திற்கும், பூமிக்குமாக மாற்றங்கள் தோன்றிவிட்டதாக வேயப்படும் இட்டுக்கட்டுகள் போல சமுதாய நலனுக்கெல்லாம் கடுகளவும் அதில் இடமில்லை என்பதை  தொடர்ந்து பதிவிடும் இயக்கபோதையில் சிகாமணிகள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என வெளியே அறிவித்துவிட்டு எதிரி பேரா.ஜவாஹிருல்லா சார்ந்திருப்பதாலும், மார்க்கவிசயத்தில் பாரம்பரிய வழியை பின்பற்றும் முஸ்லிம் லீக் இருப்பதாலும் இவர்களை வீழ்த்துவதே தன் தலையாய கடமை என இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு அற்பணிப்புடனும் உள்ரங்க வேலைபார்த்தனர் இந்த போலி தவ்ஹீத்வாதிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தேர்தல் முடிவு வெளியானதும் மமகவினர் தோற்றதை, முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தோற்றதை ஏதோ உலத்தில் கிடைக்கப்பெறாத ஒன்று தங்களுக்கு கிடைத்ததைப் போல ஆனந்தப்பட்டு ததஜக்கிவினர் ஒருவருக்கொருவர் மகிழ்ந்து முகநூலில் ஷேர் செய்தது முதல் இனிப்பு வழங்கி கொண்டாடியதை சமூக அக்கரையுள்ள யாரால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

 வெறும் தங்கள் இயக்க அரசியல் சண்டைகளால் இந்த சமூகம் அரசியல் ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை, இந்த சமூகம் வீழ்ந்தாலும் பரவாயில்லை சட்டமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை  தங்களின் இயக்க எதிரி வீழவேண்டும் என்ற பொறாமை குணம் கொண்டு சமூக அழிவிற்கு அரசியல் ரீதியாகவும் ததஜ வழிவகுக்த்திருக்கிறது என்பதே இருவரின் சந்திப்பிலும், சென்ற தேர்தல் தொடர்பான நடைமுறையிலும் இந்த சமூகம் அறிய வேண்டிய உண்மைகள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

28 டிசம்பர் 2014

மூலமாகும் மூடபக்தி

பக்தி தான் இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்... ஒருவன் அறிவாளியாக இருந்தாலும், பாமரனாக இருந்தாலும் பக்தியால் தான் வழி நடத்தப்படுகிறான். பக்தி பெரும்பாலும் அறிவாளி, பாமரன் என்று வேறுபாடு இல்லாமல் மூடத்தனமாகவே உள்ளது.
பக்தி, சிந்தனையை அப்படியே உறைய வைத்திடும் இதனால் அறிவுக்கண் அவ்வளவு எளிதில் திறந்திடாது ஆனாலும் பக்தனின் இந்த பக்தியை அதனால் வரும் சரணாகதியைப் பயன்படுத்தித் தான் மிகப்பெரும் அறிவுஜிவிகள் மனிதன் மனிதனை துன்புறுத்தாமல் இருக்கவும், அவனால் அவனுக்கே கேடு நிகழாதிருக்கவும் சமூகசீர்திருத்தங்களுக்காக, தனிமனித ஒழுங்குக்காக பயன்படுத்தினர்.
உண்மையில் ஓருவன் முற்றும் ஆய்ந்து அறிந்து தெளிந்தால் போலி பக்தி ஆட்டம் காணும் அதற்கு அப்பாலும் ஒரு பக்தி வருகிறதென்றால் அது பரவாயில்லை, அதை உண்மையான பக்தி வைத்துக்கொள்ளலாம். அந்த மெய் பக்தியால் உலகிற்கு நலமே ஒழிய தீங்கு இருக்காது அவன் மனிதத்தன்மையுடன் மனதநேயத்துடன் நடக்க முயல்வான். ஆனால் வெறும் குருட்டு பக்தியாலோ... எவ்வளவுக்கெவ்வளவு நல்லது நடக்குமோ அல்லது நல்லதிற்கு பயன்படுத்தலாமோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா தீங்குகளும் நடக்கும், தீங்குகளுக்கும் பயன்படுத்தலாம். இன்று இதில் இரண்டாம் வகை தான் நடந்து கொண்டிருக்கிறது, அந்த மூட பக்தியை அல்லது மூடபக்தனை பயன்படுத்தித்தான் எல்லா ஈனங்களும் அரங்கேற்றபட்டுக் கொண்டிருக்கிறன.
முழுமையாய் அறிவு விழித்துக்கொள்ளும் போது பக்தி துரத்தப்படுகிறது. ஆனாலும் மற்ற பொது மனிதர்களின் எல்லா படிநிலை அறிவம்சம் கருதி மெளனமாக இருக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் பக்தி எனும் சங்கிலி தான் அவர்களை கட்ட வசதியானது என்பதால்.
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 நவம்பர் 2014

ஆண் அன்னை தெராசா மறைந்தார்

மருத்துவர் மு.கோட்டைசாமி
ஆம் இந்த ஆண் அன்னை தெரசா எங்கள் அய்யம்பேட்டையில் வாழ்ந்து சேவையாற்றியவர். இங்கு அவ்வாறு என குறிப்பிட்டது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல.. உண்மையில் அந்த வார்த்தைக்கு முற்றும் பொருத்தமுள்ளவரை தான் அவ்வாறு குறிப்பிட்டேன், அந்த ஆண் அன்னை தெரசா மறைந்த மருத்துவ சீலர் ஐயா. மு.கோட்டைச் சாமி அவர்கள் தான். பார்ப்பதற்கு கூட அதே சாந்தத்துடனும்.. அமைதியுடனும் கூடிய கனிவு பொங்கும் உருவம்.. தனது வாழ்நாளெல்லாம் மக்கள் பணிக்காகவே அற்பணித்த தியாகி.. அவருக்கு அடி மனதின் ஒரு முனையில் கூட இவர் முஸ்லிம்.. இவர் இந்து என எண்ணத்தெரியாத உண்மையான மனிதர்.. மேன்மையான மனித நேயர். அவர் இன்று இராமேஸ்வரம் சாலையில் ஏற்பட்ட வாகனவிபத்தில் மறைந்தது அவரின் சேவைமய்யமான மருத்துவமனை இருக்கும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மக்களுக்கு  மட்டுமல்ல அந்த உயர்ந்த மனிதரின் மருத்துவ சேவையால் பயன் அடைந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார மக்களுக்கும் பேரிழப்பு… பேரிழப்பு.. பேரிழப்பே தான். இந்த துக்ககரமான செய்தி காலையில் அறிந்தது முதலே பேரதிர்ச்சி அடைந்தேன்.


 இந்து முஸ்லிம் என்ற மதமாச்சர்யங்கள் எல்லாம் அவர் அறியாதவர்..   வாழும் போது எப்படி அன்பை மட்டுமே பிரதானமாய் கொண்டு மனிதர்களை கருணையால் சூழ்ந்து சிகிச்சை செய்து சாதித்தாரோ அது போலவே அவர் இறந்த போதும் மதமாச்சர்யங்களை தவிடு பொடியாக்கி மனித நேயத்தை.. மதம் கடந்த பெரும் நேசத்தை அவர் இறந்து போய்விட்டலும் அவரது பூத உடல் நிரூபித்துக் காட்டிவிட்டது.  ஆம், ஐயா.கோட்டைசாமியின் பூத உடலை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆரா துயரத்தில் சூழ்ந்து கொண்டு கண்ணீர் வடித்து கலங்கி நின்ற காட்சி பார்த்த எல்லோருக்கும் பேரதிர்வை உண்டாக்கிவிட்டது.. இது போன்ற கோட்டைச்சாமிகளால் தான் இந்த தேசத்தில் மனித நேய கோட்டைகள் விழுந்துவிடாமல் தாங்கிப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று  எண்ணத்தோன்றியது. 

ஏனென்றால், அய்யம்பேட்டையில் வசித்த ஒரு சாதாரண மருத்துவருக்கு அவரின் இறுதிச்சடங்கில் மரியாதை செய்ய பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடி அதுவும் இஸ்லாமியர்கள் மட்டுமே தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமாக கூடி  தங்கள் இரங்கலை தெரிவித்து அழுதார்கள்  என்றால் மேலும் இஸ்லாமிய ஆண்கள் கூட்டமே அவரது பூத உடலை சூழ்ந்து ஆர்பரித்து அவர்களே மயானம் வரை பெருங்கூட்டதுடன் சுமந்து சென்று 
சோகம் சூழ பிரியாவிடை தந்தார்கள் என்றால் இது ஆச்சர்யத்திலும் ஆச்சயர்மாகத் தான் இருக்கிறது. இதற்கெல்லாம் ஆதார சுருதி இஸ்லாம் குறிப்பிடும் எல்லோரிடமு அன்பு, அறம், நேசம், உதவி என்ற நற்பண்புகளை அவர் பேணி மக்கள் பால் காட்டிய கருணை.. மக்களுக்கு அவர் காட்டிய அன்பு.. மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்காக சேவையாகவே செய்து பல உயிர்களை காத்து நின்றது தான். இத்தனை மக்கள் திரள் ஒன்று கூடி தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது என்றால் இதில் மருத்துவர் ஐயா அவர்கள் மக்களின் மீது காட்டிய மெய்யன்பும், மக்கள் அனைவரும் மருத்துவர் ஐயா அவர்களிடம் காட்டிய பேரன்பு மட்டுமே காரணம். ஒரு அரசியல் வாதிக்கோ.. ஒரு நடிகருக்கோ கூடிடும் கூட்டத்தில் சூது இருக்கும், ஏமாற்று இருக்கும், வஞ்சகம் இருக்கும் ஆனால் இங்கு கூடிய கூட்டத்திற்கோ அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அன்பும்.. ஆற்றாமையும், மனிதநேயரை பிரிந்துவிட்டோம் என்ற பிரிவுத்துயரும் தான் காரணமாக திகழ்ந்தது.

தினமும் காலை மருத்துவ மனைக்கு வந்து நோயாளிகளை பார்க்க உட்கார்ந்தால் மதியம் மூன்று மணி வரை பார்ப்பார்.. இடையில் உணவு கூட இல்லை எல்லாம் பிறகு தான். பிறகு சாப்பிட்டு வந்து மீண்டும் மாலை மருத்துவமனை வந்தால் ஓய்வின்றி இரவு பதினொன்று முப்பது வரை பார்ப்பார் சில நேரம் பன்னிரெண்டும் ஆகும். இதற்கிடையே எத்தனை எத்தனையோ அர்ஜென்ட் கேஸ்கள் வேறு.. மருத்துவமனைக்கு வருவதையும் பார்ப்பார்.. பல சமயம் அவர்களின் வீட்டிற்கே ஓடிப்போய் பார்த்துவருவார். எந்த ஊர் எந்த இடம் என்றெல்லாம் பார்க்கமாட்டார்.. துடிதுடித்து வரும் மக்களின் நாடித்துடிப்பறிந்து ஏதோ தனக்கோ தங்கள் குடும்பத்திற்கோ நேர்ந்த துன்பம் போல எண்ணி ஓடி வருவார். அது மட்டுமல்ல இரவு மருத்தவ மனையிலிருந்து சென்று உணவருந்தி விட்டு பன்னிரெண்டு மணிக்கு மேல் அப்போது தான் படுக்க சென்றிருப்பார் அதற்குள் ஐயா.. அவசரம்.. உடனே வாருங்கள் டாக்டர்.. என்று கதவு தட்டும் குரலுக்கு முன் தான் சட்டையை மாட்டிக்கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். 



துபாய் வரும் முன் நானே கூட ஒரு முறை தெருவில் ஒருவர் வீட்டில் திடீர் உடல் நலக்குறைவு என இரவு இரண்டு மணிக்கு போய் அழைத்து வந்திருக்கிறேன். எத்தனையோ முறை எனக்கும்.. என் தாய் தந்தையருக்குமாக அவசர காலத்தில் உதவியிருக்கிறார். அந்த சேவையை எல்லாம் நான் என் மனக்கண் அழுக இன்று நான் அழுது நினைத்துப்பார்க்கிறேன். அய்யம்பேட்டையில் எத்தனையோ மருத்துவர்கள் இருந்தாலும் ஐயா.கோட்டைசாமி போல் ஒரு கருணை வடிவத்தை பார்ப்பது அரிது. அதிலும் அதிகமாக காசு வாங்காது.. அதிக பணத்திற்கு ஏதேதோ எழுதி கொடுத்து இம்சை செய்யாது மனிதாபிமானத்தோடு ஏழை எளிய மக்களின் உடல் நலனில் அக்கரை கொண்டு இப்படி ஒரு ஓய்வறியத… உறக்கம் பார்க்காத மக்களுக்காவே பணி செய்த சிறப்பான மருத்துவர் மறைந்து விட்டாரே என்று தான் மனம் புலம்புகிறது. 


இனி  அய்யம்பேட்டைக்கு மட்டுமல்ல எங்கள் வழுத்தூர், பசுபதிகோவில், மாங்குடி, இன்னும் ஆற்றைக்கடந்த அக்கரை ஊர்கள் என எத்தனை எத்தனையோ ஊர்மக்களான நாங்கள் அவசர உதவிக்கு இனி யாரை அழைப்போம்.. இருக்கும் மருத்துவர்கள் எல்லாம் காசு பறிப்பவர்களாகவும்… வார்த்தைகளால் இன்னும் மனதை ரணப்படுதுகிறவர்களாகவுமே இருக்க எங்களை இப்படி தவிக்க விட்டுச் சென்றுவிட்டீர்களே ஐயா! மருத்துவம் படித்தவர்கள் எப்படி எல்லாம் வாழவேண்டும்.. எப்படி சேவையாற்றவேண்டும் என்பதற்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டிய மனிதநேயர் அல்லவோ நீங்கள் ஐயா!

அன்பும் மனிதநேயமும் பொய்த்துப்போய்விட்ட இவ்வுலகில் அதை பறைசாற்ற ஆங்காங்கே ஒரிரு ஜீவன்கள் தெய்வாதீதமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதன் காரணத்தாலேயோ என்னவோ இன்னும் இப்பூவுலகில் மழை பொழிகிறது.. நல்லவைகள் நடக்கிறது. அந்த வகையில் மறைந்த மருத்துவ சீலர் ஐயா.கோட்டைச்சாமி அவர்களின் சேவை என்றும் நினைத்து நன்றி பாராட்டதக்கவை. ஐயா நாங்கள் இருக்கும் வரை உங்களை பார்த்த சிறு பிள்ளைகள் அவர்கள் வாழும் வரை உங்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. இன்னும் அடுத்த தலைமுறைக்கும் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி எத்திவைப்பார்கள். அம்மாதிரியான அபூர்வமானவர் அல்லவோ நீங்கள்.

மருத்துவர் கோட்டைசாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக! நித்திய ஜீவன் எய்திடுமாக! அன்னாரின் நீடுபுகழ் என்றும் நிலைபெறுமாக!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

12 ஆகஸ்ட் 2014

ஈராக்கில் அட்டூழிய அரங்கேற்றம்

ஈராக்கில் மனிதாபிமானமே இல்லாமல் சிறுபான்மை மக்களான எஜீதிகள், கிருத்துவர்கள்,குர்துக்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் போன்ற இனத்தவர்களை ஈவிரக்கமே இல்லாமல் கொன்றும், புதைத்தும், விற்றும் இன்னபிற அநீதங்களையும் செய்யும் கொடிய குழுவினரை எனதளவில் வன்மையாக கண்டிக்கிறேன். 

இச்செயல் இஸ்லாத்திற்கும், நபிகள் நாயகத்தின் இனிய செயல் பாட்டிற்கும் முற்றும் எதிரானது மக்காவை வெற்றி பெற்று தாங்கள் ஆற்றிய இறுதி உரையிலும், பலமுறை தனது தோழர்கள் மத்தியிலும் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போது சிறுபான்மையினர் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களது உரிமை, உடமை, உயிர் போன்றவற்றிற்கு முழுமுதலாக பொறுப்பேற்று பேணி நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எண்ணத்தில் கூட தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று எண்ணிவிடக்கூடது என்று பல முறை அறிவுருத்திச் சென்றிருக்கிறார்கள். இது தான் இஸ்லாம். நபிகள் நாயகம் ஸல்லல்லஹு அலைஹிவசல்லம் அவரக்ள் கூறிய இதன் சாரத்தை அவர்களின் இறுதி உரை என்று பதியப்பெற்றிருக்கும் எந்த மொழி அல்லது எந்த வருட, எந்த நாட்டு நபிமொழிப் பதிப்பிலும் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய பெயரில்.. இஸ்லாத்திற்கு சேவை செய்வதாக கூறி இஸ்லாத்திற்கு எதிராக.. மனிதாபிமானமே இல்லாமல் மனித உயிர்களை கொன்று குவிக்கு யாராக இருந்தாலும், எந்த குழுவாக இருந்தாலும் அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவரக்ள். அவர்களுக்கும் நபிகளாரின் வழிகாட்டலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களை இஸ்லாத்தின் பிரதிநிதிகளாக யாரும் தொடர்பு படுத்த வேண்டாம். சில இந்து நண்பர்கள் அவர்களையும் இஸ்த்தினையும் தொடர்பு படுத்தி குழப்பிக்கொள்கின்றனர், இஸ்லாமிய பெயரில்.. இஸ்லாத்திற்காக என்று அவர்கள் செய்வது ஆண்டவனுக்கே அடுக்காது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஈராக் கொடுஞ்செயல்கள் - கார்டூனிஸ்ட் பாலாவின் பதிவு - பின்னூட்ட புரிதல்

முகநூல் நண்பர் Bala Cartoonist Bala அவர்கள் நேற்றுமுன் தினம் ஈராக்கில் பாதிக்கப்பட்ட ஒரு யஜீதி இனப்பெண் அங்குள்ள பாராளுமன்றத்தில் அவ்வினத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி அழுது முறையிடும் கொடுமையான ஒரு யூடியூப் லின்க் கொடுத்திருந்தார். (மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அக்குழுவின் மிக மோசமான கொடுஞ்செயல்கள் கண்டனத்திற்கு உரியது) இது போன்ற சென்சிடிவான வியங்களை அவர் எப்போதெல்லாம் பகிர்கிறாரோ அப்போதெல்லாம் பாசிச சிந்தனையாளர்களும், விசமிகள்லும், விளங்காதவர்களும் இது தான் தங்களுக்குள்ள மேடையெனக் கருதி.. ஒரு குஜராத் கலவரத்தை.. ஒரு முசாபர்பூர் கலவரத்தை நடத்தி..ப்போயிருப்பார்கள் அதாவது அந்த அளவிற்கு ஒரு புரியாமல் ரண கலமாக போயிருக்கும். அதில் பரிவாரங்களின் பிரதிநிதிகள் வேறு வந்து இஸ்லாத்தினை அவர்கள் எப்படி காண்பிக்க வேண்டுமோ அப்படி மிக மோசமாக காண்பித்து போயிருப்பார்கள். இது போன்ற பதிவுகளின் பின்னூட்டங்களை நான் பார்பது இல்லை, பார்த்தால் மனம் நோகும்.. தேவையில்லாத சிந்தனைகள் வரும்..என போய்விடுவேன்.. ஏனோ நான் பார்த்து அதில் இரண்டு மூன்று கருத்துகள் பதித்தேன் அது உங்கள் பார்வைக்கு....

*************

உலகத்தில் எத்தனையோ ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.. எத்தனையோ போராளி குழுக்கள் இருக்கிறது அதுவெல்லாம் அவர்கள் சார்ந்திருக்கிற மதம் சொல்கிற வகையில் தான் இருக்கிறார்கள் என்று நாம் எண்ண முடியுமா.. யாரோ ஒரு குழு செய்கிறது என்பதனால் அதை இஸ்லாம் அப்படித்தான் கூறியுள்ளது என்பதாக சொல்வதெல்லாம் அபத்தமும், அறிவீனமும். அப்படியானால் இந்தியாவில் பரிவாரங்கள் நடத்திய கலவரஙக்ளை இந்து சமயம் இப்படித்தான் செய்யச்சொன்னது என்றும், இலங்கையில் நடந்ததை பவுத்தம் சொன்னபிரகாரம் தான் செய்தார்கள் என்றும் சொல்லல் தகுமா.. சிந்திப்பீர்.

விரிவாக சிந்தித்து மனிதம் வளர்ப்போம்.

****************

திருக்குரானின் வசனத்தை போட்டு இதை தான் இஸ்லாம் சொல்கிறது என்று காட்டுவதில் எத்தனை மகிழ்ச்சி உங்களுக்கு, திருக்குர் ஆனின் வசனங்களை அதன் முன்.. பின்.. ஏதும் தெரியாமல் ஒரு பகுதியை போட்டு நீங்கள் போட பலரும் அதை பார்த்து பாருங்கள் எப்படி எல்லாம் இருக்கிறது என சொல்லிவிட்டு வெறுப்பை உமிழலாம் ஆனால் திருக்குர் ஆன் என்பது 23 வருடங்கள் நபிகள் நாயகத்தின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து அது சார்ந்து வெளியானது.. விமர்சிக்கும் உங்களில் யாரேனும் நல்ல சரித்திர ஆசிரியர்கள் எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாற்றை படித்தவர்கள் உண்டா.. இல்லை அறிஞர்கள் சொல்ல அதை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரிந்தவர்கள் உண்டா..பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எல்லாம் இவற்றை கற்காமல் ஆராயாமல் தான் இஸ்லாத்தை ஏற்றி போற்றீனார்களா.. சிந்தியுங்கள்.. மக்களை ஒருங்கிணைப்பதில்.. எல்லா சமூகத்தையும் அரவணைப்பதில்.. ஒரு மனிதன் நெறி தவறி இருக்கிறான் என்றால் அவனை நெறிபடுத்துவதில் முனைப்பு காட்டுங்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் பெரும்பாலான இஸ்லாமியர்களே திருக்குர் ஆனை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரியாமல் பலரும் பலபிரிவாக இருந்து பேதங்கள் கொண்டலைகிறார்கள்.. (ஏனெனில் அவர்கள் தற்போது உருவாகி இருக்கும் நவீன இயக்கங்கள்.. குறுகிய சிந்தனையாளர்களீன் சிந்தனைக்கு தங்களை சிறைபடுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதால்) அப்படி இருக்க நீங்கள் எப்படி புரிகிறீர்கள். திருக்குர் ஆனை புரிவதற்கு அதன் பின்புலம் தெரிய வேண்டும், எந்த சம்பவத்திற்காக இது வெளியானது என்ற விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.. இதெற்கெல்லாம் உலகம் முழுவதும் உள்ள நிறைய அறிஞர்கள் தப்ஸீர் என்ற விளக்க உரைகளை எழுதி இருக்கிறார்கள் இத்தனையும் இருக்கிறது.

நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் அன்பால் இணைந்து உல்கம் ஆள்வோம். வாழ்வது கொஞ்சநாள் அன்பை விதைத்து செல்வோம்.

எப்போதும் Bala Cartoonist Bala இது போன்ற பதிவு போடும் போது இப்படியே வன்மம் கக்குவது வாடிக்கையாகிவிட்டது. நாம் மனிதர்கள்..

தீயவர்கள் தீயவர்களின் செயலை உதாரணமாக ஏற்கவேண்டாம்.. அதை அவர்களை அம்மதத்தின் பிரதிநிதிகளாக்க வேண்டாம். அவர்கள் கழிசடைகள்.

****************

மனித இனத்திற்கு எதிரான செயல்களை எந்த மதத்தவன் செய்தாலும் எதன் பெயரில் செய்தாலும் தவறு தவறு தான்.. அவர்களை மனிதத் தன்மை கொண்ட எவரும் ஆதரிக்க மாட்டார்கள். அந்த இதயமில்லாதவர்களை எந்த மதத்தின் பிரதிநிதிகள் என்றும் சொல்லாதீர்கள். அவர்கள் வேண்டுமானால் அவ்வாறு தம்பட்டம் அடிக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல. நல்ல இதயம் உள்ளோர் சிந்திப்பீர்.

*********************


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 ஜூலை 2014

எடுப்பார் கைப்பிள்ளைகள் திருந்தட்டும்

முகநூலில் வெளியாகி எங்கும் பரவிவரும் ஒரு புகைப்படம் என்னை வேதனைக்குள்ளாக்கியது.. இது குறித்து நீங்கள் பலரும் அறிந்திருப்பீர்கள்..அந்த புகைப்படத்தில் நிற்கும் இளைஞர்களுக்கும், அதை ஆதரிக்கும் ஒரு சில ஆட்களுக்கும் சிலவார்த்தைகள்....

மூடர் கூட்டம் ஒன்றை வைத்துக்கொண்டால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற சிந்தனை அபாயகரமானது.. மூதேவிகள் சிலரால் இந்த சமூகத்திற்கு கிடைத்த அவப்பெயர் இன்னும் நீங்கவில்லை... சமூக அரங்கில் பின்னுக்கு இருக்கும் சமூகத்தை முன்னேற்ற ஒழுங்கான வேலையை பார்க்காமல் இன்னும் எத்தனை பேரடா புறப்படுவீர்கள்.. ஏற்கனவே கணக்கற்ற பிரிவுகளாய் காரி உமிழும் வகையில் சிதைந்து சின்னா பிண்ணப்பட்டு நிற்கிறது இந்த சமூகம்.

நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. நல்ல நீதமான தலைவர்களை பின்பற்றுங்கள்.. எவனவெனோ உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அவனுக்கெல்லாம் அல்லாஹ் அக்பர் எனச்சொல்லிக் கொண்டு பின்னால் ஓடாதீர்கள். சுயசிந்தனை இல்லாவிட்டால் இன்னும் கடைநிலைக்கு போய் அசிங்கப்படுவீர்கள், ஏற்கனவே முகநூல போன்ற சமூக ஊடகங்களில் எப்படி மெளடீகமாகவும், மதவெறியை தூண்டுவதாகவும் சில மாற்று மத அமைப்புக்கள் நாசகார சிந்தனையை தூண்டுகிறதோ அதே வகையில் நீங்களும் சமூகத்தின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் வகையில்லாத தேவையில்லாத விசயங்களை பறிமாறி ஏன் உங்களையும், உங்களை சார்ந்தோரையும் படுகுழிக்குள் தள்ளிக்கொல்லுகிறீர்கள்...

உங்களைவிட உணர்ச்சி வசப்பட்ட எத்தனையோ நபர்களின் வாழ்வு இன்றுவரை விடைகிடைக்காமல் உள்ளது, சிறைக்கூடம் நிரந்தர வாழ்வுக்கூடாரமாகி அவர்களது தாயும், தகப்பரும், மனைவி மற்றும் பிள்ளைகளும் நிற்கதியாகி நிற்பதை நீங்கள் அறிவீர்களா.. அவர்களின் ஆராத்துயர் நீங்க இன்னும் வழி பிறக்கவில்லை

உங்களை உசுப்பேற்றிவிடும் நபர்கள் உங்களை ஓட விட்டுவிட்டு பின்னால் ஒளிந்து கொள்வர்.. நீ பிடிபட்டால்.. நீ சிறைபட்டால்.. ஒரு பயல் உன்னை சீண்ட மாட்டான்.. பிறகு அழுதென்ன லாபம் உனக்கு வேண்டுமானால் இது தியாகமாக தோன்றலாம்.. ஆனால் முன்பின் யோசனையில்லாத மகா அறிவிழித்தனம் என சமூகமே உன்னை தூற்றும் ஆனால் உன் சகஅறிவிழி அதற்கு மார்க்கப்பாதை என பெயரிட்டால் அது உனக்கு போதையூட்டலாம்... அது நிதர்சனமல்ல.





எவனுடைய இயக்கத்துடையவோ எழுத்தை நீ பனியனாக வாங்கி அணிந்து போஸ் கொடுக்கிறாயே.. அது என்ன..? அதன் பின்னணி யாது..? அவர்களின் உருவாக்கம் எப்படி..? அவர்களின் கொள்கை ஏற்புடையதா..? இது போன்ற கூட்டத்தினால் என்ன பயனுண்டாகும்.. பழங்கால வரலாறு எப்படி என எதையாவது மக ஆழமாக சிந்தித்தது உண்டா.. அது இந்த பூமிக்கு எந்த வகையிலும் தொடர்புடையதா... ??????????????

பெரும்பாலனவர்கள் உன் புறவாழ்வை பார்த்துத் தான் உன்னையும் உன் சமூகத்தையும் எடை போடுகின்றனர் அவர்கள் உட்கார்ந்து உன் விலாசம் என்ன உன் சமயம் சொல்லு அறக்கருத்துக்கள் எது எனவெல்லாம் பார்க்க மாட்டார்கள் அதனால் திருந்து எல்லோருக்கும் கெட்டப்பெயர் வாங்கிக்கொடுக்காதே. நீங்கள் ஏதோ ஒரு தெருவில் ஒரு சிலர் செய்யும் சில தகாதவைகள் ஒரு தேசத்து ஒட்டுமொத்த சமூகத்தின் பெயருக்கே கலங்கம் ஏற்படுத்தும் அளவில் இருக்கிறது.இதையெல்லாம் சிந்தித்து திருந்தி நடந்தால் நன்மை பிறக்கும், இல்லையேல் ஒன்றும் சொல்வவதற்கு இல்லை!

பெரியோர்களை மதித்து... உணர்ச்சி வசத்திற்கு அப்பாற்பட்டு.. பொறுமையோடு எதையும் ஆராய்ந்து நிதானமாக முடிவெடுத்து எல்லோரையும் அன்பு செய்து அரவணைத்து யாரையும் பிரித்து பார்க்காது வாழப்பழகினால் உன் வாழ்வும் மகிழ்ச்சியாய் இருக்கும், எல்லோருக்கும் நல்லது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 பிப்ரவரி 2014

தப்பித்த மூன்று உயிர்களும், தப்பாத முந்தைய உயிர்களும்



மகனை  மரணத்திலிருந்து காப்பாற்ற ஓர் தாயாக  சந்தித்த அதிக பட்ச துன்பம், மனவேதனை, நம்பிக்கை துரோகம் இவைகள் எல்லாம் அற்புதம் அம்மாள் அவர்கள் தனது அசாத்தியமான நம்பிக்கையால், முன்னெடுப்பால் வென்று காட்டியிருக்கிறார்கள். என்ன நேர்ந்தாலும் நிலைகுலையக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் அதுவும் ஒரு பெண் சமூகத்தில் எப்படி மனத்துணிவு கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டய் விளங்குபவர் அற்புதம் அம்மாள்.


இவர் தனது மகன் பேரறிவாளனுக்கு இன்று கிடைத்த தீர்ப்பாம்"விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு" என்ற செய்தி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சை வரவழைத்திருக்கலாம். ஆனாலும் பேரறிவாளனும் மற்ற மூவரும் நிரந்தரமாக வெளியாகும் நாள் தான் நீதியின் வெற்றியாக நாம் கொண்டாடப்பட வேண்டிய நாள்.

இன்று இம்மூவருக்கும் கருணை மனு காலம் கடந்து நிராகரிக்கப்பட்டதை வைத்து வந்திருக்கும் தீர்ப்பால் நிரபராதிகள் தூக்கு கயிறுகளிலிருது காப்பு பெற்றிருக்கின்றனர். ஆனால் நீதிமன்றமே ஒப்புக்கொண்டபடி குற்றம் நிரூபிக்கவேப்படாமலும்  அப்சல் குருக்கு தூக்கு தண்டனை கொடுத்து ஒரு குற்றமற்ற இந்தியனை, காஷ்மீரி குடும்ப அப்பாவியை இந்திய திருநாடு கழுவேற்றி கொன்று அவரது குடும்பத்தை நிர்கதியாக்கியது குறிப்பாக ஒரு சமூகத்தை குறிவைத்து இழைக்கப்படும் கொடுமைகளின் தொடர்கதையேயன்றி வெறில்லை.


அதிஷ்டவசமாய் இன்று மூவரும் உயிர் பிழைத்தனர், ஆனால் ஆதாரமே இல்லாமல் எத்தனை பேர்  அதிலும் வஞ்சிக்கப்படும் சமூகத்தின் நிரபராதிகளின் உயிர் இழந்திருக்கிறது.

என்ன செய்ய நெஞ்சம் இதையெல்லாம் நினைக்கவே செய்கிறது!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

24 டிசம்பர் 2012

கலங்கரை விளக்கம் கலந்தர் மஸ்தான் ஹஜ்ரத்!

வியாழக்கிழமை காலை (20-12-2012) அன்று  அலுவலகம் வந்த உடனே தொலைபேசி வந்தது, இடியென என் நெஞ்சிற்கு செய்தியொன்றும் தந்தது அது நம் நெஞ்சுக்குகந்த பெருமேதை, நாநிலமறிந்த மார்க்க வல்லுநர், தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் கலங்கரை விளக்கம் மெளலவி எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சென்னையில் அதிகாலை  2.30 மணி அளவில் ஏகனளவில் ஏகிவிட்டார்கள் என்பது தான், தொலைபேசியில் ஒளித்த குரல் மிக வருத்தப்பட்டு சொன்னது தமிழகத்தில் எத்தனையோ மார்க்க மேதைகள் இருந்தாலும் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும், திருச்சி ரப்பானி ஹஜ்ரத் அவர்களும் பிரதான அறிஞர்களின் மகுடமாக திகழ்தார்கள் ஊருக்கு சென்றால் மனதார பல மார்க்க விளக்கங்களை கேட்டு மன அமைதியடைந்து வருவோம் அவர்களில் ரப்பானி ஹஜ்ரத்தை தொடர்ந்து நம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும் இறையடி சேர்ந்து விட்டார்களே இனி நாம் ஊருக்கு சென்றால் இது போன்ற மாமேதை யாரை காண்போம்.. என தன் அங்கலாய்ப்பை சொல்லி புலம்பி அழுதார்! அவர் சொன்னது மிக உண்மை தான் தமிழகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு இஸ்லாமிய மார்க்க கருத்தின் ஆழிய கருத்துக்களை அபூர்வ விளக்கங்கள் கொடுத்து இஸ்லாமிய அறிவூட்டியவர்கள் மறைந்த கலந்தர் மஸ்தான் சாஹிப் என்றால் மிகையாகாது. மிக சிறப்பான மனிதர், கண்ணியமானவர் இவைகளை எல்லாம் அவரது நடை உடை பாவணைகளே சான்றுகள் கூறும், எங்கும் எப்போதும் அல்லாஹ், ரசூலின் பேச்சே இவரது மூச்சுகாவும், ஞானிகளின் ஞானஒளியிலேயே இவரது கணங்கள் என்றும் என இவரது வாழ்வு அற்புத பெருவாழ்வாகவே இருந்தது.


1998 ஆம் ஆண்டு வழுத்தூரில் நாங்கள் நடத்திய மீலாது விழாவிற்கு சிறப்புப்பேச்சாளர்களில் பிரதானமானவராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்களை அழைக்க வேண்டும் என விரும்ப ஹஜ்ரத் பெருந்தகை  அவரக்ளோடு மிக நெருக்கம் கொண்ட எங்களூர் தர்ஹா பள்ளி இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் நூரி அவரகள் மூலம் முதலில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் சூழ்நிலை அறிந்து கொள்வோம் என அன்றைய செல்போன் வசதிகளெல்லாம் இல்லாத அந்த நேரத்தில் இராஜகிரி பூத்திலிருந்து போன் செய்த போது தான் நான் பார்த்த அந்த நிகழ்வு என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது…. ஆம்! ஹஜ்ரத் பெருந்தகை இருப்பதோ காயல் மாநகர் தர்ஹாபள்ளி இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் இருப்பதோ இராஜகிரி.. தொலைபேசி மணி அடித்ததும் யாரோ எடுக்க பிறகு ஹஜ்ரத் அவர்களின் கரத்திற்கு மாறுகிறது ஹஜ்ரத் அவர்களின் குரல் கேட்டதும் உட்கார்ந்து பேசுங்கள் என சொல்லியும் கேட்காது நின்று கொண்டே பேச ஆரம்பித்த தர்ஹா பள்ளி இமாமின் உடல் கூனி குறுகி போய் நடுக்கத்துடன்.. ஜீ! ஜீ! என மிக மரியாதையுடன் பணிவை வெளிப்படுத்திய வண்ணமாகவே இருந்தது.. பிறகு நான் கேட்டபோது தான் சொன்னார் ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் சிறப்பிற்கு முன் நான் மிக எளியவன், அவர்களது பார்வை அல்ல அவர்களது வார்த்தைக்கு முன் கூட என்னால் நின்று பேச முடியாது என சொன்ன போது இவ்வளவு தூர இடைவெளியில் ஹஜ்ரத் பெருந்தகை அவர்களுக்கு எவ்வகையிலும் தெரியாத நிலையிலும் கூட இவரின் செயல் பாடு என்னை ஆச்சரிபப்பட வைத்தது ஹஜ்ரத் பெருந்தகையின் மீது இப்படி பலபேர் மரியாதையும், அன்பும் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவரின் கண்ணியத்தை இதிலிருந்து நாம் அளவிட்டுக்கொள்ளலாம்.

தமிழகத்து ஊர்களில் ஹஜ்ரத் பெருந்தகை செல்லாத ஊர்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான் அந்த அளவிற்கு எல்லா ஊர்களுக்கும் சென்று இறைப்பணி ஆற்றியுள்ளார்கள். சற்று முந்தைய காலங்கள் வரை வழுத்தூரின் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அதில் முக்கிய பேச்சாளாராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் இருப்பார்கள். ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் பெயர் இருந்தாலே அவர்களின் பேச்சை கேட்பதெற்கென்றே மிகப்பெரும் கூட்டம் கூடும். அறிஞர்கள் என்றாலே உடன் அழைத்து வாரி அணைத்து புலங்காகிதப்படும் புண்ணிய மண்ணான எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூருக்கு இம்மாபெரும் அறிஞரின் வருகை அடிக்கடி நிகழும் அந்த வகையில் ஹஜ்ரத் அவர்களிடம் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. எங்கள் ஊரில் ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பேசாத தெருக்களோ, திக்குகளோ இல்லை எனலாம் முக்கியமாக எங்களூர் தர்ஹா பள்ளிக்கு அப்பள்ளியின் இமாம் ஜாபர் சாதிக் நூரி அவர்கள் அடிக்கடி அழைத்து வந்து உரைநிகழ்த்த வைத்து மக்களுக்கு நல்லுணர்வூட்டுவார்கள் என்பதும் இந்த நேரத்தில் நினைவு கூற தக்கது
ஹஜ்ரத் பெருந்தகை ஒவ்வொரு ஆண்டும் கல்கத்தாவில் மாதக்கணக்கில் உர்தூ தொடர் பயான் நிகழ்த்துவார்கள், கேரளாவில் அதிகமதிகம் சென்று மக்களுக்கு மார்க்க சொற்பொழிவாற்றுவார்கள், இன்னும் கடல்கடந்து பல நாடுகள் சென்று தன் செந்தமிழ் ஆளுமையால் செம்பணி செய்தார்கள். மெய்ஞான சொரூபர்களிடம் மிகுந்த கண்ணியம் கொண்டு அவர்களின் வழிநடத்துதலில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் தங்களது எல்லா பேச்சின் தொடக்கத்திலும் அல்லாஹ்வை புகழ்ந்து, அண்ணலாருக்கு சலாம் சொல்லி ஞானியர் திலகமாம் மஹ்பூபு ஸுப்ஹானி முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களை ஷைகாகவும், வழிகாட்டியாகவும் நினைவு கூர்ந்து பின்னரே உரையை துவக்குவது இவர்களது வழக்கம்.

ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் பேச்சில் தமிழ் அழகு சிந்தும், அடுக்கு தொடர்கள் முந்தும், சிலேடைகளும், சிறப்புயர் வாக்கியங்களும் இழையோடும். பேச்சில் கண்ணியம் விஞ்சி நிற்கும், ஹுப்பே ரசூல் மிகுந்து காணப்படும். அவரது நேர்த்தியான பேச்சு பலரின் நேத்திரங்களில் நீர் கசிந்துருக வைத்திருக்கும். எதிர் தரப்பை தாக்கி பேசினாலும் அதில் ஓர் தகைமை இருக்கும் வன்மம் இருக்காது. சாத்வீகம் தான் அவர்களது பாணியே அன்றி மூர்க்கம் இவர்களது அல்ல! ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் ஒரு பேச்சை கேட்டு விட்டு எழும் ஒவ்வொருவரும் நிச்சயம் உள்ள நிறைவுடனும், ஈமான் வழுவுடனும் மட்டுமே எழுந்து செல்வார் என்பது திண்ணம். இன்றும் இணையத்தின் யூடியூப்-ல் நிறைய பேச்சுக்கள் மக்களெல்லாம் பயனெய்தும் வகையில் காணக்கிடைப்பது தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஓர் புண்ணிய சொத்தாகும். ஆகவே அன்பர்களே உங்களில் யாரேனும் இன்னும் ஹஜ்ரத் அவர்களின் பயான் நிகழ்வுகளை பதிவு செய்து இருந்தால் தயங்காமல் அதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தாரைவார்த்துக் கொடுத்து பயன்யெய்துங்கள், அல்லாஹ் அருள்வான்! உங்களின் செயல் கண்டு மகிழ்வான்!!

 காயல் மஹ்லரா ஹஜ்ரத் பெருந்தகை தவமாய் மார்க்கப்பணி செய்தபதி, அதன் விளைவு தான்  இன்று மக்களால் கொண்டாடி மகிழும் ஹஜ்ரத். அப்துல் காதிர் மஹ்லரி முதல் எண்ணிரந்த உலமாக்கள் உலகத்திற்கு தீன் சேவையாற்ற புறப்பட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகது. இவர்களது தலைமையில் வருடா வருடம் காயல் மஹ்லராவில் நடக்கும் திக்ரும், புகாரி மஜ்லிஸ் விழாவும் மிகப்பிரசித்தி பெற்றவை.

21ம் தேதி வெள்ளிக்கிழமை கடையநல்லூரில் நடைபெற்ற ஹஜ்ரத் பெருந்தகையின் நல்லடகத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கண்ணீர் மல்க தங்களின் உஸ்தாதும், மார்க்க போதகருமான அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டு தங்களுக்கு நேர்ந்த ஈடுசெய்ய இயலாத இழப்பினை குறித்து ஒருவரோடு ஒருவர் தங்களுக்கு ஆறாகுறையாக ஆகிவிட்ட நிகழ்வினை குறித்து ஆர்த்து ஆர்த்து  நினைவு கூர்ந்து வருந்தி வாடினர், இந்தியாவின் பலமுனைகளிலிருந்தும் கடையநல்லூருக்கு வருகை தந்த பெரும் பெரும் மார்க்க மேதைகள், அரசியல் தலைவர்கள், மற்றும் பொது மக்களுள் தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரிலிருந்து இரண்டு வேன்கள் நிறைய சென்ற  ஹஜ்ரத் அவர்களின் நேசர்களும் அடக்கம்.

முக்கியமாக நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் சாஹிப் சென்று கலந்து தன் நெஞ்சத்தின் இரங்களை பதிவு செய்து வந்திருப்பது குறிப்பிட தக்கதுஏனென்றால் ஹஜ்ரத் அவர்களின் மறைவை குறித்து மணிச்சுடரில் முனீருல் மில்லத் அவர்கள் எழுதிய மிக நீண்ட  இரங்கல் கட்டூரையை நான் படிக்க நேர்ந்தது அதில் பேராசிரியர் அவர்களுக்கு ஹஜ்ரத் அவர்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது அவர்களது பிரிவால் எந்த அளவுக்கு அவர் துயருறுகிறார் என்பதை விளங்கிக் கொண்டேன் மேலும் அக்கட்டூரையில் ஹஜ்ரத் தொடர்பான எல்லோரும் அறிந்திடாத ஆனால் அறிய வேண்டிய பல வரலாற்று தகவல்களையும் ஹஜ்ரத் அவர்களின் மேன்மையையும் பேராசிரியர் சுட்டிக்காடியது மிக அற்புதமாக இருந்தது, கட்டூரையில் முத்தாய்ப்பாக அரபிப்பழமொழியாம்மவ்த்துல் ஆலிம் மவ்த்துல் ஆலம்அதாவது ஒரு அறிஞரின் மரணம் என்பது இந்த உலகமே மரணமெய்தியற்கு சமம் என்பதை சுட்டிக்காட்டி இருந்ததை ஹஜ்ரத் அவர்களுக்கு பேராசிரியர் செய்த மிகப்பெரிய அரிய சமர்பணமாக கருதினேன். அதற்கு முற்றும் பெரும் தகுதியான பெருந்தகை ஹஜ்ரத் அவர்கள் என்பது பேருண்மை.

வல்ல அல்லாஹ் அவனது ப்ரியமான ஹபீப் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் மற்றும் ஞானிகளின் திலகம் ஹஜ்ரத் முஹையத்தீன் ஆண்டகை அவர்களின் பொருட்டாலும் ‘’அல் உலமாவு வரதத்துல் அன்பியா – (சத்திய) அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்கள்“ என்ற நபிமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னாரின் ஆன்மாவை மட்டற்ற பேரமைதியிலும், மகிழ்விழும் நீந்த வைப்பானாக! ஹய்யுல் கய்யுமாகிய வல்லவன் முடிவற்ற பேரின்பத்தை அவர்களுக்கு வழங்குவானாக! தாரணியில் அவரது ஓங்கு புகழை என்றும் நிலைக்கச்செய்வானாக! இன்னும் சங்கை படுத்துவானாக! அவரை பிரிந்து வாடும் எல்லா நெஞ்சங்களுக்கும் சப்ரன் ஜமீலாவை கொடுத்தருள்வானாக!. ஆமீன்.

 -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா