கவிதை - காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூலை 2022

மருதாணி இரவு



அதே இரவு தான் இன்று,
கையில் உறவுகள் இட்டுவைத்த
மருதாணி நெஞ்சுக்குள்,
வண்ணம் போகாமல்..
வாசனைத் தீராமல்..!


ஆண்டுகள்...
இறக்கைக் கட்டிப் பறந்தாலும்
உள்ளங்கையின் சிவப்பை
உள்ளத்தால் உவந்து மகிழ்கிறேன்.


பச்சை இலைதான் மருதாணி
அதை நினைவுகளால் அரைத்து
அன்போடு குழைத்து பூசும் போது
நிறக்கும் சிவப்பென்பது
மகிழும் மனங்களின்
நுதலில் தெரியும்
இதழின் நகை தான்!


மருதாணி இட்டவர்கள்
கண்ணும் கருத்துமாய்
இருத்தல் அவசியம்!


இருக்கிறோம் நாங்களும் தான்..

கண்ணும் கருத்துமாய்!
என் கைகளில் அவள்
அவள் கைகளில் நானென
சிவந்திருக்கிறோம்.

15-07-2021

 

 

 






எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும்
நெஞ்சைவிட்டுச் செல்வதில்லை
ஒட்டிக்கொண்டு சிவந்த மருதாணி மணம்.

மெஹெந்தி ராத்!


15-07-2020
-ஜா.மு.


27 ஜூன் 2022

இரு கரை நீ!

வறண்ட பெருநிலம் யான்
உன்னால் சமவெளியாகினேன்
பூக்காடு கண்டேன்.
*
வெளிச்சம் மிகைத்தது
நீ வர
இருண்ட கோளத்தில்.
*
புல்வெளி பனித்துளி என்னை
ஒளி பாய்ச்சி மின்னிடச்செய்தாய்
சூரிய கிரணங்களைப் போல.
*
குயில்களற்ற
மரமாய் நின்றிருப்பேன்
நான் மட்டுமாய் இருந்திருந்தால்
பூத்துக் கனிகள்
சுமந்த கிளைகளில்
கிளிகளும் குயில்களும்
மகிழ்ந்தாடும்
இசைக்கு பஞ்சமில்லாத
சரணாலம் தந்தது
உன் சங்கமம்.
*
ஒடும் ஆறாய் நானிருக்க
பேறாய் வந்து
இரு கரைகளானாய்
தேடும் நேரத்திலெல்லாம்
என்னோடு கலந்திடும்
தீர்த்தக் கடலானாய்.
*
புலர்ந்த பொழுதில்
இரை தேடும் பறவையாய்
உன் உலகத்தில்
பிரவேசித்த போழ்திலெல்லாம்
நீயே வள்ளலாகி நின்றாய்.
*
-ஜா.மு.
2017
 
 


14 ஜூலை 2020

ஆன்ராய்டு அளவு

உதடு குவித்து- மோக
உணர்வு குவித்து பேரழுத்தமாய் ஓர் முத்தம் புதைக்க விரைகிறாய் முட்டி உடைகிறது நம் காமம் செல்போனின் சின்னத் திரையில். அடி போடி நமக்கு 'வாய்'த்தது ஆன்ராய்டு அளவு தான்.
'தா'மதமாய் பதியப்பட்ட "முத்த'மத" 💋 கவிதை.(ஜுலை6 உலக முத்தநாளாம்)

ஜா.மு. 09-01-2019

22 செப்டம்பர் 2018

காதல் மொழி எப்போது பேசுவாய்..?


நிறம் மாற்றப்பட்டு வீசும்
பார்வையின் மொழிக்கு பின்னே                   

கூடவே ஒலித்துக்கொண்டிருக்கும்
உள் நெஞ்சத் தவிப்பின் மொழியை                                       
கேட்காதது போல,
கண்டுகொள்ளாமல் நீ  புறந்தள்ளலாம்

ஆனால்
உன் அகக்காதைக் கேள்
ஆர்பரித்துக் கொண்டிருக்கும்
அத்தனை தவிப்பையும் சொல்லும்.

ஆமாம்
அந்தக் கோபக்காரியை
விரட்டியடித்து விட்டு

எப்போது காதல் மொழி பேசுவாய்..?

  06.05.16 15:54
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

29 ஜூலை 2017

வெளிநாட்டு மாப்பிள்ளை



ஆண்டுக்கணக்கில் சம்மந்தம் பேசி
மாதக்கணக்கில் திருமண ஏற்பாடுகள் செய்து
நாட்கணக்கில் தாம்பத்யம் நடத்தி
மணிக்கணக்கில் மனைவியை அழவைத்துச்செல்கிறான்
வெளிநாட்டு மாப்பிள்ளை.
*
வினாடிகள் தோறும் தோன்றி மறைகிறது
ஏக்கத்தின் மின்னல் கோடுகள்.
*
அலைபேசி எடுத்தால் - அவள்
சோக கீதம் இசைக்கிறாள்
கண்ணீர் வழிய – இவன்
ஆழுகையில் ஆலாபனை பாடுகிறான்
*
எல்லோரும் கூடித்தானே
எங்களை இணை என்றீர்கள்
எங்கனம் இணைவதாம்
இடையில் மூவாயிரம் மைல்கற்கள்
*
இப்போது எனை அவள் நினைக்கவும்
அவளை நான் நினைக்குமாக கழிகிறதே
ஒருவரின் கண்ணீர் ஒருவர் ருசித்து
நனவில் நாங்கள் நனைவது எப்போழ்தாம்?
*
திருமணம் என்பது
இருமனங்கள் கூடவா இல்லை
இருமனமும் அழுது புலம்பி 
அனுதினமும் ஒருவரையொருவர் தேடவா?
*
ஒருமனம் அங்கேயும்
மறுமனம் எங்கேயுமாய்
வேள்வித் தீ எரிய
ஏன் இந்த திருமணம் என்ற
ஆயிரம் கேள்விகள் முளைக்கின்றன..
ஆயினும் சமூகம் பதில் என்ன சொல்லும்
*
பணமெனும் தாள்கள் நிரப்பி
அதையணைத்து நான் படுத்துறங்க - என்
பருவத்து ஆசைகள் நீங்குமா எங்கள்
துருவத்து வேட்கைகள் தான் அடங்குமா
இங்கே இருக்கும் எதுவும் என்னவள்
புருவத்தின் ஜாடைக்கும் கூட ஈடாகுமா?
*
ஆமாம், புலம்புகிறேன்
நான் வெளிநாட்டு மாப்பிள்ளை.
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
நம் பெரும்பாலான இளைஞர்களின் / வீட்டு பெண்பிள்ளைகளின் வாழ்வியலை நேற்று நினைத்துக்கொண்டிருந்தேன், மனதில் தோன்றியதை இப்போது வடித்தேன்.
x

15 பிப்ரவரி 2017

காதல் கைதி

உன் கைதியாக இருப்பதில் தான்
எனக்கு அலாதி பிரியம்;
வா!
வந்து விலங்கிடு
தனிமை சிறையில் அடை
இடைவிடாது இம்சை செய்
பிறகு,
என்னை கொல்ல
மின்சாரம் செலுத்து
உன்னால் சாவதை நேசிக்கிறேன்
மூர்க்கமாய் கொலை செய்!
நான் அழிவதில் தான் எத்தனை பேரின்பம்.
# மெய்யாலுமே காதலர் தினக்கவிதை, இதை அதிகாலையிலேயே எழுதினேன். ஆனாலும் பதிவிட யோசித்தேன், வந்த தீர்ப்போடு தொடர்பு படுத்தினால் நான் பொறுப்பல்ல.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
14-02-2017

30 மே 2016

விடைபெறுதலின் சலனம்..!

காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்து 
சொல்லும் வார்த்தைகளும்,
செய்யும் பாவனை முயற்சிகளும்
காட்டி கொடுத்து விடுகிறது உன்னை!

நீ பொத்தி வைத்த பொக்கிசங்கள்
ச்சீ… என்று எள்ளி நகையாடுகிறது

உன் வார்த்தைகளின் ஏக்க கூர்மைகள்
என்னை கொல்லாமல் கொல்கிறது

உன் விழியின் சோகம்
என்னை அம்பெடுத்து தைக்கிறது

நீ சிரிக்கும் சிரிப்பின் ஓரத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கும் உன் இதய சோகம்
என்னை ஏளனம் செய்வதால்
நான் கண்டும் காணமல் இருக்கிறேன்.

சட்டென சோகம் சூழ்ந்தால் 
பட்டென அழத்தெரியும் உனக்கு, 


கொட்டும் அழுகை வந்தாலும்
கெட்டியாய் சிரிக்கத் தெரியும் எனக்கு!

என்ன  சொல்லவதடி ...
இப்படியும் தான் வாழ்கிறொமே..!?


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 -may- 2012
இதே நாளில்…

03 ஏப்ரல் 2016

வலிந்து அழைத்தல்!



வில்முனையில் பூ தொடுத்து
விருப்பமுடன் எய்யும் வேளை

சொல்முனையின் கூரெடுத்து
சுடச்சுட எறிந்துவிட்டாய்
கள்முனை கனைமுறிய
களைந்ததென் கடுந்தவமும்
பல்முனைத் தாக்குதலை
பறிதவித்தே கேட்டு நின்றேன்
வல்முனை வாத ஈட்டி
வலிந்து எனை அழைத்ததுவே
ஓர் ருத்ர தாண்டவமாட!


முகநூல் பக்கத்தில்....

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

21 நவம்பர் 2014

வா.. வந்து பேசு!


பேச வந்துவிட்டு
பேசாமல் போனதும் ஏன்...?

வாயெல்லாம் தேன் சுமந்தும்
வார்த்தைகளில் வடிக்காததும் ஏன்..?

மலர்ச்செண்டு கொண்டு
அடிப்பதையெல்லாம்
மகத்தான வலியென்றால்
எங்கே தான் போய் உரைப்பதாம்.

பரிதியின் ஒளியொத்த கண்களோடு
உறுதியாய் கணிவு கொண்டல்லவா
எத்தனித்து வந்தாய்....
பின், பின்வாங்கியதும்
அறமா.. நலமா..???

பாசத்தின் வாசத்தில்
கிள்ளுதல் அள்ளுதல்
செல்லமாய் தள்ளுதல்
அன்புத்தொல்லையால் கொல்லுதல்
எல்லாம் கூட சகஜமன்றோ....

இதெற்கெல்லாம் உன்மூக்கு
உதட்டோடு போட்டியிட்டுச் சிவந்தால்
நீதிதேவதை அழவல்லவா செய்வாள்..!

தாமதிக்காது வாயடி
என் வாயாடிப் பெண்ணே...!

தேக்கி வைத்திருந்த
வசந்தங்களை யெல்லாம்
உன் வார்த்தைத்தைகளால்
என் நெஞ்சத்தில் அள்ளி வீசு!
நம் அன்பினில் ஏதடி மாசு!!

வா.. வந்து பேசு!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


16 நவம்பர் 2014

நீயும் நானும்!



உனக்கு நிகர்தான் யார்!
உன்னிடம் தானே உள்ளம் இழந்தேன்!
உன்னிடம் தானே என்னை இழந்தேன்!
உனக்கு நிகர்தான் யார்!
*
மனம் நிறைந்தது நீ
மணம் நிறைத்தது நீ
குணம் சிறந்தது நீ
தினம் நினைவில் நீ
*
அணு' பவத்தில் நீ
அனுபவத்தில் நீ
ஆசையாவும் நீ
அசைவுகள் யாவும் நீ
*
கொஞ்சல் நீ கெஞ்சல் நீ
அஞ்சல் நீ அஞ்சாமை நீ
ஆறுதல் நீ ஆற்றுதல் நீ
போற்றுதல் நீ புகழ் நீ
*
இதம் நீ வதம் நீ
அதம் நீ சதம் நீ
பதம் நீ விதம் நீ
நிதம் நீ திதம் நீ
*
என் பேச்சு நீ என் மூச்சு நீ
என் அழகு நீ என்அறிவு நீ
என் காதல் நீ என் கதி நீ
என் கூடல் நீ என் ஊடல் நீ
என் மோதல் நீ என் முக்தி நீ
என் சாதல் நீ என் சகலமும் நீ
*
நீ! நீ! நீ!
நான்! நான்! நான்!
நீ! நான்!  நான்! நீ! நான்! நீ! நீ! நான்!
நான்! நீ! நீ! நான்! நான்! நீ! நீ! நான்!
நாநீ...நீநா......................!!!

*
கலந்தோம்...!
இழந்தோம்..!
நிறைந்தோம்..!
சிறந்தோம்!!!!
*
தோம்..தோம்..தோம்...!!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............!!!
..........................................!!!
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 டிசம்பர் 2012

வள்ளுவன் வல்லவன்

காமத்துப்பால் சமைத்த வள்ளுவன் - அவன்
சாமத்துகலைகளில் வல்லவன்

காமத்தை இவன் திங்க காமம் இவன் திங்க
காமக்கரை அளந்து கடந்தவன் இவன்!

அணுவணுவாய் பெண்மை பருகியவன் - பெண்
அணுவுக்குள்ளும் பன்மையிலாது உருகியவன்


இடையிலக்கணமும் தொடையிலக்கணமும்
இவன் பகுத்தவை எனலாம்!
நடையிலக்கணமும் நலிவிலக்கணமும்
நயம்படவே நவில்வான் இவன்!

ஊடுதல் கூடுதல் கணக்கெல்லாம்
கூடுதல் குறைவின்றி வகுத்தறிவித்த வித்தன்!
ஆடற்கலை உச்சத்தின் இவன் ஜித்தன்!

இவன் ஒரு முனி
முற்றும் துறந்தவன் அல்ல!
முற்றும் திறந்தவன்!

இவன் ஒரு பனி!
பெண்மையின் தேகத்தில்
மென்மையாய் படர
பாதை பகர்ந்த மேதையிவன்!

ஆசான் இவன், ஆசான் இல்லாக் கலைக்கு!
பிழையாய் பிழை செய்யும் கலையில்
பிழையை சரியாய் செய்ய
சரியாய் செய்யுள் செய்தவன்!

தான் அறிவான் அறமும் பொருளும்
காமத்தினால் அடையும் முழுமையென்று,
ஆதலினால் உலகுக்கு உரைத்தான் நன்று!

அறிவால் இவன் பால் பருகி
அறிவாய்! காமம் செய்தால், - இன்பம்
அரியும் அரிவாள் நம் வசமே!

விளக்கமுடியாதிதை இவன் விளக்கியபடி
விளக்கில்லா நேரமதில் ஏதும்
விலக்கில்லாமல் விளங்கினால்
நிறைவாய் நெஞ்சத்தில் இனித்திடும்!
துணையும் மஞ்சத்தில் மகிழ்ந்திடும்!

ஆதலினால் காதலர்களே அறிக!
வள்ளுவப்பால் ஓர் வயாக்ரா
வீடுபுகுமுன் இப்பால் அருந்தி
இன்பத்தின் எல்லைக்கு அப்பால் நீள்க!

முடிவு!
காமத்தில் ஜெயிக்க வள்ளுவம் வேண்டும்!
காமத்தில் லயிக்க வள்ளுவம் வேண்டும்!!.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11 ஜூன் 2012

சாரல் நேரம்!




ஒவ்வொரு நாளும்
உன் குரல் கேட்டுத்தான்
என் மனக்குயில் பாடத் துவங்கும்

*****
புலரும் பொழுதுகளில்
உன் குளிர் மனம்புகுந்தால் தான்
என் மனத் தோட்டம் துளிர்க்கும்

*****
அந்தி நேரம் அழகு நேரம்
சந்திக்க சாரல் நேரும்
சிந்திக்க வேறில்லாது
முந்திக்கொண்டு முகம் தேடும்!

*****
உன் முகப்பூ பூக்காதிருந்தால்
என் அகப்பூ கருகிவிடும்!

*****
நின் பற்களின் சூரியன் தெறிக்க
என் எண்ணச்சந்திரன்களில்
மிண்ணும் பெளர்ணமிகள்!

*****
உன்
செவ்விதழ் பட்டுவர
செந்தமிழெல்லாம் அமுதமாகி
செவிகளில் செந்தேன் மழை பொழியும்!

*****
கடிகாரத்தின் மீது கடுங்கோபம்,
நாங்கள் பேசும் போது மட்டும்
பொய்யாய் நேரங்காட்டுகிறது.

*****
சன நேர ஓவியக் கூடங்களாய்
ஆச்சரியத்தில் ஆழ்த்தி மறைகிறது
உன் உதட்டோரப்புன்னகை!

*****
உனக்கான
காத்திருப்பிலெல்லாம்
பூத்திருக்கும் பூவின் நிலையில் நான்!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 ஏப்ரல் 2012

நானொன்றும் எழுதவில்லை




தேவி...
இதழோடு தேன் வழிய
இசைத்தேனே உன் பெயரை
முதலேதும் தெரியாமல்
மூழ்கிவிட்டேன் இன்பத்தில்..!
============================


உன் மலர் கூந்தல்
ஓர் மலையாக - அதில்
மல்லைகைப் பூ பால் அருவியாக
பார்த்தேன் தேவி காற்றில் ஆடயிலே!

==============================


இதயத்தில் புகுந்து
இப்படியெல்லாம் இம்சிப்பாய்
எனத்தெரிந்திருந்தால் - உன்
இதழுக்குள் எழும் வார்த்தைக்காக
இப்படி அழைந்திருக்க மாட்டேன்.

=============================

நானொன்றும் எழுதவில்லை
உன் கண்கள்
படித்த கவிதையை
என் கைகள் இன்று
எழுதியது அவ்வளவே!

=============================

உதட்டோரம் உதிர்த்து
உள்ளக்குடி சேர்ந்து
உலகை மறக்க வைத்து - என்
உயிரைக் குடித்ததடி
உன் மொழி!

=============================

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

09 ஏப்ரல் 2012

காதலின் அசோகப்போர்



ஆட்டுகுட்டி சண்டையானாலும்
அசோகப்போர் போல நினைத்து நீயும்,
அப்படி என்ன உனக்கு என்று நானும்
எத்தனை இருள் போர்த்திய இரவுகளில்…!

ஒத்தகருத்துடனும் ஒருமித்த மனதுடனும்
நாம் கடந்து வந்த நாட்களினூடே
எத்தனை இரவுகளுக்கு
அது இல்லாமல் போனது
நமக்கு எற்பட்ட ஊடல்களில்!

தேடல் கொண்ட இரவுகளில் எல்லாம்
கூடல் வாய்ப்பது இல்லை ஆனாலும்
நீயும் நானும்
அவரவர் தரப்பின் முறைப்பில்
பலமாய் இருந்த‌
தேடல் இல்லாத நேரம் தான் நமக்குள்
அததனை பெரிய ஊடலையும்
ஜடமாயாக்கி..
ஒரு நொடி வலிமையில்
மாய்த்து சாய்த்துவிடும்
அந்த சனப்பொழுதின் ஸ்பரிசம்.

மீண்டும் நாம்
தோழன் தோழியாய்
பாசம் பொழிந்து
அசோகப்போர் தொடங்குவோம்!


காலம் -2011

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11 பிப்ரவரி 2012

நீலக்கடலும் அலையும்..!



நீயும் நானும் சேர வேண்டும்
நீலக்கடலும் அலையும் போல –நம்
அழியாக் காதல் அர்த்தம்பெற வேண்டும்
ஒழியா எதிர்ப்புகள் வந்தாலும் கூட,
பாதகங்கள் கூடினால் என்ன – சிலர்
பாயும் புலியாய்  மாறினால் என்ன!!

நீ பூவாய் மலர்ந்தாய்
நான் வண்டாய் வலம்வந்தேன்
நீ நிலவாய் உலவினாய்
நான் வானமாய் இடந்தந்தேன்

நான் உன்னை பெண்ணாய் பார்க்கவில்லை
என் கண்ணாய் தான் பார்க்கிறேன் கண்மணியே! 

அன்பே நீ!
தேடிப் பார்க்க நீ ஓர் ஆழ்கடல் முத்து
சூடிப்பார்க்க சுகந்தம்கமழ் மலர்
ஓதிப்பார்க்க நீ ஓர் அகராதி
தொட்டு ருசிக்க நீ திவ்யத்தேன்
இட்டுக்கொள்ள நீ மென்பட்டு

ஓடையில் மீன் போல
உன்னில் நான் நீந்த வேண்டும்
கோடையில் இளநீர் போல
உனை தீர அருந்த வேண்டும்


ஓடி அலைவோம் தென்றல் போல
கூடிப்பறப்போம் சிட்டுக்குருவியாய்
பாடிக்களிப்போம் பசுங்கிள்ளைகளாய்
நீடித்த மகிழ்வில் தொடர்வோம் வாழ்வை!


-ஜே.எம்.பாட்ஷா

காலம் 1997                                                                                                        (இன்னும் புரியும் )

 உலகம் புரியாத வயதில் கவிதைகள் .. - 

26 ஜனவரி 2012

அன்பு எய்யும் அம்புகள்..!



பேச நேரம் கிடைக்காமல்
பேசிக்கொள்கிறோம்,
மாலை மட்டும் தொலைபேசியில்,
ஆயிரம் இடையூறுகள் அதிலும்..!

இன்று..,
நீ மனசு முழுவது எதிர்பார்ப்புடன்
வந்தமர்ந்தது எனக்கு ஏனோ தெரியவில்லை!

இன்னும் ஏன் அவன் சொல்லவில்லை…
இப்போதாவது சொல்வானோ..
சொல்லத்தான் போகிறான்..
எப்படி சொல்வான்..
என்னவெல்லாம் சொல்வான்
என்றெல்லாம் நிறைய நிறைத்து
நீ மனசு முழுவதும்
எதிர்பார்ப்புடன் வந்தமர்ந்தது 
எனக்கு ஏனோ தெரியவில்லை..!

ஏதேதோ நான் பேச.. 
புன்னகைத்தே அதிகம் பேசாது
எதையும் வீசாது..
மெளனித்தே பயணித்தாய்!

நீ திடீரென ‘சரியான மரமண்டை’ என்றாய்
செல்லமாய்த்தான் திட்டுகிறாள்,
இதுவென்ன புதுசாவெனத்தான்
மேலும் சிந்திக்கவில்லை…!

‘இன்று என்ன தேதி’ என கேட்ட உனக்கு
தேதி எதுவானாள் என்ன இவளுக்கு..
திடீரென தேதி குறித்தெல்லாம்
கேள்வி தொடுப்பது இவளா..?
நெஞ்சம் கேட்டாலும்…
இன்று இருபத்தைந்து என
நான் பதில் பகர்ந்தேன்.

சனவரி இருபத்தி ஐந்தென
சட்டென தட்டிவிட்டாய்
தட்டச்சில் நீ..!

நானோ நாளை குடியரசு நாளென்றேன்…,
உலக செய்தியெல்லாம் தெரியும் தானென்ற
உன் பொறுமை பொறுமை இழக்க..
எழுதிய இன்றைய தேதியை
தெரியாதா உங்களுக்கு…?
பிறகே உன் பிறந்தநாள்
பறந்து வந்தது சிந்தைக்குள்.

இரண்டு பிள்ளை ஆனதென்றால்
இது தான் நிலையோ..!
இனி இவள் நினைவெல்லாம் பழங்கதையோ..! 
அடுக்கடுக்காய் உன் ஆத்திச்சூடி..!

ஏங்கிய இதயத்தின் அங்லாய்ப்புகளுக்கு
அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

அவசரவாழ்வும்.. பணம் தேடும் பயணமும்..
வாழ்க்கைப்பயணத்தின் ரசவாதத்த்திற்கு
தடைபோடுவதை கண்டு நோகத்தான் வேண்டியிருக்கிறது!

யாரோவென்றால் சரிதான்.. நடந்ததெல்லாம்
யாரோவல்ல அவள் என்றால்..
உள்ளம் கேட்கும் தான் பல கேள்விகளை..!
அன்பு பல அம்புகளை எய்யும் தான்..!

தூர வாழ்வு வாழ்கிறோம்
துயரமல்லவா இதுவும் காதலில்..!

ஆயிரம் செய்திகள் சிந்தனையில் வந்தமர்ந்து
அன்பே நம் செய்திதனை மறைத்ததுவோ..!

நீ பேசி முடித்த பின்னும்
என் நெஞ்சம் தொடுக்கும் வினாக்களுக்கு
என்னால் விடை கொணர முடியவில்லை..!

எது என்னை இவ்வாறாக்கியது..?
ஏன் மறந்தேன் இவ்வளவு..?
என்ன வாழ்கிறேன் நான்…?

-ஜே.எம்.பாட்ஷா

22 ஜனவரி 2012

நீ மறுத்தால்...!







நீ மறுத்தால்...!


கடற்கரை மணல்..
பார்த்து திரும்பிய
கடல் அலை..
உறசிப் போன
உள்ளாசக் காற்று..
இவைகளெல்லாம்
சாட்சி!



தென்றல்!


அவளிடம் என்னை 
அள்ளிச்செல்ல 
அந்தகள்ளி அனுப்பிய 
கைக்கூலிகளோ
இந்த தென்றல்!



-ஜே.எம்.பாட்ஷா

சூறாவளி..!



அமைதியான ஆகாயத்தில்
திடீர் சூறாவளி..!

சூரிய ஈர்ப்பில் வேறெதுவும்
அறியாது சுற்றிக்கொண்டிருக்கும்
கோள்களுக்கு கூட தடுமாற்றம்..!

சலனமில்லாத ஆழ்கடல் கூட
திடீர் வேகப்பேரலையால்
கலங்கி ஆர்பறித்தது..!

என் கண்களுக்குள்..
ஐயோ ..!
ஓர் காட்டுக்தீ..!

நெஞ்சத்தில் பேரதிர்ச்சி..!

சித்தம் பேதலித்து
சேதாரம் ஆகிவிட்டது..!

சிந்தனையே வேறெதுவும் இல்லை
சூழ்நிலைக்கூட சுத்தமாய் மறந்து விட்டது

வேறெங்கும் பார்வையில்லை..!

நுகர்வு நரம்புகள்..
புதிய வாசம் உணர்ந்து தேடியது..!

நரம்பு மண்டலங்களில்
மின்சார பேரதிர்வு..!

எங்கோ அதன் திசையில்
கால்கள் தானாக நடக்கிறது

இத்தனை பரபரப்புக்கும்
காரணம்..

பூகம்பம்


எதிரே அவள்..!

--ஜே.எம்.பாட்ஷா

2008ல் எழுதியது..

நெஞ்சத்தவிப்பு





உன்னோடு
சேர்ந்து வாழும் - அந்த
சந்தன நாட்களை எண்ணி
நெஞ்சம் தவிக்கிறது.

உன்னோடு
இனிமை பொங்கும்
வாழ்வு நடத்த
நிதமும் ஏங்குகிறேன்

எனக்குள்
எத்தனை எத்தனையோ
இனம் புரியாத தவிப்புகளும்..,
இனம் தேடிடும் உணர்வுகளும்..,
ஏதோ ஓர்
அரவணைப்பையும்
தோழ்கொடுப்பையும் தேடி…!

உந்தன்
தேன்முக தரிசனமே - இன்றும்
என் மனத்திரையில்..!

வா…
என்னோடு வாழ..!

நீ தான்
என் எத்தனையோ
உணர்வுகளின் வடிகால் கண்மணி..!


ஜே.எம்.பாட்ஷா


(திருமண நிச்சயம் நடந்த பிறகு எழுதியது)

24 செப்டம்பர் 2011

மச்சானே வா!



நினைவெல்லாம் இருப்பவனே -என்

நித்திரையைக் கெடுப்பவனே

கலங்கரை விளக்கமே நீதான்,

கரைசேர்வது எப்படி.. நீ இல்லாமல்!


தென்றல் என்னில்

தேயும் போது - உன்

தேனிதழ் வடித்த

வார்த்தைகளே யாபகம்!


நேற்றைய கனவினில்

முத்தம் உமிழ்ந்த போது

உரசிய தாடியிடமே

மூர்ச்சையாக்கிவிட்டேன்

என் இதயத்தை!


பூக்கள் சிரிக்கும் போதெல்லாம் - என்

புன்னகை மன்னன்

தேனுண்ண வரும் நாள்

எப்பொதென்ற கேள்வியே!


நிலா தேய்கிறது

நீ இல்லாமல் - என்

நெஞ்சமும் கரைகிறது

மஞ்சம் உனக்கு வேண்டாமா?

மச்சானே வா!


நெஞ்சத்தைப் பறித்துக் கொண்டாய்

நெடுநாளாய் வாடுகிறது.

தஞ்சம் கொடுக்க மனம் இல்லையோ

பஞ்சமேன் உன் அன்பதனில்!


துரத்தித்துரத்தி அடித்தாய் - நான்

துள்ளிக்குதித்த நாட்களில்,

தூங்குவதெப்படி இனி..

இரு விழிகளில்லாமல்!


வானுயர மரம் வளர்த்தாலும்

உன் தென்றல் வராததால்

வாதத்திற்கும் ஆடாத.. அசையாத..

மரமாய் நான்!


பட்டுமேனிக்கு சொந்தக்காரன்

பாட்டுடைத் தலைவன் - என்

வீட்டிற்கு வரும் நாள் எப்போது?


பருவப்பால் திரிந்து விடும்

பருக விரைந்து வா..

பந்தல் போடும் மச்சானே!


ஜே.எம்.பாட்ஷா

காலம்; 1997
-இன்னும் புரியும்