22 டிசம்பர் 2014

மனிதத்திற்காய் உதவிக்கரம் நீட்டும் துபை ஈமான் அமைப்பு


உலகின் ஒரு பக்கம் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு மதவெறி, இனவெறி என காட்டுமிராண்டித்தனமாக செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க. மறுபக்கமோ தனிநபர்களாகவும், அமைப்புக்களாகவும் மதமாச்சரியங்கள் கடந்து மனிதமே புனிதமென கருதி மனிதத்திற்காய் மனநிறைவாக கரிசன உணர்வோடு ஊழியம் செய்தும் கொண்டிருக்கிறார்கள். “நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்காகவும் பெய்யும் மழை” என்றுச் சொல்லுவானே வள்ளுவன் அந்தக் குரளை மெய்ப்பிக்கும் முகமாக துபையில் செயல்பட்டுவரும் ஈமான் அமைப்பின் மனித நேயப்பணிகள் எல்லோரும் அறிந்த போற்றத்தக்க ஒன்று என்றாலும் அந்தவகையில் தான் சமீபத்தில் மனதை நெகிழவைக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதை அறிந்தால் மனிதநேயமுள்ள எல்லா உள்ளங்களும் பெருமகிழ்ச்சி அடையும் என்பது திண்ணம்.
ஆம், சாமிதுரை என்கிற துரைவீராசாமி பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்தவர், இவர் பணி நிமித்தமாக அமீரகத்தின் துபைக்கு வந்து கடந்த ஏழு வருடங்களாக வசித்து வந்தவர்.. அந்த ஏழு வருடத்தில் கடந்த ஐந்து வருடங்களாக “கள்ளிவல்லி” என வழக்குச்சொல்லில் இங்கே சொல்லப்படும் முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாது தலைமறைவாக இருந்து வேலைசெய்து வந்தவராக இருந்துவந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக இவரை தெரிந்தவர்கள் துபையின் ஷேக் ராசித் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போய்விட்டனர், பிறகு மோசமான உடல்நிலை காரணமாக வீராசாமி மூன்றுமாதங்கள் தொடர்ந்து சுயநினைவில்லாத கோமா நிலையிலேயே ஆழ்ந்துவிட்டார், பின்னர் மருத்துவமனையின் இடைவிடாத சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் மீண்ட அவரை வந்து பார்க்கவோ, நலம்விசாரிக்கவோ அல்லது அவரது ஊருக்கு அழைத்துச்சென்று அவரது சொந்தபந்தங்களோடு சேர்க்கவோ கூட யாரும் இல்லாத நிலையில் மேலும் இரண்டு மாதஙக்ள் ஓடிவிட்டது. இதனால் வீராசாமி உடல்நிலை பாதிப்போடு மிகுந்த மனவேதனைக்கும் உள்ளானார்.
இந்நிலையில் தான் விராசாமி துன்பப்படும் செய்தியறிந்த நம் தமிழ் சொகோதரகள் இது போன்றவர்களுக்கு உடனே கைகொடுக்கும் அமைப்பான துபையின் ஈமான் சங்கம் இருக்கிறதே என அவர்கள் ஈமான் நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள, ஈமானின் நிர்வாகிகளான செயலாளர் குத்தாலம் லியாகத் அலி மற்றும் துணைச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்கள் தாயுள்ளத்தோடு ஷேக் ராஷித் மருத்துவமனைக்கு உடனே விரைந்து நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுவரும் வீராசாமியை கண்டு ஆருதல் கூறியும், நிலைமையை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆலோசித்தும் அவருக்கு உதவும் முயற்சியினை ஆரம்பித்தனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட நோயாளி வீராசாமிக்கு மீண்டும் தொண்டையில் ஒரு அறுவைசிகிச்சை செய்யவேண்டி இருந்ததால் அதற்கும் உதவியாக நின்று அதுவும் வெற்றிகரமாக முடிய இறுதியில் ஈமான் சங்கத்தினர் துபைக்கு பிழைக்க வழித்தேடி வந்து நோயின் பிடியில் மாட்டிக்கொண்டு கடந்த ஐந்து மாதமாக நோயினால் மிகுந்த மனஉளைச்சலுக்கும், உடல் பலகீனத்திற்கும் ஆளான யாருமற்ற ஏழை வீராசாமியை அவரது சொந்த ஊருக்கே அழைத்துச்செல்ல துரித ஏற்பாடுகளை இந்திய தூதரகத்தின் மூலம் செய்து சென்றவாரம் ஈமானின் துணைச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்கள் வீராசாமியை மிக அரவணைப்போடு விமானம் மூலம் தாயகம் அழைத்துச்சென்று அவரது தாயார் மற்றும் தம்பியிடம் மிக பத்திரமாக ஒப்படைத்து வந்துள்ளார். மேலும் அத்தோடு இலவசமாக அவருக்கான சக்கர நாற்காலியையும் துபையின் திர்ஹம் ஆயிரத்து ஐநூரையும் (இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரம்) சேர்ந்த்துக் கொடுக்க பெற்றுக்கொண்ட வீராசாமியின் தாயாரும், தம்பியும் நெகிழ்ந்து போயினர்.
இது நாள்வரை தனது மகனைப் பற்றி ஒரு தகவலும் அறியாத பெற்ற தாயும், அவரது சகோதரரும் தங்களின் வீராசாமியை மதங்கள் கடந்து பேரன்போடு உதவிக்கரம் கொடுத்து மீட்டு வந்த துபையின் ஈமான் சங்கத்தினருக்கு கண்ணீரோடு நன்றியை தெரிவித்தனர். இது தொடர்பாக ஈமானின் நிர்வாகிகள் கூறும்போது ஆதரவற்ற நோயாளி வீராசாமிக்கு ஐந்து மாதங்கள் வரை சிறப்பான சிகிச்சையை இலவசமாக செய்து கொடுத்த ஷேக் ராஷித் மருத்துவமனை நிர்வாகமும், அவரை ஊர்வரை கொண்டு எல்லா வகை ஆதரவையும் அளித்த துபை அரசாங்கமும் இலவசமாக விமானம் மூலம் கொண்டுசெல்ல உதவிய இந்திய தூதரகமும் தான் மிகுந்த நன்றிக்கு உரித்தானவர்கள் இவர்களின் ஒத்துழைப்போடு தான் ஈமான் இந்த நற்செயலை செய்யமுடிந்தது என பெருமிதத்தோடு தெரிவித்தனர்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: