இனப் பெருமை, குலப்பெருமை, சாதியப் பெருமைகள் என்ற கொடுமைகளை வேறறுத்து தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற பாகுபாடுகளை குப்பையில் வீசி, உண்மையில் இந்த நாற்றம் பிடித்த வேண்டாதவைகள் எல்லாம் வேண்டாம் என்பவர்கள் என்னோடு வாருங்கள்.. நாம் அன்பெனும் போர்வையின் கீழ் ஓர் ஒப்பற்ற மனித சமுதாயம் படைப்போம் என்ற முஹம்மது நபியின் அறைகூவலால் ஒன்று திரட்டப்பட்ட மதமல்லாத அன்புநெறி மார்க்கம் தான் இஸ்லாம்.
இஸ்லாத்தை அது மதமல்ல; மாறாக அது மார்க்கம் (வழி ) அன்பின் வழி, அமைதியின் வழி, சத்தியத்தின் வழி என்பார்கள் விசயம் அறிந்த மேலோர்கள். ஆனாலும் இது இன்று தனியொரு மதமாக கருதப்படுவது புரிதலில் நேர்ந்த கோளாறே தவிர வேரல்ல. இந்த புரிதல் இன்று பெரும்பான்மை இஸ்லாமியருக்கே இல்லை என்பதே இன்றைய கொடுமை. தீவிரபோக்கை கடைபிடிக்கும் வஹ்ஹாபியர்கள் இஸ்லாத்தினையும், இஸ்லாமியர்களையும் பொதுச்சமுதாயத்திலிருந்து தனிமை படுத்தி பாழ்படுத்தி வருகின்றனர் உண்மையான இஸ்லாத்தின் எதார்த்தத்தை குழைத்து திரித்து அவர்தம் போக்குக்கு தகுந்த வகையில் இஸ்லாம் தெரியாத இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் சமூகத்தை அவரவரின் பிழைப்பிற்க்காக தவறான வழிகாட்டுதலில் செலுத்துகின்றனர்.
இதையே இஸ்லாத்திற்கு வெளியில் உள்ளவர்கள் தவறான திரிபுகளையே இஸ்லாம் என்று கருதி தவறாகவே புரிந்து கொண்டு வெறுப்பை உமிழ வகை செய்துவிடுவது வருத்தமளிக்கிறது.
உண்மையில் இஸ்லாம் (சாந்தி அல்லது அமைதி) என்ற அமைதிநெறி வெறிகளுக்கு அப்பாற்பட்டு அமைதியையும் அன்பையும் நாடும் மனிதர்களின் சங்கமமே தவிர இது ஏதோ ஒரு தனி மதமல்ல. அவ்வாறு முஸ்லீம்கள் கூட நம்பினால் அதற்கு இஸ்லாம் பொறுப்பல்ல. உலக சீர்திருத்தவாதிகளில் ஒப்பற்ற முஹம்மது நபிகள் (பேருண்மையின் சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக) மனித சிறுமைகளை வென்றெடுத்து கண்ட வெற்றியே இஸ்லாம் என்ற அமைப்பு.
இதில் இருப்பவர்கள் மனிதர்களை நேசிப்பார்கள். அவர்கள் இந்துவாக, கிருத்துவராக, பெளத்தராக அல்லது வேறு எந்த பிரிவை சார்ந்தவராக இருந்தாலும் சரியே. இஸ்லாமியர்கள் எந்த உலக தத்துவத்தையும், அறிவையும் தேடி கற்றுக்கொள்ளுவார்கள் ஏனெனில் "அறிவு என்பது சிங்கத்தின் தலையில் இருந்தாலும் எடுத்துக்கொள்" என்ற அறிவுரையை இஸ்லாம் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் மூலம் இந்த சமூகத்திற்கு உரைத்திருக்கிறது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
(வளரும்...)
1 கருத்து:
நல்லதொரு விளம்பரம்.
கருத்துரையிடுக