கவிதை - மகன் நளீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - மகன் நளீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 அக்டோபர் 2018

மகன் நளீர் குறித்து எழுதிய 4 கவிதைகள்

பேரன் நளீரை கொஞ்சிடும் என் தந்தை


சீர்மிகு சிரிப்பினில் பூக்களும் தோற்றிடும் - உன்
சில்லெனும் பார்வையில் பாலையும் பூத்திடும்
சிங்கார பார்வையில் பலஞாயிறு உதித்திடும் - உன்
சின்னக்குறும்புகளால் உலகங்கள் உயிர்பெறும்

நாட்டியம் தோற்றிட நடந்திடுவாய்
வாத்தியம் தோற்றிட பேசிடுவாய்
ஆஹா! உன் அற்புத மழலையால்
ஆயிரம் தேனின்பம் எங்கள் காதினில் குடிபுகும்.

ஆஹா! நீ ஆடிப் பாடி விளையாடுகையில்
ஆனந்தமாய் சிரித்தாடுகையில் வீடெல்லாம் ஒளிமிகும்.

உன் வாயினில் வழிந்தொடும் எச்சில்களில்
தேனினும் விஞ்சிய தித்திப்பு தேங்கிக் கிடக்குதடா

என்ன மொழி பேசுகிறாய் என் மகனே
எண்ணத்தை அள்ளுகிறாய் சொல் மகனே
எங்களுக்கெல்லாம் தெரியாத இன்ப மொழி
இறைவனே கற்பித்தானோ என் கண்மணியே

கவிதைகள் பல எழுதி நான் போற்றுவேன்
காலமெல்லாம் உன்னை நான் வாழ்த்துவேன்
நல்லவனே நளீரே வாழ்க! வாழ்கவே!!

புண்ணியம் செய்தோமடா கண்ணே
உன்னைப் போல் புதல்வனைப் பெற்றிடவே
கண்ணியம் பலப்பலப் நீ பெற்று
விண்ணையும் விஞ்சும் புகழ்பெறுவாய்
என்னையும் உன் தாய் மற்றும் உற்றாரையும்
மகிழ்வில் ஆழ்த்தி சிறப்புறுவாய்

000

புத்தம் புதிதாய் எங்கள் குலத்தில்
பூத்த மரிக்கொழுந்து - நீ
சித்தம் யாவிலும் சிறப்பாய் நிற்கும்
சிரிக்கும் தவக்கொழுந்து


சரித்திரம் ஒன்றை சிறப்பாய் படைக்க
வந்த திருக் கொழுந்து-பல
சாகசம் யாவையும் நிகழ்த்த விருக்கும்
இறையின் அருட் கொழுந்து

அரபு நாட்டில் விளைந்த தங்கமே
அப்துல் கலாமின் கனவே
என்னவள் மணிவயிற்றின் முத்தே
தந்தாய் தந்தை என்றொரு பாக்கியம்

 000

நெஞ்சம் மகிழ்ந்து போனேனடா - நான்
நெக்குறுகி நின்றேனடா

 எத்தனை முறை முத்தம் கொடுத்தாலும்
முற்றுப்பெறவில்லை மோகம்
எத்தனை எத்தனையோ பூக்கள் பார்த்திருக்கிறேன்
எந்த பூவும் ஆகுமோ உன் சிரிப்பூ
எதை எதையோ பார்த்திருக்கிறேன்
அவைகளெல்லாம் தர்வில்லை அழுகை
எத்தனை எத்தனையோ நினைவுகள்
தரவில்லை உன் போல் பூரிப்பு
எத்தனை எத்தனையோ நிலைமைகளை கடந்திருக்கிறேன்
எதுவும் தரவில்லை உன் போல் தவிப்பு
எத்தனை எத்தனையோ மேதைகளை அறிந்திருக்கிறேன்
அவர் தரவில்லை உன் போல் சிலிர்ப்பு
எத்தனை எத்த்னையோ அனுபவங்கள் தினம் தினம்
எவையும் தரவில்லை உன்போல் படிப்பு
எத்தனை எத்தனை பட்டங்களும் தராதடா நீ தந்த மதிப்பு

 000

இந்த வினாடியின் நிகழ்வு குறித்து
அடுத்த வினாடி நினைப்பதில்லை
அடித்தலையும் கண்டித்தலையும்
உண்மையாக வே மறந்து விடுகின்றான்
அவன் இருப்பை மறந்தவன்
அகந்தை இல்லாதவன்
அடுத்த கனம் குறித்த கவலை இல்லாதவன்
இந்த நொடி பூரணமாய் வாழ்பவன்
எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பவன்
மிகப்பெரிய பேராசானாய் திகழ்பவன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மகன் சிறு வயதாய் இருந்த போது எழுதியது

12 செப்டம்பர் 2018

குழந்தைகள் பெற்று 
குழந்தைகள் ஆனோம்,
குழந்தைகளிடத்தில்!

உலகம் மறக்கும்
உன்னத உலகம்,
மழலை உலகம்!

எனது மகன் நளீர் எழுத்தில் அலாதி பிரியம் கொண்டவன், எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் சுபாவம் அவனுக்கு, வீட்டில் பள்ளிக்கூட பாடம் போக ஏ,பி,சி,டி-யோ 1,2,3 யையோ அல்லது அ, ஆ,இ,ஈ- யோ வென எதையாவது எழுதுவதும், சென்ற இடம், புத்த ஓவியம், போட்டோ என எதை பார்த்தாலும் வரைவதோவெனத்தான் அவனது நேரங்கள் நகரும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2014-15களில் எழுதியது.

23 ஆகஸ்ட் 2012

கண்ணாடி முன் என் நாடி!


அழகே அற்புதமே
தன்னையே தான் ரசிக்கும் நிலவே!

கண்ணாடியில்
முகம் பார்க்கும் கனியே!

என் நாடியே
எழிலே.. பொழிலே..!

குயிலுலக ராகத்தினை
குதூகலத்துடன்
குழலென இசைக்கும்
குலமகனே!

உன்னையே நீ நோக்கி..
உனக்கே நீ
சொல்லிக்கொள்ளும்
உவமைகள் தான் என்ன கண்ணே!

கண்ணோடு கண்ணோக்கி
உன்னையே நீ
காதலுறும் காட்சி தனை
காணயான் களிப்புற்றேன்  கண்ணே!

நான் தான் நீயா என
நீ கேட்க..- உன் பிம்பமும்
நான் தான் நீயாவென
திரும்ப விளிக்கிறதோ..?
உன்னிடம் கண்ணே!

நாளும் பொழுதும் - உன்
பேச்சிலும் கூத்திலும் குறும்பிலும்
நானடைந்த பேற்றினை எங்கனம் சொல்ல!

எனக்காய் நீ!
அருளாய் அவன் தந்த 
கணக்கினை தான் எங்கனம் விள்ள!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 அக்டோபர் 2011

தாலாட்டு - புன்சிரிப்பு பூமகனே


பல்லவி :
புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணேஉன்
பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே

அனுபல்லவி:

பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே
இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே

சரணங்கள்:

சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும் கண்ணே - அந்த
நாமமதில் உறைந்தயொன்று நீயல்ல கண்ணே
நாமரூப பேதமில்லா உயர்பொருள் கண்ணேநீ
நாமமதில் அடங்கிடாத மறைபொருள் கண்ணே

அனுபவிக்கும் யாவையுமே ஆய்ந்துபார் கண்ணேஅதில்
ஆன்மீக விளக்கங்கள் கிடைத்திடும் கண்ணே
தெளஹீதின் தெளிவில்நீ லயித்திடு கண்ணேஎன்றும்
லெளஹீக வாழ்விலும்நீ ஜெயித்திடு கண்ணே

பார்ப்பதிலே பரமனையே பார்த்திடு கண்ணேஉன்
கேள்வியுணர்வு இவையணைத்தும் வேறல்ல கண்ணே
அகமியத்தை சுமந்தவர்கள் உயிரடா கண்ணேஉன்
உயிரைவிட உணர்வைவிட மேலடா கண்ணே

கொடும்கள்ளக் கூட்டங்களை வெறுத்திடு கண்ணே - அதை
கடும்சீற்றத் துடனேநீ எதிர்த்திடு கண்ணே
இறையின்பகைகள் விரைவிலேயே அழிந்திடும் கண்ணே -நம்
மறையின்நாதர் மாண்புகளே ஜொலித்திடும் கண்ணே

இகமதிலே பலர்அகம்மலர உழைத்திடு கண்ணேஇந்த
ஜெகமதிலே வேறுமகிழ்வு ஏதடா கண்ணே
இதயத்தூதர் இன்பநெறியில் நிலைத்திடு கண்ணே - அதில்
உதயமாகும் உண்மையில்நீ உயர்ந்திடு கண்ணே


-ஜே.எம்.பாட்ஷா 

என் மகன் சுல்தான் அஹமது நளீர்- ஐ மனதில் வைத்து வாழ்த்தாய் 2002-ல் எழுதியது, 2016ல் சங்கை நபி இசைக்கோர்வையில் வெளிவந்தது.

09 ஜூன் 2011

பா..ப்ப்ப்..பூ..


சுல்தான் அஹமது நளீர்

மழலைக் குழைய மகனே நீ

*பா..ப்ப்ப்..பூ.. என்று குரல் அழைக்க


மனமெல்லாம் பூப்பூவாய்
புதுப்புது பூவயல்கள்- என்

புவிதோறும் பூக்குதடா..!


அடிமனதில் ஆனந்த சுனைகள்

பீரிட்டு பொங்கி பெருகிட - அது

காட்டாற்று வெள்ளமாய்

கற்கண்டு இனிப்போடும்

களிப்பூட்டும் குளிரோடும்

கவினுற சூழுதடா..!


உன் பாசக்குரல் என்

ஏழு தலைமுறைக்கு

அப்பாலும் சென்று

எல்லோர் ஆத்மாவையும்

தட்டி அழைக்குதாடா..!


உன் அழைப்பின்

ஒவ்வொரு மைக்ரோ ஒலியிலும்

உயிரிலையின் மெய்நாதம் கேட்குதடா..!


எத்தனை ஒலிகள்

காதிற் புகுந்தாலும்

நான் மொத்தமாய் மூழ்கியது

உன் தெவிட்டாத தேன் குரலில் தானடா..!


என் காதுகள் இரண்டிற்குள்ளும்

தேக்கி வைத்த ஓயா அலை

உன் ஜீவ அலைதானடா..!


மனது...

அதற்கு வேண்டும் போதெல்லாம்

சலிப்படையாமல் உன் குரலைத்தானடா

ஒலிக்கச்செய்து திருப்தி அடைகிறது.


உன் அழைப்பு மட்டுமே

எந்த சார்பும் அற்ற எதார்த்தம்.


என்னையும் உன்னையும்

நூல் இடைவெளி கூட

பிரிவின்றி இணைத்து விட்டாய்!


உன்னோடு போசும் போது தானடா

சிரித்துக் கொண்டே அழுகின்றேன்!


கண்ணே உன்னை

தொட்டுப்பார்க்க ஆசைதான்

பாசத்துடன் தொடப்போனால்

கணிணியின் திரைதானடா விரல் முட்டுகிறது!

----(வீடியோ சாட்டிங்2000 கி.மீ வெளி இடையில்)


மகனே நீ..

உரிமையோடு எனை அழைக்க

உயிரே ஒன்று திரண்டு ரசிக்குதடா..!


என் ஏக்கத்திற்கெல்லாம்

தீணிபோடும் எசமானன் நீதானடா..!


மகனே நீ..

இயற்கையின் கொடை..!

இரசூலின் கொடை..! - எங்கள்

இதயம் இனிக்க வாழ்க!
இகம் தழைக்க வாழ்க!!


மனிதப்புனிதர் மன்னவர் அருள் பெற்று
மண்ணில் புகழ்மகுடம் சூடி வாழ்க!


நிமலனது நீங்கா கிருபையால்..!

நீதம் தவறாத நித்தியனாய்

நிலமதில் என்றும் நிலைபெருக!

----------------- ------------------------------- -------------------------
வாழ்த்திக்கொண்டே இருக்கும் உன் பாப்பு,
ஜே.எம்.பாட்ஷா ( அமீரகம்)

*பாப்பு ; அப்பாவிற்கான எங்கள் தஞ்சை மாவட்ட வட்டார வழக்குச்சொல்.
சென்ற ஆகஸ்டில் அபுதாபியில் இருந்தபோது எழுதியது, தற்போது ஃபுஜைராவில் வைத்து முழுமையானது.