ரொம்ப நாள் ஆச்சே ஒரு ஆங்கிலப்படம் அல்லது ஒரு ஹிந்திப்படம் பார்க்கலாம் என நேற்று துபை மாலில் Hercules, Gardian of the Galaxy அல்லது Raja Natwarlal (Hindi) இதில் ஒன்று பார்ப்போம் என்று தான் முடிவெடுத்து கவுண்ட்டரை நெருங்கினேன்.. ஆனால் காட்சி நேரம் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவில்லை காத்திருக்க முடியாது மற்றொன்று 3D காட்சிக்கான கட்டணம் தேவையில்லாமல் 48 திர்ஹம் கொடுக்க மனம் வரவில்லை. 3D இல்லாமலே 35 திர்ஹம், கவுண்டரிலேயே கேட்டேன் நீங்கள் எது நல்ல படம் என நினைக்கிறீர்கள் எனறு.. அந்த பிலிப்பினோ சொன்னது “Dawn of the Planet of the Apes” நன்றாக இருக்கிறது அதை நீங்கள் பார்க்கலாம்.
தன் மகனை இழந்த கோபாவிற்கு மனிதர்கள் மீது வெறுப்பு வருகிறது, காட்டில் குரங்குகள் கூட்டம் கூடுகிறது, தலைவர் சீசரை மனிதர்களோடு போரிட அழைக்கிறது கோபா… நான் மகனை இழந்திருக்கிறேன், உன் மகனுக்கு காயங்கள் என சுட்டிக்காட்டுகிறது ஆனால் சீசரோ மிக ஆழமாக சிந்தித்து “நாம் போரிடப்போனால் பேரிழப்பு நமக்காகத்தான் இருக்கும் அத்தோடு நாம் நமது குடும்பங்களை இழக்க நேரும்.. பெரும் உயிர் சேதமாகும்.. இப்படி காட்டில் அமைதியாக வாழும் நிலை போய் வருத்தமான சூழல் வந்துவிடும்” என்று புத்திமதி சொல்லி அனுப்பிவிடுகிறது கூட்டம் கலைகிறது. ஆனாலும் கோபாவிற்கு போரிடவேண்டும் என்ற எண்ணம் தணியவில்லை.. அதற்காக சதிவேலையில் ஈடுபடுகிறது.. சீசரின் மகனை தன் சதிவலையில் சிக்க வைக்க தவறான பல செய்திகளை கூறி அதற்கு தன் தந்தை மீதே வெறுப்பை விதைத்து தன் வழிக்கு இழுக்கிறது. சீசரின் மகன் குரங்கிற்கு மெல்ல மெல்ல தந்தைமேல் வெறுப்பு வருகிறது.. தந்தையின் பாசம் பொய்யென நினைக்கிறது.. தன்னை காயப்படுத்தியவர்களுக்கு உதவி தன்னை கண்டுகொள்ளவில்லை என கோபப்படுகிறது.. கோபாவை நம்புகிறது. இந்நிலையில் கோபா ஒரு திட்டம் தீட்டி மனிதர்களின் ஆயுதக்கிடங்கு இருக்கும் இடத்தை அறிந்து அதிலிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து நேரம்பார்த்து சீசரை சுடுகிறது.. சுட்டுவிட்டு பார் இங்கே மனித துப்பாக்கி கிடக்கிறது.. மனிதர்கள் தான் சீசரை சுட்டுவிட்டனர் என நாடகமாடி இன்னும் மனிதர்கள் மீது குரங்குகளுக்கு வெறுப்பை வளர்க்கிறது.. இந்த நேரத்திற்காக காத்திருந்த கோபா அவசர கூட்டத்தை கூட்டி தன்னை குரங்குகளின் தலைவனாய் அறிவித்துக்கொள்ள்கிறது. உடனே மனிதர்களை பலி தீர்த்தே ஆகவேண்டும் என கூறி தன் பழைய பகையை தீர்க்க சீசரின் மகன் மற்றும் மற்ற தலைவர்களையும் சேர்த்துக்கொண்டு மக்கள் வாழும் நகரை நோக்கி குரங்குகள் படை விரைகிறது.
இதற்கிடையே காட்டிற்கு மீண்டும் வந்து முகாமிட்டிருக்கும் அதே மனிதக்குழுக்களால் உயிருக்கு
போராடிக்கொண்டிருக்கும் சீசர் கண்டெடுக்கப்பட சிகிச்சைக்காக மனிதர்கள் சீசரை தங்கள்
வீட்டிற்கு கொண்டு சென்று குண்டை எடுத்து சிகிச்சை கொடுக்கிறார்கள். இதற்கிடையில் மனிதர்களுக்கும்..
குரங்களுக்கும் அதிரடியான சண்டை குரங்குகள் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி மனிதர்களை கொடூரமாக
கொன்று குவிக்கிறது.. மனிதர்களும் அதி நவீன கருவிகளால் சண்டையிட குரங்குகளுக்குள்ளும்
உயிர்பலி மிக அதிகம். நகரமே போர்களமாக இருக்கும் கோலம், போருக்கு உடன்படாத குரங்குத்
தலைவர்கள் மற்றும் மற்ற குரங்குகளை சிறை செய்து வைத்திருந்தது கோபா.. பற்றி எறியும்
சண்டையில் சீசரின் மகன் அதிஷ்டவசமாக உயிர் தப்பி நிற்கும் வேளை குரங்கின் முதிய தலைவர்
சீசரின் மகனுக்கு நிலைமையை எடுத்துச்சொல்லி நீ உன்னை தற்காத்துக்கொள்.. கோபாவோடு இன்னும்
நீ இருந்தால் உனக்கு நல்லதல்ல என சீசரின் மகனுக்கு அது தப்பான தலைமையின் கீழ் இருப்பதை
உணர்த்துகிறது.
இதற்கிடையே சீசர் பிழைத்துக்கொள்கிறது.. அந்த மனிதக்குழுவில் உள்ளவர் சீசரின் மகனை பார்த்துவிட சீசர் உயிரோடு இருக்கும் தகவலை கூறி சீசரின் மகனை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். தவறான தலைமையின் கீழ் போனதையும், போதிய சிந்தனை இல்லாது செய்த தவறையும் உணர்ந்து மன்னிப்பு கோரி அழுது தந்தையோடு சேர்கிறது மகன் குரங்கு. மகனிடம் தன் குடும்பத்து மற்ற குரங்குகள் மற்றும் தலைவர்கள் பற்றி கேட்க நிலைமையின் கொடுமையை சொல்கிறது மகன் குரங்கு. பிறகு களத்தில் இறங்கி கோபாவை வெல்கிறது சீசர்.
அற்புதமான படமாக்கம்.. விருவிருப்பான காட்சிகள்.. அசரவைக்கும் காடுகள்.. குரங்குகிற்கும் மனிதர்களுக்கும் இடையேயான பயம்.. போராட்டம்.. பாசம்.. அன்பு எல்லாம் தத்ரூபம்.குரங்குப்படம் பல வந்திருக்கிறது.. இது குரங்குப்படம் தானே என நீங்கள் நினைக்கலாம் ஆனால் அருமையான கருத்தை இப்போது உலக மக்களுக்கு தேவைப்படும் கருத்தை அழகாக குரங்கை வைத்து படம் பாடம் எடுத்திருக்கிறார்கள். மக்கள் எப்போதுமே மந்தை ஆட்டுக்கூட்டம் போலத்தான்.. தலைவர்கள் தப்பாய் அமைந்தால் என்ன விபரீதம் என்றும் தலைமை எப்படி இருக்க வேண்டும் நல்ல தலைமை ஏன் பின்பற்ற வேண்டும் அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்று சிறப்பாய் சொன்னவிதம் அருமை. படத்தில் ஒரு விரசம் இல்லை.. சிறுவர்களும் ரசிப்பார்கள். இதில் சிறுவன் ஒருவன் குரங்கு தலைவரோ ஒருகட்டத்தில் நெருக்கம் கொண்டு பழகி அன்போடு புத்தகப்பாடம் சொல்லித்தரும் காட்சியெல்லாம் உண்டு.
படம் முடிந்து வரும்போது எல்லோரும் நிறைவாக சென்றனர். அருமை.. அருமை என தியேட்டர் முழுவதும்
கைதட்டி எழுந்ததை இப்படத்தில் தான் முதன்முறை கண்டேன்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக