13 ஏப்ரல் 2012

பூமிக்கு துணை நில்!



அடுத்தது.. அடுத்தது என பல அடுத்த கட்ட திட்டங்களில் திளைத்திருந்த மக்களின் மன ஒட்டத்தை 'சுனாமி' என்ற ஒற்றை சொல் புகுந்து அனைத்தையும் நிறுத்தி போட்டது..! அது மக்களிடையே அவர்களே அறியாது ஒரு வித பயத்தையும்.. பதட்டத்தையும் பற்றவைத்தது என்பது தான் உண்மை..!

இந்தோனேசியாவில் உருவெடுத்தது தமிழகம் உட்பட இன்னும் இருபத்தெட்டு நாடுகளை தாக்கும் என்ற அறிவிப்பு உலகளாவிய தமிழர்களை அத்தனை திக்கிலும் திடுக்கமுறத்தான் செய்தது.

பல தொலைக்காட்சிகளில் பாடல்களும், சினிமா காட்சிகளும் தொடர்ந்த நேரத்தில் புதிய தலைமுறையின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

அரட்டை..கலாய்ப்பு.. அலுத்துப்போன பலமுறை பார்த்த பதிவுப்படஙகள்.. அரசியல் கேலிகள் என வழக்கமான முகநூலின் திசை சுனாமி பக்கம் திரும்ப நேற்றைய முன் தினம் ஸ்டேடஸிலெல்லாம் சுனாமி மயமாகி போனது. பலர் ஸ்மிங்க் போட சுள்ளானை அழைத்தும், பவர் ஸ்டாரை கலாய்த்தும் பரவலாக காமெடி பரப்பிக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் இறைவனின் மிகப்பெரும் கருணை தான் 8.9ரிக்டர் என பதிவாகியும் ஏதும் பலிவாங்காது சென்றது.மீண்டது பல ஆயிரம் உயிர்கள் என்றே தான் சொல்ல வேண்டும். இன்றைய நம்மின் மூச்சுகளெல்லாம் உலகளவில் பலருக்கு புது மூச்சு தான்.. புத்துயிர் தான்!

மனிதன் இன்னும் இன்னும் திருந்தாமல் பூமியை.. இயற்கையை கோபமுற செய்தால் நாம் தான் பலிகடாக்கள் என உணர்ந்து கொஞ்சமாவது திருந்த முற்பட வேண்டும்.. இதில் வளர்ந்த நாடுகளின் அட்டகாசங்கள் மிக அதிகம்.. வளரும் நாடுகளுக்கும் பங்குண்டு.. ஏழை நாடுகளிலும் இவ்விரு நாடுகளும் ஆதிக்கம் செய்து அங்கும் தங்களின் பங்கிற்கு பூமியை.. இயற்கையை இதயமில்லாமல் துன்புறுத்துகின்றனர்.

போதும் மனிதா நீ தங்கம், நிலக்கரி, இரும்பு, பளிங்கு கல் என ..பூமியை குடைந்தது போதும், பெட்ரோல், கேஸ் என துளைத்தது போதும், மலையை வெட்டியது போதும்.. நிலத்தையும், நீரையும் மாசு ஆக்கியது போதும்... பிளாட்டிக்கை நிறுத்து.. நிலத்தடி நீரை கொஞ்சம் கிடத்து... வயல்களில் வீடு, கட்டிடம் வேண்டாம்.. கழிவுகளால் நதிகளை சீரழித்தது போதும்.. காடுகளை நிர்மூலமாக்கியது போதும் ஒரு சில மரங்களையாவது உன் பங்கிற்கு நட கொஞ்சமாவது முனை.. சுனாமிக்கு பயப்படும் மனிதனே கொஞ்சமாவது உன் குணங்களில் மாறுதல் கொண்டு வந்து பூமிக்கு துணை நில். பிறகெல்லாம் உனக்கு துணையாகும்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: