23 பிப்ரவரி 2012

வழுத்தூரும் வள்ளல் முஹையத்தீன்(ரலி) நாயகரும்!

வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல்

தேங்காய்ப்பூ டவலுடன்.. பொலிவான தோற்றத்துடன் பல முகங்கள் தெருவில் தென்படும்.. எதிரே பார்க்க மிக சந்தோசப்பட்டு ‘சலா….மலைக்கும்..எப்டி இருக்கீங்க..’என்று முகம் மலர்பவர்களை நோக்கி ‘ஆமா எப்பண்ண வந்தீங்க..’ என நாம் விசாரித்தாலோ கொடிச்சீலைக்காகத் தான் தம்பி..!  எப்போதும் நாங்க எல்லா குரூப்பா பிரண்ஸ் எல்லம் சேர்ந்து இப்படி தானே ஊருக்கு வர்ரது வழக்கம் அப்படி தான் இப்பவும் குவைத்ல.. தூபாய்ல.. சவுதிலேன்னு எல்லாம் சேர்ந்து வந்திருக்கிறோம் என்பார்கள்..! ஆம் ரபிய்யுல் ஆகிர் மாதம் நெருங்க நெருங்க பிறை 1 ஐ எதிர்பார்த்து தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரில் எல்லோரிடமும் ஓர் ஆர்வத்துடனான பரவசம் பற்றிக்கொள்ளும்.

மெய் தான், இது வலிமார்கள் வாழ்ந்து நெறிபுகட்டிய பூமி.. அக்கம் பக்கத்தில் எத்தனையோ இஸ்லாமிய ஊர்கள் இருந்தாலும் அத்தனை ஊர்களுக்கும் கல்வி என்றால் அது மார்க்க கல்வியாக இருந்தாலும் உலக கல்வி யாக இருந்தாலும் வழுத்தூர் என பெயர் விளங்கிய காலங்கள் உண்டு.. அப்பெயரின், புகழின் காரணம்… பெரும் பெரும் அறிவு ஜீவிகளும், செய்யதுமார்களான ஷைகுமார்களும், ஞான மேதைகளும் வாழ்ந்து அக்கம் பக்கத்து ஊர்கள் என்றில்லாது தமிழகம், கேரளம் என்றும் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கை என்றெல்லாம் எல்லைகளை தாண்டி தங்கள் அறிவுச்சுடர்களை விரித்து அரசோச்சிய அற்புத தருணங்கள் அவைகள்.

வெளியூருக்கு செல்லும் நேரங்களில் என்னுடைய அனுபவப்படி வழுத்தூர் என்றால் அது எங்கள் உஸ்தாதின் ஊர் என்றும், எங்கள் தகப்பனாரின் ஷைகின் ஊர் என்றும், சொல்லி புலங்காகிதப்பட்டவர்களை பார்த்திருக்கிறேன். ஏன் சிலர் எழுந்தும் விரைந்தும் வந்து கட்டிபிடித்து ஆர்வத்துடன் முசாபஹா செய்து வாழ்த்தி நீங்கள் புண்ணிய பூமியிலிருந்து வந்திருக்கிறீர்கள் அது சிறு மக்கம் அல்லவா என்று மனதார தன் உணர்வுகளை கொட்டிவர்களை பார்த்திருக்கிறேன்.. குறிப்பாக கடையநல்லூர்.. திருநெல்வேலி… மேலப்பாளையம்.. என இதற்கு சான்றாக எத்தனையோ ஊர்களின் அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அஷ்ஷைகு ஷாஹ்முஹம்மத் வலியுல்லாஹ் மற்றும் பல இறைநேசர்கள் உறையும் நினைவிடம்... இது மிகத் தொண்மையான கலையம்சம் கொண்டது.

‘அல் இல்மி மஸ்ஹூரி..ஃபி பலதி வழுத்தூரி’ அதாவது கல்விக்கு என்றால் வழுத்தூர் தான் பிரசித்தித்தளம் என்னும் பொருள் கொண்ட அரபிய சொற்றொடர்களே பெரியவர்கள் மத்தியில் அன்றைய காலத்தில் வழக்கத்தில் இருந்தது என்றால் இதற்கு அப்பாலும் வழுத்தூரின் ஞானமேன்மைக்கும்.. ஞானிகளின் சங்கமமாக அது திகழ்ந்தது என்பதற்கும் ஏதும் மிகையாக சொல்லத்தேவையே இல்லை. வெகு காலங்கள் முன்பு எங்கள் ஊருக்கு பகுதாதில் இருந்து மன்னர் முஹையத்தீன் ஆண்டகையின் இரத்த உறவிலிருந்து வந்து இறைமறை வழிநடத்திய நபிகுல மாணிக்கமான அஷ்ஷைகு முஹம்மது வலியுல்லாஹ் மற்றும் அந்த ஞான ஆலமத்தின் விழுதுகளாக அஷ்ஷைகு பஹாவுத்தீன் வலியுல்லாஹ், அஷ்ஷைகு மீருத்தீன் வலியுல்லாஹ் என்பவர்களும் அவர்களின் வழித்தோன்றுதல்களூமே இச்சிறப்புகளுக்கு காரணம். இவர்களின் விபரங்களையும்.. ஞான முதிர்வையும் சொல்லப்போனால் கட்டூரை நீளும் இன்ஷா அல்லாஹ் அதை வேறொரு கட்டூரையில் பார்க்கலாம் இவர்களின் காரணமாக காதிரியா தரீக்கா இங்கே மிக தழைத்திருந்தது.. மக்கள் மெய்ஞ்ஞான இன்னமுது பருகி களிப்புற்றிருந்தனர்.

…..சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் என ஏதும் இல்லாத காலம் அது.. அந்த சமயத்தில் காலரா என்னும் தொற்று உயிர்க்கொல்லி நோய் மிக வேகமாக பரவியது.. அது பரவி பல உயிர்களை தொடர்ந்து காவு வாங்கிக்கொண்டே இருந்தது ஒரு மய்யித் அடக்கி விட்டு வருவார்களாம்.. மற்றொருவர் இறந்துவிடுவார்களாம்.. சில நேரங்களில் பல மவுத் நேர்ந்து அடக்கம் தொடர்ந்து கொண்டே செல்ல ஊரில் யாருமே மகிழ்வில்லாமல் சோர்ந்து இதற்கு விடையே கிடையாதா என்ன தான் தீர்வு இப்படி ஒருவர் பின் ஒருவராக இறந்து கொண்டிருந்தால் ஊரில் யார் தான் இருப்பார்கள் என மிக நொந்திருந்த வேலையில் தான் ஊரின் மிக மேலான ஞானவான்களை தீர்வுக்காக மக்கள் நாட அவர்கள்.. இறைநேசத்தில் தன்னையே இழந்து மஹபூப் சுப்ஹானியாக.. இறைவனின் மிகக் காதலுக்குரிவர்களாக தங்களை பரிணமித்து கொண்ட இறைநேசர், இரசூல் நபிகளின் ஷரிஅத்தில் இருந்து எள்ளளவும் பிசகாது நபிகள் (ஸல்..) கூறிய ஹதீஸ் குத்ஸியின் விளக்கமான ஞானப்பாட்டையில் திளைத்து இறைவனின் மள்ஹராக அதாவது இறைவனின் அருள் வெளிப்படும் தளமாக தங்களை ஆக்கிக்கொண்ட இறைவனே உவந்த மகிமைமிக்க முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகரை பொருட்டாக்கி அவர்களின் பெயரில் கொடிகளாக நான்கு கொடிகளை சுமந்து வந்து ஊர்முழுவதும் காப்பு பெற அவர்களது வஸிலாவை கேட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்து நாம் வேண்டிக்கொள்வோம் வல்ல நாயன் அவனின் மஹபூபுக்காக நம் பிரார்தனைகளை ஏற்றுக்கொள்வான் என்று அறிவுரை வழங்க அதுபோல் செய்தனர் அன்றைய தூய உள்ளம் கொண்ட வழுத்தூர் வாசிகள்!

ஆம்! ஆச்சரியமாக உயிர் திண்ற பெருங்கொல்லி காலரா வழுத்தூரை விட்டே வெருண்டோடியது.. காப்பு பெற்றனர் காரணர் முஹ்யித்தீன் ஜீலானி நாயகரால். பாதிப்பிற்குள்ளான உள்ளங்களுக்குத்தான் வலியின் வேதனை தெரியும் இறையருளால் நிவாரணம் வழங்கிய நாதரின் வஸிலா தங்கள் ஊருக்கு தொடரவேண்டுமென தொடர்ந்து எண்ணினார்கள் பிறை ஒன்றில் ஒவ்வொரு ரபிய்யுல் ஆகிருக்கும் வள்ளல் முஹையத்தீன் ஆண்டகையின் நான்கு கொடியும் தொடர்ந்தது.. இன்றும் தொடர்கிறது..இன்ஷா அல்லாஹ் என்றும் தொடரும்…! (இவ்விழாவினை கொடிச்சீலை என்றழைப்பர் அதாவது கொடிக்கம்பத்தில் நீண்ட துணியுடன் கூடிய கொடிகளை ஏற்றுவதால் வந்த பெயர்)

இது இறைவனே தேடிக்கொள்ளச்சொன்ன வஸீலா (சிபாரிசு)..திருக்குர் ஆனில் அவனிடம் முடுகுவதற்கு வஸிலாவை தேடிக்கொள்ளுங்கள் என்கிறான்.. மேலும் அவனே கூட மக்களை நல்வழி படுத்த நினைத்த போது நபிகளின் மூலம் தான் அதை செய்தான்.. அதற்கு வஹீயை அறிவிக்க நாடிய போது ஜிப்ரயீலை கொண்டு தான் கொடுத்தான்.. நபித்துவத்திற்கு பிறகு வலித்துவம் முடிவுநாள் வரை இருந்து கொண்டே இருக்கும்படி அவன் தான் அமைத்தான்.. மக்களுக்கு அல்லாஹ் கிருபை (ரஹ்மத்) செய்ய நாடினான் நபிகளாரை கிருபையாக (ரஹ்மத்தாக) அனுப்பினான் ஆக, நபிகளாருக்கு பிறகு நபித்துவ அகமியங்களை சுமந்து வரும் நெஞ்சங்கள் கொண்ட வலிமார்கள் மூலமாக இந்த ரஹ்மத் புவியை அடைகிறது.. அந்த வரிசையில் வலிமார்களின் தலைவராக முஹையத்தீனாக இருக்கும் மஹபூபுஸ் ஸுப்ஹானி அவர்களை கொண்டாடி இறைவனின் அருள் பெருகின்றனர் வழுத்தூர் வாசிகள் அவர்களை அண்டி அருள் பெற்றிடும் உலகின் பலப்பகுதியில் வாழும் ஈமான்தாரிகளைப் போல!

இறைவன் இது போன்ற வலிமார்களை தான் அத்தாட்சி ‘ஷஆயிரல்லாஹ்’ என திருமறையில் கூறுகிறான்.. அந்த அத்தாட்சிகளை நினைவு கூறவும் பணிக்கிறான்.. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவனது நல்லடியார்களை நினைவு கூர்ந்து.. கொண்டாடி மன மகிழ்ந்து.. இறைவனின் எல்லா அருட்பேறுகள் அனைத்தையும் பெற்றுக்கொள்வோம். அதே வேலையில் இவ்வுயர்வு மிக்க முஹையத்தீன் ஆண்டகை (ரலி)யின் சிறப்புக்களையும், ஞான உயர்வினையும், தூய வரலாற்றினையும் ஆய்ந்து படித்து..அவர்கள் எந்த இறையிருப்பில் இன்பம் கண்டார்களோ அதே உண்மையில் எங்களையும் ஆக்கி அருள்வாய் இறைவாவென அந்த மன்னர் முஹையத்தீன் நாதரையே பொருட்டாக்கி வேண்டி ஈருலக வாழ்விலும் வெல்வோமாக! ஆமீன்.


-ஜே.எம்.பாட்ஷா

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாழ்வில் மறக்க முடியாதா நாள் கொடிசீலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி இன்னும் ரிஃபாயி ஃபக்கிர் மார்களின் தஃப் ஓலி என் காதுகளில் இனிமையாக கேட்கிறது....

உண்மையானா சொற்றோடர்

கொடிசீலை நினைக்கும் போது என் மனது ஆனந்தம் அடைகிறது... நல்ல நினைவூட்டல் கட்டுரை

shaik Mydeen சொன்னது…

Shaik Mydeen thx for u r update ..... i allso miss ......my sweet movement of my village ...realy .......

Nasrath Ahamed சொன்னது…

great live memories always.....

nagoreismail சொன்னது…

ஸலாமலைக்கும் பாய்..
பதிவு ரொம்ப அருமையா இருக்கு சகோதரரே..! இவர்களை போல நல்லடியார்களை வாழ்நாளில் நேரில் சந்திக்கும் சேர்ந்து மார்க்க காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டாவிட்டாலும் இவர்கள் வாழ்ந்த இடத்திலாவது இபாதத்து செய்ய வேண்டும் என்ற ஆவலை வெகுவாக தூண்டுகிறது.
ஜஜாகல்லாஹ் ஹைர்...

சலீம், மயிலாடுதுறை சொன்னது…

உங்கள் கட்டூரையை நடுநிலையோடு படிக்கும் போது நல்ல உணர்வலைகள் சூழ்ந்து மனம் நெகிழும்.. நன்றி பாட்ஷா

N.சித்திக் துரை சொன்னது…

super ! super !! super !!!