26 ஜனவரி 2012

அன்பு எய்யும் அம்புகள்..!



பேச நேரம் கிடைக்காமல்
பேசிக்கொள்கிறோம்,
மாலை மட்டும் தொலைபேசியில்,
ஆயிரம் இடையூறுகள் அதிலும்..!

இன்று..,
நீ மனசு முழுவது எதிர்பார்ப்புடன்
வந்தமர்ந்தது எனக்கு ஏனோ தெரியவில்லை!

இன்னும் ஏன் அவன் சொல்லவில்லை…
இப்போதாவது சொல்வானோ..
சொல்லத்தான் போகிறான்..
எப்படி சொல்வான்..
என்னவெல்லாம் சொல்வான்
என்றெல்லாம் நிறைய நிறைத்து
நீ மனசு முழுவதும்
எதிர்பார்ப்புடன் வந்தமர்ந்தது 
எனக்கு ஏனோ தெரியவில்லை..!

ஏதேதோ நான் பேச.. 
புன்னகைத்தே அதிகம் பேசாது
எதையும் வீசாது..
மெளனித்தே பயணித்தாய்!

நீ திடீரென ‘சரியான மரமண்டை’ என்றாய்
செல்லமாய்த்தான் திட்டுகிறாள்,
இதுவென்ன புதுசாவெனத்தான்
மேலும் சிந்திக்கவில்லை…!

‘இன்று என்ன தேதி’ என கேட்ட உனக்கு
தேதி எதுவானாள் என்ன இவளுக்கு..
திடீரென தேதி குறித்தெல்லாம்
கேள்வி தொடுப்பது இவளா..?
நெஞ்சம் கேட்டாலும்…
இன்று இருபத்தைந்து என
நான் பதில் பகர்ந்தேன்.

சனவரி இருபத்தி ஐந்தென
சட்டென தட்டிவிட்டாய்
தட்டச்சில் நீ..!

நானோ நாளை குடியரசு நாளென்றேன்…,
உலக செய்தியெல்லாம் தெரியும் தானென்ற
உன் பொறுமை பொறுமை இழக்க..
எழுதிய இன்றைய தேதியை
தெரியாதா உங்களுக்கு…?
பிறகே உன் பிறந்தநாள்
பறந்து வந்தது சிந்தைக்குள்.

இரண்டு பிள்ளை ஆனதென்றால்
இது தான் நிலையோ..!
இனி இவள் நினைவெல்லாம் பழங்கதையோ..! 
அடுக்கடுக்காய் உன் ஆத்திச்சூடி..!

ஏங்கிய இதயத்தின் அங்லாய்ப்புகளுக்கு
அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

அவசரவாழ்வும்.. பணம் தேடும் பயணமும்..
வாழ்க்கைப்பயணத்தின் ரசவாதத்த்திற்கு
தடைபோடுவதை கண்டு நோகத்தான் வேண்டியிருக்கிறது!

யாரோவென்றால் சரிதான்.. நடந்ததெல்லாம்
யாரோவல்ல அவள் என்றால்..
உள்ளம் கேட்கும் தான் பல கேள்விகளை..!
அன்பு பல அம்புகளை எய்யும் தான்..!

தூர வாழ்வு வாழ்கிறோம்
துயரமல்லவா இதுவும் காதலில்..!

ஆயிரம் செய்திகள் சிந்தனையில் வந்தமர்ந்து
அன்பே நம் செய்திதனை மறைத்ததுவோ..!

நீ பேசி முடித்த பின்னும்
என் நெஞ்சம் தொடுக்கும் வினாக்களுக்கு
என்னால் விடை கொணர முடியவில்லை..!

எது என்னை இவ்வாறாக்கியது..?
ஏன் மறந்தேன் இவ்வளவு..?
என்ன வாழ்கிறேன் நான்…?

-ஜே.எம்.பாட்ஷா

1 கருத்து:

VANJOOR சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.