இனிதாய் கடந்தது ஈத்!
இன்றைய ஈத் அமீரகம் அஜ்மானில் குடும்பத்தோடு மிகச்சிறப்பாக சென்றது, வழக்கம் போல் நேற்றைய இரவிலிருந்தே ஏற்பாடுகள் செய்து உறங்கச்செல்லும் போது மணி இரண்டரையை தொட்டிருந்தது
பிறகு மனைவி எழுப்புகையில் முடியாமல் எழுந்தது நாலே முக்கால். குழந்தைகளும் மிகத்தாமதமாக தூங்கியதால் அந்த நாலே முக்காலுக்கு எழ மறுக்க கொஞ்சம் அதிரடியாய் தூக்கிச்சென்று ஷவரில் கொண்டு நிறுத்த களம் களைகட்டியது. பிறகு எப்போதும் போல ஊரில் இளமையில் என் தாய் தந்தையர்புத்தாடை அணியத்தந்து வாழ்த்திடும் நிகழ்வுகள் மனதில் நிழலாட புத்தாடை அணிந்து நபிகள் நாயகத்தின் வழிமுறைப்படி எல்லோரும் ஒற்றைப்படையில் பேரித்தப்பழங்கள் சாப்பிட்டு அந்த ஐந்தரைக்கு அஜ்மானின் ஷேக் ஜைத் பள்ளிக்கு சென்றடைந்தாலும் அதற்குள் பள்ளி நிறைந்திருந்தது. உள்பள்ளி, மேல்தளம் என எங்கும் செல்ல முடியாததாகி வெளியில் நீண்டு விரித்திருந்த கம்ளங்களில் அமர்ந்தோம். (ஊராக இருந்தால் பெருநாள் தொழுகை காலை 9மணி பத்து மணி என்றிருக்கும்)
இந்த ஈத் பெருநாளின் காலை சென்ற ஆண்டு ஈத் பெருநாட்களைப்போல வெம்மையாக இல்லாமல், வியர்த்துக்கொட்டாமல் கடுங்கோடையாக இருந்த போதிலும் அதிகாலையில் எங்களை இரம்மியமான அருங்காற்றே வருடி இன்னும் இன்பத்தை கொட்டிச்சென்றது.
பிறகு தொழுகை முடித்து வாழ்த்துக்கள் பறிமாறி வீட்டிட்ற்கு வந்து காலை உணவை மகிழ்வோடு உண்டு மீண்டும் பிரியாணி தயாரிப்புக்களத்தில் குதித்தோம்.. உறவினர், நண்பர்கள் வாழ்த்து என உற்ச்சாகமாய் கொண்டாட்டம் தந்தது இன்றைய ஈத்.
ஊரில்பெருநாளை நாளை கொண்டாட இருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் எனது உளங்கனிந்த ஈத் முபாரக். நமது மகிழ்வும் உற்ச்சாகமும் இன்னும் இரட்டிப்பாகட்டும்.. நமது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் இன்னும் பண்மடங்காகட்டும்.
நாட்டில் எல்லா சமூகமும் இணக்கத்தோடு இணைந்து சிறப்பான பெருவாழ்வை நன்றே வாழ இப்பெருநாள் எல்லோருக்கும் புரிந்துணர்வை நல்கட்டும். மீண்டும் என் வாழ்த்துக்கள்.
வஸ்ஸலாம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக