07 அக்டோபர் 2017

எங்கே போகிறது முஸ்லிம் லீக்?

முஸ்லிம் லீக் தஞ்சை,வடக்கு மாவட்ட செயலாளர் லயன் பசீர் அஹமது நீக்கம், தலைவர் பேராசிரியர் ஆலோசனைப்படி நடந்ததால் நடவடிக்கையா?

அடிமட்ட தொண்டனின் மனக்குமுறல்…
23-08-2017 தலைவரை ஊர் நிர்வாகிகளோடு லயன் பசீர் சந்தித்த போது

எனது பெருமிதம்:
நான் ஒரு முஸ்லிம் லீக்காரன் எனபது சொல்லித்தெரியவேண்டியதில்லை, முஸ்லீம் லீக் என்பது பாரம்பரிய பேரியக்கம், அது தாய்ச்சபை, காயிதே மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற கண்ணியவான்கள் கட்டிக்காத்த இயக்கம் என்று அதில் இருப்பதையே பெரும் பேறாக எண்ணி பெருமிதமாக இருந்துவந்தவன். முஸ்லிம் என்றால் அவர்கள் அனைவருமே இருக்க வேண்டிய இயக்கம் இது தானே மற்ற இயக்கங்களில் இருக்கும் முஸ்லிம்களுக்கு அந்த உணர்வு இல்லையே என்று பச்சாதாபமும் கூட எப்போதும் கொள்பவன். அதனாலேயே இந்த இயக்கத்தில் இருப்பது குறித்து சுயசெருக்கும் இறுமாப்பும் கூட மனதில் இருக்கும்.
இப்போதைய நிலைமை:
ஆனால் சமீபமாக நடக்கும் பல விசயங்களை கூர்ந்து கவனிக்க அதிலும் தஞ்சை வடக்கு மாவட்ட முஸ்லிம் லீக்கில் நடப்பதையும் அதற்கு தலைமை நிலைய நிர்வாகிகளின் பின்வினைகளையும் உற்று நோக்க, இயக்கத்தின் மீது அல்ல..மாறாக தற்போதைய இயக்கத்தின் நிர்வாகிகள் மீது வைத்திருந்த நம்பிக்கைகள், நல்லெண்ணங்கள் எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது, அடிமட்ட தொண்டனாகிய எனது மனதில் ஆயிரம் கேள்விகள் அலையலையாய் எழுந்து வருகிறது. அதனால் தான் இத்தனை நாளாய் மனதில் வைத்திருந்த கருத்துக்களை இன்று திறந்து எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
தற்போது தமிழகத்தில் புதிதுபுதிதாக தோன்றிய இயக்கங்கள் இஸ்லாத்தின் பெயரால் இளைஞர்களை, பெண்களை, பொது மக்களை, மூளைச்சலவை செய்து முரணான வழியில் செலுத்துகிறார்கள் ஆனால் முஸ்லிம் லீக் என்பது அவைகளுக்கு மாற்றான சீரிய சமுதாய பேரியக்கம். அதன் தலைவர்களும், அவர்களின் செயல்பாடுகளும் காயிதே மில்லத் போன்ற சாலச்சிறந்தவர்களை அடியொற்றி இருக்கும் என்று இருந்த நிலையில் இங்கும் மாறுதல் வரத்தொடங்கிவிட்டதோ.. பரிசுத்தமெல்லாம் பறந்தோடிவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. இந்த சொற்களை மனம் மிக வெதும்பியே எழுதுகிறேன். இதை இயக்க நிர்வாகிகள் தங்களின் நெஞ்சில் கை வைத்து அல்லா ரசூலை முன்னோக்கி உண்மையை சொல்வார்களானால் கண்டிப்பாக ஒத்துக்கொண்டே ஆக வேண்டி வரும். ஏனென்றால் இது தான் இப்போதிருக்கும் உண்மை நிலைமை.
மணிச்சுடரில் உண்மைக்கு மாறான செய்தியா?:
சரி, விசயத்திற்கு வருகிறேன்நாளது 4-10-2017 மணிச்சுடர் பத்திரிக்கை பார்த்தேன், அதில் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூடியதையும் அதில் தீர்மானங்கள் இயற்றி இது நாள்வரை தஞ்சை வடக்கு மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளராக இருந்த லைன். பசீர் அஹமது அவர்களை நீக்கிவிட்டு இணை செயலாளராக இருந்த அருமை நண்பர் ராஜாஜி காசிம் அவர்களை செயலாளராக நியமித்திருக்கிறார்கள். புதிய செயலாளருக்கு வாழ்த்தும், மகிழ்ச்சியும். ஆனால் இந்த திடீர் பொதுக்கூட்டமே லைன் பசீர் அஹமது அவர்களை நீக்கவும் புதிய நியமனத்தை செய்யவும் தான் எனும் போது அதை எந்த முறையில் செய்திருக்கிறார்கள், அதன் பின்னணி என்ன என்று தான் இப்பொது சொல்ல விழைகிறேன்.
நடந்தது ஒன்று பத்திரிக்கை செய்தி ஒன்று:
இந்த கட்டூரை லயன். பசீர் என்ற தனிமனிதரின் பதவியை ரத்து செய்ததை எதிர்த்தும், அவருக்கு வக்காலத்து வாங்கியும் எழுதப்பட்டது அல்ல. மாறாக, ஒரு சமுதாய பேரியக்கத்தின் செயல்பாடுகள் சிலரால் உண்மைக்கு புறம்பாக, செய்யாத செயல்களை சுட்டிக்காட்டி தனிப்பட்ட சொந்த விருப்பு வெறுப்பிற்காக எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்ற மனபதைப்பின் வெளியாக்கம் தான். மேலும் மணிச்சுடரில் தீர்மானம்-2ல் அவரை நீக்க சொல்லப்பட்ட காரணங்கள் துளியளவும் கூட உண்மை இல்லாதவை அதில் முழுக்க முழுக்க வஞ்சகமும், பொய்யுமே நிரம்பி இருப்பதை பார்த்து மனம் வேதனையில் ஆழ்ந்தது, இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
ஏனெனில், லைன்.பசீர் அஹமது அவர்களின் மகன் யாசர் திருமணத்தின் போது நடந்த நிகழ்வுகளில் நான் உடன் இருந்தவன், நடந்த எல்லா விசயங்களும் எனக்கும் தெரியும் மேலும் தீர்மானத்தில் குற்றமாக சொல்லப்பட்ட அத்தனைக்கும் உண்மை நிலவரம் வேறொன்றிருக்க அதையெல்லாம் அதில் லாவகமாக மறைத்து அவரை நீக்க எதை எதை சொன்னால் அவர்களுக்கு சரியாக இருக்கும் என்று அவர்கள் கூடி பேசிக்கொண்டு வெளியிட நினைத்திருக்கிறார்களோ அதையே அவர்கள் தீர்மானமாக போட்டு, மணிச்சுடரிலும் பிரசுரித்திருக்கிறார்கள். மணிச்சுடர் என்ற ஒப்பற்ற சமுதாய பத்திரிக்கையை இப்படி நம்பகமில்லாத முழு புரட்டுக்கு பயன்படுத்தியதை நினைக்கையில் அவ்வளவு மோசமான காலகட்டத்தில் நாம் இருப்பதை உணரமுடிகிறது. மேலும் அவ்வளவு மோசமானவர்களால் இயக்கம் சூழப்பட்டிருக்கிறதோ என்று மனத்தவிப்பு உருவாகிறது.
தீர்மானம் -2 எனும் புரட்டு:
தீர்மானம் -2ல் முதன்மை குற்றச்சாட்டாக அதில் குறிப்பிடப்படப்பட்டிருப்பது மஹல்லா ஜமாத் மாண்பை முஸ்லிம் லீக் காத்திடும் வகையில் அதை பிரச்சாரம் செய்து வரும் வேளையில் ஜானாப். லைன்.பசீர் அவர்கள் அந்த மாண்புகளை மதிக்கவில்லை என்றும், வக்பு வாரியம், காவல் நிலையம், உயர்நீதிமன்றம் என்று பிரச்சனைகள் செய்கிறார் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள் மேற்படி இந்த செயல்பாடுகளை பசீர் செய்ததாக ஜாமத் நிர்வாகிகளும், பிரைமரி நிர்வாகிகளும் தலைமை நிலையத்திற்கு தகவல் கொடுத்தன் அடிப்படையில் மு.லீக்கின் மூத்த தலைவர் குலாம் மைதீன் ஹாஜியார், சிம்லா நஜீப் அவர்கள் மற்றும் ஆடுதுறை ஷாஜஹான் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்றும் இதற்கு எந்த வகையிலும் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளராக இருந்த லயன் பசீர் அவர்கள் ஒத்துழைப்பு அளிக்காத்தால் மஹல்லா ஜமாத் கட்டுப்பாட்டை மீறி மகனுக்கு திருமணம் நட்த்தியதால் அவரை நீக்கி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், இப்போது நான் எனக்கு தெரிந்த உண்மைகளை சபைக்கு வைக்கிறேன்.. அப்போது எனது ஆதங்கம் சரியா இல்லை பிழையா என்பது உங்கள் நெஞ்சுக்கே விளங்கும்.
வழுத்தூரில் நடப்பது ஜமாத் நிர்வாகத்துக்குள் பிரச்சனை, ஜமாத் எதிர்ப்பு அல்ல:
வீட்டில் ஆரம்பித்து ஊர், மாநிலம், தேசம் என்றுபிரச்சனை இல்லாத அல்லது கருத்து முரண்பாடுகள் இல்லாத இடம் இருக்கிறதா சொல்லுங்கள். அது போல ஜாமாத்தில் பிரச்சனை இருப்பது உண்மை, அது உள்ளூர் பிரச்சனை இது ஜமாத்தை எதிர்த்து அல்ல, நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஜமாத்திற்கு உள்ளேயே நடக்கும் பிரச்சனை. இதற்கு நதி மூலம் ரிசி மூலம் சொல்ல வேண்டுமானால் வழுத்தூரில் நடக்கும் பாலிய முஸ்லிம் பள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பிறகு ஊரில் இருக்கும் நிர்வாகப்பிரச்சனையை சொல்ல வேண்டும். இதில் அதிமுக்கிய நிர்வாக பிரச்சனை என்பது 40 வருடமாக தலைவராக இருக்கும் தலைவரின் எதேச்சை அதிகாரத்தையும் மற்ற நிர்வாக சீர்கேடுகளையும் பற்றியது தான். அதில் தான் ஊர் ஜாமத் நிர்வாகிகளே இரண்டு அணியாக பிரிந்து நிற்கிறார்கள்.
குறிப்பாக ஊர் ஜமாத்தில் செயலாளராக இருந்த ஜனாப் தாஜுத்தீன் இறந்து போக துணை செயலாளராக இருக்கும் ஜனாப்.ஒ.பி. பசீர் அவர்கள் தான் முறைப்படி தற்காலிகமாக செயலாளரின் பணியை செய்ய வேண்டும் ஆனால் ஊர் தலைவர் ஜமாத் நிர்வாகிகளை பொருட்படுத்தாது தனக்கு சாதகமான இருவரை செயலாளராக தன்னிச்சையாக நியமித்து தனக்கு வேண்டியதை செய்ய துவங்கி, துணை செயலாளருக்கு ஒரு பொறுப்பும் இல்லாதவாறு ஆக்க, தலைவரின் இந்த போக்கை ஜாமாத் நிர்வாகிகள் மொத்தம் இருபத்து இரண்டு (22) பேர்களில் பதினைந்து (15) பேர்கள் ஆதரிக்கவில்லை.
ஊர் தலைவரின் இந்த தன்னிச்சை நியமனத்தை எதிர்த்து தான் துணைச்செயலாளர் ஓ.பி. பசீர் அவர்கள் வழக்கு மன்றம் சென்றாரே தவிர லைன்.பசீர் அவர்கள் வழக்கு மன்றம் செல்லவில்லை. நிற்க, ஊர் தலைவரும் ஓ.பி. பசீர் அவர்களை எதிர்த்து தான் வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார். ஆக, இதில் சொல்லப்பட்டவாறு நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் லைன் பசீர் அவர்கள் ஜாமாத்தை எதிர்த்து செல்லவில்லை அப்படி இருந்தால் ஏதேனும் ஒரு ஆவணத்தை குற்றம் சாட்டுபவர்கள் எடுத்து வைக்கட்டும். இப்படி இருக்கும் போது அவர் மஹல்லா ஜமாத் மாண்பை மதிக்க தவறினார் என்று சொல்லுவது எவ்வாறு நியாயம் ஆகும்.
உள்ளூர் பிரச்சனையை வைத்துஅரசியலா?:
வீடுகள் தோறும் புருசன் பெண்டாட்டி சண்டை என்பது சகஜமான ஒன்று ஆனால் அதை காரணம் காட்டி ஒருவரை ஒருவர் எதிர்த்ததாக குற்றம் சாட்டி அதை பெரிதுபடுத்தி இருவரை பிரித்து விவாகரத்து செய்ய வைப்பது தான் பொருத்தமான முடிவாக இருக்குமா? அந்த சிறு சண்டைக்கு குடும்பத்தின் மாண்பை குளைத்த செயல் என்று அர்த்தம் எடுத்துக்கொள்ள முடியுமா? குடும்பச்சண்டை இல்லாத வீடு இருக்கிறதா..? ஜாமாத் நிர்வாகத்தில் இருப்பவர்கள் அவர்களுக்குள் ஒரு பிரச்சனை என்று வரும் போது அவர் நீதி என்று கருதும் பக்கத்தின்பால் நிற்பது ஜமாத் ஒற்றுமையை குளைப்பதாகுமா? அப்படி என்றால் நம்ரூதையும், ஹாமானையும், சத்தாதையும் நபிமார்கள் எதிர்த்ததை குர்ஆன் சிலாகித்து சொல்லுவதை, அபூஜஹலை நமது நாயகம் எதிர்த்ததை நாம் உணர்வோடு மேடைதோறும் பேசிகொண்டிருப்பதை, கர்பலாவில் இமாம் ஹுஸைன் பாதகன் எஜீதை எதிர்த்து போரிட்டதை எல்லாம் எப்படி எடுத்துக்கொள்வதாம். தவறு செய்யும் தலைமையை குறித்து கருத்து முரண் ஏற்பட்டிருப்பது உள்ளூர் பிரச்சனை, இதை கட்சி பிரச்சனையாக்கி அதை மஹல்லா ஜமாத் ஒற்றுமை என்ற ஆயுதத்தை உள்நுழைத்து மிக கீழ்தரமான அரசியல் செய்து, குற்றம் சுமத்துவது என்பது எக்காலமும் ஏற்கமுடியாதது. இது இருசக்கர ஓட்டிகள் லைசென்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் ஹெல்மெட் போட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கும் போதெல்லாம் சில போலீசார் இதை சாக்காக வைத்து வசூலிப்பதாக சொல்லப்படுதைவிட கீழ்தரமாகவே எண்ணத்தோன்றுகிறது.
சமரசம் செய்ய வந்தவர்கள் செய்தது சமரசமா?:
ஆடுதுறை ஷாஜஹான் வருகை: சமரசம்??? (1)
அடுத்ததாக அதில் சொல்லப்பட்டிருப்பது சமரசம் பேச ஆடுதுறை ஷாஜஹான் வந்தார் பிறகு மூத்த தலைவர் குலாம் மைதீன் ஹாஜியார் மற்றும் சிம்லா நஜீப் அவர்கள் சமரசம் பேச வந்தார்கள் இவற்றிக்கு பசீர் அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால், உண்மையில் நான் உட்பட ஊரின் முக்கிய நிர்வாகிகள் ஜனாப். லயன் பசீர் அவர்களோடு தலைவர் பேராசிரியர் அவர்களை 23-08-2017 அன்று காலை சந்தித்து வந்தோம் (அதன் விவரங்களை தனியாக கீழே தருகிறேன், ஏனெனில் திருமணமே தலைவர் பேராசிரியர் ஆலோசனை கூறிய பிரகாரம் தான் நடந்தது) அன்று மாலை தான் அருமை அண்ணன் ஆடுதுறை ஷாஜஹான் அவர்கள் சமரசம் பேச வந்தார் அன்று இரவு மணமகன் திருச்சி ஏற்போர்ட்டிற்கு வருவதால் ஜனாப். லயன் பசீர் அவர்கள் மற்ற ஊர் நிர்வாகிகளிடம் இன்று ஆடுதுறை ஷாஜஹான் அவர்கள் சமரசம் பேச வருகிறார் நான் எனது மகனை அழைக்க திருச்சி விமானநிலையம் செல்வதால் நமது தரப்பினரை அழைத்தால் நீங்கள் கலந்து கொண்டு பேசிக்கொள்ளுங்கள் அதற்கு நான் உடன்படுகிறேன் என்று கூறி சென்றார்.
அது போலவே அருமை அண்ணன் ஆடுதுறை ஷாஜஹான் அவர்கள் மாலை வழுத்தூருக்கு வந்தார், வந்தவர் நேராக ஊர் தலைவர் கே.இ.பி அலி இல்லம் சென்றார் அங்கு லயன் பசீரை கட்சியில் ஆதிமுதலே மாவட்ட செயலாளராக ஏற்காதவர்களும், ஆடுதுறை ஷாஜஹான் அண்ணனுக்கு மிக அணுக்கமானவர்களாக பசீருக்கு எதிராக செயல்படுவர்களும், ஊர் பிரச்சனையில் தலைவர் தரப்பு ஆதரவாளர்களும் உடன் இருந்தார்கள். இருப்பினும் அவர்களுக்குள் எல்லாம் பேசி தீர்த்த பிறகாவது இது ஜாமாத்தை ஒருங்கிணைக்கும் சமரச முயற்சி என்பதால் அடுத்த தரப்பினரான இணை செயலாளரும் ஜமாத் நிர்வாகிகளும் சமரசம் செய்ய வந்தவர்கள் அழைப்பார்கள் என்று நெடுநேரம் காத்திருந்தார்கள் ஆனால் சமரசம் பேச வந்த அவர்கள் கடைசிவரை அடுத்த தரப்பினரை அழைக்கவே இல்லை என்பதும், ஒரு ஒப்புக்கு கூட ஒரு சிறு முகமன் பேச்சுகூட பேசவே இல்லை என்பதும் தான் பகீரத உண்மையாக இருக்கும் போது சமாதானம் செய்ய வந்தவர்கள் என்று பேசப்படும் இவர்கள் அந்த சமரச முயற்சியில் சிறிதும் இறங்காமல் ஒருசார்பு பிரிவினரிடம் மட்டும் கூடி பேசிவிட்டு பிறகு களைந்து காரில் ஏறி சென்றுவிட்டு ஜனாப். லயன் பசீர் அவர்கள் சமாதான பேச்சுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று அண்டப்புழுகை அவிழ்த்துவிடுவது நியாயமா.. தர்மமா.. உண்மையா.. இது ஆண்டவனுக்கு அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்.
குலாம் மைதீன் ஹாஜியார் சிம்லா நஜீப் வருகை:
சமரசம்??? (2)
அடுத்து திருமணத்திற்கு முதல்நாள் அன்று குலாம் மைதீன் ஹாஜியார் அவர்களும், சிம்லா நஜீப் அவர்களும் மீண்டும் இருதரப்பினரையும் பேசி மஹல்லா ஜமாத்தை இணைக்கவும், திருமணத்தை ஒரே ஜமாத்தாக இருந்து நடத்துவதற்கும் சமரசம் பேசி சுமூகமாக்க வந்திருப்பதாக சொல்லி முதலில் தலைவர் கே.இ.பி அலி வீட்டிற்கு சென்றனர், பிறகு நெடுநேரம் கழித்து லயன் பசீர் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ஜமாத்தின் இணை செயலாளர் மற்றும் மற்ற நிர்வாகிகளும் இருந்தனர். ஜனாப். லயன் பசீர் அவர்கள் ஊரின் துணைத்தலைவராக இருந்தும் தனது எல்லா நிலைப்பாட்டையும், தன்மானத்தையும் தூக்கிவைத்துவிட்டு தன்னை சிறுமைபடுத்த தலைவர் அபராதம் போடுவார் என்று தெரிந்தும் அதே தலைமைக்கு கட்டுப்பட்டு ஊரின் பழைய ரிஜிஸ்டர் புத்தகத்தில் திருமணம் செய்ய உடன்பட்டு ஒத்துக்கொண்டார்.
இரு தரப்பிற்கும் சமரசம் செய்ய வந்தவர்கள் அதை எழுத்துவடிவில் பெற்றுக்கொண்டு தலைவர் இல்லத்திற்கு மீண்டும் சென்றனர், சென்றவர்கள் திரும்ப வரவே இல்லை, பிறகு தான் ஜமாத் தலைவர் கே.இ.பி அலி அவர்கள் லயன் பசீர் மற்றும் எதிர் தரப்பு நிர்வாகிகளிடம் பெற்று சென்ற எழுத்துப்பூர்வ ஒப்பந்தந்தத்தை துளியும் ஏற்கவில்லை என்பதும், ரிஜிஸ்டர் புத்தகமும் கொடுக்க விரும்பவில்லை என்பதும், சமரசவாதிகளை ஊரின் தலைவர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை என்ற தகவலும் தெரியவந்தது. இது அங்கிருந்த சில இதயமுள்ளவர்கள் மூலம் தெரியவந்த்தே தவிர சமரசம் செய்ய வந்தவர்கள் மூலமாக வரவில்லை.
ஆக, லயன் பசீர் அவர்களிடம் பேசிவிட்டு தலைவரிடம் பேச சென்றவர்கள் அதை ஜமாத் தலைவர் ஏற்றாரா இல்லையா அங்கு என்ன பேசப்பட்ட்து எதற்காக ஜமாத் தலைவர் ஊரின் திருமண ரிஜிஸ்டர் கொடுக்க மறுக்கிறார், லயன் பசீர் அவர்கள் அவர்கள் இத்தனை கீழிறங்கி வந்தும் ஏன் ஊர் ஜமாத் தலைவர் தரப்பு பிடிவாதமாக ஏற்கவில்லை போன்ற எந்த ஒரு விளக்கத்தையும் லயன் பசீரிடம் மீண்டும் வந்து சொல்ல சமரசம் பேச வந்தவர்கள் வரவில்லை. அப்படியே போய்விட்டார்கள். இப்படி இருக்கும் போது பசீர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் கனத்த இதயத்தோடு இதை தெரிவிக்கிறோம் என்று நெஞ்சம் சுடாமல், கூசாமல் பொய் சொல்லி போலித் தீர்மானம் போட்டிருக்கிறார்களே இதையெல்லாம் என்னவென்று சொல்வது.
மேற்கண்ட நிகழ்வில் எந்த இடத்திலாவது மஹல்லா ஜமாத்தை பசீர் எதிர்த்தார் என்று பொருள் கொள்ளமுடியுமா? அவர்களே லயன்.பசீருக்கு பிரச்சனை கொடுக்க வேண்டுமென்று வறட்டு பிடிவாதமாக ஊர் ரிஜிஸ்டர் புத்தகம் கொடுக்க முடியாது என்று சொல்லும் போது அவர் என்ன செய்வார்..? ஒரு பேச்சுக்கு அவரே தலைவரின் அடாவடிகளை ஏற்றுக்கொண்டு எப்படியோ ஊரின் ரிஜிஸ்டரில் திருமணத்தை பதிந்து நடத்திவிடுகிறார் என்றே வைத்துக்கொண்டாலும் இதனால் இரண்டாக நிற்கும் ஜமாத் நிர்வாகிகள் ஒன்று படுவார்களா? பிரச்சனை தீர்ந்துவிடுமா? அதிருப்திகளுக்கு விடை கிடைத்துவிடுமா? முஸ்லிம் லீக்க்கின் உயிர் கொள்கையான மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு சாத்தியமாகி இருக்குமா? பிறகு ஏன் ஊரின் தனிப்பட்ட பிரச்சனையை கட்சிப் பிரச்சனையாக்குகிறீர்கள்?.
முஸ்லிம் லீக்கின் தலையாய கொள்கையே மஹல்லா ஜமாத் ஒற்றுமை தான் என்று பேசும் தலைமை நிலைய பிரதிநிதிகள் இரு தரப்பினரை அழைத்து ஒப்புக்கும் கூட பேசாத்து ஏன்? ஜமாத் ஒற்றுமைக்கு ஒரு துரும்பையும் அசைக்காமல் மைக்கை பிடித்து பொய் குற்றம் சாட்டுவதும், மணிச்சுடரில் பொய்யை, புரட்டை உண்மைக்கு முரணாக ஈமானை மறந்து எழுதுவதும் ஒரு உண்மை முஸ்லிம் செய்யும் செயலா? இல்லை உண்மையான முஸ்லிம் லீக்கர்கள் செய்யும் செயலா?
எனது ஏமாற்றம்:
அருமை அண்ணன் ஆடுதுறை ஷாஜஹான் தீவிர முஸ்லிம் லீக்கில் பணியாற்ற ஆரம்பித்த்திலிருந்தே தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அவருக்கும் லயன்.பசீருக்கும் பனிப்போர் இருப்பது எல்லாம் இங்கே அனைவரும் அறிந்த்து தான், இதை ஒரு சிறு பையனை அழைத்து கேட்டாலும் சொல்லுவான் அந்த அளவுக்கு தான் நிலைமை. இதை இரு தரப்புமே மறுக்கமுடியாது. ஆடுதுறை ஷாஜஹான் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வழுத்தூர் முஸ்லிம் லீகர்கள் சிலர் எப்போதும் லயன் பசீருக்கு எதிராகவே நடப்பதும் அவரை பல சந்தர்பங்களில் உள்ளூர் இயக்க நிகழ்வுக்களிலேயே கூட தவிர்ப்பதும் கூட சகஜமாக நடப்பது தான். குறிப்பாக சென்ற ஆண்டு திருநெல்வேலி மாநாட்டிற்கு வழுத்தூர் சார்பாக சென்ற போது கூட இவர்கள் அவரை வேண்டுமென்றே தவிர்த்தை நானே நேரில் கண்டேன்.
இருந்தாலும் கூட அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்து ஆடுதுறை ஷாஜஹான் அவர்களின் வளர்ச்சி மிக அவசியம் என்றும், அவரை எப்போதும் ஆதரிக்க வேண்டும் என்று நிலைப்படு கொண்டவர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன், கடந்த தேர்தலில் ஷாஜஹான் அண்ணன் வெற்றிவாய்ப்பை இழந்த போது இரண்டு மூன்று நாட்கள் மிக வேதனை தாளாமல் தவித்திருக்கிறேன், அவரை நாங்கள் தான் தோற்கடித்தோம் என்றும், அவர் தோற்க வேண்டியவர் என்றும் அவரை கண்டபடி தூஷித்து அவரது தோல்வியை கொண்டாடிய தவ்ஹீத் இயக்க்கார்ர்களிடம் வரைமுறையில்லாமல் சண்டையிட்டிருக்கிறேன், எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறேன். ஆனால் பக்கத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு சிறு கட்சியில் ஒரு இடத்தை பிடிக்க ஆரோக்கியமற்ற அரசியல் செய்து வன்மத்தை, வஞ்சகத்தை காத்திருந்து கொட்டும் நிலையை பார்க்கும் போது முந்தைய பிம்பங்கள் எல்லாம் உடைந்து தூள் தூளாகிறது. எனது ஏமாற்றத்தை எண்ணி மனம் வாடுகிறேன்.
தலைவர் பேராசிரியர் சொன்னபடியே திருமணம்:
உண்மையில் லயன் பசீர் இல்லத் திருமணம் நடந்தது நமது தலைவர் பேராசிரியர் எப்படி ஆலோசனை கூறினாரோ எப்படி வழிகாட்டினாரோ அப்படி தான், தலைமைக்கு கட்டுப்பட்டு தலைமை கூறிய வித்த்தில் தான் திருமணமே நடந்தது அப்படி இருக்கையில் லயன் பசீர் அவர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை எப்படி சாத்தியம்? கட்சிக்கு கட்டுப்பட்டு தலைமை சொல்வதை கேட்டது தவறா? அது குற்றமா? இந்த நடவடிக்கை தலைவரையே அவமதிக்கும் செயல் போலல்லவா அமைந்திருக்கிறது.
(மேலும் இந்த நடவடிக்கை குறித்து கட்சித்தலைமையிலிருந்து ஒரு நோட்டீஸ் கூட லயன் பசீருக்கு அனுப்ப்ப்படவில்லை, நடந்த பொதுக்குழுவிற்கும் அவர் அழைக்கப்படவில்லை என்பதையும் எல்லோரும் அறியவேண்டும். அப்படி என்றால் தஞ்சை வடக்கு முஸ்லிம் லீக்கில் என்ன நடக்கிறது?)
தலைவர் காதர் மொகிதீன் சந்திப்பும் அவரது ஆலோசனையும்:
இப்போது மேற்சொன்னபடி தலைவரை சந்தித்த நிகழ்வை சொல்லுகிறேன், 23-08-2017 அன்று திருச்சியில் தலைவரது இல்லத்தில் கிராமத்தின் முக்கிய நிர்வாகிகளோடு நானும் மற்றும் ஜனாப். லயன்.பசீர் அவர்களும் சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் கிராமத்தில் நிலவும் பிரச்சனை, பள்ளிக்கூட விவகாரம், எதற்காக நீதிமன்றத்தை கிராம ஜாமாத் செயலாளர் ஓ.பி.பசீர் அவர்கள் நாடினார், ஊர் ஜமாத் தலைவராக இருப்பவர் தன்னுடைய பதவியைக் காப்பாற்ற அவர் சம்பந்த பட்ட வழக்குகளுக்கு மற்ற நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல் கிராமத்தின் பொதுப்பணத்திலிருந்து லட்சக்கணக்கில் எடுக்கிறார், கடந்த நாற்பது வருடங்களாக பள்ளிக்கூடத்தின் செயற்குழுவை முறைப்படி கூட்டாமல் கூத்தடிக்கிறார், பள்ளிக்கூடத்தில் நடக்கும் நியமன முறைகேடு, பள்ளிக்கூட கணக்கில் நடக்கும் இருட்டடிப்புகள், என எல்லாவற்றின் நதிமூலம், ரிசிமூலம் ஆகியவற்றையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த சந்திப்பில் தலைவர் பேராசிரியருக்கு விளக்கி சொல்லப்பட்டது. அத்தனைக்கும் ஆவணங்களையும், நீதிமன்ற தீர்ப்பு நகல்களையும், வக்பு வாரிய விவரங்களையும் கொண்டு சென்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட தலைவர் பேராசிரியர் நம் சமூகம் இப்படிபட்டவர்களால் தான் சீரழிகிறது என்று வருத்தப்பட்டதோடு உங்கள் கிராம ஜமாத்தில் இப்போது இருக்கும் நிர்வாக பொறுப்புதார்ர்கள் தான் அடுத்த தேர்தல் நடந்து புதிய நிர்வாகம் வரும்வரையில் பொறுப்பிற்கு உரியவர்கள். அது தான் எங்கும் இருக்கும் சட்டம், அது தான் வரையறை, அது தான் எங்கும் உள்ள நடைமுறையும் கூட. ஆக கே.இ.பி. அலி தலைவர் தான், லயன் பசீர் துணை தலைவர் தான், ஓ.பி.பசீர் செயலாளர் தான் மற்ற பொறுப்பில் இருப்பவர்களும் அதே பொறுப்பில் உள்ளவர்கள் தான், நீங்கள் போய் ஊர் தலைவரிடம் உங்கள் ஊர் முறைப்படி திருமண ரிஜிஸ்டர் புத்தகம் கேளுங்கள் அவர் ஒத்துக்கொண்டால் வழமைப்படி ஊர் புத்தகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள், இல்லை என்றால் ஊரின் கிராம ஜமாத்திற்கு யார் துணைத் தலைவரோ அவர் தான் இது போன்றவைகளுக்கெல்லாம் பொறுப்பு, அதனால் அதே புத்தகத்தை நீங்கள் அச்சு அடித்துகொள்ளுங்கள், ரப்பர் ஸ்டாம்ப் தேவைப்பட்டால் அதைக்கூட தயார் செய்து கொள்ளுங்கள், இதில் என்ன உங்களுக்கு பிரச்சனை இருக்கிறது அடுத்த நிர்வாகசபை வரும் வரை நீங்கள் அனைவரும் அதே பொறுப்பில் உள்ளவர்கள் தான் இதை யாரும் மறுக்க முடியாது என்று தலைவர் அவர்கள் தான் எங்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். (அதன் ஆடியோ கூட ஒரு ஆவணத்திற்காக முழுவதும் ரிக்கார்ட் செய்யப்பட்டிருக்கிறது). தலைவர் எப்படி ஆலோசனை கூறினார்களோ அதையே தான் லயன் பசீர் அவர்கள் செயல்படுத்தி இருக்கிறார்கள்? இது தவறு என்றால் தலைவரின் பேச்சை கேட்க்க்கூடாது என்றால், தலைமை சொற்படி கேட்டதற்கு கூட குற்ற நடவடிக்கை என்றால் கட்சி செல்லும் திசை தான் எது என்று தெரியவில்லை.
தவ்ஹீதுவாதியின் கேள்வி:
இதற்கிடையில் இன்னொரு சம்பவத்தையும் சொல்லிவிடுகிறேன்.. எங்கள் ஊரில் இருக்கும் தவ்ஹீதுகார்ர்கள் சிலர் குழுமியிருக்க அவர்கள் என்னிடத்தில் வந்து நாங்கள் தான் ஜமாத் கொள்கைக்கு எதிரானவர்கள், ஜமாத் கட்டுப்பாட்டை நாங்கள் தான் உடைக்கிறோம் என்று எங்கள் மீது தானே கோப்ப்படுவீர்கள், எங்களுக்கு தானே ரிஜிஸ்டர் புத்தகம் பெறுவதில் சிரம்ம் இருக்கும் ஆனால் லயன் பசீருக்கு ஏன் இப்படி நடக்கிறது, ஏ-பார்டி பி-பார்டி என்று ஒரே கொள்கையுடைய ஒரே ஜமாத்தின் நிர்வாகிகளுக்குள் தானே பிரச்சனை, இதை ஜமாத் எதிர்ப்பாக காரணம் காட்டி பேராசிரியரை வர விடாமல் இங்கே சிலர் ஏன் செய்கிறார்கள்என்று கேட்க என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
பொதுச்செயலாளர் அபூபக்கர் அண்ணன் போன் உரையாடல்:
இத்தோடு தொடர்புடைய இன்னொரு நிகழ்வும் உண்டு அதையும் எல்லோரும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும், மேலே சொல்லப்பட்ட இவ்வளவு சம்பவங்கள் இருக்க மேற்கண்ட சமரச சம்பவங்களும், பேராசிரியர் அவர்களின் சந்திப்பும் நிகழ்வதற்கு முன்பு அதாவது முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் அபூபக்கர் அண்ணன் அவர்கள் கத்தார் பயணமாகும் முன்பு லயன். பசீருக்கு எதிராக இருக்கும் மேற்படி உள்ளூர் நபர்கள் மற்றும் சமரசவாதிகள் அபூபக்கர் அண்ணன் அவர்களிடம் அவர்களின் தரப்பை சொல்ல, அபூபக்கர் அண்ணன் அவர்கள் லயன் பசீருக்கு போன் செய்து இவர் ஊரில் துணை தலைவராக இருக்கிறார் என்பதை அறியாது, நடந்த விசயங்கள் எதையும் தெரியாது போன் போட்டு எடுத்த எடுப்பிலேயே ஊர் ஜமாத்தை ஏன் எதிர்கிறீர்கள், ஊர் தலைவரிடத்தில் முதலில் போங்கள், போய் பணத்தை கட்டி ஊர் ரிஜிஸ்டர் புத்தகம் வாங்குங்கள் என கொஞ்சம் கோபமாக பேச இடையில் லயன் பசீர் அவர்கள் என்ன நடந்த்து என்பதை கொஞ்சம் கேளுங்கள் அதற்கு பிறகு நீங்களே சொல்லுங்கள் எது சரி எது தவறு என்று; அப்போது நான் ஜமாத்தை எதிர்க்கவில்லை என்பதையும் பிரிந்து நிற்கும் ஜமாத் நிர்வாகிகளை எனது இல்ல திருமணம் மூலமாகவாவது இணைக்கவே முயல்கிறேன் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்”. என்று பசீர் அவர்கள் சொல்ல, அதை கொஞ்சமும் கேட்காமல், காதில் வாங்காமல் மீண்டும் மீண்டும் நான் அதையெல்லாம் கேட்க தயாரில்லை நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்று அபூபக்கர் அண்ணன் அவர்களும் ஒரு தரப்பாகவே செயல்பட்ட்தையும் லயன் பசீர் அவர்கள் தரப்பு நம்மிடம் தெரிவிக்கிறது.
(அபூபக்கர் அண்ணன் பேசிய அந்த நேரத்திலேயே மிக ஆதங்கமாக நான் சொல்வதை கொஞ்சமும் கேட்க மறுக்கிறார் என மனம் உடைந்து மிக வேதனைப்பட்டார் லயன் பசீர்)
இப்படி ஒரு முறைக்கு இருமுறை அபூபக்கர் அண்ணன் அவர்கள் லயன் பசீருக்கு போன் செய்து பேசிய போதும் லயன் பசீர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட கேட்காமல் அபூபக்கர் அண்ணன் அவர்கள் தங்களது தரப்பையே பேச, அவர் மனம் நொந்திருந்த நிலையை பார்த்த எனது மாமனார் முஹம்மது ஜாபர் சாதிக் அவர்கள் நடந்த்தை எழுதி ஒரு மின்மடல் அனுப்ப அதற்கு பெற்று கொண்ட்தாக கூட ஒரு பதில் அண்ணன் அபூபக்கர் அவர்களிட்த்தில் இல்லை.
(முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான் அவர்களின் பாராளுமன்ற உரையை தமிழாக்கம் செய்த போதும், மணிச்சுடர் வளர்ச்சி குறித்தும், முஸ்லிம் லீக் அறக்கட்டளை புத்தகங்களை சந்தைபடுத்தி எல்லோருக்கும் எடுத்து செல்வது குறித்தும் நான் மின் அஞ்சல் செய்யும் போதெல்லாம் உடனே அப்துல் ரஹ்மான் அண்ணன் பதில் அளித்த்தையும் நினைவு கூர்கிறேன்.)
இதையெல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ந்த்து போல் ஆகிவிட்டது எனென்றால் அபூபக்கர் அண்ணன் மீது நான் வைத்திருக்கும் மரியாதையும், அன்பும் கொஞ்சமல்ல.. அவரின் வெற்றி ஏதோ நம் வாழ்வில் ஓர் வசந்தம் நிகழ்ந்த்தை போல கொண்டாடிய தீவிர முஸ்லிம் லீக்கின் தொண்டர்களில் ஒருவன் நான். அவரின் சட்டமன்ற, பொது நிகழ்வுகளை முகநூலில் பகிர்ந்து சிலாகித்து பொதுமக்களிடையே கொண்டு செல்லும் ஆர்வம் மிகுந்தவன் அதனால் நடந்த விசயங்களில் மனவருத்தங்களையும் பல பாடங்களையும் தான் பெற்றுக்கொண்டேன்.
தலைவர் பேராசிரியர் பயணம் மாற்றம்:
தலைவர் பேராசிரியர் அவர்கள் லயன் பசீர் அவர்களது இல்ல திருமணத்திற்கு வர இருந்த நேரத்தில் அவரது பயணத்திட்டம் மாற்றப்பட மீண்டும் எங்களது திருச்சி சந்திப்பிற்கு பிறகு எங்களுக்கு நேராகாவே மணிச்சுடர் அலுவலகத்திற்கு போன் செய்து மீண்டும் எனது பயணத்திட்டத்தை முன்பு போலவே வழுத்தூருக்கு மாற்றி பிரசுரித்துவிடுங்கள் என சொன்னதற்கு பிறகும் பயணம் மாற்றப்பட்ட்தும் மேற்கண்ட தனிப்பட்ட அரசியல் காரணங்களே என்பதையும் நான் இங்கே குறிப்பிட்டுத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
மணிச்சுடரில் தவறான செய்தி வேண்டாம்:
நடந்த சம்பவங்கள் இவ்வாறிருக்க.. மணிச்சுடரில் அதையே இருட்ட்டிப்பு செய்து உண்மைக்கு முரணாக செய்தி வெளியிட்டிருப்பதை பார்க்க எனக்கு சகிக்கவில்லை, லயன்.பசீர் அவர்களை அரசியல் ரீதியாக வஞ்சம் தீர்க்க வேண்டும், அல்லது அவரை ஓரங்கட்ட வேண்டும் என்றால் நேருக்கு நேராக மோதி அவரை நீக்கி இருக்கலாமே ஏன் தேவை இல்லாமல் வேண்டாத மருமகன் மீது வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக வழக்கு போட்ட்து போலஉள்ளூர் நிர்வாக பிரச்சனையை ஜமாத் எதிர்பாக மாற்றி அதை முஸ்லிம் லீக்கின் மஹல்லா ஜமாத் ஒற்றுமைக்கு பங்கம் செய்கிறார் என்று சொல்லி ஊரில் இருக்கும் தனது ஆதரவாளர்களோடு மேற்கண்ட சமரசவாதிகள் செய்யும் சுயஆதாய அரசியலை நினைத்தால் சொல்வதற்கு வார்த்தைகளே வரவில்லை.
முஸ்லிம் லீக்கின் அரசியல் மகத்தானது:
பொதுவாக அரசியலில் மேலே வரவேண்டும் என்று நினைத்தால் சத்தியத்தின் துணையோடு நேருக்கு நேர் நின்று வென்று முன்னால் வாருங்கள் ஆனால் இந்த புறமுதுகு அரசியல் அசிங்கமாக இருக்கிறது. இது நிலைக்காது. இதே முஸ்லிம் லீக்கில் மேலே இருந்தவர்கள் கீழே போயிருக்கிறார்கள், பிரபலமாக இருந்தவர்கள் அட்ரஸ் தெரியாமல் போயிருக்கிறார்கள். போரில் எதிரி ஒருவன் தன்னை கொல்ல வர அவனை குப்புற தள்ளி நெஞ்சில் ஏறி உட்கார்ந்த அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மேல் அவன் எச்சில் உமிழ்ந்தான் எதிரியை கொள்ளமுற்பட்ட அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனின் அந்த செயலுக்கு பிறகு கொல்லாமல் விட்டுவிட்டார்கள், தன்னை கொல்ல கிடைத்த வாய்ப்பையும் விட்டுவிட்டு எழுந்துபோகிற ஹஜ்ரத் அலியை பார்த்து அவன் ஏன் என்று கேட்க நான் அல்லாஹுக்காக போரிடவந்தவன், இப்போது நான் உன்னை கொன்றால் அது நீ என் மீது உமிழ்ந்த தனிப்பட்ட கோபமும் சேர்ந்துவிடும் என்று சொன்ன சீரிய சரித்திரம் நம்முடையது, நினைவில் கொள்ளுங்கள்.
இந்த உலகம் சாஸ்வதம் அல்ல, மற்ற இயக்கவாதிகள் நடத்தும் அரசியலுக்கும் அல்லாஹ் ரசூலை முன்னிருத்தி முஸ்லிம் லீக் செய்யும் அரசியலுக்கும் வித்தியாசம் உண்டு. இது சமூதாய இயக்கம் ஒவ்வொரு தொண்டனும் உங்களை கவனிக்கிறான், உங்கள் அங்க அசைவுகள் எல்லாம் கணக்கெடுக்கப்படுகிறது உங்களுக்காக ஜே போடும் அதே அடிமட்டக்கூட்டத்தோடு சில அறிவாளிகளும் கலந்திதிருக்கிறார்கள் அவர்களின் குரல் எந்த நேரம் உயரும் என்று நீங்கள் கணிக்கமுடியாது. அதிலும் நீங்கள் முஸ்லிம் லீக் பெயரைச்சொல்லி பச்சிளம் பிறைகொடியை பிடித்து நிற்கிறீர்கள். நாளை அல்லாஹ் முன் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அல்லாஹ் ரசூலை பயந்துகொள்ளுங்கள்.
லயன் பசீர் அவர்களின் முஸ்லிம் லீக் பயணம்:
ஏதோ பசீர் அவர்கள் இன்று நேற்று கட்சிக்கு வந்தவர் அல்ல, கடந்த 1977லிருந்து கட்சிக்காக உழைப்பவர், இளைஞரணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தவர், இயக்கத்திற்காக அவரது நேரத்தை, பணத்தை செலவிட்டவர், தான் அப்போது வைத்திருந்த டிராவல்ஸ் வேன்களை இயக்கத்திற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தெரிய பெட்ரோல் டீசல் கூட தானே இட்டு கட்சிப்பணிக்கு பயன்படுத்த தந்தவர். இதை எல்லாம் ஊரில் இருக்கும் அனைவரும் சிலாகித்து சொல்வர், எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி கட்சிக்காக உழைத்தவர் கொஞ்சமாவது தனக்கு கட்சியில் அங்கீகாரம் வேண்டும் என்று விரும்புவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா..? அப்படி தவறாக எனக்கு ஒன்றும் படவில்லை.
வன்மம் வேண்டாம், யாரையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள்:
சரி, அவர் படிப்படியாக வந்து வகிக்கும் மாவட்ட செயலாளர் பதவி தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் அதை அரசியல் ரீதியாக எதிர் கொண்டு அவரை வெல்லுங்கள் ஆனால் அதை கிராம ஜமாத் பிரச்சனைக்குள் கொண்டுவந்து இல்லாத்தை இருப்பதாக சொல்லி நீக்கியதும் அவருக்கு சிரம்ம் ஏற்படுத்த வேண்டும், நடக்க இருக்கும் திருமணம் அவர் வீட்டு திருமணம் என்பதால் அவருக்கு எப்படியெல்லாமோ கிராமம் மூலமும், கட்சி மூலமும் மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் அல்லது திருமணத்தையே நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டம் தீட்டி வழுத்தூர் பிரைமைரியில் சிலரும், அதற்கு கட்சியிலேயே அவரின் இப்போதைய பொறுப்பும் இருப்பும் பிடிக்காதவர்கள் நடந்து கொண்ட விதம் கொடுத்த தொல்லைகள் எல்லாம் பார்க்கும் போது இந்த கொடூர வன்மனத்தவர்களை நம்மவர்களிடையே வைத்துக்கொண்டு ரோஹிங்கா முஸ்லிம்களை அந்த நாட்டு அரசு மனசாட்சி இல்லாமல் கொல்வதை நாம் கண்டிக்கிறோமே, ஆர். எஸ்.எஸ் அமைப்பு இவ்வளவு வன்மத்தை பரப்புகிறது என்று முழங்குகிறோமே ஆனால் ஒரு கொள்கைகுள், ஒரு கட்சிக்குள் இருப்பவர்களிடையே இவ்வளவு வன்மம் இருப்பதைக் காண இதையெல்லாம் அல்லாஹும் அருமை நாயகம் ஸல்ல்ல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் நெறிமுறைகளும் தான் நம்மை சீர்படுத்த வேண்டும் என்பதே கடைசி நம்பிக்கையாக பிரார்த்தனையாக நிற்கிறது.
இதற்கு மாற்றுக்கருத்து இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் கீழ்பணிந்து ஏற்றுக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
07-10-2017

2 கருத்துகள்:

Mohamed Musthafa - Qatar சொன்னது…

அருமையாக புரிய வைத்ததுகு நன்றி !! எல்லாரையும் சேர்த்து வைத்து விடுங்கள் அண்ணன் லயன் பஷிர் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர் முஸ்லிம் லீக் பாரம்பரியம்!! ஜனாப் அபூபக்காரிடம் எடுத்து சொல்லவும் தலைவரிடமும் எடுத்து சொல்லவும் ! பிரச்சனைகள் உருவாக்குபவர்கள் அதிகம் தயவு செய்து சமரசம் செய்து வைக்கவும் இன்ஷா அல்லாஹ் போதுமானவன்

Yembal Thajammul Mohammad சொன்னது…

உங்களைப் போன்றவர்கள் வருத்தப்படும் வரலாறு இனியும் தொடரக்கூடாது என துஆ செய்கிறேன்.

நீங்கள் நினைக்கும் நியாயம் கிடைத்தால் சமுதாயம் மகிழும்