கவிதை - குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 மே 2019

ஆனந்த தேன்மாரி

ஆத்மாவில் சுரக்கிறது
ஆனந்த தேன்மாரி

எல்லை யில்லா மகிழ்ச்சியின்
மரகதப் பெருவெளி
சொல்லிக்கொள்ளாது திறக்க,
நிறத்தோடு மாயும் நீராய்
திளைத்து லயிக்கிறது
பெற்றோர்தம் மனது.

வெய்யிலில் சோர்ந்திடும்
வரண்ட நிலச்செடி போல்
பொய்யில்லா பசி தாகத்தால்
நாள் முழுக்க வாடி வதங்கியும்...

பிள்ளைகள்,
துள்ளிக்கொண்டு
ஆசை பாஷைகள்
ஆயிரம் பேசி
அருளான காட்சிகளால்
நம்மை நனைக்கிறார்கள்

நிறைவு செய்த
முதல் நோன்பிற்கு பிறகும்,
மீண்டும் தொடர்
நோன்பு வைக்க.

இறைவா
நிறைவாய் நீ
அவர்களுக்கருள்!

செய்தி: மகனும், மகளும் இவ்வாண்டின் முதல் நோன்பை இறையருளால் நிறைவு செய்தனர். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு. எங்களுக்கும் தான்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
07-05-2019

24 செப்டம்பர் 2018

கேள்விக்கு சிரித்த கவிதை!


வல்லரசுகளின் பற்றியெரியும்
ஈவிரக்கமில்லாத 
வல்லாதிக்க வெறியிற்காய்
எண்ணிச் சோர்வுறும்
எண்கள் அளவிற்கு
கணக்கற்ற மென்பட்டு ரோஜாக்கள்
ஆயுதக்கரங்களால்
கொடூரமாக பறிக்கப்பட்டு
சிதைக்கப்படுகிறது

ரோஜாக்களை சுமந்து
ஆனந்தம் பாடி நின்ற
அன்னை தந்தை
செடிகள் எல்லாம்
வேரோடு பிடுங்கி
துவம்சம் செய்யப்படுகிறது

ரணங்களின் குருதிபூசி நிற்கும்
இந்த பட்டாம்பூச்சியை
நினைக்கும் போதே
நெஞ்சம் நனைகிறது

என் அன்பின்
சிரியா மழலையே
அம்மையப்பன் இல்லாதிருந்தும்
அவர்பற்றிய கேள்விக்கு
சிரித்த கவிதையே

எந்த கூர் ஈட்டியும்
இத்தனை வாதை
செய்யாதடி

நீ வீசிய
களங்கமற்ற ஏக்கப்பார்வையும்

நீ சிதறிய அர்த்தமறியா
பூடக புன்சிரிப்பும்

செய்த வாதை போல..

இருந்தும் உன்னை
கையாளாகாத நாங்கள்
ஒரு காணொளி அளவில்
ஒரு "ப்ச்"சிட்டு கடந்து விடுகிறோமே..

இது தான் காலக்கொடுமையோ.!

***

தற்போது அருமை அண்ணன் Hameed Sac அவர்கள் இந்த காணொளியை பகிர.. என் நெஞ்சம் பேசிய தவிப்பின் மொழிகள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
Mohaideen Batcha, [24.09.18 16:14]

12 செப்டம்பர் 2018

குழந்தைகள் பெற்று 
குழந்தைகள் ஆனோம்,
குழந்தைகளிடத்தில்!

உலகம் மறக்கும்
உன்னத உலகம்,
மழலை உலகம்!

எனது மகன் நளீர் எழுத்தில் அலாதி பிரியம் கொண்டவன், எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் சுபாவம் அவனுக்கு, வீட்டில் பள்ளிக்கூட பாடம் போக ஏ,பி,சி,டி-யோ 1,2,3 யையோ அல்லது அ, ஆ,இ,ஈ- யோ வென எதையாவது எழுதுவதும், சென்ற இடம், புத்த ஓவியம், போட்டோ என எதை பார்த்தாலும் வரைவதோவெனத்தான் அவனது நேரங்கள் நகரும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2014-15களில் எழுதியது.

02 செப்டம்பர் 2016

மென்கண்ணமும் என் விரல்களும்


தொழுது கொண்டிருந்த
பாக்கிஸ்தானிய அப்பனின் பக்கத்தில்
அவன் விழுது ஒன்று அமர்ந்திருந்தது.
பசுமிளங்குருத்து
பள்ளிவாசலில் இருந்த போதும்
ஏதோ ஓர் உலகின் புள்ளியில்
மகிழ்ச்சியை அள்ளி.. அள்ளி
அவன் வாசலில் இட்டுத்
துள்ளிக்கொண்டிருந்தது.
மெய்மறந்து கண்டிருந்தச் சனத்தில்
என் இந்திய விரல்கள் தொட்டு
அப்பிக்கொண்டேன்
அவன் அழகிய கண்ணங்களின்
மென்மையை!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

21 மார்ச் 2016

சமாதானம்

'வா..வா.. ட்ரஸ் போட்டுக்கோ'
எல்லோரும் வெளியே போகிறோமென
வீட்டில் விளையாட்டில்
திளைத்திருந்த குழந்தையை
கூட்டிச்சென்றார்கள்.
சென்ற சூப்பர் மார்கெட்டில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
அழகான சாக்லெட்கள்
குழந்தையை அகலாதிருக்க செய்து
கனைகள் வீச..
‘அந்த சாக்லெட்ட வாங்கித்தா…..’
விரல் நீட்டி அதைக் காட்டி
கேட்டு…. கேட்டு.. அழுகிறது
அந்தச் சுட்டிக்குழந்தை.
ஒருவரோடொருவர்
முகம் பார்த்துக்கொள்கின்றனர்
தாயும் தந்தையும்…,
எடுக்க நெருங்கிய தகப்பனிடம்
வாங்கிக்கொடுக்கவேண்டாம் என்கிறாள் தாய்
கண்ணால் சமிக்கை செய்து.
அழும் குழந்தையிடம் அக்கரையாக
“வேண்டாண்டா… என் செல்லம்ல…
வ்வே… அது.. நல்லாவே இல்லியாம்..
நம்ம பக்கத்தூட்டு அக்கா சொன்னா..
அம்மா சொன்னா கேட்டுக்கனும் என்ன…
இது பாப்பாவோட உடம்புக்கும் நல்லதில்லையாங்..
அடுத்த தடவ வேற கடையில
நல்ல சாக்லேட்டா பாத்து
அம்மாவே வாங்கித்தருவேணாம்... ஓகே…,
என் செல்லம்ல.., உம்ம்ம்மா!!!”
என சொல்லின் ஈற்றில்
ஒரு முத்தம் தைக்கிறாள்,
ஆசைப்பட்ட குழந்தை
அழைத்துவரப்படுகிறது
நிறைவேறாத ஏக்கத்தோடும்
அழுது வடிந்த கண்ணங்களோடும்…!
சற்றுநேர கொஞ்சல்கள் சில்வற்றில்
சகஜமாகிறது குழந்தை.
வாழ்வின் நிறைய எதிர்பார்ப்புகளோடு
பல நேரங்களில் நாம் சமாதானம் ஆவதைப்போல.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 மார்ச் 2016

அத்தரின் மணம்



எடுத்த நொடிப்பொழுதில் முகரத்தூண்டிது 
பின் மனதிற்குள் ஊடுருவி 
இரம்மியம் தந்தது அது,
ஒரு இம்மிப்பொழுதின் இலயிப்பில்
மகிழ் சிகரமும் கொண்டு சென்றது, 
மாற்றுச்சட்டைகளை தேடிய தருணத்தில்
எப்போதோ சட்டைமாட்டியில்
தொங்க விடப்பட்ட
அரையழுக்குச்சட்டையில்
அப்பிருந்த அத்தரின் மணம்.


******

சிரித்துக்கொண்டே 
நீ கொடுத்த
மலர் கூடையில்
கொத்துக் கொத்துக்களாக 
சிரித்துக் கொண்டிருக்கிறது
ஜென்மங்களின் நயவஞ்சக செடிகளில்
பறிக்கப்பட்ட விசப்பூக்கள்!


******

கனிகளின் தித்திப்பினை
வழங்கவில்லை அவர்களென
புகார் சொல்லும் சனத்தில்
நாம் கொடுத்த 
காய்களின் கரகரப்பு
இன்னும் அவர்களின்
தொண்டைக்குழியில் என்பதை
மறந்துவிடுகிறோம்.




******

மழலை தேசத்து மலர்களுக்கு
அவை பேசும்
உடல் மொழிகளும்
வாய் மொழிகளுமே 
அரண்.




******

குட்டி குட்டி நிலவாக தோன்றினாலும்
வெட்டித் தான் எறியவேண்டும்
விரல் நகத்தை!

******

விடாப்பிடியாக
தரதரவென எழுத்துக்களின்
கழுத்தைப் பிடித்திழுத்து
கவிதை செய்பவன் நானல்ல!
தானே ததும்பி வருவதற்கு
தடம் அமைக்க
தெரியாதவனும் நானல்ல..!
கவிதை பயிர் செய்வது
என் தொழிலல்ல..,
அதுவே என் உயிர்.

******

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 மார்ச் 2016

இன்றைய கதை



"கதைச் சொல்லுப்பா"
எனக்கேட்கும் செல்லமே
உனக்கான ஒரு கதைக்கூட
சொல்லத்தெரியாத
எங்கள் கதை
தெரியாதடா உனக்கு,

எங்கள் சிந்தனையோ
வறட்சியில் உளல்கிறது
எங்கள் கற்பனையோ
சாம்பலாய் கிடக்கிறது
ஏதோ ஒரு மாய மானைத்தேடி
சனங்கூட ஓயாமல்
இளைப்பாறாது ஓடிக்கொண்டிருக்கிறோம்.

கண்கள் கட்டப்பட்ட
அப்பாக்கள் நாங்கள்
எந்த கிரகத்தில்
இருக்கிறோமென்று
எங்களுக்கே தெரியவில்லை

அந்த கதைநதி
உன் பாட்டிக்காலத்தில்
கரைப்புரண்டோடியது
இப்போது அதில்
மணலுக்குக்கூட பஞ்சம்.

அப்போது அந்த கதைநிலம்
உன் பூட்டன் காலத்தின்
இருட்டுத் திண்ணைகளில்
முப்போகம் வெள்ளாமை தந்தது,
இப்போது தான்
திண்ணைகளே இல்லையே
பூட்டனும் புதைந்தானே
கதைகளும் தீர்ந்துவிட்டதே,

என்ன செய்ய எங்களுக்கு
கதைகளும் தெரியாது
கலைகளும் தெரியாது
நிஜமும் தெரியாது
நிலையும் தெரியாது
நேரம் மட்டும் இல்லை எனச் சொல்லும்
இயந்திரங்கள் நாங்களாகிப்போனோம்.

செல்லமே...
நீயாவது கதைப்பழகு
மாறட்டுமடா உன் உலகு.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

09 ஆகஸ்ட் 2014

குழந்தைகள் மீது அன்பு காட்டுங்கள்

காஸா-வின் சிறுவர்கள்


குழந்தைகள் அழகு ஒப்பில்லாதவை
குழந்தைகள் உலகம் தப்பில்லாதவை

குழந்தைகள் சிரித்தாலும் அழகு
குழந்தைகள் அழுகையிலும் அழகு

குழந்தைகள்
கவலைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் – தூய்மையில்
அவ்விளந்தைகள்
பனித்திவளைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள்

குழந்தைகளுக்கு…

வன்மம் வெறி பழிவாங்கள்
என்பவையெல்லம் தெரியாது
துன்பம் நேர்ந்தால் கூட துளியளவும்
பகைசெய்யும் வகை அறியாது

சூது வாது காமம் குரோதம்
இவைகளுக்கெல்லாம் இவர்கள் விரோதம்
தீது செய்யும் என்று தெரியாமலே
தீயைக்கூட தொடும் இவர்கள் வினோதம்

தனக்கு சந்தோசமேற்பட்டால்
சங்கீதம் தோற்கச் சிரிக்கும்
தனக்கு துக்கமென்றால்
பரிவு வேண்டி அழுகையில் தரிக்கும்

மாறாத அன்போடு பேசும்
மறைவில்லாத நேசம் வீசும்
காசான உலகம் பற்றி கடுகளவும் அறியாது
தூசான குணங்களேதும் துளிகூட இராது

நம்முகம் கண்டாலே மலர்ந்து முகப்பூ விரிக்கும்
அம்மழலை முகம் நாம்காண
மனதில் இருக்கும் இறுக்கம் உடைந்து தெரிக்கும்..
மனசிலெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி ஒளி நிறைக்கும்.

அவர்கள் மென்மையானவர்கள்…
உடலில் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான்,
உள்ளொன்று வைத்தெல்லாம்
புறமொன்று பேசாத பதுமைகள் குழந்தைகள் தான்.

நம்மின் முரட்டுத்தனங்களை அவர்கள் தாங்கமாட்டார்கள்
நமது வன்மங்களை அவர்களால் ஏற்க முடியாது
நமது அவசரங்களை அவர்களால் சகிக்க முடியாது

அவர்கள் அன்பிற்கு மட்டும் சொந்தம் பாராட்டவந்தவர்கள்
அடிதடி கொண்டு யாரும் வதைத்திட வேண்டாம்!

நம்மை முழுமையாக நம்பும் - இவர்கள் தான்
நமது காப்பாளர்கள் என்று!
யாரேனும் அச்சம் ஏற்பட செய்தால் கூட
தப்பித்து நம்மிடம் அபயம்புகும் காப்பார்கள் என்று!

பிஞ்சுக்கால்களில் முள் குத்தினாலும்
பீறிட்டு அழுது நம்மிடம் வரும்
பஞ்சு போன்ற படைப்பினத்தை
பிஞ்சிச் சிதற அழித்திட வேண்டாம்!

குஞ்சுகள் உலகம் உங்கள் சூதறியாது
குண்டுகளால் அவைகளை ஏன் சிதைக்கிறீர்
மனிதப்பிறவிகளின் கொடூரங்கள் அறியா
மாகத்தான பிறப்புக்கள் குழந்தைகள்
அவைகளை மண்ணில் புதைத்து
உங்கள் கொடுமைகளுக்கு உரமாக்காதீர்!

நீவீர் மிகபாதகமாக தாக்கினாலும்
உங்களின் கோரத்தையெல்லாம்
குழந்தைகளின் அன்பு உள்ளத்தால் சிந்திக்ககூட தெரியாது!

குழந்தைகள் இயற்கையை
இயற்கையாய் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்
உங்களின் செயற்கை கோள்களால்
குறிவைத்து நொறுக்காதீர்கள்!

குழந்தைகள் சாகும்போது…..
குழந்தைகளோடு சாவது
உங்களின் அன்பு.. பரிவு..இரக்கம்
இவைகளெல்லாம் தான்!

மற்றொரு குழந்தையை கொன்றுவிட்டு
உன் குழந்தையை மட்டும் நீ
குற்ற உண்ர்ச்சியே இல்லாமல்
கொஞ்சவா முடியும் ????

குழந்தைத் தனங்களை
கொண்டாடக் கூடவேண்டாம்
குறைந்த பட்சம்
கொன்று ரசிக்காதீர்கள்.
ஆயுதம் ஏந்தி நிற்கும்
மனிதர்களெனப்படும்
மதவாதிகளே.. அதிகார வெறியர்களே..
ஆயுத வியாபாரிகளே..

குழந்தைகளின் மீது
குறைந்த பட்ச அன்பையாவது காட்டுங்கள்!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



(காஸாவில் கொத்துக்கொத்தாக குழந்தைகளை கொன்று குவித்த போது எனது மனம் இப்படி அழுதது)

25 பிப்ரவரி 2012

இறைவனும் குழந்தையும்!



குழந்தைகள்
இறைவனின் அருட்கொடை!

அவனே நமக்கு
அன்பாய் கொடுக்கும் அன்பளிப்பு!
எல்லையில்லா மகிழ்ச்சியில் 
ஆழ்த்தும் அருட்சுரப்பு!

அவனின் கருணைக்கரங்களால்
கற்ப உலகத்தில் காத்தவன்
மிகத்தூய்மையின் அப்பழுக்கற்ற‌
பிள்ளையாய் புதிய மனிதப்பிறவியை
நம் கரங்களுக்கு அவனே சொந்தமாக்குகிறான்!

கற்பக்கோலறையின் இருட்டு வாசத்தில்
சுவர்க்க போகம் கொண்டிருந்த
மென்மையின் தாயே
சேயாய் ஸ்தூல உலகில்..!

உறுப்புக்களை அமைத்து
ஒழுங்குற வடிவம் தந்து
எழிழுடன் முழுமையக்கி 
கொஞ்சமும் நேர்த்தி குறையாது
நம் மடிகளில் தாங்க கொடுக்கிகிறான்!

நீ மட்டுமே என்னை
வளர்த்தாய்.. அணைத்தாய்..
உயிரூட்டினாய்.. உணர்வூட்டினாய்..
அன்னையிடமிருந்தே அமுது தந்தாய்
ஏன் நீ என்னை
வெளியே கொணர்ந்து
மனிதர்களிம் கொடுக்கப்போகிறாய்
வேண்டாம் இறைவா..
உன்னிடமே இருக்கிறேன்
நீயே என்  நிகரில்லா அருந்தாய் ..!
என்றோ என்னவோ கெஞ்சியே
அழுது கொண்டே  வருகிறது

ஆனாலும் இறைவன்
அழாதே கண்ணே..
என் அன்பின் பகுதியைத்தான்
அன்னையிடம் ஈந்துள்ளேன்
அவள் தாய்மையை ருசி
அதில் என்னையே  நீ ரசி
என்று சொல்லி அனுப்புகிறான்.

இது என் குழந்தை என்பதற்கோ
நான் தான் பெற்றெடுத்தது என்பதற்கோ
யாருக்கும் பெருமையடிக்க யாதுமில்லை!

இதில் ஆரம்பம் முதலே
அவனின் வல்லமை மட்டும் தான்!
அவனின் வல்லமைக்கு அவனே நிகர்
பெருமையெல்லாம் பேரிறைக்கே உரியது.

அவனின் அருமைப் படைப்பை எண்ணி
இயற்கையின் இயக்குதலை எண்ணி
பிரமித்து சரண் அடைவது  மட்டுமே
நமக்கு நன்மை பயக்கும்!

அடிமைத்துவத்தை உணர்ந்து
அதில் லயித்தால்
சங்கமம் ஏற்கப்படும்
சந்தோசம் நிலைத்து விடும்

எவ்வளவு பெரியவன் அவன்
எவ்வளவு பெரிய சக்தி அது
எவ்வளவு பெரிய உண்ணதம் இறை!

-ஜே.எம்.பாட்ஷா


(கடந்த டிசம்பர் மாதம் 2011 என் மகள் பிறந்த போது எழுதிய பல கவிதைகளில் இதுவும் ஒன்று)