கவிதை - இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூலை 2020

சலாம் சூழட்டும்


இறைவனின் பெருங்கிருபை கொண்டு
நிம்மதி அடைந்தேன்.

சுவாசம் இலகுவாகி விட்டது.

நாடிநரம்புகளின் இறுக்கம் களைந்து
தளர்வாகி சீரானது.

குறுகுறுவென இருந்தநிலை விடுத்து
வழக்கம் போல ஆகினேன்.

அவன் என் சுமைகளை
என்னிலிருந்து இறக்கிவிட்டான்.

அமைதியானேன்.
அமைதியான கணங்கள்
அற்புதம் மிக்கவை
அதன் மதிப்பை
அமைதி இழந்த கணங்கள் தான் உணர்த்துகின்றன.

ஆதலால் எதார்த்தமாகவே
நம்மோடு இருக்கும்அமைதியை
ஒரு தேன்சொட்டு
நாவில் படும் சனம்
மனம் இழப்பதைப்போல;
சுவையான தேனீரில்
கணம் நம்மை மறப்பது போல;
அலாதி பிரியமானவளோடு
 கலவி களிக்கும்நேரம்
விழிதிறந்தும் நிலைமறப்பதைப்போல;
உணர்ந்து மகிழ்ந்து லயிப்போம்.

சலனமற்ற நீரோடை
மனதில் சலசலக்கும்
அமைதி கிடைக்கப்பெறுவது ஓர் பேறு
அது இறைவனின் பெரும் வரம்

நமக்குள் எப்போதும்
அமைதி எனும் சலாம் சூழட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
என்பது அது தான்.

எனக்கு மட்டுமல்ல
உன்னிலும் அமைதி நிலவட்டும்
என்பதே பரோபகார பதில் மொழி
வ அலைக்கும் சலாம்.

அதை எதிர்படும்
யாரைப்பார்த்தும்
எத்தருணத்திலும்
சொல்லவைத்த
வள்ளல் நபிக்கும்
இந்நேரத்தில் எந்தன்
பணிவின் சலாம்.

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு
அலைக்க யா ஸய்யிதி யா ரசூலல்லாஹ்.
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
23-06-2020 10:27pm


24 ஜூலை 2017

வல்லோன் துதிக்கும் நல்லவர் நாமம்

எல்லோர் இதயமும்
நன்றே துதிக்கும்
ஓன்றின் நாமம்
இறைவ னதாகும்
வல்லோன் அவனோ
என்றும் துதிக்கும்
நல்லவர் நாமம்
ஒன்றும் உண்டு
அதுவே அழகாம்
அகிலத்தின் அருளாம்
உலகின் பொதுவாம்
உயரிய ஒளியாம்
சிந்தைக் கமுதாய்
விந்தைக்கும் விந்தையாய்
தந்தைத் தாய்க்கும் மேலாய்
முந்தி அணைக்கும்
அந்த நாமம்...
அண்ட இயக்கத்தின்
சந்த நாமம்
மனிதர்களுக்கு மனிதம்
தந்த நாமம்
அதுவே.. அதுவே
முக்காலம் போற்றும்
"முஹம்மத்" எனுமோர்
முழுமுதந் நன்னாமம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்.
ஜாஃபர்.முஹையத்தீன் பாட்ஷா

29 ஜூன் 2014

ரமலான் முபாரக்!


அடியெடுத்து வைக்கிறோம்
அருள் ரமலான் மாதத்தில்,

முடிவெடுத்திடுவோம்
அதனால் நாம் சிறப்பாக

துடிதுடிப்புடனே சோர்விலாமல்
தூயபல செயலாற்றி

படிப்படியாக பயனுளதாய்
படைத்தவனுருள் பெற்றிடுவோம்.

இடிமுழக்க திருக்குர் ஆன்
இனியமொழி தினம் இசைத்தும்

ஈடில்லா நபிமணிமேல்
இதய சோபனம் நிதம் துதித்தும்

ஓடி ஓடி தானம் செய்தும்
நாடி வருபவரை ஆதரித்தும்

விடிவெள்ளி தோன்றுவரை
விழித்திருந்து அறம்புரிந்தும்

அடிப்படையில் ஐந்தினையும்
ஆண்டவனுக்காய் தினம் காத்தும்

பிடிவாதமாய் பிறர்நலன்காத்து
பேணிடுவோம் உறவின் உயிர்காற்று

நொடிநேரமுமே சைத்தானின்
சூழ்ச்சிக் கிறையாகது இறைவா நீ காப்பாற்று!!!

என்றும் எப்போதும் நபிகள் நாயகம் திருமீதில்
இறைசாந்தி நிலவட்டுமாக. ஆமீன்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

29 அக்டோபர் 2011

அவர்கள்..!


அவர்கள்..!
உன்னையே நினைத்தவர்கள்
உயர்நபியை துதித்தவர்கள்
சத்திய சஹாபாக்களை,
சன்மார்க்க சீலர்களை,
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு
சந்தோசமாய் நேசித்தவர்கள்
சதா உன் அருளையே யாசித்தவர்கள்.

முன் சென்ற சிலர்
முகங்கள் யாபகம் இல்லை,
அவர்கள் எனக்கு
முகவரி தந்தவர்கள்.
மூத்தவர்கள் சொல்ல-அவர்களின்
முத்தான விசயங்கள் அறிவேன்.

சிறுபிள்ளையாய் நானிருக்கையில்
சிலர் சென்றனர், - சிலர் சென்றனர்...
சிலகாலம் முன்னர்.

இளவயதில் அவர்களோடு
இன்பமான காலங்கள்,
இதயத்தில் நிறைந்த
இதமான தாளங்கள்.

ஆயிரம் அனுபவங்கள் நிறைந்த
அறிவுப் பொக்கிசங்கள்
அவர்கள் .

வாழ்க்கையை கற்றுத்தரும்
வண்ணமிகு களஞ்சியங்கள்
அவர்கள்.

வசந்தம் தேடிச்செல்லும்
வாசமலர் தோட்டங்கள்
அவர்கள்.

வெற்றாய் விரவிய
வெட்டவெளிக்கு ஒப்பானவர்கள்
அவர்கள்.

மனதால் வெகுளிகள்,
பாமர ஞானிகள்
அவர்கள் மீது பாபமில்லை.

சரிஅத்தின் சட்டம் மீதும்
சடங்கான விசயங்கள் மீதும்,
சங்கை நபிக்காதல் மீதும்,
சற்குண வலிமார் நேசத்தின் மீதும்
ஆசான்கள் அவர்கள்.

திருநபிக் குடுபத்தாரெனில்
திருவுளத்தோடு சங்கை செய்வர்,
பாசநபியின் பெயரைக் கேட்டால்
பயபக்தியோடு சலவாத்து சொல்வர்.

அவர்கள்.....! - நம்
கண்களுக்கு மறைந்திருக்கிறார்கள்,
தூலஉடல் இப்போது இல்லையாயினும்
மறைவாய் வாழ்கிறார்கள்..!
மகிழ்வாய் வாழ்கிறார்கள்..!

ஆத்மாவில் அண்ணலாரின் நேசம்
சுமந்ததால் என்றும் சுகமாய்
நம்முடன் அவர்கள்!.

இறைவ..!
அவர்களுக்கு ஆத்ம சுகமருளி
ஆனந்தம் செய் நாயனே!
அருளால் அணைத்துக்கொள் நாயனே!
அகமதிய அம்சத்தில் பிணைத்துக்கொள் நாயனே!
அனைத்திலும் நிறைத்துக்கொள் நாயனே!




-ஜே.எம்.பாட்ஷா


4 அல்லது 5 வருடங்களுக்கு முன் எழுதியது

25 பிப்ரவரி 2011

மனமெல்லாம் மன்னர் மீரா

வரவேண்டும் வரவேண்டுமெனவே

வரம் பெற்று வந்தேனே

மனமெல்லாம் மன்னர் மீராவெனவே

மகிழ்ந்தோடி வந்தேனே


அணையாத ஆவல் கொண்டே

அண்ணலே நான் வந்தேன்

குறை யாவும் இல்லாமல்

இனிநாதா காத்து அருள்வீர்


ஆன்மீக அருள் சுரக்கும்

மேன்மை திருப் பதிக்கு

தேடித் தேடி வந்தேனே

தேனின்பம் தந்து அருள்வீர்


என்னை மறந்தே நானும்

எஜமான் தர்பாரிலே வேணும்

கண்ணே மணியே காதிரே

கல்பாலே அருள்தர வேணும்


பெரிய ஞானங்கள் எதுவும்

பேதை ஒன்றும் அறியேன்

பெரியோர் போதை ஒன்றே

எளியோன் நெஞ்சில் உண்டு


அறியாத ஏழைக் கிங்கு

அறியவை யாவும் அருள்வீர்

தெரியாத நாளை தன்னை

திறமாக்கி திறந் தருள்வீர்


நூற் றாண்டு பலகண்டு

நூரி லங்கும் நூதனமே

நும் நூரின் ஒளியினிலே

சேர்த் தெம்மை அருள்வீரே


எந்தை தாயையும் மற்ற

எல்லா என்குடி மக்களையும்

விந்தையே ஆன்மீகத் தந்தையே

பொல்லாங் கணுகாது காப்பீரே


அர்த்தமுள்ள வாழ்க்கை தன்னை

ஆயுள் தன்னில் வாழ்வதற்கு

அற்பு தங்கள் நிகழ்த்திவரும்

அண்ணலே அருள் புரிவீரே


பொற் பதத்தை போற்றுகின்ற

பொன் னாளாய் என்வாழ்வின்

என் னாளும் ஆவதற்கே

நன்னாகூர் பேரரசே யருள்வீரே

22-02-2011

08 செப்டம்பர் 2010

பிரிந்தால் சரியாச்சொல்..?


எத்தனை எத்தனை மாண்புதனை

நித்தமும் நிதமும் சுமந்துவந்தாய்

பக்தனை பக்குவப் படுத்திடவே

பாரினில் நீதான் பிறந்துவந்தாய்


சாந்தியும் தூய்மையும் நீயேஏந்தி வந்தாய்

சரித்திர பத்ரையும் நீயேபெற்றுக் கொண்டாய்

ஆண்டுகள் யாவும்நீயே ஆகியிருக்கக் கூடாதோ

அகிலத்தை அருளில்நீயே அமிழ்த்திநிற்கக் கூடாதோ


இறையவன் நினைவினில் இகத்தவர் ஆழ்கிறாய்

இராப்பகல் எங்கிலும் இபாதத்து செய்கிறார்

பெரியவன் தூதராம் பெருமான் நபிகளை

நிறைம னமாகவே நேரமும் புகழ்கின்றார்


பள்ளிகள்யாவும் நிறைந்திருக்கும் காட்சிகள் தருவாய்

நல்லஉள்ளத் தோடேதர்மமீயும் மாட்சிகள் சொறிவாய்

மீட்சிப்பெறவே தெளபாவேற்று மலர்ச்சி அருள்வாய்

மகிழ்ச்சிசூழ் சொர்க்கப்பூங்கா வாங்கியுந் தருவாய்


விலங்குதனை சைத்தானுக்கு உன்னில் இட்டாய்

விலங்குகுணம் மனிதனிலே அகற்றி விட்டாய்

அமரகுணம் மனிதன் தன்னில் மிளிரவைத்தாய்

அமரத்துவம் எய்திடவே அழைத்தும் நின்றாய்


வானினில் வதிந்திடும் பிறையிற் கெல்லாம்

உன்னைப் போல்மவுசுக் கிடைத்தது மில்லை

வாழ்வினில் வந்திடும் மாதங்க ளெல்லாம்

உன்னைப் போல்மகத்துவம் தந்தது மில்லை


நேற்றுவந்து நேசம்கொண்டு இன்று பிரிந்தால் சரியாச்சொல்..?

நேயன்மனதை நெகிழச்செய்து விலகிப் போவதும் முறையாச்சொல்..?

மீண்டும்மீண்டும் வாழ்வினிலே வந்தே பூத்திடு ரமலானே..!

வேண்டும்நலன் கள்யாவையுமே நீதான் சேர்த்திடு ரமலானே..!


ஒவ்வொரு வருடமும் ரமலான் பிரிகையில் மனது மிகவும் கவலையில் ஆழ்ந்து வருந்துவது எல்லோருக்கும் இருக்கக்கூடியது தான் ஏனெனில் அதை சுவைத்தவர்கள் அதை அவ்வளவாக பிரிய தயாராவதில்லை - ஜே.எம்.பாட்ஷா