04 மார்ச் 2016

இன்றைய கதை



"கதைச் சொல்லுப்பா"
எனக்கேட்கும் செல்லமே
உனக்கான ஒரு கதைக்கூட
சொல்லத்தெரியாத
எங்கள் கதை
தெரியாதடா உனக்கு,

எங்கள் சிந்தனையோ
வறட்சியில் உளல்கிறது
எங்கள் கற்பனையோ
சாம்பலாய் கிடக்கிறது
ஏதோ ஒரு மாய மானைத்தேடி
சனங்கூட ஓயாமல்
இளைப்பாறாது ஓடிக்கொண்டிருக்கிறோம்.

கண்கள் கட்டப்பட்ட
அப்பாக்கள் நாங்கள்
எந்த கிரகத்தில்
இருக்கிறோமென்று
எங்களுக்கே தெரியவில்லை

அந்த கதைநதி
உன் பாட்டிக்காலத்தில்
கரைப்புரண்டோடியது
இப்போது அதில்
மணலுக்குக்கூட பஞ்சம்.

அப்போது அந்த கதைநிலம்
உன் பூட்டன் காலத்தின்
இருட்டுத் திண்ணைகளில்
முப்போகம் வெள்ளாமை தந்தது,
இப்போது தான்
திண்ணைகளே இல்லையே
பூட்டனும் புதைந்தானே
கதைகளும் தீர்ந்துவிட்டதே,

என்ன செய்ய எங்களுக்கு
கதைகளும் தெரியாது
கலைகளும் தெரியாது
நிஜமும் தெரியாது
நிலையும் தெரியாது
நேரம் மட்டும் இல்லை எனச் சொல்லும்
இயந்திரங்கள் நாங்களாகிப்போனோம்.

செல்லமே...
நீயாவது கதைப்பழகு
மாறட்டுமடா உன் உலகு.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Nagendra Bharathi சொன்னது…

அருமை