02 செப்டம்பர் 2016

தனிமை கொண்டாட்டத்தின் உட்சம்!

என் நண்பனான நானும்
என் எதிரியான நானும்
நானான நானும்
எப்போதும் இணைந்திருக்கையில்
நீங்களெல்லாம் நினைப்பது போல
எனக்கேது தனிமை..!

*

என் மிக நீண்ட உலகத்தை
என்னையன்றி யாரறிவார்.
எனக்கு நானே.. நான் மட்டுமே
நெருக்கமும்.. தொலைவும்,
எனக்கு நானே.. நான் மட்டுமே
விடியலும்.. இரவும்,
எனக்கு நானே.. நான் மட்டுமே
உறவும்.. பகையும்.


*
என் சந்தோச சாம்ராஜ்யத்தின்
வித வித பூக்களின் புன்னகையும்
பசுங்கிள்ளைகள் மற்றும் சிட்டுக்களின் கீச்சுக்களும்
பூபாள இசைகளும் ஓடைகளின் சலசலப்பும்
நீங்கள் அறிய வாய்ப்பில்லை தானே!


*
என் சூரிய சந்திரர்களை
நீங்கள் சந்தித்ததில்லை தானே
என் இல்லத்து விண்மீண்கள்
உங்கள் கண்களுக்கு
அகப்பட்டவை இல்லை தானே
பின் நீங்கள் எப்படி அறிவீர்கள்
நானே நிரம்பிய என் பரப்பில்
என்மையின் கூட்டம் மிக நிரம்பிக்கிடக்கிறது


*
இது வருத்தத்தின் பட்சமல்ல,
எனக்கு நானே முழுமையாக
கிடைத்திருக்கும் திருவிழா
என் தனிமை என்பது
கொண்டாட்டத்தின் உட்சம்!


*


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Unknown சொன்னது…

the celebrated poet robert southey always glorifies solitary movement...
thanimai ungalai nalvazhipaduutthavum seyyum
thevaiillatha natipini vida thanimai siranthathey...