நேற்று வரை அல்ல இப்போதுவரையும் கூட நான் குழந்தையாகவே இருப்பதாகவும், அதன் மனநிலையிலேயுமே உணர்கிறேன். இனியும் குழந்தையின் மனநிலையை விட்டும் மீளுதல் அவ்வளவு எளிதல்ல ஒரு வேளை மற்றவர்கள் மாற்றிக்கொள்வார்களோ என்னவோ ஆனாலும் நாற்பதாகிவிட்ட்தாக என் நாற்காட்டி அறிவுருத்துகிறது ஆகட்டும் அது அதன் வேலையை செய்கிறது.
இருந்தபோதிலும் இந்த நாற்பது என்பது ஏதோ பெரிய யுகாதி யுகங்களைக் கடந்து வருவதாக தெரியவில்லை.. உலகம் ஓடுகிற வேகத்தில் நாற்பதெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மை வந்தடைகிறது. இதையெல்லாம் நினைக்கும் போது மனித வாழ்வு என்பது எவ்வளவு குறுகிய ஒன்று என்று நினைக்க தோன்றுகிறது, குறுகிய என்பதை விட கடுகைப்போல சிறுத்த ஒன்று என்று சொல்வது கூட பொருந்தும். அந்த கடுகைப்போன்ற வாழ்வில் தான் நாம் வாழ்ந்து அனுபவித்து திருப்தியாகி சாதித்து நிறைவடைந்து போக வேண்டி இருக்கிறது ஆனால் இதையெல்லாம் முழுமையாக்கும் பாக்கியம் சிலருக்கு தான் வாய்க்கும் இதற்கு உடல்வலு மட்டும் போதாது தெளிந்த அறிவார்ந்த மனநிலையொடு வயதும் வாய்த்தால் மேற்கண்டவை எல்லாம் சிறக்கும்.
மூன்று வருட்த்திற்கு மேல் இருக்கலாம் முன்பு துபாயின் ஹலோ பண்பலையில் ஹரி என்று ஒரு ஜாக்கி இருந்தார், அப்போதெல்லாம் மாலை நேர நிகழ்ச்சியை அவர் தொகுத்தளிப்பார் நிறைய உற்ச்சாகமூட்டும் சிந்தனைகளை முன்னெடுக்க்க்கூடிய நல்ல தொகுப்பாளர். அந்த மாலை நேரத்தில் எப்போதும் போல காரோட்டிக்கொண்டே வானொலி கேட்டுக்கொண்டே வரும் சூழலில் “இதுவரை தான் ஏதும் சாதிக்கவில்லை இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டேனே.. யார் யாரோ என் வயதில் வாழ்க்கையை சரித்திரத்தில் பதித்துவிட்டார்களே நான் இதுவரை ஏதும் செய்யவில்லையே இனிமேலாவது சாதிக்கவேண்டும்” என்று புலம்பிக்கொண்டிருந்தார் அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு மட்டுமே, அதை கேட்ட எனக்கு "அடப்பாவமே இன்னும் கல்யாணம் கூட ஆகாத ஹரி இந்த பொலம்பு பொலம்புறாரே.. அப்டீன்னா நாமெல்லாம் என்னா பொலம்புறது" என்று, ஆனாலும் அவரது அந்த எதையாவது சாதிக்கவேண்டும் என்ற வெறி எனக்கு பிடித்திருந்த்து. அவரும் ஒரு இன்ஸ்பிரேசனாகவே தெரிந்தார்.
அந்த மனநிலை மிக அவசியம் தான் அது போல எரியும் வேட்கை தான் என்னுடையதும் ஆனாலும் நதிவழி செல்லும் ஓடம்போல சென்று கொண்டிருப்பவன் தேவையில்லாமல் சலசலப்பை உருவாக்க எண்ணமாட்டேன் ஆனாலும் உள்ளுக்குள் கனல் கனன்று கொண்டே தான் இருக்கும் இருந்தாலும் இன்றைய நாள் எனக்கு இனியும் நேரத்தை விரயம் ஆக்கதே மென்மையான உளப்போராட்டம் இனி உதவாது இனி நீ சுழல வேண்டிய வேகம் இன்னும் அதிக்கரிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது போல தோன்றுகிறது இயற்கை என்னை மிகப் பொறுப்புள்ள இடத்தில் நிறுத்தியிருப்பதாக உணர்கிறேன்.
இதுவரை நான் வாழ்ந்த வாழ்வை திரும்பி கொஞ்சம் பாஸ்ட் ரிவைன்டிங் செய்து பார்த்தால் எனது ஆன்மீக புரிதல் அதன் படியான எனது வாழ்வு எனக்கு நிறைவளிக்கிறது.. அதுவே என்னை நிதம் நடத்திக் கொண்டிருக்கிறது சோர்வான நிலையில் வீழும் நேரத்திலும், இக்கட்டிலும் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறது. அதுவே எனது மேன்மைக்கும் உயர்வான சிந்தனைக்கும் காரணம். எந்நிலையிலும் நம்மை நாம் தேவையில்லாது தாழ்த்திக்கொள்ளுதல் அழகன்று என எனக்கு உணர்த்தி உயர்வான சிம்மாசனத்தில் என்னை அமர வைத்திருப்பது. எனது சொத்து சுகம் என்றால் முதலில் எனது ஆன்மீகமே அதுவே என் ஜீவனெனலாம். அப்போதும் மிகையில்லை.
அந்த ஆன்மீகத்தின் சாராம்சமாகவே உலகில் உதித்து உலகில் சாந்தி நிலைக்க வந்த நபிகளார் ஸல்ல்ல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை, அவர்தம் திருக்குடும்பத்தை, மதம் கடந்த எல்லா புண்னிய ஆத்மாக்களை பெரியவர்களை நான் மதிப்பவனாக பாக்கியம் பெற்றிருக்கும் எனது நிலை குறித்து பெரிதும் மகிழ்கிறேன், இதற்கு காரணமான என் குடும்பச்சூழல், நன்மக்கள், அன்பான அறிஞர்கள் என எல்லா இறையருளையும் நான் நன்றியுடன் பணிந்து உவக்கிறேன்.
இத்தருணத்தில் நான் எவ்வள்வு தான் நன்றி சொன்னாலும் தகாது என்றால் அது என் அரும்பெரும் தாய், தந்தை, எனது நன்னியம்மா இவர்கள் தான் அடுத்து சொல்வதானால் எனது அருமை இணையாள். என்னோடும் புரிதலோடு வாழ்ந்துவருபவள் எனது ஆன்மீகத்தை மதித்து நிற்பவள் பிறகு நான் மகிழ்ந்து நிற்பது எங்கள் இரு மலர்கள் கல்புக்கனிகள் நளீர், ஜைனப் இவர்களால் தான்.அவர்களது ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் எல்லையற்ற இன்பம் காண்பேன். இவர்கள் சிறக்கவே என்னாளும் அவனை தொழுதும் அழுதும் வேண்டுகிறேன் அவர்கள் மகிழ்வாயிருந்தால் என் நெஞ்சத்தாமரை என்றும் நன்றே மலரும். ஒளிரும்.
நாங்கள் விசித்திரமான சகோதர்ர்கள் அத்தனை நெருங்கி பேசிக்கொள்ளாவிட்டாலும் எங்களின் அன்பு நிறைவானது. எனது அன்புத்தங்கை முர்ஷிதா அருமைத் தம்பி காலித் இவர்களெல்லாம் எனக்கான இறைக்கொடையே. எங்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாம் சந்தோச முல்லைகள் அவர்களின் அன்பு முகம் தான் எனது குதூகலம். எனது அம்மாஜான், ஹாலஜான், பெரியபாப்பு, எம்.ஜே.பி பாப்பு,மாமி, மாமு, ஹாஜா, முஜீப் அண்ணன் மற்றும் இவர்களது குடும்பத்தினர்கள் என எல்லோரின் அன்பில் நனைந்து நிற்பவன். இவர்களே எனது அன்பின் குடை.
எனது மாமனார் எனது பலம், மச்சினன் சிறு பிள்ளை போன்றவர். இதைவிட எனக்கு என்ன வேண்டும். ஆனாலும் என் வாழ்வின் சோகம் எனது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய மாமியாரின் திடீர் மறைவு அதன் ரணம் ஆறவே இல்லை, அது நெஞ்சைச்சுடும் சோகம். அழுது தீராத சோகம் இதே போன்ற ஆறாத சோகத்தை என் தங்கை நஸரீனும் (பெரியபாப்பு மகள்) கொடுத்துச் சென்றாள். இந்த இழப்புகளுக்கு ஈடுடென்று எதுவும் இல்லை.
இத்தனை ஆண்டுகளில் நான் கவிஞனாக அறியப்பட்டாலும் பெயர் சொல்லும் ஒரு ஒலிப்பேழையை தயாரித்திருக்கிறேன் என்ற மகிழ்வு உண்டு. அந்த “சங்கை நபி” ஸல்ல்ல்லாஹு அலைஹிவசல்லம் என்ற ஒலிப்பேழை என்னை நிரம்ப சங்கை செய்த்து, மக்களிடம் என்னை பற்றிய உயர்வான கருத்தையும் இவன் இப்படியெல்லாம் எழுதுவானா என்பதற்கு பதிலாகவும் “உயர்வான ஆன்மீகத்தை எளிமையாக கூறிவிட்டீர்களே” என்றெல்லாம் நிறைய.. நிறைய பாராட்டுக்களையும் எனக்கு கொண்டுவந்த்து. அதை பாடிய பாடகர் அருளிசை அரசு அபுல் பரக்காத் அவர்களுக்கும் அதை ஊரில் வெளியிட்ட பஷீர் மாமு ஆய்வுரை வழக்கிய எனது ஆசான் திருநாவுக்கரசு இவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.
மற்றபடி எழுதிவைத்திருக்கும் கவிதைகள் ஏராளம் அவற்றையெல்லாம் இனி தான் புத்தகமாக்க வேண்டும் , தரமான கவியாக்கங்களை செய்யவேண்டும், நிலைத்து நிற்கும் மக்களுக்கு பயனுள்ள இலக்கிய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் சதா இருந்த வண்ணம் இருக்கிறது. அதற்கும் இறைவன் அருள்வானாக. எனது பேச்சும், எழுத்தும் இன்னும் என்னை இனி காட்டும் சமூகத்தில் நேர்மறை விதை விதைக்கும். இன்ஷா அல்லாஹ்.
நான் படித்த புத்தகங்கள் எனக்கு நிறைய புதிய விரிவான சிந்தனைகளை விதைத்தவை, நான் பழகிய பெரிய மனிதர்கள் தூய விதைகளை எனது நெஞ்சத்தில் விதைத்தார்கள். எனது நெஞ்சில் எதிர்மறையே இல்லாது இருக்கும் அளவு என்னை தயாரித்தவர்கள் அவர்கள் தான். எனக்கு இந்த ஆதாய உலகில் அரங்கிற்கு தகுந்தாற்போல பேச தெரியாது அந்த குறையும் எனக்கு உண்டு ஆனால் என்னால் அதை மாற்ற முடியவில்லை எனது அமைப்பு அப்படி தான் போல. அதை மாற்றிக்கொள்ளவும் தேவையில்லை.
என் பொருளாதார வாழ்வு பல போராட்டஙக்ளுக்கிடையே சென்று கொண்டிருந்தாலும் இதுவரை அத்தனை போராட்டங்களிலும் எப்படியோ முண்டி அடித்து இறையருளால் கரை சேர்ந்தே இருக்கிறேன், அது குறித்த நிறைவு என் மனதில் இருக்கிறது. இப்போதும் நான் போராட்டக்களத்தில் நின்றாலும் இப்போதைய சூழலில் நான் சோதனைக்குட்படுத்தப்பட்டாலும் என்னை இதுவரை காத்துவந்த அருள் இதுவரை தொடர் உயர்வை கொடுத்த அருள் இதுவரை மேன்மையாக்கி வைத்திருக்கும் அருள் இப்போதும் கைவிடாது என்றே உற்சாகமாக முன்னெடுக்கிறேன்.
இயற்கையில் நான் இயற்கையின் ரசிகன், தோட்டம் போட்டவன், கோழி, மாடு என வளர்ந்தவன் அவை பிரிந்த வாழ்வு குறித்து எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லையானாலும் நிர்பந்தத்தில் தான் நான் சமரசம் கொண்டு எல்லோரையும் போல வாழ்கிறேன். இந்த மெத்தை வாழ்வை விட எங்கள் தோப்பில் தென்னைமர காற்றில் கயிற்றுக்கட்டிலில் எனது தாத்தாவோடு வாழந்த வாழ்வை நான் பெரிதும் விரும்புகிறவன். அது குறித்த ஏக்க உணர்வு சூழவே என் வாழ்வை தொடர்பவன். ஆகவே அதே சூழலில் விரைவில் ஐக்கியமாக சென்ற வருடம் ஆரம்பித்து இறையருளால் எங்கள் இல்லம் வளர்கிறது விரைவில் நிறைவுரும். கனவு இல்லமாக அது மலரும் அப்போது என் ஆத்மாவின் தேடலுக்கு விடை பகர்வேன். இன்ஷா அல்லாஹ்.
எனக்கு வாழ்வின் முக்கிய ஆன்மீக மற்றும் வாழ்வியல் பொருளாதார திருப்பங்களை தந்தவர் ஆரம்பப்புள்ளியாகவும், ஆதாரத் தொடர் புள்ளியாகவும் இதுவரை இருந்துவருபவர் எனது வாழ்வியல் வழிகாட்டி வழுத்தூர் மண்ணின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிடும் அறிவியல் அறிஞர் பாசமிகு எம்.ஜே.முஹம்மது இக்பால் பெருந்தகை தான்.
அதற்கடுத்து எனக்கு அன்புக்கரம் நீட்டியவர் நல்லமனசுக்கார்ர் அருப்புக்கோட்டை ஜாஃபர் சாதிக் அண்ணன், நண்பர் ராம்நாடு பாஸ்கரன் இவர்கள் தான். ரியாசும், ஹக்கீமும் என்னுடன் வருபவர்கள். சாப்ஜி அண்ணனும் மாலிக்கும் இதயத்தில் அமர்ந்திருப்பவர்கள். மவ்லானா அவர்கள் எனது உயர்வான அன்பிற்குரிய்வர். குலாபு எனது பந்தம், இவர்களன்றி எண்ணிரந்த என்னை நேசிக்கும் முகநூல் அன்பர்கள் உண்டு, என்னோடு படித்த நட்புள்ளங்கள் உண்டு, என்னோடு ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் நேசர்கள் உண்டு அவர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சின் அன்பும் மகிழ்வும் உரித்தாகட்டும்.
ஆன்மீகம் என் இல்லத்திலிருந்தே தொடர்ந்தாலும் நான் பத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பயின்ற ஆன்மீக குருகுலம் மறக்க முடியாதது அதையும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன். நான் சிறிய காலமே அவரிடம் பயின்றாலும் என்னை ஆட்கொண்டவர் தமிழாசிரியர் திருநாவுக்கரசு. காலித் சார் என்னால் மறக்கமுடியாத ஆளுமை. அவரை கட்டாயம் எழுதி பதிய வைப்பேன்.
ஆக இறையருளால் இப்போது நாற்பதை தொட்டிருக்கிறேன் இதுவரை நடத்திக்கொண்டுவந்த தலைவன், இனியும் சிறப்பாய் நடத்துவான் என்ற நம்பிக்கை வழுவாக இருக்கிறது. இயக்கும் அவன் இகம் வாழ நமக்கு நல்லதொரு கதாபாத்திரம் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்ற ஆசையல்லால் மற்றதொன்றும் எனக்கில்லை. இதுவரை செய்ததெல்லாம் ஆயத்தத்திற்காக இருக்கட்டும் இனி சரித்திரத்தை சமைக்க வேண்டும்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நாற்பதிலிருந்து தான் தொடங்கினார்கள் உலகையே அறுபத்து மூன்றில் தன்வசம் கொண்டு வந்தார்கள் அந்த உற்ச்சாகம் தான் என்னோடு இருக்கிறது. ஆதலால் நிறைய கனவுகள் இருக்கிறது இறைவா அதற்காக எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அருள்புரி நிறைவான நோய் நொடியற்ற பெருவாழ்வை தந்தருள். நீயே தயாளகுணத்தின் அதிபதி.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லிம்.
அலைஹிவஸல்லம் வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லிம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக