18 ஆகஸ்ட் 2013

துணையுடன் துயிலும் இரவெப்போது???



தனியாய் துயிலுகிறேன்
துணையுடன் துயிலும் இரவெப்போது???

கற்பனை கற்கோட்டைகளெல்லாம்
வேதனை வெந்நீரூற்றில் வெந்ததுவே!

உள்ளிருக்கும் உஷ்ணங்கெளெல்லாம் தணிய
ஊற்றுக்குளிர் நீர் போல்
ஏற்றமிக்க துணை எனக்கும் அமையுமோ(?) வென...
காத்துக்கிடக்கும் இக்கன்னிகைக்கு
கன்னத்தில் முத்தக்கறை படியும் நாள் என்றோ???

வருங்கால கணவனின் கனவோடு
அரும்பிய உறக்கத்தில் ஆழ்ந்த நேரம்...
அள்ளி அணைத்தேன் தலையணையை
"தலைவனென்றெண்ணியே" !!!

இந்த பிரம்மைகளுக்கெல்லாம்
பிரம்படி எப்போது???

எங்கோ இருக்கும் என் தலைவா!!!
உனக்காக உரமிட்டு உடல் வளர்த்தேன்,
உன் கண்கள் பார்த்தே - இந்த
காதல் மலர் வெடிக்கப்போகும் நாள் எது??? என்ற ஏக்கத்தில்
எத்தனை முதிர்ந்து அதிர்ந்து போன கன்னிகைகள்!!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறிப்பு: எழுதியது 1996 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி... "இரவுகள்"  என நான் எழுதிய தொடர்கவிதை தொகுப்பிலிருந்து

26 ஜனவரி 2013

மறந்தது, மறுப்பது...!



ஒருவர் கிழக்கே என்கிறார்

மற்றொருவர் மேற்கே என்கிறார்
பிரிதொருவர் தெற்கே என்கிறார்
இன்னொருவர் வடக்கே என்கிறார் - ஆனால் 
எல்லாருடைய திசைகளும் 
ஒரு மையப்புள்ளியிலிருந்தே என்பதை 
மறந்துவிட்டார்கள்,
யாரும் உணர மறுக்கிறார்கள்
என்பதே தற்போதைய கவலை!

- வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



24 ஜனவரி 2013

சத்தியத்தின் ஜனனம்



பல்லவி:

சத்தியத்தின் ஜனனம்-பொய்
சித்திரங்கள் மரணம்-இருள்
பக்தியெங்கும் தகனம்-மருள்
மிக்கவர்கள் சலனம்-அருள்
பொங்கிவந்த தருணம்-திரள்
மகிழ்ச்சியிலே நடனம்-மன
மகிழ்ச்சியிலே நடனம்.. நடனம்.. நடனம்.. - சத்தியத்தின்...
                            
சரணம்:

பிறப்பில்லாத பேருண்மை
பிறவி எடுத்ததே
இளமை மூப்பு இவைகளெலாம்
வழமை ஆனதே
புலன் கடந்த பூர்வீகம்
உடல் எடுத்ததே
பார்வைப்பட உடலெடுத்து
பாதம் தந்ததே... பாதம் தந்ததே... - சத்தியத்தின்...


பாதம் தந்த சாதகமே
போதம் தந்ததே
போதமான ரகசியங்கள்
தூது வானதே
தூதுவான அரும்பொருளே
வேத மானதே
வேதமதின் விளக்கமிங்கு
பேதமற்றதே...பேதமற்றதே... - சத்தியத்தின்...

பேதமில்லா மாதவமே
கீத மானதே
கீதமான அழகுக்குரல்
மோகம் கொடுத்ததே
மோகமான மணித்துளிகள்
தாகம் தீர்த்ததே
தாகம் தீர்த்த முக்திநிலை
பேரின்பமானதே..பேரின்பமானதே.. - சத்தியத்தின்...

சித்தியான முக்திநிலை
சொர்க்கம் ஆனதே
சொர்க்கமதைத் தந்தவரும்
தாங்க ளல்லவா
தாங்கள் எங்கள் அன்புமிகு
நாத ரல்லவா
நாநிலங்கள் போற்றுகின்ற
நதரல்லவா.. நபிநதரல்லவா..! நபிநதரல்லவா..!! - சத்தியத்தின்...


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


பி.கு :
2000  லிருந்து 2002க்குள்  எழுதி இருப்பேன். சரியாக நினைவில்லை

22 ஜனவரி 2013

சீரழியும் சமுதாயம்

முகநூலில் சில தினங்களுக்கு  முன் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹிவசல்லம்) நேசர்கள் வட்டத்தில் பதிவு செய்தது...

தமிழ் சமுதாய இஸ்லாமியர்களை இன்றைய நவீன இயக்கங்கள் சீரழித்துவிட்டது… அவர்களின் அறிவை மழுங்க செய்து முந்தைய அறிஞர்களை, ஞானத்திற் சிறந்த மேதைகளை எல்லாம் எள்ளி நகையாடக்கூடிய வகையில் இவர்களின் அறிவை அழித்துவிட்டனர்.. அறிஞர்களை மதிக்காத சமுதாயம் அறிவை ஏற்காத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, ஞானிகளை, மேதைகளை வெறுப்போடு இழிந்துரைக்கின்றனர் எனறால் இவர்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் பொருள். 


அறிஞர்களை ஏற்காதவர்கள் அறியாமை இருளில் இருப்பதாக தான் அர்த்தம், அறிவெனும் ஒளியை ஏற்காது அறியாமை இருளில் சமுதாயம் இருந்தால் ஒருகாலும் உருப்படாது என்பது திண்ணம். அந்த செயற்கரிய காரியத்தை தான் திறம்பட செய்து இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை என சமூதாயத்தையே பாழுங்கிணற்றில் தள்ளி ஒரு நூற்றாண்டினையே மிக தீவிரமாக கரித்துவிட்டனர் இவர்களின் தலைவர்கள்!? இவர்களை பின்பற்றும் சமூகம் எப்படி வாழும் இனி வீழும் தான்!

அத்தகையவர்களின் அறிவீன சிந்தனைகளை நம் போன்ற நாயகநேசர்கள் மட்டுமே முறியடிக்க முடியும். வாருங்கள் ஆன்ற அறிவினை வளர்ப்போம்.. அல்லாஹ், ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) -ன் அவர்களின் தூய்மை சமுதாயம் படைப்போம். வளங்களும் நலங்களும் அப்போது மட்டுமே சூழும்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா