23 பிப்ரவரி 2014

இணையதள நண்பர்கள் சந்திப்பு (IUML Net Meet)

நிகழ்வின் மேடை


குடந்தையில் இன்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கின் இணைய தள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி. இதில் புதிய பல தாய்ச்சபையின் இணைய தளங்கள் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களால் சமூகத்தினை சிறப்பாக வழிநடத்த உண்மையான செய்திகளை உலகுக்கு உரைக்க துவக்கப்பட்டுள்ளது என்பது மனமகிழ் செய்தி. 

பிரபல ஊடகவியலாளர்கள் திரு.ஆ.மார்க்ஸ், திரு.வீரபாண்டியன், ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்களை இணைத்திருப்பது மிகச்சிறந்த திருப்பமெனலாம். அதிலும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் முயற்சியால் உருவான "கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்" ஆவணப்படம் திரையிடப்பட்டது முத்தாய்ப்பு. இணையத்தில் தாய்ச்சபை உறுப்பினர்களின் குறிப்பாக இளைஞர்களின் எழுச்சி பாராட்டத்தக்கதாக இருக்கும் இத்தருணத்தில் அடுத்த முன்னெடுப்புக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கும் சந்திப்பாக இது நிகழ்ந்திருக்கும். அதன் செய்திகளை என் போன்றவர்கள் எல்லாம் மிக ஆவல் கொண்டு அறிய காத்திருக்கிறோம். நண்பர்கள் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு. 

வாழ்க சகோதரத்துவம்
வாழ்க சமத்துவம்
வாழ்க மனிதாபிமானம்
வெல்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

முகநூலில் நிகழ்வின் புகைப்படங்கள் பார்வையிட...




வழுத்தூர் பிரதிநிதிகள்















-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 பிப்ரவரி 2014

தப்பித்த மூன்று உயிர்களும், தப்பாத முந்தைய உயிர்களும்



மகனை  மரணத்திலிருந்து காப்பாற்ற ஓர் தாயாக  சந்தித்த அதிக பட்ச துன்பம், மனவேதனை, நம்பிக்கை துரோகம் இவைகள் எல்லாம் அற்புதம் அம்மாள் அவர்கள் தனது அசாத்தியமான நம்பிக்கையால், முன்னெடுப்பால் வென்று காட்டியிருக்கிறார்கள். என்ன நேர்ந்தாலும் நிலைகுலையக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் அதுவும் ஒரு பெண் சமூகத்தில் எப்படி மனத்துணிவு கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டய் விளங்குபவர் அற்புதம் அம்மாள்.


இவர் தனது மகன் பேரறிவாளனுக்கு இன்று கிடைத்த தீர்ப்பாம்"விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு" என்ற செய்தி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சை வரவழைத்திருக்கலாம். ஆனாலும் பேரறிவாளனும் மற்ற மூவரும் நிரந்தரமாக வெளியாகும் நாள் தான் நீதியின் வெற்றியாக நாம் கொண்டாடப்பட வேண்டிய நாள்.

இன்று இம்மூவருக்கும் கருணை மனு காலம் கடந்து நிராகரிக்கப்பட்டதை வைத்து வந்திருக்கும் தீர்ப்பால் நிரபராதிகள் தூக்கு கயிறுகளிலிருது காப்பு பெற்றிருக்கின்றனர். ஆனால் நீதிமன்றமே ஒப்புக்கொண்டபடி குற்றம் நிரூபிக்கவேப்படாமலும்  அப்சல் குருக்கு தூக்கு தண்டனை கொடுத்து ஒரு குற்றமற்ற இந்தியனை, காஷ்மீரி குடும்ப அப்பாவியை இந்திய திருநாடு கழுவேற்றி கொன்று அவரது குடும்பத்தை நிர்கதியாக்கியது குறிப்பாக ஒரு சமூகத்தை குறிவைத்து இழைக்கப்படும் கொடுமைகளின் தொடர்கதையேயன்றி வெறில்லை.


அதிஷ்டவசமாய் இன்று மூவரும் உயிர் பிழைத்தனர், ஆனால் ஆதாரமே இல்லாமல் எத்தனை பேர்  அதிலும் வஞ்சிக்கப்படும் சமூகத்தின் நிரபராதிகளின் உயிர் இழந்திருக்கிறது.

என்ன செய்ய நெஞ்சம் இதையெல்லாம் நினைக்கவே செய்கிறது!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 பிப்ரவரி 2014

திமுக-வின் 10வது மாநில மாநாடு


*
கூட்டணி தலைவர்களுக்கு கட்டவுட் வைத்ததிலிருந்து கூட்டம் நடந்து முடிந்தது வரை நிறைய விசயங்கள் தமிழகத்தின் பிற பிரதான கட்சிகளிடம் காண முடியாதவை.

*
தலைவர்கள் பேசும் போது ஏன் கலைஞர் பேசும் போது கூட தொண்டர்கள் ஆரவாரம் செய்ய அதை யாரும் கோபத்தோடோ... அல்லது சப்தம் கொடுத்தோ அடக்க முயலவில்லை. இந்த மேடையில் விஜயகாந்தை நினைத்துப்பார்க்க மிகுந்த வேடிக்கையாக இருந்தது. ஆயிரம் முறை நாக்கை கடித்து கையை காட்டி அதட்டி கத்தியிருப்பார்.

*
கலைஞர் பேசியபோது ஏதோ சகமனிதர் போல கலைஞரின் தோள்  மேல் கைப்போடாத குறையாக தொண்டர்கள் தள்ளிக்கொண்டு நெருங்கி நிற்க அதை கலைஞரோ, கழகமோ அல்லது மாநாட்டு நிர்வாகமோ கூட அவர்களை ஏதும் சொல்லவில்லை மாறாக அவர்கள் தங்கள் தலைவரின் பேச்சை அருகில் இருந்து மெய் மறந்து கேட்டு ரசித்தனர்.


*
இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். சற்று நேரம் தான் இன்றும் நேற்றும் காண கிடைத்தது. நேற்று பார்த்தவகையில் ஆ.ராசாவின் பேச்சு அருமை இன்று கி.வீரமணியின் பேச்சு நன்றாக இருந்தது. மற்ற தலைவர்களின் குறிப்பாக தலைவர் பேரா.காதர் மொகிதீன் , தொல். திருமாவளவன் மற்றும் பேரா.ஜவாஹிருல்லாஹ் இவர்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை.


*
உண்மையில் ஜனசமுத்தரம் என்று சொல்லும் அளவுக்கு அணி திரண்டிருந்த மக்கள் வெள்ளம் சிறப்பான மாநாட்டு ஏற்பாடு இவைகள் முக்கிய அம்சம்.

*
மாநாட்டு தீர்மானமாக இடம் பெற்ற 15 கோரிக்கைகளும் சூப்பர், அதிலும் குறிப்பாக திமுக என்றும் விட்டுக்கொடுக்காமல் வலியுறுத்தும் சேது சமுத்திர திட்டம், மாணவர்களுக்கு கடன் ரத்து செய்தல், தூக்கு தண்டனை ரத்து மற்றும் நெல் கொள்முதல் விலை போன்றவை அற்புதமானவை.

*
மாநாட்டு நிறைவு பேருரையில் கலைஞர் கே. என். நேருவையே பாதி உரை புகழ்ந்து தள்ளிவிட்டார் அதை சற்று குறைத்திருக்கலாம். இன்னும் அவர் பேச்சில்  நாம் எதிர்பார்த்தது அதிகம்.

*
மொத்தத்தில் உடன்பிறப்புக்களுக்கும் கழகத்திற்கும் புத்துணர்வு கொடுத்த மாநாடு என்றால் இது மிகையில்லை.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

10 பிப்ரவரி 2014

இஸ்லாம் என்றால்..???



இனப் பெருமை, குலப்பெருமை, சாதியப் பெருமைகள் என்ற கொடுமைகளை வேறறுத்து தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற பாகுபாடுகளை குப்பையில் வீசி, உண்மையில் இந்த நாற்றம் பிடித்த வேண்டாதவைகள் எல்லாம் வேண்டாம் என்பவர்கள் என்னோடு வாருங்கள்.. நாம் அன்பெனும் போர்வையின் கீழ் ஓர் ஒப்பற்ற மனித சமுதாயம் படைப்போம் என்ற முஹம்மது நபியின் அறைகூவலால் ஒன்று திரட்டப்பட்ட மதமல்லாத அன்புநெறி மார்க்கம் தான் இஸ்லாம்.

 இஸ்லாத்தை அது மதமல்ல; மாறாக அது  மார்க்கம் (வழி ) அன்பின் வழி, அமைதியின் வழி, சத்தியத்தின் வழி என்பார்கள் விசயம் அறிந்த மேலோர்கள். ஆனாலும் இது இன்று தனியொரு மதமாக கருதப்படுவது புரிதலில் நேர்ந்த கோளாறே தவிர வேரல்ல. இந்த புரிதல் இன்று பெரும்பான்மை இஸ்லாமியருக்கே இல்லை என்பதே இன்றைய கொடுமை. தீவிரபோக்கை கடைபிடிக்கும் வஹ்ஹாபியர்கள் இஸ்லாத்தினையும், இஸ்லாமியர்களையும் பொதுச்சமுதாயத்திலிருந்து தனிமை படுத்தி பாழ்படுத்தி வருகின்றனர் உண்மையான இஸ்லாத்தின் எதார்த்தத்தை குழைத்து திரித்து அவர்தம் போக்குக்கு தகுந்த வகையில் இஸ்லாம் தெரியாத இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் சமூகத்தை அவரவரின் பிழைப்பிற்க்காக தவறான வழிகாட்டுதலில் செலுத்துகின்றனர்.

இதையே இஸ்லாத்திற்கு வெளியில் உள்ளவர்கள் தவறான திரிபுகளையே இஸ்லாம் என்று கருதி தவறாகவே புரிந்து கொண்டு வெறுப்பை உமிழ வகை செய்துவிடுவது வருத்தமளிக்கிறது.

உண்மையில் இஸ்லாம் (சாந்தி அல்லது அமைதி)  என்ற அமைதிநெறி வெறிகளுக்கு அப்பாற்பட்டு அமைதியையும் அன்பையும் நாடும் மனிதர்களின் சங்கமமே தவிர இது ஏதோ ஒரு தனி மதமல்ல. அவ்வாறு முஸ்லீம்கள் கூட நம்பினால் அதற்கு இஸ்லாம் பொறுப்பல்ல. உலக சீர்திருத்தவாதிகளில் ஒப்பற்ற முஹம்மது நபிகள் (பேருண்மையின் சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக) மனித சிறுமைகளை வென்றெடுத்து கண்ட வெற்றியே இஸ்லாம் என்ற அமைப்பு.

இதில் இருப்பவர்கள் மனிதர்களை நேசிப்பார்கள். அவர்கள் இந்துவாக, கிருத்துவராக, பெளத்தராக அல்லது வேறு எந்த பிரிவை சார்ந்தவராக இருந்தாலும் சரியே. இஸ்லாமியர்கள் எந்த உலக தத்துவத்தையும், அறிவையும் தேடி கற்றுக்கொள்ளுவார்கள் ஏனெனில் "அறிவு என்பது சிங்கத்தின் தலையில் இருந்தாலும் எடுத்துக்கொள்" என்ற  அறிவுரையை இஸ்லாம் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் மூலம் இந்த சமூகத்திற்கு உரைத்திருக்கிறது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

                                                                                                                              (வளரும்...)