(கத்திரி வெயிலுக்கு ஓர் குச்சி ஐஸ்)
ஏனடி இப்படி படுத்துகிறாய்
என்னை கேட்காமலேயே
எண்ணத்திலெல்லாம்
உன்னையே உடுத்துகிறாய்
*
உன்னைப் போல்
மானில்லை மாநிலத்தில்,
மானினம் அறியாத
துடுக்கு நடையழகி நீ!
*
அகத்தினை காவியம்
பாடியவர்களுக்கே
செகத்தினில் குளிர்காய்ச்சல்
பாய்ச்சிடும் முகத்தினை
உடையவள் நீ!
*
மகாகவிகளின் சிலகவிகள்
சாகாவரம் பெற்று என்றென்றும்
சகங்தனில் சஞ்சரிக்குமே
அப்படியொரு மகாகவிதை நீ!
*
எதிர்படும் ஒவ்வொரு முறையும்
எழுகிறது எழுத்துக்களில்
சூழ்கொள்ளாத கவியோடை!
*
உன்னை மெச்சும்
கண்கள் பிற பேரழகிகளையும்
துச்சமென பார்க்கிறது
*
நீ நடக்கும் இடமெல்லாம்
அரங்கமாய் அங்கீகரிக்கப்படுகிறது
*
சூழ்ந்திருக்கும் மக்களெல்லாம்
சூலையில் இட்ட
களிமண்ணாய் சிவக்கிறார்கள்
*
நடமாடும் கொலைக்களமே
நீ எட்டெடுத்து வைத்தாலே
செத்துச் சுண்ணாம்ப்பாகிறார்கள்...
விசவாயு தாக்குதல் கூட
இவ்வளவு விஷமம் செய்யாதே…
பாவம் ஆண்கள்
பிழைத்துவிட்டுத்தான் போகட்டுமே.
*
ஈவிரக்கமெல்லாம்
உன் நெஞ்சத்தில்
கொஞ்சமும் இல்லையா
*
உன் குலத்தார் உன்னை
இப்படி எங்கள் சித்தம் குடிக்கவா
சிலையென வீதியில் விட்டனர்
*
ஆயிரம் கூர் ஊசிகளால்
அடுத்தடுத்து தைக்கிறாயே
இதெல்லாம் எப்படி இம்சிக்க்குமென
கொஞ்சமும் தெரியாதா…
*
வஞ்சம் தீர்க்க வழியா இல்லை
வகையில்லாது பொங்கி வழியும்
வனப்பால் வதைத்தால்
இனிப்பாய் நீ வந்து அணைப்பாயென
மனப்பால் குடித்திருக்கிறார்களே
உன் சித்துவிளையாட்டு தெரியாமல்.
*
ஐயோ கொலைகாரி!
குளிர்முகம் காட்டி
வெளியேவெல்லாம் சென்று தொலையாதே
இது தேர்தல் நேரம் ஏற்கனவே
எம்மக்கள் செத்து மடிந்துகொண்டிருக்கிறார்கள்.
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
12.53 பிற்பகல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக