நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் நேசமும்.. மனிதர்களின் குணங்களும்...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசிப்பது தான் எல்லாவற்றின் மூலம்.. அந்த நேசம் இருந்தால் ஒரு இஸ்லாமியன் மனித தன்மை உள்ளவனாக, ஒழுக்கம் நிறைந்தவனாக, உயர்வான அம்சங்கள் அடங்கியவனாக, மகத்துவமுள்ள மனிதாபிமானியாக, எல்லோருக்கும் பரோபகாரியாக, இரக்கமுள்ளவனாக, நல்ல சிந்தனை தெளிவுள்ளவனாக, நல்லது தீயதை பிரித்தறியக்கூடியவனாக, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவனாக, எல்லோரையும் அரவணைத்து போகக்கூடியவனாக, மன அமைதி பெற்றவனாக, வாழ்வில் நிம்மதி அடைந்தவனாக, வருங்கால சந்ததிகள் பின்பற்றும் நற்குணங்கள் ஒருங்கே உடையவனாக, மற்ற சமூகத்துடன் மதத்தவருடன் இணக்கம் காப்பவனாக, இப்பேற்பற்ற ஒப்பற்ற வாழ்வியலை தந்தீர்களே எங்கள் நாயகமே... என உருகி நன்றி உணர்வுவை பறைசாற்றக்கூடியவனாக எல்லா அருங்குணங்களும் அமையப்பெற்றவனாக ஆவான் என்பது திண்ணம். நபிகளை நேசிக்காமல் ஒரு இஸ்லாமியன் இருப்பானானால்மேற்கண்ட நல்லகுணங்கள் ஒருக்காலும் அவனிடம் இருத்தல் முடியாது... அப்படியே ஒருசில பண்புகள் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் அவனை நல்லவன் என்றோ அல்லது நற்குணசீலன் என்றோ சொல்லல் தகாது ஏனெனில் அவனது மூலகுணம் அல்லது மூலசிந்தனை அவனிடம் இருக்கும் ஒரு சில நல்ல குணங்களின் பலாபலன்களை, சிறப்புக்களை மிகைத்து சிதையில் தான் தள்ளிவிடும்.
********
ஏனெனில் நற்குணங்களின் தாயகமே நபிகள் நாயகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தான் அவ்வாறான நற்குணங்களின் தாயகப் பெருந்தகையை ஒருவன் உதாசினப்படுத்துகிறான் என்றால் அந்த குணம் என்பது நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாத குணம், பெருந்தகையை புறந்தள்ளும் குணம், புகழ் மேகம் சூழ்ந்துள்ள பேரருளின் மீது பொறாமை கொண்டுள்ள குணம், மேன்மையாளர்களை மரியாதை செய்யத்தெரியாத குணம், இளகிய இதயமில்லாத குணம், இறுகிய இதயமுள்ள குணம், மற்றவர்களோடு இணக்கம் பாராட்டாத குணம், இத்தனை தியாகங்கள் செய்து, இவ்வளவு உயர்வான வாழ்க்கை தரத்தை அமைத்துக்கொடுத்து இவ்வழியில் நீ நடந்தால் சிறப்பாவாய் என்று இஸ்லாத்தையே தந்தார்களே அதை ஒரு ஒரு கணம் சிந்தித்து நன்றி உணர்வு கூடகொள்ளாதவனாய் இருக்கும் நன்றி கொட்ட வஞ்சக குணம். ஆக நபிநேசம் இல்லாதவன் எத்தனை எத்தனை கீழான குணங்கள் இருக்கின்றனவோ அத்தனை கீழான குணங்களுக்கு உரியவனாகிறான்.
************
ஆக ஒருவன் நல்லுள்ளம் கொண்டவனாக நற்பண்புகள் நிறைந்தவனாக இருப்பானேயானால் அவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை மதித்தல்.. போற்றுதல்.. ஏற்றுதல் எல்லாம் அவசியம், மேலோர்களை சார்ந்திருப்பது என்பதும், அவர்களின் மேன்மையை போற்றுவது என்பதும் அவர்களின் வழிக்காட்டுதலில் வாழ்வியலை அமைத்துக்கொள்வது என்பதும் நற்பண்புகளின் பகுதியாகும்.அப்படிபட்ட ஒருவனால் மட்டுமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசிக்க முடியும். அப்படி பட்டஒருவனையே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் நேசிப்பார்கள்.. அப்படி பட்ட ஒருவனையே நாயனும் நேசிப்பான். ஏனெனில் அவனது மிகக்காதலுள்ள ஹபீப் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசிப்பவர்களை அவன் நேசம் கொள்ளாமல் இருப்பானா.. ஒருக்காலும் இல்லை.. இறைவனின் நேசம் வேண்டுவோர்.. இணையில்லாத நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசிப்பார்களாக. அதன் மூலம் ஒப்பற்ற பண்பு நலன்களை பெற்று சிறப்புறுவார்களாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக