27 மே 2020

குமரிமுனையிலிருந்து வாழ்த்து

முகநூல் இணைப்பு பார்வையிட..
சங்கை நபி ﷺ இசைக்கோர்வை 2017ல் வெளியிடப்பட்டது, ஒன்பது பாடல்களை நான் எழுத அருளிசை அரசு அபுல் பரக்காத் பாடி வெளியானதை அனேகம் பேர் அறிந்திருப்பீர்கள். (வெளியீடு குறித்தும் அதில் எனது தமிழாசான் திருநாவுக்கரசு ஐயா Thiru Arasu அவர்களின் உரை குறித்தும் அதை Basheer Ahamed Rabbani அவர்கள் அலீப் பள்ளி வளாகத்தில் வெளியிட்டது குறித்தும் தனியே எழுத வேண்டும்) அந்நேரத்தில் Abu Haashima அண்ணன், அன்பு சகோதரர் Amz Harun, தம்பி அன்னை தாசன் என்று நிறைய அன்பர்கள் அது குறித்து மகிழ்ந்து எழுதி இருந்தார்கள். அன்பு Jamal Mohamed Mohamed Iqbal பெருமகிழ்ச்சி அடைந்து ஒவ்வொரு பாடல் குறித்தும் சிலாகித்து வாழ்த்தினார், Lks Meeran Mohideen பேரன்போடு அது குறித்து அவ்வளவு நேரம் என்னிடம் பேசி இருக்கிறார்கள், திருநெல்வேலி வானொலி நிலையத்திற்கும் அனுப்பி வைத்தார்கள்.
இப்போது .. சங்கை நபி ﷺ இசைக்கோர்வையை சமீபத்தில் கேட்டு அதைக்குறித்து அன்பு அண்ணன் Mitheen எழுதி இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. Mitheen அண்ணன் அவர்கள் இலக்கிய நேசர், வாசித்தவுடன் படைப்பு குறித்து அழகிய விமர்சனம் கொடுப்பார், சிறந்த கதைச்சொல்லி, நூலாசிரியர், திரைப்பட நடிகர். அன்பு அண்ணனின் எனது இசைக்கோர்வை குறித்த கருத்துரையை பெரும் மகிழ்வோடு ஏந்திக்கொள்கிறேன். அவை பின்வருமாறு. இசை ஆன்மீகத்தின் உணவாக இருக்கிறது. இன்றும் நாகூர் அனிபாவினுடைய இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் பொதுவெளியில் அவ்வளவு நெருக்கம். கப்பலுக்கு போன மச்சான் என்கிற ஷேக்முகம்மதுவின் பாடலும் ஓரளவுக்கு நிலைத்து நின்ற பாடல்கள்தான். அபுல்பரக்கத், எம்.எ உஸ்மான், இறையன்பன் குத்தூஸ்,என நிறைய வரிசைகள் இருக்கிறது. என்.எஸ்.தீனின் தக்கலை நகர் வாழும் அற்புத வலியுல்லாஹ் பாடல் மனதில் உட்கார்ந்து கொள்ளும். சீனி நைனாமுகம்மதுவின் யாரடா சொன்னது எங்களை அந்நியர் என்று ...இப்பாடல் வேகமாக பலரிடமும் போய் சேர்ந்தது.ஆனாலும் தமிழில் இஸ்லாமிய பாடல் என்பது அது இறையை,நபியை,இறைநேசர்களை, புகழ்பாடும் பாடலாகவே நின்றிருந்த நிலையில் கவிஞர் தக்கலை ஹலிமா அதன் தொடர்ச்சியில் மற்றும் ஒரு பரிமாணமாக வாழ்வியல் பாடலாக அவ்வல் என்கிற ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். அவரே பின்னர் சூஃபி ஞானி பீர்முகம்மதப்பா, குணங்குடி மஸ்தான் சாகிபு முதலானோர்களின் மெய்ஞானப்பாடல்களை குமரி அபூபக்கரோடு இணைந்து தன்னைப் பிழிந்த தவம் என்ற பாடல் தொகுப்பையும் வெளியிட்டார்.அங்கொன்றும் இங்கொன்றுமாக மேலும் சில பாடல்கள் இருக்கலாம். காலத்தேவைக்கு ஏற்ப இஸ்லாமிய இசைப்பாடல்கள் தொடர்ந்து வளரவில்லை என்பது உண்மை. ஏன் அது மலையாளப் இஸ்லாமிய பாடல்கள் போல பலவடிவங்களில் வளரவில்லை என்பதெல்லாம் பண்பாட்டுக் கூறுகளோடு ஆய்வு செய்ய வேண்டியதாகும். இப்போது யூடிப்பில் நாகூர் அனிபாவின் சில பழய பாடல்களை புதுவடிவங்களில் சிலர் பாடுகின்றனர்.குறிப்பாக பெண்கள் பாடுகின்றனர்.சூப்பர் சிங்கர் ஃபரிதாவின் சிலபல பாடல்கள் கேட்கின்றன.யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் இப்போது பரவலாக கேட்கப்படுகிறது. ஆனாலும் இந்த நீண்ட நெடிய இஸ்லாமியர்கள் வாழ்வின் மகிழ்வு,வலி,துன்பம்,துயரம், இன்பமென பல்உணர்ச்சிகள் சார்ந்த பாடல்கள் இல்லையென்பதை எவ்வாறு நோக்குவது என்பதும் கேள்விகள்தான். நண்பர் @J Mohaideen Batcha எழுதிய பாடல்களை பாடகர் அபுல்பரக்காத் பாடியிருக்கும் ஒரு பாடல் தொகுப்பை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.மெல்லிய வார்த்தைகளால் ஆன அவரின் பாடல் வசீகரமானதாகவே இருக்கிறது. எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. நமமைச் சுற்றிலும் பரவியிருக்கும் இந்த இசைக் கலைஞர்களின் உலகை நாம் எதன் பொருட்டு இல்லாமல் செய்கிறோம் என்கிற செய்தியை நான் முன்வைக்கிறேன். அவரின் இனிமையான பாடல்களை கேட்டதின் வாயிலாகவே இதனை எழுதுகிறேன். நண்பர் முஹைதீன் பாட்சா அவர் பாடலின் இணைப்பை பின்னூட்டத்தில் பதிவார் என நம்புகிறேன். பிற நண்பர்கள் உங்களைக் கவர்ந்த இஸ்லாமிய பாடல் ஒன்றின் இணைப்பை பின்னூட்டத்தில் வழங்குமாறு வேண்டுகிறேன். தக்கலை ஹலீமா அவ்வலின் இணைப்பிருந்தால் அதனையும் தர வேண்டும்.இசைக் கலைஞர்களுக்கு அன்பும் வாழ்த்தும்.

கருத்துகள் இல்லை: