17 செப்டம்பர் 2016

இதயவாசல் மூடிக்கொண்டது.

கவிஞர் இக்பால் ராஜா
இன்று காலை எழுந்ததும் அலைபேசியை திறந்தால் இதயவாசல் அண்ணன் இக்பால் ராஜா அவர்களின் மறைவுச் செய்தி கண்ணில் பட்டு, நெஞ்சை உலுக்கியது.  மனது மிகப்பெரும் சஞ்சலத்திற்காளானது.

முஸ்லிம் லீக் இயக்கத்தின் செயல்பாடுகளில் பங்கெடுத்து நாளும் பொழுதும் சமூகத்திற்காக இயக்கம் வளர்த்தவர். சந்தனத்தமிழ் வித்தகர் சிராஜுல் மில்லத் அவர்களின் மீது பெருங்காதல் சொல்லில் முடியாது. கட்சியின் பிரைமரி மற்றும் இளைஞரணியை தஞ்சை பகுதிகளில் பலமாக்க அவர் கொண்ட பெருமுயற்சிகள் காலத்தால் மறக்கமுடியாதவை. கால நேரம், பணங்காசு, வீடுவாசல் என எதையும் பொருட்படுத்தாமல் சமூகம் சிறக்க முஸ்லிம் லீக் வளரவேண்டும் என்று உழைத்தவர். இன்றைய தலைவர் முனீருல் மில்லத் அவர்கள் மீதும் மாறாத பற்றுறுதி கொண்டவர். இவரது இழப்பு என்பது சமூகத்தின் நலன் மீது ஆதீத பற்று கொண்ட உண்மையான சமூகநல ஆர்வலரை நாம் இழந்துவிட்ட பேரிழப்பாகும்.  தியாகதீபமாய் எரிந்த சுடர் அணைந்ததில் முஸ்லிம் லீக்கிற்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.

ஆலிமான் குடும்பத்தில் தகப்பனாரைப் போல கவிஞர் இக்பால் ராஜாவும், ஜியாவுதீன் அண்ணன் அவர்களும் செய்த பொதுநலன் சார்ந்த சேவைகள் என்றும் போற்றத்தக்கவை. மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது ஸாஹிப் சார்ந்த எல்லா பத்திரிக்கை செய்திகளையும், தகவல்களையும் அதிகம் திரட்டி வைத்திருக்கும் சகோதரர்கள் இவர்கள். ஆலிமான் ஜியாவுதீன் அவர்களது அரிய முய்றச்சியில் தான் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் “சிராஜுல் மில்லத் சிந்தனைகள் “ என்ற சீரிய வரலாற்று ஆவண சிந்தனைக் களஞ்சியம் வெளிவந்தது என்பதும் மிகுந்த நன்றியோடு சிந்தித்து பார்க்கும் தருணம் இது.

அதிகம் பிரிண்ட்டிங் பிரஸ் ஏதுமில்லாத காலத்தில்  அண்ணன் இக்பால் ராஜா அவர்களது அய்யம்பேட்டை மகதடிபஜார் பிரிண்டிங் பிரஸ் தான் மிக பிரபல்யம்.  திருமணபத்திரிக்கையிலிருந்து எல்லா சமூக நிகழ்வுகளுக்கும் அவரது பிரஸ் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது.  உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு கவிதையில் வாழ்த்து எழுதி நிக்காஹ் மஜ்லிஸில் பகிரும் பழக்கம் அதிகமிருந்த அந்த காலப்பொழுதில்  எழுதியதை துரிதமாக அச்சடித்துத் தரக்கோரி உடன் அடித்து வந்திருக்கிறோம், சில சமயம் மின்சாரம் தடைபட்டால் அவரும் பணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்து பணியை முடித்துக்கொடுப்பார்.  சமூகம் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கும் நிறைய கவிதைகள், பத்திரிக்கைகள் மிக துரிதகதியில் வேண்டுமென  அவரிடம் வேண்டி நின்று அச்சடித்து வாங்கிச்சென்ற நிகழ்வுகளும் உண்டு. 

அந்த காலங்களில் தான் தனது தீராத பத்திரிக்கை கனவால் “இதயவாசல்” என்ற சமூகம் சார்ந்த மாத இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்.  நமது சமூக மக்களின் படிக்கும் ஆர்வம் தான் எல்லோருக்கும் தெரிந்த விசயம், அவ்வளவு படிப்பார்வம் மிகுந்தவர்கள், எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர்கள்!!!??? அதனால் பத்திரிக்கையை நடத்த அவர் பட்ட கஷ்ட நஷ்டங்கள் சொல்லி மாளாதவை.  சமூக கருத்துக்களை சுமந்த நிறைய கவிதைகளை எழுதிய கவிஞர் இக்பால் ராஜா, ஜனரஞ்சக கவிதைகள், காதல் கவிதைகள் என எல்லாதரப்பு கவிதைகளையும் எழுதுவதில் வல்லவராக இருந்தார். கவிதை மட்டும் அல்ல அவரது இதயவாசல் மாத இதழில் “விதவை மனமே கதவைத் திற” , “கண்மணி வஹிதா கவலை வேண்டாம்” போன்ற இன்னும் நிறைய இஸ்லாமிய சமூக மேம்மாட்டு களங்களை உள்ளடக்கிய கதைகள், நாவல்களை எழுதி குவித்த சமூக எழுத்தாளர். 

காலப்போக்கில் நிறைய பிரிண்டிங் பிரஸ் வந்துவிட்டதாலும், பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த முடியாததாலும் மிகுந்த சிரமப்பட்டார். அவ்வேலையில் அவரது “கண்மணி வஹிதா கவலை வேண்டாம்” நாவலை தற்போதைய தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் வழுத்தூர் லயன் பஷீர் அஹமது அவர்கள் வெளியிட்டு ஆதரவு நல்கினார் என்ற நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது.

அது போலவே எனது சிறிய தந்தை வழுத்தூர் வெள்ளம்ஜி. பஷீர் அஹமது அவர்களும் மறைந்த கவிஞர் இக்பால் ராஜா அவர்களும் நல்ல நட்புணர்வு கொண்வர்கள்.  ஊர் வந்தால் தேடி வந்து சந்திப்பார்.  சமீபத்தில் சில நேரம் முடியாமல் இருந்த போது கூட சந்திக்க வேண்டி ஆவலாய் இருப்பதாக சொல்லி சவுதியிலிருந்து ஊர் வந்த வெள்ளம்ஜி பஷீர் அவர்களை அழைத்து சந்தித்தார்.  எனக்குத் தெரிந்து அவ்வாரான சந்திப்புக்களில் சமூக சிந்தனையிலேயே வாழ்வை அற்பணித்த அந்த நல்ல உள்ளத்திற்கு தன்னாலான ஆதரவை வெள்ளம்ஜி பஷீர் அவர்கள் வழங்க தவறவில்லை.  இது போல ஒரு சிலர் அரவணைத்தாலும் அந்த பொதுநல உழைப்பாளிக்கு நம் சமூக மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லையோ என்ற அங்கலாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

மறைந்தது மேலான ஆன்மா, அல்லாஹ் ரசூலை மிக உவந்த ஆன்மா, சமூகத்திற்காக இரவும் பகலும் சிந்தித்த ஆன்மா. அது என்றும் இறையருள் சூழ சாந்தியோடு தான் இருக்கும். அன்னாருக்கு எல்லா மேன்மைகளையும் இறைவன் அருளி என்றும் அவரது புகழ் நிலவி இருக்க அருள் செய்வனாக. அவரை இழந்த குடுமபத்தினருக்கும், பிள்ளைகளுக்கும் சப்ரன் ஜமீலா என்ற மேலான பொறுமையை இறைவன் வழங்கி, நிறைவாழ்வு அளிப்பானாக. ஆமீன்.

துஆவுடன்,
வழுத்தூர் . ஜா.முஹையத்தீன் பாட்ஷா
17-09-2016
5.52pm

கருத்துகள் இல்லை: