08 மார்ச் 2012

உரிமை மீரல்!



நெடுநேரம் துயில்கொள்ளாது
கழிந்தது நேற்றைய இரவு..!
துயருறுகிறோயோ..  -இல்லை நீ
துயில்கொள்ளுதல் தான் எளிதாமோவென‌
சமாதானமே ஆகாத
உள்ளுணர்வின் ஆழ்நிலை பிணக்குகள்!


முற்றத்திலும்.. கூடத்திலும்
போகயில்.. வருகையில்..
உன் சிந்தனையில்..இது யாரின் பிழை..
ஏனவன் இங்ஙனம் விசனங்கொண்டான்..
ஏனவன் சேய்போல் செயல்படவில்லை..
எனுங்கேள்விகள் எழுந்திருக்குமோ..
என்றே மனதில் கேள்விப்புரவிகள்!


செயல்களின் உண்ணதமும்..
நிலம்போல் உனது பொறுமையும்
நீங்கா நின் உயர் அழகியல்கள்!


குற்றவாளியாய் மனமுன் நிற்கையில்
தோற்றுத்தான் போகிறது நமது கட்சி!


ஆழ்மனம் அதனில் பல
கருத்தாய்வுகள் நிகழ்த்திக் கொண்டிருந்ததை
கண்டு கொள்ளாமல் இல்லை!


ஆயிரம் கேள்விகளோடு
செய்தது சரிதானா என்று கேட்டும்
அரித்துக்கொண்டே இருந்தததும் அறியவே செய்தது..


புத்திக்கெட்டவனாய் பல நேரங்களில்
ஏதும் உணராது உணர்ந்தவன் ஏன்..


பொறுமையும்.. அமைதியும்..
எங்கே வெறுண்டோடின..
சொல்லாத விளக்கங்களெல்லாம்
சொல்லும் அதிகப்பிரசிங்கிக்கு என்ன ஆச்சு..


செயலில் காட்டாத பேச்செல்லாம்
குப்பையாய் கிடந்து நாறும்!


ஆன்மீகம்… மார்க்கம்..விளக்கம்..
அவரைக்காய் சுண்டைக்காயெல்லாம்
அரக்கனாகும் வேளை உதவாதோ..!


உண்மையில் பகட்டுக்காரனும்..
பகல் வேசக்காரனும் தானா நீ.. ஐயோ பாபம்!


ஒளிவீசும் விளக்கின் கண்ணாடிகள்
சிறு கல் பட்டால் கூட
சுக்கல் சுக்கலாகிவிடும்!


வெளிச்சம் கொடுக்கும் விளக்கிற்கு
அரண் அமைத்தல்
முதல் வேளை எனக்கொள்!


இருள்சூழ்கையில்
முன்னர் வெளிச்சமெல்லாம்
இருட்டில் முகவரி இழக்கும்!


உள்ள அமைதியை
உள்ளத்தில் நிலையாக
நிறுத்த நினை..முனை!


செயல்களின் முன்
தியானம் அவசியம்
சாந்தப்படுத்திக்கொண்டும்
சரிபடுத்திக்கொண்டும் பிறகே
பணிக்கு விரை..!


கருணையில் மிக்கது பேராற்றல்..
கருணைமிக்கது பிறப்பித்தது
அது யாவையும் நன்கறிவதனால் அச்சமற்றிரு..
அருள் நிலவும் என்றும்!
தவறுகள் தொடராது
தரிபட்டிருக்க சரிசெய்து வாழ்!!!
  
-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: