23 செப்டம்பர் 2018

சிதிலச் சிறகு!

காலம் பூராவும்
பேருண்மையின் பேரழகை
மறைத்து வைத்தீர்கள்

கருத்தை சிதைத்து
திரித்து பிரித்து
சூது செய்தீர்கள்

முரட்டு யானைப் பாதங்களில்
மென்மையானரோஜாக்கள்
இரக்கமின்றி சிக்கி சீரழிய
நீங்களோ அயோக்கிய மனநிலையோடு
மதயானைக் கூட்டத்தின்
முதுகினில் சவாரி செய்து மகிழ்ந்தீர்கள்

ஆயினும்
எங்கெளுக்கென
எறும்பின் கூட்டங்களும்
சிட்டுக்களின் இனங்களும்
மானின் குட்டிகளும்
பாசத்தோடு பலநூறு தலைமுறையாய்
ஒத்திசைந்து ஒத்தாசை
செய்து கொண்டுள்ளது

துரோகத்தின் வாடைவீசும்
இரத்தம் தோய்ந்த மண்ணை
உண்மையை நாடி வந்து
ஆராய்வோருக்காய்
சில காட்டு புற்றுகளில்
சில பள்ளத்தாக்குகளில்
சில மலைக்குகைளில்
மறைத்து வைத்துள்ளது

நிலம் காணாத
கொடூரத்தின் கோர தாண்டவத்தை
பிரபஞ்ச பேரேட்டில்
நேர்மையான எழுத்துக்கள்
ஈரம் காயாமல் பொறித்து வைக்க
சாட்சி சொல்பவையாயின

அதை அழித்தொழிக்கவே
 உங்கள் கடலொத்த ஆற்றலை
கணநேரமும் திரட்டி
பூதங்களையும் துணைக்கழைத்து
யுகாதி யுகங்களாக ராட்சத
சிரத்தை எடுத்து வருகின்றீர்

நீங்கள் எவ்வளவு முயன்றிடினும்
வரலாறுகள் பொதிந்து வைத்திருக்கும்
தியாக சிதிலங்களை முற்றும்
அழித்திடல் இயன்றிடும் ஒன்றா?

ஒருநாள்
எங்கெங்கோ சிதறிக்கிடக்கும்
அணுக்கள் கூடி புதிய பேரண்டம் சமைக்கும்

அப்போது
அழுக்குகள் இழுக்குகள் எல்லாம்
கழுவி சுத்தம் செய்யப்படும்

இழிவை சுமக்க வந்தவைகள்
அழுக்குகளை சுமந்தே
துர்நாற்றத்தோடு வெளியேறும்

பின்னர்
சூதுகள் தோற்க
வாய்மைச் சிறகு விரியும்

புதிய பரிதியின் பேரொளி எதிரொளிக்க
மனங்கவர்ந்த செந்நிற ரோஜாக்கள்
கம்பீரமாய் மலர்ந்து மதுசொறிந்தாடும்.

வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

22-09-2018 11:47 pm

கருத்துகள் இல்லை: