எல்லா பெருநாளைய இரவு போல நேற்றிரவும் தூங்கவில்லை, அதிகாலை முன்றரைக்கு படுத்து ஒரு குட்டித்தூக்கம், பிறகு நாலரைக்கு அலாரம் அடிக்கும் முன்னேயே எழுப்பிவிடப்பட்டேன் பார்த்தால் அலாரம் 4.20 தான், சரியென கண்கசக்கி குளித்து அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு தயாரானேன். கோடைக்கால அதிகாலை கூட இப்பொழுதுகளில் வெம்மை சூழ்ந்தே இருக்கும் ஆனால் அப்படி ஒரு வெம்மையில்லை.. பள்ளிக்கு நடந்து செல்கையில் அருகிலுள்ள அரபியர்களின் வீடுகளில் சேவல் கூவும் ஓசை மனதை என் பாலிய காலத்தில் என் பாட்டி வீட்டின் வாசல் திறந்த கூடத்தில் படுத்துறங்கி எழும் இதே பெருநாளைய அதிகாலையில் மூனரை நாலுக்கெல்லாம் துவங்கிடும் அந்த சேவலின் கூவலுக்கு இட்டுச்சென்றது, அக்கூவல் காதில் ஒலித்து மனதில் பதிந்த ஒன்று கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின் அதிகாலை சேவல் கூவல் மனதிற்கு குதூகலம் தந்தது. நினைவுகளை புதுப்பித்தது. அந்த அரபி வீட்டு சேவலுக்கு நன்றி.
பிறகு அதிகாலை தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீட்டிற்கு வந்து சிறுபிள்ளை காலங்களிலிருந்து என் தாய் தந்தையர் கைகளால் வாழ்த்தி புத்தாடை கொடுக்கும் நினைவுகளோடு மனமெல்லாம் நல்மார்க்கம் ஈந்த நபிகளாரை மனதினில் இருத்தி புத்தாடைகள் அணிந்தேன். பிறகு கண்களுக்கு சுர்மா இட்டு, மணம் பூசி நபிகளாரின் வழியில் மூன்று பேரிச்சங்கனிகள் சுவைத்து அஜ்மானின் ஷேக் ஜாயித் பெரிய பள்ளிக்கு புறப்பட்டோம் அப்போது மணி காலை 5.15. வாகனத்தில் தக்பீர் என்னும் இறைத்துதி ரேடியோவில் ஒலிப்பதில் லயித்து பள்ளி ஏகினோம்.
அந்த ஐந்து முப்பதுக்கெல்லாம் பள்ளியின் பிருமாண்ட பார்க்கிங் நிறைந்திட பல சுற்று சுற்றி ஒரு வழியாய் ப்ளாட்பாரத்தின் மேலே ஏற்றி வண்டியை இருத்தினேன் சென்ற வருடம் போல. உள்பள்ளி நிறைந்திட மிக அதிக மக்கட்திரள், எங்கு பார்த்தாலும் பள்ளியைச்சுற்றி ராணுவ உடைகள், கருப்பு உடைகள், போலிஸ் உடைகள் என பல வண்ணத்தில் ரோந்து அதிகாரிகள், சிப்பாய்கள், காவலர்கள் அவர்கள் கைகளில் விதவிதமான துப்பாக்கிகள் என பாதுகாப்பு அரண்கள் சூழ்ந்திருந்தது மனதின் ஓரத்தில் பயத்தை உண்டாக்காமல் இல்லை, சென்ற வருடங்களில் இப்படி இந்த அளவுகு பாதுகாப்பு இல்லை ஒருவேளை சமீபத்திய சவுதி நிகழ்வுகளினால் இப்போது கூடுதலாக இருக்கலாம். அவர்களை கடந்து வெளிப்பள்ளியின் முன்னே உள்ள இடங்களில் அமர இடம் தேடிய போது ஒரு வெள்ளையான சூடானி கனிவுடன் அவர்தம் முசல்லாவெனும் தொழுகை இருக்கையை எமக்காக விரித்து இன்முகத்தோடு அமரப்பணித்தார். பரஸ்பரம் முகம் மலர்ந்து அமர என் இருமருங்கிலும் நல்ல பணக்கார அரபிகள் உட்கார்தார்கள் அவர்களும் நானும் சிரித்துக்கொண்டோம். ஆயினும் வாகன நிறுத்தம் மிகப்பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் பயமாகவே இருந்தது, சூழ்நிலை அப்படி என்ன செய்ய அமைதி மார்க்கத்தை குழைத்து உலகையே இம்சை செய்யும் அரக்கர்களின் குறுமதியையும், புரிந்துணர்வின் பழுதையும், உலக அரசியலையும் நினைத்து மனதால் வருந்தினேன்.
ஒரு வழியாக இமாம் பன்னிரெண்டு தக்பீருடன் பெருநாள் தொழுகையை முடித்தார். பிறகு குத்பா எனும் பிரசங்கம் தொடங்கி நிறைவடைய அறிந்தவர் அறியாதவர் என எல்லோரும் சலாம் உரைத்து நெஞ்சொடு நெஞ்சாக நீ என் சகோதரனடா.. என்று அணைத்துக்கொண்டார்கள் நானும் அந்த சூடானி, அரபிகளை இறுக பற்றிப் பிரிந்தேன். அக்கம் பக்கம் பார்த்தால் டெக்னாலஜியின் விளைவால் ஒருவரோடு ஒருவர் ஆரத்தழுவுவதில் இல்லாத ஆர்வத்தை ஆண்ராய்டு போனில் செல்பி எடுப்பதிலேயே காட்டிக்கொண்டிருந்தனர். குடும்பத்தோடு வந்தவரக்ள் பிள்ளைகளோடு குதூகலித்தனர், என் குடும்பத்தோடு இந்த பள்ளிக்கு தான் அஜ்மான் வந்ததிலிருந்து வந்த நினைவுகள் சூழ்ந்திருந்த்து, தற்போது அவர்கள் ஊரில்.
பிறகு நாங்களும் சில நிழற்படம் நினைவுக்காய் எடுத்து பள்ளிவிட்டகன்றோம்.
பிறகு காலைப் பசியாறி, மதியத்திற்கான பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரியாணி செய்வதில் என் தம்பி காலித் வல்லவர்.
பிறகு காலைப் பசியாறி, மதியத்திற்கான பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரியாணி செய்வதில் என் தம்பி காலித் வல்லவர்.
நாளை ஊரில் பெருநாள் என்பதால் அது தான் கொண்டாட்டம், குதூகலம். அது பற்றி நாளை பேசுவோம்.
என் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் ஆலிங்கனமும் அகமலர்ந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்களும்.
அன்போடு,
ஜா.முஹையத்தீன் பாட்ஷா.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக