இறைவனின் பெருங்கிருபை கொண்டு
நிம்மதி அடைந்தேன்.
சுவாசம் இலகுவாகி விட்டது.
நாடிநரம்புகளின் இறுக்கம் களைந்து
தளர்வாகி சீரானது.
குறுகுறுவென இருந்தநிலை விடுத்து
வழக்கம் போல ஆகினேன்.
அவன் என் சுமைகளை
என்னிலிருந்து இறக்கிவிட்டான்.
அமைதியானேன்.
அமைதியான கணங்கள்
அற்புதம் மிக்கவை
அதன் மதிப்பை
அமைதி இழந்த கணங்கள் தான் உணர்த்துகின்றன.
ஆதலால் எதார்த்தமாகவே
நம்மோடு இருக்கும்அமைதியை
ஒரு தேன்சொட்டு
நாவில் படும் சனம்
மனம் இழப்பதைப்போல;
சுவையான தேனீரில்
கணம் நம்மை மறப்பது போல;
அலாதி பிரியமானவளோடு
கலவி களிக்கும்நேரம்
விழிதிறந்தும் நிலைமறப்பதைப்போல;
உணர்ந்து மகிழ்ந்து லயிப்போம்.
சலனமற்ற நீரோடை
மனதில் சலசலக்கும்
அமைதி கிடைக்கப்பெறுவது ஓர் பேறு
அது இறைவனின் பெரும் வரம்
நமக்குள் எப்போதும்
அமைதி எனும் சலாம் சூழட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
என்பது அது தான்.
எனக்கு மட்டுமல்ல
உன்னிலும் அமைதி நிலவட்டும்
என்பதே பரோபகார பதில் மொழி
வ அலைக்கும் சலாம்.
அதை எதிர்படும்
யாரைப்பார்த்தும்
எத்தருணத்திலும்
சொல்லவைத்த
வள்ளல் நபிக்கும்
இந்நேரத்தில் எந்தன்
பணிவின் சலாம்.
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு
அலைக்க யா ஸய்யிதி யா ரசூலல்லாஹ்.
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
23-06-2020 10:27pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக