இன்றைய நாளில் முந்தைய நபிமார்களுக்கு எத்தனையோ பிரதான நிகழ்வுகள் நடந்திருந்தாலும் காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருப்பெயரர் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்தம் திருக்குடும்பத்தார்கள் கொடுங்கோலர்களை எதிர்த்து உயிர் நீத்த துயர்மிகுந்த நாள் என்ற வகையில் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாள் உலகெங்கிலும் உள்ள உணர்வாளர்களால் வரலாற்றின் சோக நிகழ்வுகளை நினைவுகூறும் விதமாக எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. முஹரம் முதல் நாளிலிருந்து பத்தாம் நாள் ஆசுரா நிகழ்வுக்காக இராக்கின் கர்பலாவில் பல லட்சம் திருக்குடும்ப நேயர்கள் சென்று புனித தியாகிகளை குறிப்பாக இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நினைவகத்தில் ஒன்று கூடி பங்கேற்கிறார்கள்.
உலகமே முஹரம் பிறை ஒன்றுக்கு இஸ்லாமிய புத்தாண்டு என விடுமுறை வழங்க, நம் இந்திய அரசு வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்களின் வழிகாட்டுதலில் ஆங்கிலேய காலந்தொட்டே முஹரம் பத்து அன்றுக்கு விடுமுறை அளித்து அளப்பறிய தியாகத்திற்கு கவுரவம் அளித்துவருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நாளில் அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த அண்ணல் நபிகள் நாயகத்தின் குலக்கொழுந்து அருமை ஹுஸைனாரின் ஒருசில பொன்மொழிகள் இதோ..
1. அறிவைத் தேடுவது உங்களை ஞானத்தையும் உயர்வையும் நோக்கி அழைத்துச் செல்லும்.
2. உறவினர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான வாழ்வையும் தரும்.
3. உங்களுக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் உங்கள் செயல்களில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் இருங்கள்.
4. உங்கள் பயணம் வலியும் சவால்களும் நிறைந்ததாக இருந்தாலும் சரி, சரியானதை நோக்கிய பாதையில் உறுதியாகவும் திடமாகவும் இருங்கள்.
5. மக்களே! என் வார்த்தைகளைக் கேளுங்கள், போரைத் தொடங்க அவசரப்படாதீர்கள், அதனால் எனது புரட்சிக்கான காரணத்தை நான் தெளிவுபடுத்துகிறேன்.
6. எனது புரட்சியின் நோக்கம் சமுதாயத்தை சீர்திருத்துவதும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை அசலை உயிர்ப்பிப்பதாகும்
7. நான் ஒரு கலகக்காரனாகவோ அல்லது கொடுங்கோலனாகவோ வீண் கலகம் செய்ததில்லை; மாறாக, நான் இஸ்லாமிய தேசத்துக்கான சீர்திருத்தத்தை நாடி எழுந்தேன்.
8. ஆஷுரா நாளில், அவர் தனது தோழர்களிடம் பேசினார்:
“பொறுமையாயிருங்கள், உன்னதமானவர்களே. மரணம் என்பது உங்களை துன்பத்திலிருந்தும் இழப்பிலிருந்தும் பரந்த சொர்க்கத்திற்கும் நித்திய கிருபைகளுக்கும் அழைத்துச் செல்லும் ஒரு பாலம் மட்டுமே."
9. ஆஷுரா இரவில், இமாம் ஹுஸைன் அவர்கள் கூடாரத்தில் தனது ஆதரவாளர்களைக் கூட்டி, விளக்கை அணைத்துவிட்டு கூறினார்:
“கவனமாயிருங்கள்,
இந்த இடத்தை விட்டு வெளியேற நான் உங்களுக்கு அனுமதி தருகிறேன்; இனி உங்கள் மீது எந்தக் கடமையும் இல்லை, நீங்கள் அனைவரும் வெளியேறலாம்."
இருப்பினும், அவர்களில் ஒருவர் கூட அவரை விட்டு வெளியேறவில்லை.
10. இறைவன் மீது ஆணையாக, நான் ஒரு அவமானப்படுத்தப்பட்ட மனிதனைப் போல என் எதிரிகளிடம் ஒருபோதும் சரணடைய மாட்டேன், அடிமைகளைப் போல அவர்களுக்கு விசுவாசத்தை ஒருபோதும் உறுதியளிக்க மாட்டேன்.
11. என்னைப் பொறுத்தவரை, சத்தியத்திற்காக சரியான காரணத்திற்காக ஏற்படும் மரணம் மகிழ்ச்சியேத் தவிர வேறில்லை, கொடுங்கோலர்களின் கீழ் வாழ்வது நரகத்தில் வாழ்வதைத் தவிர வேறில்லை.
12. இழிவான வாழ்க்கையை விட கண்ணியத்துடனான மரணம் சிறந்தது.
09-08-2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக