அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பாக கடந்த வியாழன் (03-05-2012) மாலை 8.30 மணிக்கு துபாய் முத்தீனா சாலையில் அமைந்துள்ள கராச்சி தர்பார் உணவக கூடல் அறையில் நிகழ்ந்த நிகழ்வில் எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் அவர்களின் ஆக்கமான ''முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு'' நூலின் 2ஆம் பாகம் வெளியீட்டுவிழா இனிமையாகவும் எளிமையாகவும் ஏற்றத்துடன் நடைபெற்றது. விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ்.லியாக்கத் அலி தலைமை வகித்தார். விழா ஆலிம் ஜமால் முஹைதீன் அவர்களின் கிராஅத்-துடன் இனிதே ஆரம்பமானது. விழா நிகழ்வுகளை பேரவையின் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்கள் தொகுத்து வழங்க தொடர்ந்தது.
விழாவில் மலரின் முதல் பிரதியை பேரவைத்தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி அவர்கள் வெளியிட அண்ணலார் அறக்கட்டளையின் நிறுவனரும், வாஹா டாக்க்குமெண்ட் உரிமையாளருமான சமுதாய புரவலர் ஜனாப்.சர்ஃபுத்தீன் அவர்கள் பெற்றுக்கொண்டார், இரண்டாம் பிரதியை நாவலர் கவுஸ் முஹைதீன் வெளியிட அபுதாபியி மண்டல மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் மூன்றாம் பிரதியை கவிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது வெளியிட எழுத்தாளர் திருச்சி சையது அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நிகழ்வில் வரவேற்புரையாற்றிய முதுவை ஹிதாயத் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். பிறகு கருத்துரை வழங்கிய பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் காயல்.நூஹ் சாஹிப் அவர்கள் மக்கள் மத்தியில் நமது சீறிய வரலாற்றினை எடுத்துச் சென்று அவர்களுக்கு மத்தியில் நமது பேரியக்கத்தின் சிறப்பினை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் அது அவசியம் என்றார். பிறகு பேசிய சோனாப்பூர் மண்டல செயலாளர் ரபீக் உறுப்பினர்களை அதிகம் அதிகம் சேர்த்து அவர்களின் வலிமையோடு நமது பேரியக்கத்தின் வரலாற்றினை புதுப்பிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய சோனாப்பூர் ரஹ்மதுல்லாஹ் நமது சமுதாயத்திற்கு எதிரிகளாக செயல்படும் பாசிச இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்கதள் போன்றவைகளை விட நமது சமுதாயத்திற்குள்ளேயே இருக்கும் துரோகிகளான புதிய புதிய இயக்கங்களின் மூலமாக பாதிப்படைந்ததே அதிகம் ஆகவே சமூக நலனுக்கான ஓரே இயக்கம் நமது முஸ்லீம் லீக் ஒன்றே என்றும் நாம் எடுத்துரைத்ததனால் சோனாப்பூர் லேபர் கேம்பில் உள்ள பலநூற்றுக்கணக்கான நண்பர்கள் முஸ்லிம் லீக்கின் மீது நல்லபிமானம் கொண்டு உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பேசினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பிரபலங்களின் வாழ்க்கை நிகழ்வுகளை எழுதியவரும், தற்போது ஈ.டி.ஏ நிறுவனத்தின் தந்தை மற்றும் பல சமூகப்பணி செய்து சிறந்த பி.எஸ்.ஏ அப்துர் ரஹ்மான் அவர்களின் சரித்திரத்தினை எழுதிவரும் சமகால எழுத்தாளர் திருச்சி சையது அவர்கள் இந்த நிகழ்வில் வருங்கால முஸ்லிம் லீக்கின் மிளிர்வை காண்கிறேன் இதில் கலந்துகொண்டுள்ளவர்கள் மற்றும் இளைஞர்களை நம்பிக்கை நட்சத்திரங்களாக பார்க்கிறேன் என்றார்.
விழாவில் தலைமை உரை நல்கிய அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் லியாகத் அலி அவர்கள் இந்த விழா இரண்டு வாரங்களுக்கு முன்பே பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துர் ரஹ்மான் எம்.பி அவர்கள் முன்னிலையிலே நடந்திருக்க வேண்டும் ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் இன்று நடைபெறுகிறது. பேராசிரியர் அவர்கள் நமது பேரியகத்தின் வரலாற்றை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் அவர்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் அதை எப்படியாவது வெளியிடவேண்டும் என கவலை கொண்டுள்ளேன் என சொன்ன போது எழுத்தரசு எழுதட்டும் அவர்கள் எத்தனை பாகங்கள் எழுதினாலும் அதனை நாம் அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பாக வெளியிட ஆவண செய்கிறோம் என்று சொன்னோம் அதன்படியே இதன் முதல் பாகம் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நடந்தது பிறகு இப்போது (மார்ச் 26ஆம் நாள்) இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது இதன் வெளியீட்டு விழாவிற்கு நானும், அபுதாபியிலிருந்து அன்பர்கள் ஆவை. அன்சாரி மற்றும் களமருதூர் சம்சுதீன் அவர்களும் சென்று வந்தோம் விழா சீறும் சிறப்புமாக நடந்தது நம் வரலாறு ஆவணமாக வெளிப்படுத்தப்பட்டது, இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சியாக மூன்றாம் பாகமும் நலமே வெளிவரும் வந்து எழுச்சி நிகழும் இப்போது கூட நமது பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் சீர்காழிக்கு அருகே உள்ள புத்தூரில் சுமார் அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாங்கள் அறியாமையிலே த.மு.மு.க.வில் விளங்காமல் இருந்து விட்டோம் இப்போது தான் எதார்த்தம் விளங்கியது என்று சொல்லி அனைவரின் முன்னிலையில் விழாவாக ஏற்பாடு செய்து நமது தாய்ச்சபையில் சேர்ந்தார்கள் ஆக இதெற்கெல்லாம் மூலதனமாக நமது வரலாற்றை பதியப்படுத்தவும் நமது கொளைகையை ஊரறிய செய்யவும் பிரச்சார இதழ்களை நாமே பிரசுரிக்கும் அச்சக இயந்திரம் வாங்கும் பணியிலும் நாமே செயல்வடிவம் கொடுத்து வருகிறோம் இன்ஷா அல்லாஹ் அது நிறைவேறும் இனியும் இனிய பல நல்ல சமுதாய வரலாறு பதிவாகும் அல்லாஹ் அதற்கு அருள்வானாக என்று முடித்தார்.
பிறகு தொடங்கிய பேரவையின் பொருளாளர் ஹமீது ரஹ்மான் அவர்கள் அருள்மறையில் அல்லாஹ் குறிப்பிடுவதாக சிந்தனை செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் குறிப்பிடும் ‘’ தன்னை முஸ்லிம் என்று ஒருவன் உலகுக்கு பிரகடனப்படுத்தும் செயலைப்போன்ற ஒரு சிறந்த செயல் உண்டா’’ என்ற வார்த்தையைக்கொண்டு ஆரம்பித்த அவர்.. இந்தியாவிற்கு இஸ்லாம் இரண்டு வழியாக வந்தது ஒன்று இந்தியாவின் கைபர் போலன் கணவாய் வழியாக முகம்மது பின் காசிம் மூலம் வந்தது மற்றொன்று அந்த காலத்திலேயே நாயகம் (ஸல்..) அவர்கள் வாழும்போதே அரபு வணிகர்கள் மூலம் கேரளாவின் வழியாக அரசர் சேரமான் பெருமான் போன்றவர்கள் மூலமும் வந்தது என அப்படி இஸ்லாம் பரவிய இந்தியாவின் முஸ்லிம்களின் சரித்திரத்தை யாரோ ஒரு சரித்திர ஆசிரியர் எழுத முற்பட்டு இந்திய இஸ்லாமியர்களின் வழிவாறு (சிராஜுல் மில்லத் பயன்படுத்தும் சொல்) முஹம்மது நபிகளிலிருந்து முஹம்மது பின் காசிம், பிறகு அடிமை வம்சம், லோடி வம்சம், துக்ளக், மொகலாயர் என வந்து பிறகு அதன் இறுதியாக சுதந்திர இந்தியாவிற்காய் போராடி பர்மாவிலே மரணமான பகதூர்ஷா வரை எழுதியவர் பிறகு அவர் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அதனை தொடருவாரேயானால் பகதூர்ஷாவிற்கு பிறகு இந்திய முஸ்லீம்களின் வரலாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கிலிருந்து தான் தொடங்கும் அதனை விட்டுவிட்டு யாராலும் எழுத முடியாது அவருக்கு பிடித்தாலும் பிடிக்கவிட்டாலும் கூட, இதை யாராலும் எந்த மனிதராலும் மாற்ற முடியாது அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வரலாற்றுக்கு சொந்தமான வரலாற்று இயக்கத்தின் வரலாற்று நூல் வெளீயீட்டு நிகழ்வு மனமகிழ்ச்சி அளிப்பதாகவும், வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகவும் விளங்குவதாக கூறினார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய அமைப்புச்செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தமிழகத்தில் நடந்த பிரமாண்ட வெளியீட்டுவிழாவிற்கு பிறகு இரண்டாவதாக இந்த வரலாற்று நூலின் விழா இங்கே நடக்கிறது இந்த பெரும் முயற்சிக்கு அரிய நூலுக்கு அணுசரனையை நமது அமீரக காயிதேமில்லத் பேரவை வழங்கி இருக்கிறது என்பதும், கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தின் வரலாற்றை அதே காயிதே மில்லத் அவர்களின் பெயரில் இயங்கும் நமது அமைப்பு வெளியிடுவதும் மிக்க சிறப்புகள் பொருந்திய ஒன்று. இந்த நேரம் நமக்கு தேர்தல் கமிஷனின் அரசியல் அங்கீகாரம் பெற்றிருக்கும் நேரம், இந்தியா முழுவதற்கும் ஒரே இயக்கம் ஒரே சின்னம் என்றும் நமக்கு தனி சின்னமாக ஏணியும் கிடைத்திருக்கும் நேரம் இந்நேரத்தில் நாம் அந்த ஏணி சின்னத்தினை பிரபலப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஊர்களில் நமது வாகனம் கார், மோட்டார் சைக்கிள் என எதுவானாலும் ஏணி சின்னத்தினை ஒட்டி எல்லோர் இதயத்திலும் பதிக்க முயல வேண்டும் மேலும் இணையத்தையும் நாம் அதிகமதிகம் பயன்படுத்தி மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்றார்.
பிறகு வாழ்த்துரை வழங்கிய ஃபுஜைரா மண்டல செயலாளர் வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா சரித்திரம் தெரியாமல் போனால் சமுதாயம் இருண்ட சமூகமாகத்தான் இருக்கும் இது அல்லாஹ் திருமறையில் இருபத்து ஐந்து நபிமார்களின் வாழ்க்கையை வரலாறாக கூறி மனிதர்களை நல்வழிப்படுத்த கையாண்ட முறை, நபிகள் நாயகமும் முன்புள்ள சரித்திரத்தை மக்களிடம் தங்களின் திருவாய்மொழிகளால் கூறி அவர்களை நெறிப்படுத்தினார்கள். இன்று ஊடகத்தின் ஆக்கிரமிப்புகள் அதிகம் ஆனாலும் இன்றைய அரசியல் செல்வாக்கு படைத்த அமெரிக்க அதிபருக்கு கூட அதிக குறிப்புகள் இல்லை ஆனால் விளக்கில் தங்களை இழக்கும் விட்டில்களாக இருந்த சஹாபாக்கள் எடுத்த குறிப்பின் மூலம் தான் நாயகம் (ஸல்) அவர்களை, அவர்களின் செயல்பாடுகளை, அவர்களின் அணுகுமுறைகளை இந்த சமுதாயக் உணர்ந்து கொண்டு தன்னை சரிப்படுத்திக்கொள்ளவும், சிறப் பாக்கிக்கொள்ளவும், கட்டமைத்து க்கொள்ளவும் மூலாதாரமாக விளங்குகிறது. அந்த வகையில் நமது முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் வரலாற்றினை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் அவர்கள் தங்களது வயதையும் பொருட்படுத்தாது எழுதி இந்த சமூகத்திற்கு வார்த்திருப்பதன் மூலம் நாளைய சமூகத்தை உற்சாகப்படுத்திடவும், திடப்படுத்திடவும் முடியும். மேலும் இதை அமீரக காயிதேமில்லத் பேரவையோடு வெளியிட்ட நிகழ்வை நமது தலைவர் பேராசிரியரின் இன்னுமொரு பெருமுயற்சியின் சாதனையாகத்தான் பார்க்கிறேன். நாம் இதையெல்லாம் பதியாமல் போனால் இன்றைய நிலையில் நாம் செய்த பலவற்றிற்கு தாங்கள் தான் செய்தோம், பெற்றுத் தந்தோம் என வெற்று தம்பட்டம் அடிக்கும் கூட்டங்கள் பழங்காலத்தில் நடந்த அனைத்திற்கும் கூட உரிமை கொண்டாடும். எடுத்துக்காட்டாக கோவை சிறைவாசிகளின் சிறைமீட்பை தமது கோரிக்கையாக பலமாக வைத்த வண்ணம் பேராசிரியர் அன்றைய 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலிருந்து இன்றைய முதல்வராக இருக்கும் காலம் வரையும் பிறந்த நாளுக்கு பிறந்த நாள் வற்புறுத்துவதை காலம் பதிவு செய்திருக்கிறது. சென்ற ஆட்சியில் கலைஞருக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் பட்டம் கொடுத்து எங்களது இஸ்லாமிய சிறைகைதிகளை வெளியே விடுங்கள் அவர்களின் செயல்பாடுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்றாரே ஆனால் இன்று யார் அவர்கள் சிறை செல்ல காரணமாக இருந்தார்களோ அவர்களே தங்களை தப்பித்துக்கொள்ள இன்றைக்கு சிறைமீட்பை குறித்து பேசி நாங்கள் தான் அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என மாயையை உண்டு பண்ணுகிறார்கள், இதே போல் சச்சார், மிஸ்ரா கமிட்டி அமைய பேராசிரியர் எப்படி காரணமாக இருந்தார், இன்னும் இடஒதுக்கீடு பிரச்சனை என இன்னும் பலவற்றை மேற்கோள் காட்டி பேசியவர் இதையெல்லாம் நாம் பதிய வைக்கவில்லை என்றால் இன்றே அவர்கள் மாற்றிப்பேசுவது போல் அவர்கள் சரித்திரத்தையும் மாற்றிவிடுவார்கள் அந்த வகையில் நமது எழுத்தரசின் பணி மிக சிறப்பு வாய்ந்தது என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாவலர் கெளஸ் முஹைதீன் அவர்கள் பேசுகையில் நபிகள் நாயகம் (ஸல்) இஸ்லாத்தை முதன் முதலாக எத்திவைக்கையில் சஹாபி அர்க்கம்(ரலி) அவர்களது இல்லத்தில் அமர்ந்திருந்த பதினாறு பேர் மூலமாக தான் இஸ்லாம் முதன் முதலில் புகுந்து பின் பாரெல்லாம் பரவியது அதுபோல் இந்த அமீர காயிதேமில்லத் பேரவையின் செயல்வீரர்கள் நமது இயக்கத்தின் பணிகளில் தீவிரம் காட்டுகிறார்கள் நாளை நமது இயக்கம் வெல்வது உறுதி என்று தொடங்கிய அவர் இன்றைய புதிய புதிய இயக்கங்கள் மக்களை மதி மயக்கி தகாத பாதையில் சமூகத்தினை வழிநடத்தி செல்வதாய் பலவாறு சாடினார் அதற்கெல்லாம் நமது முஸ்லிம் லீக் ஒன்றே மாற்று வழி என்றார்
அடுத்து பேசிய சிறப்பு விருந்தினர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்கள் காயிதே மில்லத் அவர்கள் காஞ்சிபுரம் சென்ற போது அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் (சங்கர மடங்கள் போன்ற புனித அமைப்புகள் இருந்த போதும்) உங்கள் வருகையால் இந்த காஞ்சியே புனிதமடைகிறது என்றார் அப்படி சொல்லப்பட்ட ஒரே தலைவரின் பெயரில் இயங்கும் இயக்கத்தின் பிரதிநிதிகளாக நீங்கள் இருப்பது மனநிறைவளிக்கிறது ஒரு முறை மாநாட்டிற்காக வசூல் செய்த போது புதுக்கோட்டையில் இருந்து ஒரு பெரும் நிதியை அளித்தோம் அதை கண்டு பேராசிரியர் பெரும் மகிழ்வடைந்தார்கள் அந்த நிதியில் பாதியை தந்த அண்ணலார் அறக்கட்டளையின் நிறுவனர் சர்ஃபுத்தீன் இங்கே அமீரக காயிதே மில்லத் பேரவைக்கு வருகை தந்து கைகோர்த்திருப்பது உள்ளத்திற்கு பெரும் திருப்தியாக இருக்கிறது இந்த வரலாற்று நூலின் ஆசிரியர் முதலாம் பாகத்தில் நமது சரித்திரத்தினை மிகத்தெளிவாகவும், கொள்கையை விளக்கியும் சொன்ன பாங்கு அற்புதமாக இருக்கும் அதில் முக்கியமாக இந்திய ஒருமைபாட்டிற்கு நாம் எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறோம், நமக்கும் பிரிவினைவாதத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பதெல்லாம் விளக்கி இருப்பார்கள் இதை எல்லாம் நமது அன்பர்கள் எல்லோரும் வாங்கி படிக்க கேட்டுக்கொள்கிறேன் அதில் ஹைதராபாத் நிஜாமாக இருந்த போது அது இந்தியாவுடன் இணைய மறுத்த சமையத்தில் அரசு போலிஸ் நடவடிக்கைக என்ற பெயரில் ராணுவநடவடிக்கை எல்லாம் எடுத்தது ஆனால் காயிதேமில்லத் நயமுடன் சொன்னவுடன் அவர் சம்மதித்து இந்தியாவுடன் இணைந்த சரித்திரத்தை எல்லாம் நீங்கள் அதில் காணலாம் இன்று எழுத்தரசு ஏ.எம் ஹனீப் அவர்களின் கடும் உழைப்பில் இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது இது சுமார் நானூறு பக்கங்களை கொண்ட நூல் இதை ஒருவர் சாதாரணமாக பார்த்து எழுத முனைந்தாலும் அது எவ்வளவு பெரும் கஷ்டம் என உணர்ந்து கொள்வார் எழுத்தில் இருக்கும் சிரமங்களை எழுத்தாளர்களிடம் கேட்டால் சொல்வார்கள் இப்படி இருக்கும் போது இதை எழுத வெளியாக்கியவர்கள் எவ்விதம் பெரும் சிரமம் எடுத்திருப்பார்கள் அதன் பலனை நமது சமுதாயம் என்றும் அடையும் என்றும் இன்று நமது இயக்கத்திற்கு தனிச் சின்னம் கிடைத்ததையும் இனி யாரும் நமது இயக்கத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாத நிலை உருவாகி இருப்பதையும் கோடிட்டு பேசிமுடித்தார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பேரவையின் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள். முஹம்மது தாஹா அவர்கள் இந்த நிகழ்ச்சியினை பிரமாண்டமாக அமீரகத்தில் நடத்த திட்டம் இருந்த போதும் சில சூழல் காரணமாக அப்படி நடத்தமுடியாத நிலையை குறிப்பிட்டார், இன்று நமது தாய்ச்சபை தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற இந்திய அளவில் ஒரே அமைப்பாக தனிச்சின்னம் பெற்ற அமைப்பாக அரசியல் கட்சியாக திகழ குறுக்கிட்ட பல இடையூறுகள், சிக்கல்கள் பற்றியும் அதற்கெல்லாம் பேராசிரியர் எடுத்த பெரும் முயற்சிகளையும், அதற்கு அமீரக காயிதேமில்லத் பேரவை துணை நின்றதையும், காயிதேமில்லத் மன்ஜில் உருவான நிகழ்வுகளையும் அந்த கனவு நனவாகியபோது பேராசிரியர் ஆனந்த கண்ணீர் வடித்ததையும் மற்ற எல்லா அரசியல் நிகழ்வுகளிலும் தலைவர் பேராசிரியரின் செயல்பாடுகள், எளிமை போன்ற போற்றப்படக்கூடிய குணங்கள் என பலவற்றை கேட்போரை உணர்ச்சியில் ஆழ்த்தி உறையவைக்கும் வகையில் நினைவு கூர்ந்தார். கூட்டத்திற்கு அமீரகத்தின் எல்லா பாகத்திலிருந்தும் செயலாளர்கள் உறுப்பினர்கள் விருந்தினர்கள் வந்திருந்தனர்.இறுதியில் சோனாப்பூர் கிளையின் பரக்கத் அலி அவர்கள் நன்றி சொல்ல துஆ சலவாத்துடன் இனிதே நிகழ்வு முடிவுற்றது. முதுவை ஹிதாயத் அவர்கள் எப்போதும் போல் ஊடக ஒத்துழைப்பை சிறப்பாக வழங்கினார்.
தொகுப்பு :
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக