மீலாது சிந்தனைகள்; 2
ஆசிரியர்கள் பலவிதம்.. ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பாணியில் பாடம் நடத்துவர்.. அதில் மாணவனின் மனநிலையை அறிந்து, அவனுகேற்றாற்போல் புரியும் விதத்தில் பாடம் நடத்தி எளிதில் பாடத்தை அவனது மனதுக்குள் புரியவைத்து புகுத்தும் ஆற்றல் சில ஆசிரியருக்குத் தான் கைவந்த கலையாகும். அந்த விதத்தில் வழுத்தூர் செளகத்துல் இஸ்லாம் பள்ளியில் நான் படிக்கும் போது இருந்த ஆசிரியர் குறித்துத் தான் இங்கே சொல்லபோகிறேன்..
அவர் பல மாணவர்களை உருவாக்கி பல சீனியர் மாணவர்களாலும் ஊர் பிரமுகர்களாலும் அரசு.. அரசு.. என எப்போதும் முணுமுணுக்கவைத்த அரசு என்கிற திருநாவுக்கரசு ஆசிரியர். பக்கா பெரியார் பக்தர்… பகுத்தறிவுவாதி.. பெரியாரைப்போலவே சடங்கு சம்பிரதாயங்களை தேவையற்ற மூடப்பழக்க வழக்கங்களை எப்போதுமே விமர்சித்தும்.. கிண்டலடித்தும்.. தன் கருத்தை பதிவுசெய்வார் இது அவரது வழக்கம். அதே நேரத்தில் தமிழனின் பண்டைய அடையாளங்களையோ அல்லது பண்பாடுகளையோ விட்டுக்கொடுக்கத் துணியாதவர். பள்ளி நேரம் கழிந்தால் இவரைச் சுற்றி எப்போதுமே பழைய மாணவர்கள் பலபேர் சூழவே இருப்பார்.. அவர்களின் சிலாகிப்புகளால் கவரப்பட்ட பலபேரில் நானும் ஒருவன் அதனால் அவரிடம் படிக்கும் வாய்ப்புக்காக ஏக்கப்பட்டதுண்டு… சரி அவரிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என்றால்..
வகுப்பறைக்கு வருவார்.. பாடம் நடத்த வேண்டியதை புத்தகத்தில் பார்த்துவிட்டு அது சம்பந்தமாக ஓர் ஓவியம் மிக எளிதாகவும் விரைவாகவும் வரைந்துவிட்டு பள்ளிக்கு வெளியில் இருந்து ஆரம்பிப்பார் அதில் நம் தினசரி அனுபவம், அரசியல், திரை என வலம்வந்து நடத்தப்படக்கூடிய பாடத்தோடு ஒப்பிட்டு அதனை விளக்க அனைவரையும் அது அசத்திவிடும்.. எளிதில் புரிந்துவிடும்.
ஆசிரியர் திருநாவுக்கரசு |
பல சமய மாணவர்கள் கலந்து படிக்கும் பள்ளியறை அதானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மற்ற மாணவர்களிடம் ஒப்புதல் கேட்பார் ''நான் ஓர் சம்பவத்திற்காக நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்ததை சொல்லப்போகிறேன் சொல்லட்டுமா'' என்று..! ''அறிவு எங்கு கிடைத்தாலும் ஏற்றுக்கொள்வோமே அது முஹம்மது நபியிடம் கிடைத்தாலும் என்ன… ஏற்பதில் தவறொன்றும் இல்லையே'' என்று பல சந்தர்ப்பங்களில் பல விடயங்கள் குறித்து நபிகள் நாயகத்தின் நிலைப்பாட்டையும்.. வரலாற்றையும் கூறி எனக்கு அவர்களைப் பற்றி படிக்கவும், ஆராயவும் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்..
அரேபியாவில் அன்று ஓர் கிழவி தன் ஊரிலிருந்து நிறைய மூட்டை முடிச்சுடன் மிகவும் சிரமப்பட்டு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் வயதான அப்பெண்மணி சிரமப்படுவதை கண்ட நபிகள் நாயகம் (ஸல்..) அம்மா.. உங்கள் பொதிகளை கொஞ்சம் தாருங்கள் நான் உதவி செய்கிறேனே என்று கேட்க அக்கிழவியும் நான் ஊரை விட்டே அடுத்த ஊருக்கு செல்கிறேன் உங்களுக்கு சிரமம் ஏன் என அவள் சொல்ல எனக்கொன்றும் சிரமம் இல்லை வயதான காலத்தில் ஏன் இவ்வளவு சுமைகளை சுமந்து வெளியூருக்கு செல்கின்றீர்கள் என நபிகள் நாயகம் திரும்பக் கேட்க இங்கே முஹம்மது என்ற ஒரு ஆள் இருக்கிறார் அவர் நாங்கள் வணங்கும் தெய்வங்களை.. சிலைகளையெல்லாம் தெய்வம் இல்லை எல்லோருக்கும் ஒரே இறைவன் என்கிறாராம்.. அவரை பார்த்தவர்களை எல்லாம் அவரது மதத்திற்கு இணைத்துவிடும் சூனியக்காராம் அவருக்கு பயந்து தான் நான் அடுத்த ஊருக்கு செல்கிறேன், அவர் மோசக்காரர்.. அவர் அப்படி அவர் இப்படி என ஆரம்பித்து அடுத்த ஊர் வரும் வரை மிக கடுஞ்சொற்கள் கொண்டு திட்டிக்கொண்டே வந்தாளாம் அவள் பொதிகளை சுமந்து வந்த நபிகள் நாயகமோ அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டே மறுப்பேதும் சொல்லாது அமைதியாகவே வந்தார்களாம் அடுத்த ஊர் வந்தவுடன் ''சரிசரி நான் வரவேண்டிய ஊர் வந்து விட்டது நீ யார் பெத்த பிள்ளையோ ரொம்ப நன்றி தம்பி.. ஆமா இவ்வளவு தூரம் வந்தோமே உங்க பேரை சொல்லவே இல்லையே'' எனக்கேட்க நபிகள் நாயகம் மிகவும் பணிவாக ''நான் முஹம்மத்.. நீங்கள் இவ்வளவு தூரம் யாரை திட்டிக்கொண்டே வந்தீர்களோ அதே முஹம்மது தானம்மா நான்'' எனச் சொல்ல அந்த கிழவி மிக அதிர்ந்து போய்.. இவ்வளவு சாந்தமும், இரக்க குணமும் உடைய உங்களைப்போயா பிறர் சொல்ல அதை நம்பி நான் வாய் வலிக்க திட்டிக்கொண்டே வந்தேன் என்றும், இத்தனை அருங்குணங்கள் இருக்கும் நீங்கள் எதை போதிக்கின்றீர்கள் எனக்கேட்டு இஸ்லாத்திற்கு அவள் வந்ததாய் ஒரு நிகழ்வு உண்டு.. அதை ஆரம்பத்தில் இந்த அரசு வாத்தியார் சொல்லித்தான் நான் கேட்டேன். மேலும் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு ஞாயிரன்றும் கூடும் கூட்டத்தில் ஒரு நபிமொழியை வாசிக்க செய்தவர் அவர் தான்.
நான் 1984ல் வழுத்தூரில் முஹையத்தீன் ஜீலானி பெரிய பள்ளிவாசல் திறக்கும் போது அதன் சில பொறுப்புக்களை ஊரின் பள்ளி ஆசிரியர் என்பதால் ஏற்றிருந்தேன்.. அப்போது கண்ட காட்சி என்னை மிகவும் திகைப்படைய வைத்தது.. அது என்னவென்றால் காலையிலிருந்து கூட்டம் நடக்க மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சமனின்றி இருந்தார்கள் ஜும்மாவுடைய தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டபின் இகாமத் என்ற மற்ற ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது தான் தாமதம்.. திரண்டிருந்த பிரம்மாண்ட கூட்டம் ஒருசில நொடிகளில் வரிசை வரிசையார்.. ராணுவம் அணி திரண்டு நிற்பதைப்போல சரியான இடைவெளிவிட்டு அழகுற நிற்க கண்டு நான் மிக வியந்தேன்.. ஏனெனில் ஒரு ராணுவத்திற்கு கூட அவர்கள் எத்தனை பயிற்சி கொடுக்கிறார்கள் ஆனால் இஸ்லாமியர்கள் நபிகள் நாயகத்தின் ஒழுங்கை ஏற்று எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் இயற்கையாகவே இவ்வாறு நடப்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது என்று அந்த அரசே எங்களிடம் தன் மனவோட்டத்தை பகிர்ந்து கொண்டார்.
ஒருமுறை இரு மாணவர்கள் பலமாக சண்டையிட்டுக்கொண்டார்கள் அவர்களை அவர் அழைத்தார் ''இங்கே வா நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள் சமூகத்தில் ஒவ்வொருவரும் கட்டடத்தின் கற்களைப் போன்றவர்கள் என்று அப்படி இருக்கும் போது இப்படி ஒருவரின் மீது ஒருவர் சண்டையிட்டால் எப்படி சமூகம் உருப்படும்'' என்றார், ஒருவரின் உணவு இருவர் சாப்பிட போதும்.. இருவர் உணவு மூவர் சாப்பிட போதும் இது நபிகளார் சொன்னவை ஆக பகிர்ந்து உண்ணுங்கள்.. அண்டை வீட்டில் ஒருவர் பசித்திருக்க தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் உணமை முஸ்லிம் ஆகமாட்டான் என்று கூறி அண்டை வீடு என்று என்பதற்கு வீட்டிற்கு நாலு திசைகளிலும் உள்ள ஒரு வீடோ இரு வீடோ அல்ல எட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் என நினைக்கிறேன் என்பதாக நபிகளார் சொல்லியது எனக்கு யாபகம் வருகிறது ஆகவே பகிர்ந்துண்ணுதலும் ஒரு கடைத் தெருவுக்கு சென்றால் கூட அக்கம் பக்கத்தில் இருக்கும் முதியவர்கள், பெண்கள் என பலவீடுகளுக்கும் சென்று என்ன வேண்டும்.. என்ன தேவை இருக்கிறது... என கேட்டு செல்வார்களாம் அதைப்போல நீங்கள் சமுக அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டும் என அடிக்கடி சொல்லி இருக்கிறார் எனது ஆசான் அரசு. அவரின் நினைவு இந்த மீலாது தினத்தில் இயற்கையாகவே வந்ததால் ஓர் மாணவனின் நன்றி உணர்வை காட்டும் விதத்தில் இங்கே இதை என் எழுத்தாய் பதிவு செய்கிறேன்.
வாழ்க இது போன்ற சமயம் கடந்த நன்மக்கள்..!! வாழ்க நபிப்புகழ்..!!
-வழுத்தூர். ஜா.முஹையத்தீன் பாட்ஷா
1 கருத்து:
அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதிநின் நபிய்யில் உம்மிய்ஈ வஅலா ஆலிஹி வாசஹ்பிஹி வாசல்லிம் தஸ்லீமா...
கருத்துரையிடுக