25 செப்டம்பர் 2016

வெறியும் பரிவும்



நீங்கள் குரூர வெறியோடு வருகிறீர்கள்;
நான் நலினமாய் அன்பின் புன்னகை தந்து கடக்க முயல்கிறேன்

நீங்கள் ஓணாயின் இரவுநேர திகிலூலையாய் கத்துகிறீர்கள்;
நான் சோலைமரப் பூங்குயிலாய் ராகம் இசைக்கிறேன்

நீங்கள் பசித்த புலியின் நகங்களால் உடல்கீறி மகிழ்கிறீர்கள்;
நான் மயில்பீலிகளால் மருந்து நனைத்து வருடுகிறேன்

நீங்கள் அக்கினி குண்டமாய் துவேசம் வளர்த்து எரிகிறீர்கள்;
நான் ஆனந்தக் குளிர்ச் சுனைநீராய் பொங்குகிறேன்

நீங்கள் என்னை கொல்லாமல் விடமாட்டேன் என்கிறீர்கள்;
நான் கனிவான முகமன் கூறி கட்டி அணைக்கிறேன்

நீங்கள் வாய்க்கு வந்த கடுஞ்சொல்லால் சுடுகிறீர்கள்;
நான் வா என் சோதரா நாம் இந்தியத்தாயின் பிள்ளைகள் தானே என்கிறேன்.

நீங்கள் என்னை வீழ்த்துவதற்கு திட்டம் பல தீட்டுகிறீர்கள்;
நான் தேசத்தின் நல்வாழ்த்தினை கவியா
லாபனை செய்கிறேன்

நீங்கள் என்னை நாட்டுப்பற்றில்லாதவன் என தூசிக்கிறீர்கள்;
நான் புதைக்கப்பட்ட தியாகங்களை கண்கலங்க பாடிகாட்டுகிறேன்.

நீங்கள் என்னை அழிக்கவந்த அசிங்கப்பிறவியே என்றீர்கள்;
நான் அன்பு செய்ய வந்த இந்திய இஸ்லாமியன் தான் என்கிறேன்.

நீங்கள் ஆக்ரோசமாய் “பாரத் மாதாகி ஜே” என்று தாக்க வருகிறீர்கள்;
உடன் என் தேசத்தாயவள் என்னை மகனேயென பாசத்தோடு நெஞ்சில் வாரி அணைத்துக்கொள்கிறாள்.

- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
24-09-2016; இரவு 11.14



கருத்துகள் இல்லை: