10 மே 2016

நடிகையின் கதை!

ஒரு ஊரில் ஓர் நடிகை
நடிகை என்றால் அசாத்திய நடிகை
நடிப்போ இரத்தத்தில் ஊறியது
நயனமோ மயக்கும் மகுடி

அவள் நடிப்பதற்காக
அரங்கம் ஏறினாள்
அவள் நடிகை என்பதும்
அவள் நடிக்கிறாள் என்பதும்
எல்லோரும் அறிந்தது தான்.
நாடகம் தொடங்கியது....
அவளின் பாத்திர ஒன்றிப்பில்
லயித்த மக்கள்
கண்முன்னே நடக்கும் நாடகத்தை
நடக்கும் நிஜநிகழ்வென நம்பி
அவளது புனைவுக்கும்,
பொய்க்கண்ணீருக்கும்
விசும்பி அழலானார்கள்..!
நடிகை சுதாரித்து
இன்னும் ஒன்றித்தாள்
பாவப்பட்ட மக்களோ
அவள் நடிகை என்பதையே
முற்றும் மறந்து
அவள் ஏற்ற
பாத்திரத்திலேயே மயங்கி
அம்மா.. அம்மா என்று
மெய்த்தாய்ப்பாசம் யாசித்தார்கள்
நாடகம் முடித்து கீழிறங்கும் போது
அவள் கால் பட்ட மண்ணையும்
பூசிக்கொண்டார்கள்
அவள் அழகையும்
அறிவையும் பரிவையும் பற்றி
பேசிக்கொண்டார்கள்..
தன் இல்லம் ஏகினாள் நடிகை,
தனக்கான தனியறையில்
கண்ணாடிமுன் நின்று
ஏமாளி மக்களை நினைத்து
எள்ளல் சிரிப்பை உதிர்த்தாள்,
தன்னையே தான் சிலாகித்து
பெருமிதம் கொண்டாடினாள்.
மற்றொரு பொழுது விடிந்தது
மீண்டும் ஒப்பனைக்கு தயாரானாள்
அதே நடிகை,
அம்மா வேசம் போட....!
நகரத்தின் சுவர்களில்
ஏதோ ஒரு பத்திரிக்கை பையன்
ஆதாரப் புகைப்படத்தோடு
சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருக்கிறான்
நடிகையின் வேறு முகத்தை!

9-5-2016 11.21 pm

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: