வெள்ளம்ஜி.
முஹம்மது இக்பால்.
பழகுவதற்கு
மிக எளிமையான மனிதர், என்றும் எதார்த்தம் உணர்ந்து செயல்படக்கூடியவர். இனிமை இவரது
இயல்பு, இரக்கம் இவரது குணம். தேவையில்லாத படோடோபம் இவரிடம் இருக்காது. முழுக்க முழுக்க
சாத்வீகமான மனிதர், அன்பை எங்கும் விதைக்க தன்னாலான செயல்பாடுகளை என்றென்றும் செய்துவருபவர்.
மதம் கடந்த மனிதநேயம் இவரது இயற்கைச் சுபாவம், எங்கு திறமைகள் இருந்தாலும் கைகொடுக்க
காத்திருப்பார். இவருக்கு ஆயுதங்கள் வேறேதும் வேண்டாம்… முகம் முழுக்க மலர்ச்சியாய்
முழுவதுமாய் அகமலர்ந்து பார்ப்பவர்களிடம் ஓர் மந்திர சிரிப்பைத் தருவார், அது ஒன்றே
போதும் எல்லோரையும் வசியப்படுத்திவிடும். மேற்சொன்னவைகள் அனைத்தும் மேலதிகம் இல்லை,
இவரிடம் பழகியவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
துபாயில்
மீலாது நிகழ்வை தோழமைகளோடு உலக அறிஞர்களை அழைத்து பிரமாண்டமாக 2002, 2003, 2004ஆம்
ஆண்டுகளில் நடத்திக் காட்டியவர். ரபிய்யுல் அவ்வல் மாதம் முழுவதும் நபிகளாரின் பெருமையை
பல இடங்கள் தேடி சென்று பேசுவார், சிறு அறையில் அன்பர்கள் நடத்தும் மவ்லிது மஜ்லிசுகள்,
பயான் நிகழ்வுகள், பத்ரு சஹாபாக்கள் நிகழ்வுகள், புர்தா சரீப் மற்றும் திக்ரு நிகழ்வுகள்
என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு எண்ண ஒன்றிப்புடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்களின் மகத்துவத்தை எடுத்துரைப்பார். கர்பலா தியாக வரலாற்றை தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு
மேல் தண்ணீர் கூட குடிக்காமல் பல ஆண்டுகள் பேசியவர் என்பது நான் வியந்த ஒன்று. எல்லோரும்
உடல் சிலிர்த்து, உள்ளம் உருகி அமர்ந்திருப்பர்.
தினத்தந்தி
ஞாயிறு மலரில் கிட்டத்தட 70க்கும் மேற்பட்ட வாரங்கள் “அறிவியல் அதிசயம்” தொடர் எழுதியவர்
அது புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. அமீரக “கல்ஃப் டுடே” நாளிதழில் நோன்பு காலத்தில்
முப்பது நாட்கள் மற்றும் பெருநாள் விடுமுறை வரை என முப்பத்து மூன்று தினங்கள் தொடர்ந்து
ஐந்தாறு வருடங்கள் 2006 வரை இஸ்லாமிய ஆங்கில கட்டூரைகளை நம் பாரம்பரிய விசயங்களை உள்ளடக்கி
எழுதி உலகுக்கு சொன்னவர். துறை சார்ந்த இதழியலில் அது சார்ந்தும் கட்டூரைகள் அவ்வப்போது
எழுதுவபர், இவைகளில் இவரது செவ்வியும் அவ்வப்போது வெளிவரும்.
துபாயில்
இயங்கிவரும் தோஷிபா எலெவேட்டர் நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் அதன் மத்திய கிழக்கு
நாடுகளின் பொறுப்புதாரியாகவும் இருந்து செம்மையாக நிர்வாகம் செய்து வருகிறார் முஹம்மது
இக்பால். அவரின் தொடக்க காலத்திலிருந்தே வேலை தேடிவரும் தமிழ் பிள்ளைகளுக்கு உதவ ஆரம்பித்தவர்
இன்று பலநூறு தமிழ் பிள்ளைகளுக்கு வேலை கொடுத்து பலரது வீட்டின் பொருளாதாரத்திற்கு
மூலாதாரமாக இருக்கிறார். லிஃப்ட் அமைத்து கொடுப்பது இவரது நிறுவனம் சார்ந்த தொழில்
என்றால் பலரது வாழ்வின் முன்னேற்றத்திற்கு லிஃப்ட் கொடுப்பது இவரது இயல்பு என்று தான்
சொல்ல வேண்டும். இதெல்லாம் அவரின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகள்.
முஹம்மது
இக்பால், ஆன்மீகம் வளர்த்த தஞ்சை மாவட்டம் வழுத்தூர் மண்ணில் உருவானவர், இம்மண்ணின்
ஆன்மீக நாதர்களின் ஈர்ப்பும், தத்துவங்களும் அவருக்குள் தேடலை, வேட்கையை தீயாய் வளர்த்தெடுக்க
அவ்வுணர்வுக்கு பதிலாயும், வருடலாயும் அந்த மேன்மக்களே தெய்வீககரங்கள் நீட்டி வாழ்வின்
ஆனந்தங்களை அறிவுக்குள் அணிவித்தனர். அவர்களுள் இவர்தம் தந்தையார் மர்ஹூம் சூஃபி. வெள்ளம்ஜி.
ஜமால் முஹம்மது அவர்கள் கைபிடித்து ஒப்புவித்த மறைந்த ஞானமேதை மேன்மைமிகு. செய்யது
அலவி ஹஜ்ரத் அவர்கள் மிகக்குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் போன்றோரிடமிருந்து வாழ்வு
எவ்வளவு அழகான ஒன்று என்பதை, வாழ்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதனை அதன் நுணுக்கங்களை
காவிரிக்கரைத்திகழ் ஊரின் ஞானமணம் கமழ பெற்றுக்கொண்டவர் அதன் தனிச்சிறப்பை என்றும்
பறைசாற்ற மறந்ததில்லை.
தனது சொந்த
மண்ணின் பெருமையை உலகுக்கு பறைசாற்றி நீண்டு செழித்து வளர்ந்து கிளைபரப்பி நிழல் கொடுக்கும்
மகா மரமாகத்தான் முஹம்மது இக்பால் திகழ்கிறார். அம்மரத்தில் நிழலில் ஒதுங்குவோர், அதன்
கனிகளை சுவைப்போர் அல்லது அதன் உயரத்தை தூர நின்று சிலாகித்து பேசுவோர் என எல்லோருக்கும்
தன் வேர்கள் இறுகப்பற்றி இருக்கும் ஊரின் பெருமையையும் சேர்த்தே பேச வைத்திருப்பது
இவரின் சிறப்பு.
முஹம்மது
இக்பால் அவர்கள், தமக்கான இல்லத்தை பிற பகுதிகளில் ஏற்கனவே அமைத்திருந்தாலும், தனது
சொந்த ஊரான வழுத்தூரில் அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இதற்கு மிக தூண்டு கோளாக இருந்த
மேன்மைமிகு. சையத் அலவி ஹஜ்ரத் அவர்களை என்றென்றும் நினைவு கூறுவார். அவர்கள் தான்
மிக வலியுறுத்திச் சொல்லி ஆரம்பிக்க வைத்தார்கள் என்பார்.
அவ்வினிய இல்லம் இன்று பால் காய்ச்சி
நாளை புதுமனை புக இருக்கிறார்கள். அல்லாஹ்வும், நம் ஆருயிர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்களும் மற்றும் அஹ்லுல் பைத்துக்களும் கனிந்து அருளட்டும். எங்கள் நெஞ்சில் நிறைந்து
வாழும் சூஃபிகள் மென்மையான அஜ்ஜி அத்தா ஜமால் முஹம்மது, மிகக்கனவு கண்ட பெருமாட்டி
தாவூத்தம்மா மாமி, எல்லாவேளை தொழுகையிலும் வாழ்வின் மேன்மைக்காக துஆ செய்த என் நன்னியம்மா
ஆய்ஷாபீவியம்மா, பேரண்மையாளர் அப்துல் கரீம் அத்தா, நன்முறைப் பேணும் அப்துல் மஜீது
சேட் அத்தா, மற்றும் அமைதியின் உருவாய் இருந்த முஹம்மது இக்பால் அவர்களின் நன்னியம்மா
இன்னும் நம் நினைவை ஆளும் அத்தனை ஆன்மாக்களும் பூரித்து மனமகிழ்ந்து வாழ்த்துவார்கள்.
புதிய இல்லத்தில் குதூகலம் பூத்து குலுங்கட்டும்.ஆனந்தம்
விளையாடட்டும். அதில் அவர்தம் அழகிய குடும்பம் சிறந்து வாழட்டும். அவரது துணைநலம் ஓங்கி
சிறந்து இருக்கட்டும். பிள்ளைகள் மாஹிர், சாயிரா, ஜாஹிர் சாதித்து வாழ்வாங்கு வாழட்டும்.
அவர்களின் இனிய சந்ததியினர் இவரின் பெயர் மணக்க புகழாட்சி நடத்தட்டும். இவர்களால் வழுத்தூரின்
புகழ் என்றும் ஓங்கட்டும்.
புதுப் பொழிவுடன் மலரும் புதிய வெள்ளம்ஜி இல்லத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
அன்புடன்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
11-9-2016 8.34 pm
வீட்டின் புகைப்படங்களை அன்போடு அனுப்பித் தந்தவர் தம்பி மாஹிர். அவருக்கு என் இதய நன்றிகள்.
வீட்டின் புகைப்படங்களை அன்போடு அனுப்பித் தந்தவர் தம்பி மாஹிர். அவருக்கு என் இதய நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக