24 செப்டம்பர் 2018

கேள்விக்கு சிரித்த கவிதை!


வல்லரசுகளின் பற்றியெரியும்
ஈவிரக்கமில்லாத 
வல்லாதிக்க வெறியிற்காய்
எண்ணிச் சோர்வுறும்
எண்கள் அளவிற்கு
கணக்கற்ற மென்பட்டு ரோஜாக்கள்
ஆயுதக்கரங்களால்
கொடூரமாக பறிக்கப்பட்டு
சிதைக்கப்படுகிறது

ரோஜாக்களை சுமந்து
ஆனந்தம் பாடி நின்ற
அன்னை தந்தை
செடிகள் எல்லாம்
வேரோடு பிடுங்கி
துவம்சம் செய்யப்படுகிறது

ரணங்களின் குருதிபூசி நிற்கும்
இந்த பட்டாம்பூச்சியை
நினைக்கும் போதே
நெஞ்சம் நனைகிறது

என் அன்பின்
சிரியா மழலையே
அம்மையப்பன் இல்லாதிருந்தும்
அவர்பற்றிய கேள்விக்கு
சிரித்த கவிதையே

எந்த கூர் ஈட்டியும்
இத்தனை வாதை
செய்யாதடி

நீ வீசிய
களங்கமற்ற ஏக்கப்பார்வையும்

நீ சிதறிய அர்த்தமறியா
பூடக புன்சிரிப்பும்

செய்த வாதை போல..

இருந்தும் உன்னை
கையாளாகாத நாங்கள்
ஒரு காணொளி அளவில்
ஒரு "ப்ச்"சிட்டு கடந்து விடுகிறோமே..

இது தான் காலக்கொடுமையோ.!

***

தற்போது அருமை அண்ணன் Hameed Sac அவர்கள் இந்த காணொளியை பகிர.. என் நெஞ்சம் பேசிய தவிப்பின் மொழிகள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
Mohaideen Batcha, [24.09.18 16:14]

கருத்துகள் இல்லை: