காஸா-வின் சிறுவர்கள் |
குழந்தைகள் அழகு ஒப்பில்லாதவை
குழந்தைகள் உலகம் தப்பில்லாதவை
குழந்தைகள் சிரித்தாலும் அழகு
குழந்தைகள் அழுகையிலும் அழகு
குழந்தைகள்
கவலைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் – தூய்மையில்
அவ்விளந்தைகள்
பனித்திவளைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள்
குழந்தைகளுக்கு…
வன்மம் வெறி பழிவாங்கள்
என்பவையெல்லம் தெரியாது
துன்பம் நேர்ந்தால் கூட துளியளவும்
பகைசெய்யும் வகை அறியாது
சூது வாது காமம் குரோதம்
இவைகளுக்கெல்லாம் இவர்கள் விரோதம்
தீது செய்யும் என்று தெரியாமலே
தீயைக்கூட தொடும் இவர்கள் வினோதம்
தனக்கு சந்தோசமேற்பட்டால்
சங்கீதம் தோற்கச் சிரிக்கும்
தனக்கு துக்கமென்றால்
பரிவு வேண்டி அழுகையில் தரிக்கும்
மாறாத அன்போடு பேசும்
மறைவில்லாத நேசம் வீசும்
காசான உலகம் பற்றி கடுகளவும் அறியாது
தூசான குணங்களேதும் துளிகூட இராது
நம்முகம் கண்டாலே மலர்ந்து முகப்பூ விரிக்கும்
அம்மழலை முகம் நாம்காண
மனதில் இருக்கும் இறுக்கம் உடைந்து தெரிக்கும்..
மனசிலெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி ஒளி நிறைக்கும்.
அவர்கள் மென்மையானவர்கள்…
உடலில் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான்,
உள்ளொன்று வைத்தெல்லாம்
புறமொன்று பேசாத பதுமைகள் குழந்தைகள் தான்.
நம்மின் முரட்டுத்தனங்களை அவர்கள் தாங்கமாட்டார்கள்
நமது வன்மங்களை அவர்களால் ஏற்க முடியாது
நமது அவசரங்களை அவர்களால் சகிக்க முடியாது
அவர்கள் அன்பிற்கு மட்டும் சொந்தம் பாராட்டவந்தவர்கள்
அடிதடி கொண்டு யாரும் வதைத்திட வேண்டாம்!
நம்மை முழுமையாக நம்பும் - இவர்கள் தான்
நமது காப்பாளர்கள் என்று!
யாரேனும் அச்சம் ஏற்பட செய்தால் கூட
தப்பித்து நம்மிடம் அபயம்புகும் காப்பார்கள் என்று!
பிஞ்சுக்கால்களில் முள் குத்தினாலும்
பீறிட்டு அழுது நம்மிடம் வரும்
பஞ்சு போன்ற படைப்பினத்தை
பிஞ்சிச் சிதற அழித்திட வேண்டாம்!
குஞ்சுகள் உலகம் உங்கள் சூதறியாது
குண்டுகளால் அவைகளை ஏன் சிதைக்கிறீர்
மனிதப்பிறவிகளின் கொடூரங்கள் அறியா
மாகத்தான பிறப்புக்கள் குழந்தைகள்
அவைகளை மண்ணில் புதைத்து
உங்கள் கொடுமைகளுக்கு உரமாக்காதீர்!
நீவீர் மிகபாதகமாக தாக்கினாலும்
உங்களின் கோரத்தையெல்லாம்
குழந்தைகளின் அன்பு உள்ளத்தால் சிந்திக்ககூட தெரியாது!
குழந்தைகள் இயற்கையை
இயற்கையாய் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்
உங்களின் செயற்கை கோள்களால்
குறிவைத்து நொறுக்காதீர்கள்!
குழந்தைகள் சாகும்போது…..
குழந்தைகளோடு சாவது
உங்களின் அன்பு.. பரிவு..இரக்கம்
இவைகளெல்லாம் தான்!
மற்றொரு குழந்தையை கொன்றுவிட்டு
உன் குழந்தையை மட்டும் நீ
குற்ற உண்ர்ச்சியே இல்லாமல்
கொஞ்சவா முடியும் ????
குழந்தைத் தனங்களை
கொண்டாடக் கூடவேண்டாம்
குறைந்த பட்சம்
கொன்று ரசிக்காதீர்கள்.
ஆயுதம் ஏந்தி நிற்கும்
மனிதர்களெனப்படும்
மதவாதிகளே.. அதிகார வெறியர்களே..
ஆயுத வியாபாரிகளே..
குழந்தைகளின் மீது
குறைந்த பட்ச அன்பையாவது காட்டுங்கள்!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
(காஸாவில் கொத்துக்கொத்தாக குழந்தைகளை கொன்று குவித்த போது எனது மனம் இப்படி அழுதது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக