இம்மாதம் நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின் பிறந்த மாதமாக இருப்பதால் உறவுகளோடும், நட்புகளோடும் ஒரு சில மனப்பகிர்வுகளை பகிர மனம் நாடிய காரணத்தால் சில சிந்தனைகளை இதோ உங்கள் முன் வைக்கிறேன்…
மீலாது சிந்தனைகள்; 1
நம் எல்லோருக்கும் இறைவனின் சாந்தி (நிம்மதி.. அமைதி..) நிலவட்டுமாக!
சுமார் 1433 ஆண்டுகளுக்கு முன்பு பிறக்கும் முன்பே தந்தையை இழந்தும்.. பிறகு குழந்தை நிலையில் தாயின் அரவணைப்பு தேவைப்படும் ஆறாம் வயதில் அன்னையை இழந்தும்.. பாட்டனாரிடமும், சிறிய தந்தையாரிடமும் வளர்ந்த ஓர் அரபிய அனாதைக் குழந்தையின் பிறப்பை இன்று வரை உலகம் பேசும்படியும், மனித சமுதாயம் பேசும்படியும், எழுதும்படியும், ஆராயும்படியும், நினைந்துருகும்படியும் மெய்ப்பொருள் ஆக்கி இருக்கிறது.
அந்த அனாதைக்குத் தான் இன்று இந்த உலகமே இன்று சொந்தம் கொண்டாடுகிறது.. சொந்தமாகிப்போனது ஏனெனில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "தான்" என்பதையும், தன் இரத்த உறவுகள் என்பதையும், ஊர், மாகாணம், நாடு என்பதையெல்லாம் தாண்டி உலகமாந்தர்கள் அனைவரையும் உவந்த காரணத்தாலும்.., தன்னுயிரென எல்லா உயிர்களையும் நினைத்த காரணத்தாலும் தான்.
மேலும், மாந்தர் இனத்திற்கு சிறப்பான வாழ்க்கை நெறிமுறைகளை சொல்லிக்கொடுத்தும் அதை தான் நடந்து காட்டி பிறரையும் நடக்கக் கற்றுக்கொடுத்தும் வழிகாட்டிச் சென்றிருக்கக் கூடிய காரணத்தாலும்.. அம்மாந்தரினத்திற்கு எதுவெல்லாம் சரியானது இல்லையோ.. உடலுக்கும், உயிருக்கும் (ஆன்மாவிற்கும்) எதிரானதோ.. அழிவைத் தரக்கூடியதோ.. அறிவிற்கு அப்பாற்பட்டதோ.. அதை செய்யவேண்டாம் என்று அன்பால் தடுத்தார்கள். ஆனாலும் சிலர் எச்சரிக்கை செய்தும் கட்டுப்படாமல் அறிவின்மையாலும், ஆணவத்தாலும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே அழிக்கவும், இவர்களை பின்பற்றுவோர்களை ஒடுக்கவும், அழிக்கவும், துடைக்கவும் துணிந்த போதெல்லாம் துணிவு கொண்டு நிர்பந்தத்தின் காரணத்தால் பகைவென்று நன்னெறி நாட்டிச் சென்றார்கள்.
மேலும், உலகின் பெரும்பகுதி மக்களுக்கு தெளிவான இறைச் சித்தாந்தத்தையும், உலகியல் வாழ்வின் ஒப்பற்ற அணுகுமுறைகளையும் போதித்து சென்றதாலும் அவைகளோடு சிறந்த பழக்க வழக்கங்களையும், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம், இரக்கம், அன்பு, நன்றி, பணிவு… என்று எந்தெந்த உலகின் உயரிய குணங்களெல்லாம் இருக்கிறன்றனவோ அவைகளையெல்லாம் போதித்தும்.. தானே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிம் சென்ற காரணத்தால் தான்..
வரலாறுகளில் மனித சமூகத்தின் அறிவுக்கும், சிந்தனைக்கும் எட்டக்கூடிய ஓர் ஒப்பற்ற சரித்திர உண்மை சான்றாக இருக்கக் கூடிய காரணத்தால் தான்..
இன்று வரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறப்பு ஒப்பற்ற உயரிய பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இங்கே இக்கட்டூரையின் மூலம் பகிர நினைக்கும் முதல் எண்ணம் எதுவென்றால்… நம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பற்றி நாம் குறிப்பிடும் போதும், பேசும் போது நபிகள் நாயகம் என்றே குறிப்பிடுகின்றோம்.. நபிகள் நாயகம் என்றால் யாரைக்குறித்தது என்று தனியே விளக்கி யாருக்கும் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.. எல்லோருக்கும் விளங்கும் அது முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைத் தான் அது குறிக்கும் சொல்லென்று.
குறிப்பாக பிற சமய சகோதர்களுக்கு நபிகளாரைக் குறிக்கும் மற்ற சொல்லை விட நபிகள் நாயகம் என்ற சொல்லே மிக பழக்கமான ஒரு சொல் ஆகும். மாறாக இஸ்லாமியர்கள் நபிகளாரை குறிக்கும் போது சொல்லும் பிற சொற்களான நபியல்லாஹ்..(இறைவனின் அல்லது மெய்ப்பொருளின் தூதர்) ரசூலுல்லாஹ் (இறைவனின் அல்லது மெய்ப்பொருளின் பிரதிநிதி) போன்ற சொற்களெல்லாம் வெகுவாக பரிட்சயம் இல்லாத சொற்கள் என்றே தான் சொல்ல வேண்டும்
ஏன் பிற சமய சகோதரர்களுக்கு நபிகள் நாயகம் என்பதை விட முஹம்மது நபி என்ற சொல்லாடல் பயன்பாடு கூட மிகக்குறைவு தான்.
நபிகள் நாயகம் என்ற சொல்லுக்கு "நபிகளுக்கெல்லாம் நாயகம்' என்று பொருள் அதாவது நபிகள் எனறால் இறைத் தூதுவர்கள்..மெய்ப்பொருளின் பிரதிநிதிகள், நாயகம் என்றால் தலைவர் என்று பொருள். ஆக, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிக்க மிக கண்ணியமாகவும், அவர்களின் வானலாவிய புகழை உலகிற்கு சொல்லும் ஒரே சொற்றொடர்
"நபிகள் நாயகம்"
என்று நமக்கு அமைத்து தந்திருக்கிறார்கள் நமது பெரியவர்கள்.
இதனால் ஒன்றை நாம் சொல்லாமல் விளங்கிக்கொள்ள இயலும், அது..நமக்கு முன் இந்த தமிழ்ச் இஸ்லாமிய சமுகத்தில் வாழ்ந்து சென்றவர்கள் எத்தகைய மேதைமைக்குச் சொந்தக்காரர்கள் என்பதும், அவர்கள் நபிகள் நாயகத்தின் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருந்தார்கள் என்பதும், அவர்கள் அறிவின் தெளிவில் எங்கனம் சிறந்திருந்தார்கள் என்பதும் தான்.
இங்கே வேறு எந்த சான்றும் இல்லாது மேற்சொன்னவைகளுக்கு அந்த "நபிகள் நாயகம்" சொற்றொடரே போதுமானதாக விளங்கும்.
ஆக, நபிகள் நாயகம் நபிகளுக்கெல்லாம் அதாவது இறைவன் அல்லது மெய்ப்பொருளுடைய நபியாக அல்லது தீர்க்கதரிசியாக வந்தவர்களுக்கெல்லாம் நாயகம் எனப்பொருள்படும் தலைவர் என்பது தான்.
இங்கே இன்னொன்றையும் இது விளக்கும் அதாவது ஒவ்வொரு தீர்க்கதரசிகளும் எந்தெந்த நல்ல குணங்களை பெற்றிருந்தார்களோ.. அறிவு விசாலங்களை பெற்றிருந்தார்களோ.. இன்னபிற சிறப்புகளை பெற்றிருந்தார்களோ அவைகளை ஒருங்கே பெற்றவர்கள் என்பதையும் இந்தச் சொற்றொடர் நமக்கு சொல்லுகிறது என்பதும் ஆகும்.
நாம் எப்போது சிறப்பாக நமது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சீரன்போடு.. வாய் மணக்க.. நன்றியோடு அவர்களை அந்த சொல்லான "நபிகள் நாயகம்" என்றே தான் அழைக்கின்றோம். இது நமது முன்னால் சீறிய சிந்தனையுடைய தமிழ் அறிஞர்கள் மூலமாக நாமக்கு இறைவன் அளித்த பெரும் பேறாகும்!
வல்ல பேரிறை முன்பு சென்றோருக்கும், இன்றிருப்போருக்கும், இனிவருவோருக்கும் அந்த நபிகள் நாயகத்தின் பொருட்டால் தன் அருட்பேருகளை குறைவின்றி வழங்கட்டுமாக! ஆமீன்.
-வழுத்தூர். ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக