27 செப்டம்பர் 2018

சீமானாய் வாழ்ந்த ஃபக்கீர்


உன்னைப் போல வாழ்தல் தான் அரிது
உன்னைப் போல வாழ்தல் தான் இனிது

கிடைக்காத வரமதை
பெற்றுக்கொண்ட பேறுனது
என்றைக்கும்  சிரித்த முகம்
எதுவாயினும் குழந்தை மனம்

ஞானோபதேசங்கள் சொல்லிக் கொண்டிருப்பதை
நீயே அறியாது வாழ்வென வாழ்ந்தாய்

பாக்கு எச்சில் வடியும் சிவந்த வாய்
தாக்கி பேசுவோரையும் தாக்காது உன் வாய்

வெற்றிலை பாக்கு கறை தான்
எவ்வளவு உயர்ந்த சட்டைக்கும்
நீ தந்த மரியாதை

உன்னை விரும்பியோர் வீட்டில்
உண்ண விரும்புவாய்
கொடுப்பதை ஏற்று
மனது நிறைய வாழ்த்தி
முறுவல் செய்குவாய்

எண்ணத்தில் இருப்பதை
எதார்த்தமாய் பேசுவாய்
திண்ணமாக போதும்
திண்ணையில் உறக்கம் கொள்வாய்

பக்கீராய் இருந்தும்
சீமானாய் வாழ்ந்தாய்
எக்காரணம் கொண்டும் ஈமானை
விற்காது வாழ்ந்தாய்

ஊர் வரும் போதினிலெல்லாம்
தேடி வரும் அன்பன் நீ
மீண்டும் ஊர் வரும் போது
மனம் தேடுமே உன் அன்பை இனி?

அதற்குள் ஏன்
துக்க செய்தி அனுப்பி
துயோனிடம் சென்றுவிட்டாய்

தூய இறைநேச நேயரே
மாய உலகம் வென்ற
தமீமுன் அன்சாரியே
வாழ்க இனி நீ நித்தியம்.

***
இரங்கலோடு இறைஞ்சும்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கடந்த 25-09-2018ல் இயற்கையெய்திய அன்பு சகோதரர் ரிபாயியா தரிக்காவில் திவான்ஷா என்று அழைக்கப்பட்ட தமீமுன் அன்சாரி அவர்களது திடீர் மறைவு குறித்து எழுதிய கவிதை.

25 செப்டம்பர் 2018

தொடரும் துயரம்

குடிகார தேசத்தில்
தொடரும் துயரம் இது,

தன லெட்சுமியின்
பணம் கொட்டும் கரத்திற்கு நேரே
சாக்கு பிடிக்கும்
சாணக்கிய தனத்தோடு
ஊற்றி கொடுத்தவர்களுக்கு
கோட்டை கொத்தளத்தையும்

பாட்டில் பாட்டிலாய்
ஏற்றி கொண்டோருக்கு
அறிவு மழுங்கிய தெளிவு நேரா
புலன்களின் மயக்க போதையையும்

வட்டிக்கு வாகனம் வாங்கி
ரோட்டில் குடும்பத்துடன்
கனவு சுமந்து
ஓட்டிவருவோருக்கு
தாராள மனதோடு
திடீர் சாவையும் தரும்

சித்தம் தெளியாத
வேறு வருவாய்க்கு
வக்கில்லாத எமகாதக அரசு இது

ஐயகோ! என்று விடியும்
எம் நிலத்தில் காலை!

Mohaideen Batcha, [25.09.18 11:34]
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஒரு ஏழை காவல்துறை பணியாளர் தன் மனைவி மற்றும் சிறு குழந்தையோடு மோட்டார் வாகனத்தில் வந்த போது எதிரே ஒரு குடிகாரன் வாகனத்தில் வந்து மோத சம்பவ இடத்திலேயே காவலர் இறக்க, குழந்தை உயிருக்கு போராட மனைவி பரிதாபமாக அழுது கொண்டிருந்த தொடர்கதை சோக நிகழ்வை முகநூலில் பார்த்ததும் நேற்று எழுதிய கவிதை.

24 செப்டம்பர் 2018

பேரதிகாரத்தின் எச்சில்


ஜனநாயத்தின் கடைசி நம்பிக்கையாம்
நீதித்துறையை
மயிரு தான் என்றும்
பிறகு இன்னும் கற்பனைக் கூட்டி
மண்ணாங்கட்டி  என்றும்
பேரதிகாரத்தின் எச்சில்
வீராவேசமாக கூக்குரலிடும் போது

பேரதிகார எச்சிலின் முன்
சிற்றதிகாரங்கள்
"அண்ணச்சி நீங்க அப்படி சொல்லக்கூடாது" 
என்று கெஞ்சி மண்டியிடும்.

பின்னும் பேரதிகாரத்தின் எச்சில்
சிற்றதிகாரம்  அணிந்திருக்கும்
மரியாதைமிகு உடையை
அகோரமாய் கேவலப்படுத்தி
பொது வெளியில் காறி உமிழும்.

ஆனபோதும் சிற்றதிகாரம்
மானம் துறந்து
மீண்டும் மீண்டும் மண்டியிடும்.

அதிகாரமற்ற நீயும் நானும்
மரியாதையும் பணிவும் கொண்டு
வேண்டுவன வேண்டினாலும்
சிற்றதிகாரம் சினம் கக்கும்
சற்றேனும் மனிதாபிமானமின்றி
இட்டுக்கட்டப்பட்ட சட்டப்பிரிவுகள்
சட்டென்று பாயநேரும்.

இது எங்கள் இந்தியா
இது தான் எங்கள் தேசத்தின் முகம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15-09-08 அன்று எச்.ராஜா விநாயக சதூர்த்தி ஊர்வல சர்ச்சைக்காக மிக அநாகரீக முறையில் காவல்துறையையும், நீதித்துறையையும் விமர்சனம் செய்த கணொளியை பார்த்த சனத்தில் எழுதிய கவிதை.

கேள்விக்கு சிரித்த கவிதை!


வல்லரசுகளின் பற்றியெரியும்
ஈவிரக்கமில்லாத 
வல்லாதிக்க வெறியிற்காய்
எண்ணிச் சோர்வுறும்
எண்கள் அளவிற்கு
கணக்கற்ற மென்பட்டு ரோஜாக்கள்
ஆயுதக்கரங்களால்
கொடூரமாக பறிக்கப்பட்டு
சிதைக்கப்படுகிறது

ரோஜாக்களை சுமந்து
ஆனந்தம் பாடி நின்ற
அன்னை தந்தை
செடிகள் எல்லாம்
வேரோடு பிடுங்கி
துவம்சம் செய்யப்படுகிறது

ரணங்களின் குருதிபூசி நிற்கும்
இந்த பட்டாம்பூச்சியை
நினைக்கும் போதே
நெஞ்சம் நனைகிறது

என் அன்பின்
சிரியா மழலையே
அம்மையப்பன் இல்லாதிருந்தும்
அவர்பற்றிய கேள்விக்கு
சிரித்த கவிதையே

எந்த கூர் ஈட்டியும்
இத்தனை வாதை
செய்யாதடி

நீ வீசிய
களங்கமற்ற ஏக்கப்பார்வையும்

நீ சிதறிய அர்த்தமறியா
பூடக புன்சிரிப்பும்

செய்த வாதை போல..

இருந்தும் உன்னை
கையாளாகாத நாங்கள்
ஒரு காணொளி அளவில்
ஒரு "ப்ச்"சிட்டு கடந்து விடுகிறோமே..

இது தான் காலக்கொடுமையோ.!

***

தற்போது அருமை அண்ணன் Hameed Sac அவர்கள் இந்த காணொளியை பகிர.. என் நெஞ்சம் பேசிய தவிப்பின் மொழிகள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
Mohaideen Batcha, [24.09.18 16:14]

23 செப்டம்பர் 2018

சிதிலச் சிறகு!

காலம் பூராவும்
பேருண்மையின் பேரழகை
மறைத்து வைத்தீர்கள்

கருத்தை சிதைத்து
திரித்து பிரித்து
சூது செய்தீர்கள்

முரட்டு யானைப் பாதங்களில்
மென்மையானரோஜாக்கள்
இரக்கமின்றி சிக்கி சீரழிய
நீங்களோ அயோக்கிய மனநிலையோடு
மதயானைக் கூட்டத்தின்
முதுகினில் சவாரி செய்து மகிழ்ந்தீர்கள்

ஆயினும்
எங்கெளுக்கென
எறும்பின் கூட்டங்களும்
சிட்டுக்களின் இனங்களும்
மானின் குட்டிகளும்
பாசத்தோடு பலநூறு தலைமுறையாய்
ஒத்திசைந்து ஒத்தாசை
செய்து கொண்டுள்ளது

துரோகத்தின் வாடைவீசும்
இரத்தம் தோய்ந்த மண்ணை
உண்மையை நாடி வந்து
ஆராய்வோருக்காய்
சில காட்டு புற்றுகளில்
சில பள்ளத்தாக்குகளில்
சில மலைக்குகைளில்
மறைத்து வைத்துள்ளது

நிலம் காணாத
கொடூரத்தின் கோர தாண்டவத்தை
பிரபஞ்ச பேரேட்டில்
நேர்மையான எழுத்துக்கள்
ஈரம் காயாமல் பொறித்து வைக்க
சாட்சி சொல்பவையாயின

அதை அழித்தொழிக்கவே
 உங்கள் கடலொத்த ஆற்றலை
கணநேரமும் திரட்டி
பூதங்களையும் துணைக்கழைத்து
யுகாதி யுகங்களாக ராட்சத
சிரத்தை எடுத்து வருகின்றீர்

நீங்கள் எவ்வளவு முயன்றிடினும்
வரலாறுகள் பொதிந்து வைத்திருக்கும்
தியாக சிதிலங்களை முற்றும்
அழித்திடல் இயன்றிடும் ஒன்றா?

ஒருநாள்
எங்கெங்கோ சிதறிக்கிடக்கும்
அணுக்கள் கூடி புதிய பேரண்டம் சமைக்கும்

அப்போது
அழுக்குகள் இழுக்குகள் எல்லாம்
கழுவி சுத்தம் செய்யப்படும்

இழிவை சுமக்க வந்தவைகள்
அழுக்குகளை சுமந்தே
துர்நாற்றத்தோடு வெளியேறும்

பின்னர்
சூதுகள் தோற்க
வாய்மைச் சிறகு விரியும்

புதிய பரிதியின் பேரொளி எதிரொளிக்க
மனங்கவர்ந்த செந்நிற ரோஜாக்கள்
கம்பீரமாய் மலர்ந்து மதுசொறிந்தாடும்.

வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

22-09-2018 11:47 pm

22 செப்டம்பர் 2018

காதல் மொழி எப்போது பேசுவாய்..?


நிறம் மாற்றப்பட்டு வீசும்
பார்வையின் மொழிக்கு பின்னே                   

கூடவே ஒலித்துக்கொண்டிருக்கும்
உள் நெஞ்சத் தவிப்பின் மொழியை                                       
கேட்காதது போல,
கண்டுகொள்ளாமல் நீ  புறந்தள்ளலாம்

ஆனால்
உன் அகக்காதைக் கேள்
ஆர்பரித்துக் கொண்டிருக்கும்
அத்தனை தவிப்பையும் சொல்லும்.

ஆமாம்
அந்தக் கோபக்காரியை
விரட்டியடித்து விட்டு

எப்போது காதல் மொழி பேசுவாய்..?

  06.05.16 15:54
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

எங்கும் நிறைந்தாளுகின்ற ரஹீமே…

பல்லவி:
எங்கும் நிறைந்தாளுகின்ற ரஹீமே…அர்ரஹீமே… என்றும்
தங்குமின்பம்  தந்தருளும் கய்யூமே ஹய்யுல் கய்யூமே…

அனுபல்லவி:
கங்குகரை காணாத கடலே..ஞானக்கடலே – அடியாரை
பொங்குகின்ற அன்பாலே அணைத்திடும் அருளே….பேரருளே…

சரணங்கள்:

இருட்டினில் சென்றேன்  ஒளியென வந்தாய்
தனிமையில் நின்றேன் துணைதனை தந்தாய்
எழுதிட முனைந்தேன் சொல்லென பிறந்தாய்
படித்திட நினைத்தேன் பொருளென விரிந்தாய்
எண்ணினேன் உன்னை என்னுள் மிளிர்ந்தாய்
ஏன்னாத போதும் எனக்கே அளந்தாய்
தென்றலின் இனிமையாய் என்னை தொடுவாய்
மன்றத்தின் தமிழாய் எனக்குள் திரள்வாய்

மலரினை பார்த்தேன் மகிழ்ந்தே சிரித்தாய்
மனதினை பார்த்தேன் அமர்ந்தே நிர்வகித்தாய்
புலரியின் வேளையில் பூபாளம் பாடினாய்
இருளினால் மாலையில் போர்வை முடினாய்
சிரித்து பூரித்தேன் இன்பமாய் நீதான்
அழுது புலம்பினேன் துன்பமும் நீதான்
பசியால் துடித்தேன் உணவானாய் நீதான்
நிசியிலும் அழைத்தேன் அணைத்ததும் நீதான்

அம்மாவென் றழைத்தேன் அன்பின் அகம் காட்டினாய்
அன்பேவென் றழைத்தேன் அழகின் சுகம் ஊட்டினாய்
ஆருளே என்ழைத்தேன் பிள்ளைமுகம் காட்டினாய்
அல்லாவென் றழைத்தேன் அனைத்தின் இதம் கூட்டினாய்
அறியப் படாமலே நீயே வாடினாய்
அண்ணல் முஹம்மதை அதற்கே தேடினாய்
மாமதி நிலவென மக்காவில் வீசினாய்
மானிட மகுடத்தை மதினாவில் சூடினாய்

- 5-6-2016

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2016-ல் வெளிவந்த சங்கை நபி இசைக்கோர்வையின் முதல் பாடல்.

பெருங்காதல் உணர்வோடு

பல்லவி:
பெருங்காதல் உணர்வோடு நபியை 
பேரருளாக தந்தானே புவியில்அவன்
பெருங்காதல் உணர்வோடு நபியை
பேரருளாக தந்தானே புவியில்

அனுபல்லவி:

தன் நூராக வைத்திருந்தான் ஒளிவாய்
பின்பு தாஹாவாய் அமைத்தானே நிறைவாய்

சரணம் :

அமாவெனும் இருளில் அறியாது கிடந்தான்
கமாலெனும் நிலையையே புரியாது இருந்தான்
சமாவெனும் வானும் விண்கோள்கள் இல்லை
நபி சர்தாரைக் கொண்டே  சமதவனை அறிந்தான்                                                                       
***
ஆதத்தின் சாரம் அவன் சமைக்கும் முன்பே
அஹ்மதின் நாதம் அவன் ஆக்கிவைத்தான்
நீதத்தின் ஓசை நிலமெல்லாம் ஒலிக்க
போதத்தின் வடிவாய் நபி யாஸினை தந்தான்.
***
நல்வழிகாட்ட பலரை நபியாக்கி வைத்தான்
நபித்துவ அசலாய் நம் மஹமூதை அமைத்தான்
ஃகலீல் கலீம் ரூஹென்று நபிமார்கள் வந்தார்
ஹபீபென்று அன்பால் அஹ்மதனில் லயித்தான்
***
மூஸா நபிக்கோ ஊசிமுனைக் காட்சி
முஹம்மதற்ளித்தான் மிஃராஜெனும் மாட்சி
எல்லோரும் அஞ்சும் மஹ்சரின் நாளில்
மகாமன் மஹ்மூதில் நீர் இருப்பீர் என்றான்
***
ரப்புல் ஆலமீன் என தன்னை விண்டவன்
ரஹமதுலில் ஆலமீன் எனநபியை விளித்தான்
இப்பெரும் சிறப்பெல்லாம் ஒருநபிக்கும் இல்லை
இனியுகம் ஜகமெதற்கும் நபிமஹ்மூதே என்றான்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

சங்கைநபி ஒலிப்பேழையில் 2016ல் வெளிவந்து மிக வரவேற்பை பெற்ற பாடல்.

12 செப்டம்பர் 2018

குழந்தைகள் பெற்று 
குழந்தைகள் ஆனோம்,
குழந்தைகளிடத்தில்!

உலகம் மறக்கும்
உன்னத உலகம்,
மழலை உலகம்!

எனது மகன் நளீர் எழுத்தில் அலாதி பிரியம் கொண்டவன், எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் சுபாவம் அவனுக்கு, வீட்டில் பள்ளிக்கூட பாடம் போக ஏ,பி,சி,டி-யோ 1,2,3 யையோ அல்லது அ, ஆ,இ,ஈ- யோ வென எதையாவது எழுதுவதும், சென்ற இடம், புத்த ஓவியம், போட்டோ என எதை பார்த்தாலும் வரைவதோவெனத்தான் அவனது நேரங்கள் நகரும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2014-15களில் எழுதியது.

நாயகமே.. நபிநாயகமே..!

உலகம் ஏற்றும் பெயர்நாமமே
உள்ளம் தேடும் பேரின்பமே
நல்லவை அல்லவை எல்லாமுமே
தேர்ந்து உரைத்த தேனின்பமே!
வல்லவன் செய்திகள் வகையாய் தந்திட்ட தூதின்பமே!
வையகத்தார்க்கு வாழ்வில் கிடைத்திட்ட வானின்பமே!
2011 - எழுதியது

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா