25 ஜூன் 2020

தந்தையாரால் ஏற்பட்ட பந்தம்

பள்ளிக்கூடம் சேரும் முன்னே பால்முகம் மாறும் முன்னே மாலை மயங்கும் பொழுதுகளில் மைதான விளையாட்டுகளில் தந்தையார் அழைத்துச்செல்ல இந்த விந்தையாருடன் ஏற்பட்டதிந்த பந்தம்.
அடிக்கும் பந்துகள் கட்டம் தாண்டிச்சென்றால் பிடித்து எடுத்து தருவேன்; அப்போதே வட்டம் தாண்டி வாஞ்சை முகம் காட்டி நெஞ்சைத் திருடிவிட்டார்.
பின்னர், மேல்நிலைப் பள்ளியில் ஞாயிறு கூட்டங்களில் எதிர்பார்க்கும் ஞாயிறாகவே ஆகிப்போனார் நீதிபோதனை வகுப்பெடுக்க ஏழாம் வகுப்பில் வாரம் ஒருமுறை வரம் தர வருவார் - அதில் பாதிபோதனையே பாடத்திற்கு அப்பால் தான்; அந்த போதனையே சிந்தைக்கு விருந்தாய் எங்கள் அறிவுக்கண்ணை அகல விரித்தது.
அதுவே பின்னாளில் நீதிபோதகரையே எங்களோடு வரித்தது. பதினோராம் வகுப்பில் ஆறுமாதம் தான் வகுப்பெடுத்தார் ஆயுளெல்லாம் மாணவனாகிப்போனேன். வேறு நாட்டிற்கு சென்றாலும் நூறுமுறை நிதமும் நினைத்திருப்பேன்; வேரூன்றி நெஞ்சத்தில் அன்பு விருட்சகமாய் வளர்ந்துவிட்டார்.
ஆசிரியப் பணியை காசுக்காக பார்த்தவரில்லை மாசு மறுவற்று ஆத்மார்த்தமாய் நேசத்துடன் பார்த்தார்.
மாணவர்களை கல்வியில் மட்டுமல்ல உயர்ந்தோர் உயர் நெறியில் உயர்ந்ததோர் தமிழ் வழியில் உணர்வோடு கரை சேர்த்தார் "திருநாவுக்கரசு" அவர் பெயர் திருவாளர் நாவுக்கு மட்டும் அரசல்ல! விரிந்த பார்வைக்கும் திறந்த சிந்தனைக்கும் பரந்த அன்பிற்கும் அரசானார்.
அதனால் தான் நாங்களெல்லாம் அவரின் அரசமுற்றத்தில் ஐக்கியமாகிப்போனோம்.
ஐயா! இன்றுங்கள் பிறந்தநாள். இனிவரும் நாட்களும் நலமே நிறைந்து உளமெலாம் குளிர்ந்து எல்லா ஆண்டும் நல்லாண்டாய் பல்லாண்டு.. பல்லாண்டு.. ஐயா வாழ்க..! அரசே வாழ்க..! பரிசாய் வாழ்க..! முரசாய் வாழ்க..!
அன்பிற்கினிய.. ஜா.முஹையத்தீன் பாட்ஷா.

கருத்துகள் இல்லை: