01 ஆகஸ்ட் 2024

ஒவ்வொரு நாட்களுமே

ஒவ்வொரு நாட்களுமே.. சுப்பர் சிங்கர் பரீதா



ஒவ்வொரு நாட்களுமே விடிகிறதே

நபிநாதர் மஹமூதர் ஒளியாலே

ஒவ்வொரு நாட்களுமே நிறைகிறதே

இறைத்தூதர்  ஹாமீமின் நெறியாளே

 

அஹதோன் நபியை தந்தான் தன் நூரில் -

அவனே யாவும் அமைத்தான் நபி நூரில்

 

மனிதா மனிதா நீ உணர்ந்துவிடு

நபி அருமை அதை அறிந்தே  நீ வெற்றி பெறு

-1-

நன்றி உள்ள உள்ளத்தில்

நாயகத்தின் நேசம் வரும்

வாழ்வளித்த வள்ளல் பேரில்

எல்லை இல்லா பாசம் வரும்

 

பாலை நிலம் மீதில் வந்த

பால் வார்க்கும் தாயம்மா

நிதம் ஊறும் ஜம்ஜம் போலே

நாதன் தந்த கொடையம்மா

 

கல்லாலும் சொல்லாலெல்லாம்

காயங்கள் செய்தவரை

எந்நாளும் சபித்திடாத

பொன்னான நல்மனதார்

 

வாழ்க்கை முழுதும் போராடி

வாழவைத்த முன்னோடி

 

வாழ்தல் அர்த்தம் பெற

வள்ளல் திசையில் சென்றால்

இந்த பிறப்பே சிறப்பாகும்

 

மனிதா மனிதா நீ உணர்ந்துவிடு

நபி அருமை அதை அறிந்தே  நீ வெற்றி பெறு

-2-

வாழ்த்துக்கவிதை வாசிப்போம்

வாழ்வில் என்றும் நேசிப்போம்

நபியின் நேசம் என்ற ஒன்றை

மஹ்சர் வரைக்கும் யாசிப்போம்

 

லட்சம் தூதர் வந்தாரே

லட்சியரை பகர்ந்திடத்தான்

ரட்சகனே மெச்சும் திருவை

நினைத்து நெகிழ்ந்து நீ பாடு

 

யார் தான் இங்கு பிறந்தாரம்மா

புவிமீதில் நபிபோலே

பார் தான் அது பார்க்கவுமில்லை

பண்பாளர் நபிபோலே

 

இறைவனவன் துணையோடும்

இகத்தை மாற்றும் முனைப்போடும்

ஏந்தல் எழுந்து வந்தார்

தீனை தினம் உரைத்தார்

ஏதும் சமரசம் செய்யாது

 

மனிதா மனிதா நீ உணர்ந்துவிடு

நபி அருமை அதை அறிந்தே  நீ வெற்றி பெறு

 

ஒவ்வொரு நாட்களுமே விடிகிறதே

நபிநாதர் மஹமூதர் ஒளியாலே

ஒவ்வொரு நாட்களுமே நிறைகிறதே

இறைத்தூதர்  ஹாமீமின் நெறியாளே

 

அஹதோன் நபியை தந்தான் தன் நூரில் -

அவனே யாவும் அமைத்தான் நபி நூரில்

 

மனிதா மனிதா நீ உணர்ந்துவிடு

நபி அருமை அதை அறிந்தே  நீ வெற்றி பெறு

 

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01-08-2024

26 மார்ச் 2024




24 அக்டோபர் 2023

ஏது பதில்?.

போரில் பரிதாபமாக
உயிர் துறப்பவர்களின் துன்பம்
ஒரு விதத்தில் அத்தோடு
விடை பெற்று விடக்கூடும்.
ஆனால்,
போர்ச் சூழலின்
பேரபாயகரத்தில் சிக்கி
வாதைக்குள்ளாகி
வகையறியாது நிற்போரின்
மனப்பிறழ்வு மனநிலை
அநாதியான வெறுமை
பசிப்பிணி
உறக்கமற்ற
உறங்கவும் இடமற்ற
ஈவிரக்கமற்ற பொழுதுகளின்
சாகவும் முடியாத
வாழவும் முடியாத
மிக வறண்ட கணங்களுக்கு
ஆதரவு தந்து அணைப்பது யார்?
செத்த உடலத்தின்
நிலை குத்திய கண் போல இருக்கும்
அவர்களின் இருண்ட வாழ்விற்கு
ஏது பதில்?.
- ஜா.மு

விடை காணாத கதறல்கள்
வாழ்வா சாவா போராட்டம்
ஒவ்வொரு வினாடியும் திகில்
வரலாற்றின் இரத்தம் சொட்டும்
பக்களை எழுதிக்கொண்டிருக்கிறது
விடியலை எதிர் நோக்கும்
வலி மிகுந்த பொழுதுகள்.

- ஜா.மு
09-10-2023

பாவப்பட்ட உண்மை


ஆயிரம் நர்த்தனம் ஆடி
அவரவருக்கு வேண்டியதை
ஆதலால் இதுவே உண்மையென
ஓயாது நிலை நாட்டிடும்
போட்டிகள் எங்கும் அரங்கேற
கேட்டு சோர்ந்தன ஒலி வாங்கிகள்.
அயராத பேச்சின் கம்பளம்
விரிந்து கொண்டே செல்கிறது
மனிதத்தை மாண்பை
பேரன்பை புன்னகையை
மறைத்து மூடிச் செல்கிறது.
தனக்கு நேர்ந்த சேதாரத்தை
காததூரம் தள்ளி நின்று
வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறது
பாவப்பட்ட உண்மை.
-ஜா.மு.