எம். ஜே.முஹம்மது இக்பால் அவர்களுடன் நான் (2006-ல் எடுத்த படம்) |
இன்று ஆகஸ்ட் 15,
இந்திய விடுதலை நாள்..!
நாடெங்கும் சிறப்பான கொண்டாட்டம்… மகிழ்ச்சி.. குதூகலம்... இப்படியான ஒரு நாளில் தான் வாழும் போதே சூஃபியின் இலக்கணங்களுக்கு ஒப்ப ஒப்பற்ற வாழ்வை நடத்திவந்த மேன்மைக்குரிய எங்கள் அஜ்ஜி அத்தா.. ஜமால் முஹம்மது – தாவுத் பேகம் தம்பதியினருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் மட்டட்ற்ற மகிழ்ச்சி. பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய குடும்பங்களின் வழக்கப்படி பிறந்தவுடன் அழைக்க ஒரு பெயர் உடன் வைத்துவிடுவர். எல்லா குழந்தைகளும் முஹம்மதிய அம்சத்தில் (அதாவது இறைவனின் அருளாய் ) பிறப்பதினால் ஆண்குழந்தை என்றால் முஹம்மது என்றும், பெண்குழந்தைக்கு முஹம்மதா அல்லது மஹ்மூதா என்றும் வைத்து ஒரு பெயர் வைப்பது மரபு வழக்கம் அது போலவே இக்குழந்தைக்கும் ஆசையாசையாய் உடன் வைக்கப்பட்ட பெயர் புகழோங்கும் ராஜாதி ராஜா எனப்பொருள் படும் முஹம்மது ஷாஹின்ஷா என்பது தான்.
பின் எப்போதுமாக அழைக்க ஒரு அழகுப்பெயர் சூட்டவேண்டுமே.. அது என்ன பெயர்..? அன்புக்குழந்தை பிறந்தநாள் இந்தியாவின் விடுதலை நன்னாள் பெயரை ஆருயிர் தந்தை சூஃபி ஜமால் முஹம்மது அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள் அப்பெயரை அன்றைய காலத்தில் எங்கள் வழுத்தூரில் கண்ணியமான இமாம் பெருந்தகையாக இருந்த சின்னத்தெரு முஹம்மது லத்தீப் பாய் அவர்களிடம் சென்று சொல்லி வாழ்த்து பெற்றுக்கொண்டு வருகிறார்கள் பிறகு குடும்பத்தில் மூத்த உறுப்பினரும்… ஆழிய ஆன்மீக ஞானம் பெற்ற பெண்மணியும், எல்லோரும் மிக மதிக்கக்கூடியவருமான ஓசாடி புவ்வா என்று அழைக்கப்பட்ட அவரகளின் நண்ணியம்மா அவர்களிடமும் சிறுதாளில் எழுதிவந்த அப்பெயரை காட்டி ஆசியும், வாழ்த்தும் பெறுகிறார்கள். எல்லோருக்கும் மிகுந்த பூரிப்பு.. ஏனெனில் அந்த பெயருக்கு அத்தனைச் சிறப்பு.
தந்தையார் சூஃபி ஜமால் முஹம்மது அவர்களுடன் மாண்பாளர் முஹம்மது இக்பால் |
அப்பெயர் விடுதலை வேள்வியை வீறுகொண்டு வளர்த்த பெயர்.. தூங்கிக்கிடந்த இந்திய மக்களை தட்டி எழுப்பி சுய உணர்வூட்டிய பெயர்.. இஸ்லாமிய ஆன்மீகத்தில் இவரது கருத்துக்கள் எல்லார் உள்ளத்திலும் மிக தாக்கம் ஏற்படுத்தியது.. இவர் இனம், மதம் கடந்து பேசப்பட்டார்.. இவர் ஒரு மகாகவி.. இவரின் கவிதை இன்பத்தில் இளைஞர்களும், அறிவுஜீவிகளும் பேதங்கள் கடந்து இவரில் இலயித்து கிடந்தனர்.
இவர் இந்திய மண்ணை நேசித்து இயற்றிய தேசியகீதமே எல்லார் இதயத்திலும் உணர்வோடும் உயிரோடும் பதிந்த காலங்கள் அன்று.. அந்த “சாரே ஜஹான்ஸே அச்சா.. ஹிந்துஸ்தான் ஹமாரா” எழுதிய உலகப்புகழ் மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்..) அவர்களின் கவிமயக்கமும், கருத்து கிரக்கமும் எங்கள் ஆருயிர் அஜ்ஜி அத்தா சூஃபி ஜமால் முஹம்மது அவர்களுக்கும் இருந்தது. தான் மிகவும் விரும்பிய ஒரு மேதையின் பெயரை.. மார்க்க அறிஞரின் பெயரை.. தேசபக்தரின் பெயரை.. ஒப்பற்ற சூஃபியின் பெயரை.. ஆழ்ந்த சிந்தனையாளரின் பெயரை.. உலகப்புகழ் பெற்ற நல்லான்மாவின் பெயரை தன் பிரியப்பிள்ளைக்கு சூட்ட விரும்பினார். அதனால் பெற்ற தன் பிள்ளைக்கு “முஹம்மது இக்பால்” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
அந்த சிறப்பான குழந்தை இன்று தன் தாய் தந்தையின் ஆசிகள் போலவே பல சிறப்புக்களை அடைந்து மிளிர்கிறது. தனது வாழ்வியல் பயணத்தில் எண்ணற்ற குடும்பங்கள் சிறக்க உதவி இன்று அவர்கள் மனமாற வாழ்த்துகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
இன்று பிறந்தநாள் காணும் அச்சிறப்பான மனிதர், எங்கள் அன்பிற்குரிய அறிஞர் ஜனாப். முஹம்மது இக்பால் (MD @ TOSHIBA Elevator Middle East (L.L.C.) ) அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
எல்லா நலவளங்களும், குறைவிலாது பெற்று குடும்பம்.. குழந்தைகள் சிறந்து மனமகிழ்ச்சியுடன் நீண்ட சிறப்பான வாழ்வை வாழ எல்லாம் வல்ல பேரிறையை.. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் வாழ்த்துக்களோடு வேண்டுகிறேன்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக